எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

(நாவலிலிருந்து ஒரு பகுதி)

 

 

பழக்க வழக்கங்களில் லலிதமாயிருத்தல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நிலை தேவையாயிருக்கிறது. என் நண்பன் குருசாமியிடம் நான் லலிதத்தை எதிர்பார்க்க முடியாது.

குருசாமி எங்கள் ஊர் தொம்பர்களில் ஒருத்தன். பறையர்களை விடவும் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படும் இவர்களின் தொழில் - மலம் அள்ளுதல். இவர்களின் மொழி தமிழ் கலந்த தெலுங்கு. என் தாய்மொழியும் தெலுங்கு என்பதால் இதை முன்னிட்டே குருசாமிக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. நான்காம் வகுப்பு வரை இருவரும் ஒன்றாகப் படித்தோம். பிறகு குருசாமி தன் பரம்பரைத் தொழில் செய்து குடும்பத்தின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு படிப்பை நிறுத்திக் கொண்டான்.

தொம்பச்சேரியில் அவன் ஒருத்தன் தான் வித்யாசமானவனாக இருந்தான். ஆண்கள் அத்தனை பேரும் 'வேலி முட்டி' அடித்து விட்டு தெருவோரச் சாக்கடைகளில் உருண்டு கிடந்தார்கள். பெண்கள் தெருக் கூட்டி, பிச்சையெடுத்து, குழந்தை பெறுவார்கள். குருசாமி ஒருத்தன்தான் கள்ளு குடிப்பவன். ( வேலி முட்டி குடித்தால் ஆண்மை போய்விடும் )

ஒருநாள் குருசாமியைக் கேட்டேன் - உங்கள் ஆட்கள் இப்படி வேலி முட்டி குடித்து வீணாய்ப் போகிறார்களே, முனிசிபாலிட்டி கொடுக்கும் சம்பளத்தில் அரை மனுஷனாகவாவது வாழலாமே, ஏன் இப்படிப் பன்றியாய் வாழ்கிறார்கள் எனறு. குருசாமி கோபாவேசமாகிக் கத்தினான். இம்மாதிரி கேள்வி கேட்பவர்களைக் காயடிக்க வேண்டுமென்று கூச்சலிட்டான். பிறகு கோபம் தணிந்து என்னை அவனோடு அவனுடைய வேலைக் களத்திற்கு அழைத்தான்.

பீ சந்தில் - அந்தச் சந்தை துளசிங்கப் பெருமாள் கோயில் சந்து என்று சொன்னால் எவருக்கும் புரியாது - பீ சந்து என்றே எல்லோராலும் அறியப்படும் சந்து அது - வந்து சேரும் மலத் தொட்டிகளில் இருக்கும் மலத்தை வண்டியில் எடுத்துக் கொட்டி மலக் கிடங்கில் கொண்டு போட வேண்டியது குருசாமியின் வேலை. குருசாமியோடு என்னால் ஒரு மணி நேரம் தான் இருக்க முடிந்தது. துர்நாற்றத்தில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. வீட்டுக்கு வந்து ஒரே வாந்தியும் குமட்டலுமாக எதுவும் சாப்பிட முடியாமல் படுத்துக் கிடந்தேன். மாலையில் குருசாமி வந்து என்னை கள்ளுக்கடைக்கு அழைத்துப் போனான். குடித்ததும் தான் எனக்கு ஓரளவு தெளிவு வந்தது.

" போதையில் தான் அந்த வேலையைச் செய்ய முடியும். ஆனால் கள்ளு விலையோ ரொம்ப அதிகம். அதனால் தான் சாராயம், பிறகு வேலி முட்டி என்று போய் விடுகிறார்கள் " என்றான் குருசாமி. குருசாமி மட்டும் மலம் அள்ளுவது தவிர வீடுகளுக்கு வேலி அடைத்துத் தருவது, விறகு வெட்டுவது போன்ற மற்ற வேலைகளும் செய்து கள்ளுக்குப் பணம் சம்பாதித்துக் கொள்கிறான். ஒருமுறை குருசாமிக்குக் கள்ளு குடிக்க காசு இல்லாமல் போய் இந்த வேலையைச் செய்து ஒரு வாரம் வந்தியும் மயக்கமுமாக வீட்டில் படுத்துக் கிடந்தானாம். நாங்கள் பன்றியைப் போல் வாழ்கிறோம் என்றான் குருசாமி.

