தில்லியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மைனாரிட்டி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைப் போட்டு விட்டு, ‘ அதன் ஷரத்துக்களை பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்க மாட்டோம்; அப்படி அதை வெளிப்படையாக முன் வைப்பது தேச நலனுக்கு உகந்ததல்ல ’ என்று கூறுகிறது. காங்கிரஸ் இங்கே எப்படி மைனாரிட்டியோ அதே போல் அமெரிக்காவிலும் ஜார்ஜ் புஷ் இப்போது ஒரு தற்காலிக அதிபர்தான்; அடுத்த அதிபர் வரும் வரை. ஆக, இரண்டு தற்காலிக அரசுகள் கையெழுத்திடும் ஒப்பந்தம் எப்படி இரண்டு நாடுகளின் உண்மையான ஒப்பந்தமாக இருக்க முடியும்?
இடதுசாரிகளும், பாரதீய ஜனதாவும், இன்னும் பல முக்கியமான பிராந்தியக் கட்சிகளும் மிகக் கடுமையாக எதிர்க்கும் இந்த ஒப்பந்தத்தைப் பொது விவாதத்திற்கு வைக்காமலே அமெரிக்காவுடன் கையெழுத்துப் போடுவோம் என்று மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு சொல்வதைப் பார்த்தால் வரலாறு தலைகீழாய் மாறுவதாய்த் தோன்றுகிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவை விடுதலை செய்வதற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி, இன்று அதே இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் குத்தகைக்குக் கொடுக்க முன் வந்திருக்கிறது. கேட்டால், ‘ இனிமேல் இந்தியாவில் மின்சாரமே கிடைக்காது; இந்தியாவே இருண்ட தேசமாகப் போய் விடும் ’ என்று பூச்சாண்டி காட்டுகிறது காங்கிரஸ்.
இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது என்பதைத் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானியான நம்மாழ்வார் கூறுகிறார்; கேட்போம்:
“ பயிர்களுக்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் உணவு விஷமாகி வருகிறது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
வட துருவத்திலும், தென் துருவத்திலும் மலைகள் உருகிப் பனியாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயரும்; இன்னும் மூன்று அடி உயர்ந்தால் கொல்கொத்தா போன்ற நகரங்கள் அழிந்து விடும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் காடுகள் மிகவும் குறைவு. இதனால் பருவ மழை பொய்த்து விட்டது. ”
இப்படிப் பட்ட நிலையில் இந்திய அரசு விவசாயிகளின் நலனைக் காப்பதற்காக ஏதாவது திட்டங்கள் போட்டதா? அதற்காக எந்த நாட்டுடனாவது ஒப்பந்தம் செய்து கொண்டதா? இது போதாதென்று விலைவாசியும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து மக்களின் மென்னியைப் பிடித்து நெறித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டின் சுகாதாரத் துறையும், கல்வித் துறையும் படு மோசமான நிலையில் இருக்கிறது. ஆனால் ராணுவத்துக்கு ஆகும் செலவோ இந்த இரண்டு துறைகளுக்கும் ஆகும் செலவை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் உலகிலேயே மூன்றாவதாக உள்ளது இந்தியா. மற்ற நாடுகள் அமெரிக்கா, சீனா. ஆனால் அந்த நாடுகளில் கூட துப்பாக்கிச் செலவுக்கும், ரொட்டிச் செலவுக்குமான வித்தியாசம் இந்தியாவில் இருப்பதைப் போல் அவ்வளவு பயங்கரமானதாக இல்லை.
இந்தப் பின்னணியில் இப்போது எதற்காக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்? கிராமங்களில், ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்வார்கள். நாம் இதை ‘அமெரிக்கா புகுந்த நாடு ’ என்று மாற்றிப் போட்டுக் கொள்ளலாம். உயிரியல் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாகச் சொல்லி ஈராக்கினுள் நுழைந்தது அமெரிக்கா. என்ன நடந்தது?
ஈராக்கில் எந்த இடத்திலும் உயிரியல் ஆயுதம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதை அமெரிக்காவினால் நிரூபிக்க முடியவில்லை. சதாம் ஹுசேனைத் தூக்கில் போட்டு விட்டுத் தன்னுடைய பொம்மை அரசை நிறுவியது. 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமும், உலகின் ஆதி நாகரிகங்களில் ஒன்றுமாகிய ஈராக் இன்று அமெரிக்கர்களின் ஆயுதக் கிடங்காக மாறி விட்டது.
தினந்தோறும் குண்டு வெடிப்புகள்; உள்நாட்டுப் போர் என்று இன்றைய ஈராக்கில் தினமும் நூறு அப்பாவி மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பில் கை கால் ஊனமடையாத மனிதரைப் பார்ப்பதே இன்று அந்த நாட்டில் அரிதாகி விட்டது. அதிலும் அதிகம் பாதிக்கப் படுவது குழந்தைகள். ஈராக்கின் எண்ணெய் வளத்துக்காக அந்த நாட்டுக்குள் அத்து மீறிப் புகுந்து, அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி விட்ட அமெரிக்காவை ஒரு இன்டர்நேஷனல் ரௌடி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
இப்படிப்பட்ட ஒரு ரௌடி அரசுடன் அணுசக்தி ஒப்பந்தம் வைத்துக் கொண்டால் என்ன ஆகும்?
