செந்தில், ராயர் கஃபே, சோமன் தொடர்ச்சி...

 

 

ராயர் கஃபே கச்சேரி ரோட்டிலேயே முன்பு இருந்த இடத்துக்கு எதிரேயுள்ள அருண்டேல் தெருவில் பேயாழ்வார் அவதரித்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கணித மேதை இப்போது இல்லை. இப்போது நாம் சாப்பிட்ட கணக்கையெல்லாம் நாமேதான் கல்லாவின் முன்னே ஒப்பிக்க வேண்டியிருந்தது.

அந்தக் கணித மேதைக்குப் பதிலாக இப்போது ஒரு பொடியன் இருந்தான் கணக்கு வழக்கெல்லாம் தெரியாது. ஆனால் அவனைப் போல் உபசரிக்க இந்த உலகத்தில் ஒருத்தன் பிறந்து வர வேண்டும் என்றார் சோமன்.

பெயர் அருணாச்சலம். ஊர் திண்டிவனம். சிரித்த முகம். முன்பல் இரண்டும் துருத்திக் கொண்டிருக்கும். அவனைப் போல் உபசரிப்பதற்கு ஒருவர் பிறந்து வர வேண்டும். திடீர் திடீரென்று காணாமல் போய் விடுவானாம். மூன்று நாட்கள் ஏதாவது பரோட்டா கடையில் இருந்து விட்டுத் திரும்பி வந்து விடுவானாம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராயர் கஃபே. இப்போது கரி அடுப்பு இல்லை. கேஸ் அடுப்புதான். ஆனால் அதே ருசி.

சோமன் ஒரு சுவாரசியமான மனிதர். தன்னுடைய பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டே என்னோடு வருவார். உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் என்னோடு பேசிக் கொண்டு வருவார்.

குமுதத்தில் ஒரு ஜோக் போட்டு இருக்கான் சார். கேளுங்கள் அந்த ஜோக்கை. தீய்ந்து போன தோசைக்கும், கர்ப்பஸ்த்ரிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ரெண்டையும் கொஞ்சம் முன்னே எடுத்திருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த போது மணி எட்டு. அப்போதுதான் அவந்திகா எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தாள். பசியோடு வந்திருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்?

அதனால்தான் சொல்கிறேன்...செந்தில், அந்தப் பக்கங்களை சிரமம் பாராமல் குரியரில் அனுப்பி வைத்து விடுங்கள். நானே வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறேன்.

***

25.7.2008.

6.00 p.m.