சமீபத்தில் நீரஜாவின் தேடல் என்னும் நாவல் தமிழில் பிரபலமாகியிருந்தது. ஏகமனதாக அனைவர் பாராட்டையும் பெற்றிருந்தது இந்த நாவல். களச் செயலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு குழு மட்டும் இந்நாவல் தனி மனித வாதத்தைத் தூக்கிப் பிடிக்கிறதென்று இதை ஒதுக்கியிருந்தது.

நாவல் வெளிவந்த புதிதில் இது பற்றி ஒரு கருத்தரங்கம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. சில முக்கியமான விமர்சகர்கள் நாவலை இன்னும் படித்திருக்கவில்லை என்பதால் அவர்களால் அப்போது தமது கருத்தைத் தெரிவிக்க இயலாமல் போனது. எனினும் இடதுசாரிகள் பலரும் இந்நாவலைப் பெரிதும் பாராட்டினார்கள். நீரஜாவும் கருத்தரங்கிற்கு வந்திருந்தாள். மன்னிக்கவும், அறுபது வயதைத் தாண்டாத பெண்களை என்னால் 'அவர்' போட்டுப் பேச முடிவதில்லை. நீரஜாவிற்கு வயது முப்பத்தைந்து தான் இருக்கும். ஆனாலும் தோற்றம் இருபத்தைந்துக்குரியதாய் இருந்தது. என்னை உலுக்கியது இதுதான் .

( கலாமோகன் இல்லம் - 2001 - பாரிஸ் )

நீரஜாவை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். இக்கருத்தரங்கிற்காக பம்பாயிலிருந்து வந்திருந்தாள். பம்பாயில் வசிப்பவளாய் இருந்தாலும் அவள் கையுள்ள ரவிக்கையே அணிந்திருந்தாள். அது எனக்கு மிகவும் பிடித்ததிருந்தது. தில்லியில் கோடைக் காலத்தில் கையற்ற ரவிக்கைகளைப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கும். அதுவும் பஸ்ஸில் போகும் பொழுது கம்பியைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் பெண்களின் கைகளைப் பார்த்தால் குமட்டலே வரும். அன்றைய தினம் தான் ரோமம் நீக்கப்பட்டிருந்ததானால் பச்சை நிறத்துடன் அது அவ்வளவு அருவருப்பாக இருக்காது. ஆனால் நீக்கப்பட்டு சில நாட்கள் ஆகியிருந்தால் அந்த அக்குள்ரோமத்தைப் பார்க்கும்போது யோனியின் ஞாபகமே வரும். நீரஜா தன் அக்குளைக் காட்டாமல் இருந்தது மிகவும் திருப்தியாய் இருந்தது.

காலையில் வேறொரு நூலைப் பற்றிய அமர்விலேயே நான் நீரஜாவைப் பார்த்து விட்டேன். அமர்வில் பல பெண்கள் இருந்தாலும் ஒரு பெண்ணைச் சுற்றியிருந்தவர்களிடம் மட்டும் கர்ப்பக்கிருகத்தில் நின்று கொண்டிருப்பதான பாவனையைக் காண முடிந்ததால் அதுதான் நீரஜா என்று யூகித்துக் கொண்டேன். நீரஜா ஏன்தான் இப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறாளோ என்று நினைத்தேன்.

நானும், தி.சா. ராஜூ, ஜெயகாந்தன், சுஜாதா என்ற சூழலிலிருந்து விலகி வர ஆரம்பித்திருந்த காலத்தில் நீரஜாவின் எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்ததுண்டு. ஆனால் பிற்பாடு தான் இந்த நீரஜா மற்றும் இவளை ஒத்த இலக்கிய கர்த்தாக்கள் பலரும் சேர்ந்து ஒரு போலியான இலக்கியத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. முன்னதைவிட பின்ன திலிருந்து விடுபடுவது கடினம் என்பதால் இது மேற்கூறிய சூழலைவிடவும் அபாயகரமானதாக எனக்குத் தோன்றியது.