இந்தியாவை அமெரிக்காவிடம் குத்தகைக்கு விடுவதற்காக இங்கே மின்சாரத்துக்கே வழியில்லை என்று பச்சைப் பொய் சொல்கிறது காங்கிரஸ். ஏன், இந்தியாவில்தான் தோரியம் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறதே? (உலகிலேயே தோரியம் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது) இப்படி அதிக அளவில் கிடைக்கும் தோரியத்தை வைத்துக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்கான வழிவகைகளைத் தேட வேண்டியதுதானே?
மேலும், இந்தியாவின் தற்போதய மின் உற்பத்தி 1,26,839 மெகாவாட்ஸ். இதில் அனல் மின்சாரம் 66%, நீர் மின்சாரம் 26%, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சார 5% ஆக, மீதி மூன்று சதவிகித மின்சாரம்தான் அணுசக்தி மூலம் கிடைப்பது. இந்த மூன்று சதவிகிதத்தை இன்னும் 20 ஆண்டுகளில் ஆறு சதவிகிதமாக உயர்த்த அரசு செலவழிக்க வேண்டிய தொகை 50,000 கோடி ரூபாய். ஆனால் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு அரசு இப்போது செலவழித்துக் கொண்டிருக்கும் தொகை 600 கோடி ரூபாய். இந்நிலையில் காங்கிரஸ் அரசு 3,897 கோடி ரூபாயை அணுசக்தி மின்சாரத்துக்காக ஒதுக்கியிருக்கிறது. அதாவது, மூன்று சதவிகித மின்சாரத்தைப் பெறுவதற்காக இவ்வளவு பெரிய தொகை!
இதையெல்லாம் நான் சொல்லவில்லை. அரசாங்கமே கொடுத்திருக்கும் புள்ளிவிபரம் இது.
இது தவிர, இந்தியாவில் கிடைக்கும் யுரேனியத்தை அரசாங்கம் மக்களுக்குத் தேவையான மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தாமல் அணு ஆயுதங்கள் தயாரிக்கவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு ரொட்டி வேண்டாம், துப்பாக்கியே போதும் என்று நினைக்கும் அப்துல் கலாம் போன்றவர்கள் காங்கிரஸின் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் காரணமும் இதுதான்.

பிரிட்டிஷார் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்கிக் கொடுத்தது இந்தியா. இப்போது அமெரிக்காவுக்கு மென்பொருள் குமாஸ்தாக்களை ( Software Clerks) உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கும், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆஃப்ரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு பல ஆயிரம் கறுப்பின மக்கள் அடிமைகளாகக் கப்பல்களில் கொண்டு செல்லப் பட்டார்களே, அதற்கும் என்ன வித்தியாசம்? இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் இந்த இந்திய மென்பொருள் அடிமைகளும் தங்கள் வேர்களை இழந்து அமெரிக்க மக்களோடு ஐக்கியமாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இப்படி, அமெரிக்காவுக்கு அடிமை ஏற்றுமதி செய்யும் இந்தியாதான் வல்லரசு நாடா?
இந்தப் பிரச்சினையை இங்கே எழுப்புவதன் காரணம் என்னவென்றால், அமெரிக்கர்களுக்கு அடிமைப் பணி செய்யும் இந்த மென்பொருள் துறையால் இந்தியாவின் உள்கட்டுமானம் இன்று சீரழிந்து போய்க் கிடக்கிறது. ஒரு பக்கம், கிராமங்களில் விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த மென்பொருள் துறை இளைஞர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு பதிலாக இவர்களை இந்தியாவே தனது உள் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, தோரியத்தின் மூலம் மின்சாரம் தயாரிப்பது.
கிராமங்களில்ஒரு சராசரி மனிதனின் மாத ஊதியம் ரூ. 500/- இலிருந்து 2000/- வரைதான். தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ. 1000/- ஆனால், ந்யூயார்க்கில் வாழும் ஒரு அமெரிக்கக் குடிமகனுக்கு அவனுடைய பல் டாக்டரின் முகவரியைச் சொல்வதற்காக இங்கே சென்னையிலோ ஹைதராபாதிலோ மென்பொருள் துறையில் அடிமையாகப் பணிபுரியும் ஒருவரின் மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம்.
இப்படி இருந்தால் இந்தியாவின் பொருளாதாரமும், சராசரி மனிதனின் வாழ்வும் என்ன ஆகும்? இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாட்டில் யாரும் தைரியமாகத் தெருக்களில் நடமாடவே முடியாத நிலைமை ஏற்படும். இதுவும் போதாதென்றுதான் காங்கிரஸ் கட்சி ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிடம் இந்தியாவை ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறது. மைனாரிட்டி அரசு என்பதால் அது நடக்காது. ஆனால் இதன் விளைவாக பாரதீய ஜனதாதான் ஆட்சிக்கு வரும். இந்தியா பற்றி யோசிக்கும் போது வேறு நம்பிக்கையூட்டக் கூடிய எதிர்காலத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.
இப்படியாக, ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக மாற்ற முயற்சிக்கிறது; மற்றொரு பக்கம் பாரதீய ஜனதா கட்சி இந்த நாட்டை மத்திய கால கட்ட மதவாத அரசாக மாற்றப் பார்க்கிறது. இந்த இரண்டு வழியையும் விட்டுவிட்டு இந்தியா ஈரான், சீனா போன்ற நாடுகளுடன் இவ்விஷயங்களில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்தியா ஈரானுடன் போட்ட எரிவாயு ஒப்பந்தத்தை அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து முறித்துக் கொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
***
14.7.2008.
நன்றி : கலா கௌமுதி வார இதழில் வெளியானது.