கேள்வி பதில்

 

கேள்வி:

சாரு , நீங்கள் செய்து கொண்டிராத - கொள்ளவும் முடியாத/ கூடாத சமரசங்கள் நிரம்ப உண்டு.. ஏன் ? ... கிறித்துவம், பௌத்தம் , சமணம் போன்ற சித்தாந்தங்களை மட்டும்தான் நீங்கள் தொட வில்லை. இல்லையெனில் நீங்களும் ஓஷோ தான். ஓஷோ எழுதிய புத்தகங்களை நான் நிரம்பப் படித்திருக்கிறேன். Krishna Smriti , Seeds of Wisdom, White Lotus, Books about Life, Love, Kundalini, Krishna, and Yoga... Basically Buddha(Zen)... I Love Him & You... என்று பல...ஓஷோவும் நீங்களும் ஒரே பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஓஷோ சொல்லும் ஹார்மனி என்ற விஷயத்தையே நீங்கள் உங்களுடைய பல்வேறான எழுத்துக்களில் சொல்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். உதாரணமாக ‘ கலகம் , காதல் இசை ’ .

இந்த அளவு வாசிக்கக் கூடிய ஒரு எழுத்தாளனை நான் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை... உண்மை.. I love you..

இப்போது என் கேள்வி: ஓஷோ பற்றி உங்கள் கருத்து என்ன?

சரவணன்.

நியூஸிலாந்தில் கார்த்திக்

பதில்:

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் உள்ள எனது நண்பர்களான மாணிக்கம், ஸ்ரீராம் என்ற நண்பர்கள் எனக்கு ஓஷோவின் பேச்சை அறிமுகப் படுத்தினார்கள். அவருடைய குரலில் ஆளை மயக்கும் ஒரு வசீகரம் இருந்தது. அவருடைய ஆங்கில உச்சரிப்பு வட இந்தியர்களுக்கே உரியது. குரலில் ஒருவித நளினமான பெண் தன்மை இருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப் படுத்தியது என்னவென்றால், அவருடைய சிந்தனை என்னோடு மிகவும் ஒத்திருந்தது. எனக்கு இதை சரியான வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி நான் என்ன யோசிப்பேனோ அதையே அச்சு அசலாக ஒத்திருந்தது. பிறகு நான் அவருடைய ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்துப் பார்த்த போதும் ஏதோ நான் எழுதிய புத்தகங்களையே படிப்பது போல் இருந்தது கண்டு பயந்து போனேன். ஆம், பயந்துதான் போனேன்.

என்ன செய்யலாம்? எழுதுவதை நிறுத்தி விடலாம். ம்ஹும். அது சாத்தியமே இல்லை. ஓஷோவையும் வேறு மாதிரி சிந்தியுங்கள் என்று சொல்ல முடியாது. என்னை விட சீனியர். அதனால் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஓஷோவை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். அதிலிருந்து ஓஷோவின் ஒரு எழுத்தைக் கூட வாசித்ததில்லை.

ஓஷோவை வாசிக்கும் நண்பர்கள் இப்போது சரவணன் சொல்வதைப் போலவே சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்போது கூட சரவணனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதி விட்டு இந்தக் கேள்வியைப் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் சென்ற வாரம் கூட ஒரு தினசரியில் மௌனம் பற்றி ஓஷோ எழுதியிருந்ததைப் படித்து விட்டு மிரண்டு போனேன். குட்டிக் கதைகளின் இறுதிக் கதையான 108-ஆவது கதையில் நான் என்ன சொல்ல இருக்கிறேனோ அதையே அவர் அதில் சொல்லியிருந்தார்.

இனிமேல் தினசரிகளில் வரும் ஓஷோவின் மேற்கோள்களைக் கூடப் படிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஒற்றுமைக்குக் காரணம் என்ன தெரியுமா? எங்கள் இருவரின் மூல ஊற்றும் ஒரே இடத்திலிருந்துதான் பிறக்கிறது. அந்த இடம்: ததாகதர்.

***

19.7.2008.

9.00 a.m.