இதுதான் இலக்கியம் - பணத்திற்கோ புகழுக்கோ நாம் எழுதவில்லை - மனிதனின் அடையாளத்தைத் தேடுவதே நமது குறிக்கோள் என்பது போன்ற பிரமைகளில் இந்த எழுத்தாளர்களும் இவர்களது ரசிகர்களும் மூழ்கிக் கிடந்தார்கள். ஆண்டாண்டுக் காலமாக நாம் மீது திணிக்கப்பட்டு வந்திருக்கும் மதிப்பீடுகளையே இவர்கள் தமது எழுத்துகளில் முன்வைத்துக் கொண்டிருந்தார்கள். தாங்களே நேர்மையாளர்கள் என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அந்த நேர்மையின் அர்த்தம் எதுவென்றும் இவர்களில் யாரும் எடுத்துச் சொன்னதில்லை.

வெகுஜன கலாசாரம் பற்றி காலை அமர்வில் விவாதிக்கப்பட்டது. நீரஜா " கார்த்தாலதான் வந்தேன். ரூமுக்குப் போய் தூங்கிட்டு மத்தியானம் வர்றேன் " என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். பிறகு பணிரண்டு மணி அளவில் திரும்பி வந்தாள். எனக்கு எதிரில் இடம் இருந்ததால் அங்கே அமர்ந்தாள். இடுப்பின் மடிப்புகள் என்னை உலுக்கியெடுத்தன. ராஜன் கட்டுரை வாசித்துக் கொண்டிருந்தான் .

காலை அமர்வு ஒரு மணிக்கு முடிவ தாக இருந்தது. ஆனால் இடையில் ஒரு எழுத்தாளர் - இவர் மிகப் புகழ் பெற்ற ஒருவர். இடதுசாரிகள் பலரின் பாராட்டைப் பெற்ற நாவலாசிரியர் எழுந்து - வறுமை பற்றியோ, சென்னையில் நடக்கும் ஹோட்டல் சிப்பந்திகள் வேலை நிறுத்தம் பற்றியோ ஏன் எவரும் இதுவரை பேசவில்லை ? நீங்கள் மார்க்சியவாதிகள் தானா என்று நான் சந்தேகிக்கிறேன். எனவே இங்கு எனக்கு வேலையில்லை - என்று அறிவித்து விட்டு வெளிநடப்பு செய்துவிட்டார். இது நிகழ்ச்சி நிரலில் இல்லாதது. இதைத் தொடர்ந்து இது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்ததால் இரண்டு மணியாகியும் நிகழ்ச்சி முடிவடையாமல் இன்னும் ஒருவர் பேச வேண்டியும் இருந்தது. ராஜன் தனது கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருந்தான். எல்லோருடைய முகத்தையும் பார்த்தேன். ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மதிய அமர்வு மாலை நான்கு மணிக்குத் துவங்கியது. இப்பொதும் நீரஜா என் முன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள். நான் கட்டுரை வாசித்து விட்டு அமர்ந்ததும் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து, 'நான்தான் நீரஜா' என்றாள். முகத்தில் முறுவலின்றி, தெரியும் என்றேன். 'உங்கள் பெயர் ...' என்று இழுத்தாள். சூர்யா என்றேன். புரியாத மாதிரி பார்த்தாள். உடனே நான் 'முனியாண்டி' என்னும் என் புனை பெயரைச் சொன்னேன். அத்துடன் பேச்சு முடிந்தது.

மாலையில் நீரஜாவின் நாவல் பற்றிய அமர்வு. நீரஜாவின் நாவலின் கதாநாயகன் பேசுகிறான்: மனித வாழ்வு கலாபூர்வமானதாக இருக்க வேண்டும். இதற்கு மனம் பூராவும் இசையாக வேண்டும். அது அவனுடைய எல்லாச் செயல்களிலும் வெளிப்படும். பலபேர் தங்கள் நகத்தில் ஊர் அழுக்கைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எவன் நகத்தைச் சுத்தமாக வைத்திருக்கிறானோ அவனே உண்மையான கலைஞன் .

நான் இதைக் கடுமையாகத் தாக்கினேன். இம்மாதிரி எழுதுபவர்கள் சமூக விரோதிகள் என்றேன்.

ஒரு நாள் நானும் என் நண்பன் ஒருவனும் காக்டெயில் பார்ட்டிக்குப் போய்விட்டு கனாட் பிளேஸிலுள்ள ஸ்டாண்டார்ட் ரெஸ்டாரெண் டில் சாப்பிட்டு விட்டு - சாப்பாட்டு பில் நூற்று இருபது ரூபாய் - வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். மால் ரோட் சந்திப்பிலுள்ள கழிப்பறை ஒன்றில் நானும் அவனும் சிறுநீர் கழிக்க போய் 'ஜிப்' பைக்கூடக் கழற்றிவிட்டோம். அப்போதுதான் எங்கள் காலடியில் யாரோ படுத்திருப்பதை யதேச்சையாகக் கவனித்தோம். அறைக்கதவை எல்லாம் அடைத்து விட்டு ரஜாய்க்குள் படுத்துத் தூங்கினால் கூட குளிரை விரட்டுவது சிரமம். என் நண்பன் உடனே ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து 'அவனுக்கு பக்கத்தில் வைக்கவா ?' என்று கேட்டுக்கொண்டே அவனருகே போனான்.

'அடேய் முட்டாள்' என்று கத்தினேன். அவன் கையைப் பிடித்து இழுத்து சற்று தூரத்தில் இருந்த நடைபாதை ஓரங்களில் உறங்கும் மனித உருவங்களையெல்லாம் காட்டினேன். 'இப்போது நீ இத்தனை பேருக்கும் இருபது ரூபாய் நோட்டு வைக்க வேண்டும் - செய்' என்றேன்.

நீரஜா - நீயும் நானும் இந்த வர்க்கத்தின் உழைப்பில் சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். இலக்கியமும் நேர்மையும் கங்குபாய் ஹங்கலும் மல்லிகார்ஜூன் மன்ஸுரும் சமயங்களில் விஸ்கியும் எல்லாம் நம் பக்கம் ...

( பெர்லின் 2001)

மறுநாள் கருத்தரங்கு தொடங்கியது. அன்று நீரஜா ஒரு கட்டுரை வாசிப்பதாக இருந்தது.

வாசிக்கும் பொழுது நீரஜாவுக்கு வேர்த்துக் கொட்டியது. எனக்கு வருத்தமாக இருந்தது. வாசித்து முடித்தபின் என் அருகில் இடம் இருந்ததால் வந்து அமர்ந்தாள். சிரித்தாள். சிரித்தேன். மிகவும் களைப்புடன் தென்பட்டாள். புடவைத் தலைப்பால் முகத்தை விசிறிக் கொண்டே என் முன்னால் நான் வைத்திருந்த சிகரெட் பெட்டியைப் பார்த்தாள். 'எடுத்துக் கொள்ளலாமா ?' என்று கேட்டாள். ஆச்சரியம் கொஞ்சமும் வெளிப்பட்டுவிடாமல் 'நிச்சயமாக' என்று சொல்லி பெட்டியை எடுத்து அவள் கையில் கொடுத்தேன்.

அந்தக் கணத்தில் நீரஜாவை நான் மிகவும் நேசித்தேன். உடனே நான் ஒரு தவறு செய்துவிட்டது புரிந்தது. சிகரெட்டைப் பற்ற வைக்க நானே உதவியிருக்க வேண்டும். அல்லாமல் தீப்பெட்டியை மட்டும் எடுத்துக் கொடுத்த என் மடமையை நொந்து கொண்டேன். எதுவும் காலம் கடந்துதான் புரிகிறது. ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தாள்.

***

கடந்த ஐந்து தினங்களாக கணினியின் பக்கமே வர முடியாமல் போனது. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் என்ற இந்த நாவலின் தட்டச்சுப் பிரதியைச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்த நாவல் விரைவில் உயிர்மை பதிப்பகத்திலிருந்து வெளி வரும்.

***

19.7.2008.

10.30 a.m.