குமுதம் இதழில் வெளிவந்த உரையாடல் (12.11.2001)

 

சாரு நிவேதிதா: சமீபத்தில் ஒரு பெரிய எழுத்தாளரைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு குறிப்பிட்ட விருதைச் சொல்லி , " இந்த விருதுக்காக உங்கள் பெயரை யாரும் சிபாரிசு செய்யவில்லையா?" என்று கேட்டேன். அத ற் கு அவர் சொன்னார் , " எனக்கு இப்போதுதான் 70 வயது ஆகிறது. ஒரு 80, 90 வயதாகி சித்தபிரமை எல்லாம் வந்த பிறகுதான், நமக்கெல்லாம் அதை கொடுக்கலாம்னு கன்சிடர் பண்ணுவாங்க" என்றார். அவர் நகுலன்.

அப்போதுதான் இந்த விருது கொடுக்கும் சமாச்சாரம் இப்படி இருக்கிறதே என்று வருத்தப்பட்டேன்.

" வாய்க்கரிசி போடுவதுபோல் விருதைப் போடுகிறார்கள்" என்று நீங்கள் ஒருமுறை சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. நகுலன் சொன்ன கருத்தும் நீங்கள் சொன்ன கருத்தும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது. இப்படி விருது என்பது ஒரு அர்த்தமற்ற விஷயமாக ஆகிக் கொண்டு வருகிறது.

இப்படிப்பட்ட விருதுக்காக இலக்கியவாதிகளும் அதைத் துரத்திக் கொண்டு அலைவது வருத்தமாக இருக்கிறது. இலக்கியவாதிகள் , புத்திஜீவிகள், கலைஞர்கள் இவர்கள்தான் சமூகத்தின் மனசாட்சிகள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இங்கே விருதுக்காக விலை போய்க் கொண்டிருப்பது ஒரு சமூக அவலம்.

இந்திரன்: விருது வாய்க்கரிசி போடுவது போன்ற சமாச்சாரமாக மாறிவிட்டது என்று ஏன் சொன்னேன் என்றால் , அமைப்புக்கு குந்தகம் வராத ஆட்களைத் தேர்ந்தெடுத்துத்தான் விருதுகளைத் தரவேண்டும் என்று ஒரு கட்டாயம் இருக்கிறது. இன்றைய சமூக மதிப்பீடுகளுக்கு ஒரு எழுத்தாளர் எதிர்ப்பாக இருக்கிறார் என்றால் அவருக்கு விருது தர மாட்டார்கள். அது இங்கே சாத்தியமே இல்லை. ஆனால் உண்மையில், அப்படிப்பட்ட transgressive எழுத்தாளன்தான் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு போகிறவன். இலக்கியத்தில் பரிசோதனைகளைச் செய்பவன்தான்

இலக்கியத்தின் புதிய எல்லைகளைத் தேடுபவன். ஆனால் , அவனுக்கு விருதுகள் கிடையாது. ஏனென்றால், அவன் சமூக அமைப்புக்கும், அதன் பிற்போக்கான மதிப்பீடுகளுக்கும் எதிராக இருக்கிறான். இது சில நேரங்களில் என்ன ஆகும் என்றால், அமைப்புக்கு எதிராக இருப்பவன் கூட, சில காலம் கழித்து கால ஓட்டத்தில் அமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுவான். அதற்குப் பிறகு அவனுக்கு விருது கொடுப்பார்கள். ஒரு படைப்பாளியின் மீது போதுமான அளவு அழுக்கு படிந்த பிறகுதான் விருது அளிக்கப்படும். ஆக, விருது என்பது, ஒரு படைப்பாளியின் சிருஷ்டிகரச் செயல்பாட்டுக்கு எந்தவிதமான நன்மையும் செய்வதாக இல்லை. சொல்லப்போனால், அவனுக்கு அது தீமையாகவே முடிந்து போகிறது.

மற்ற துறையில் யாருக்காவது விருது கொடுத்தால் அதை எதிர்த்து யாரும் கூச்சல் போடுவது இல்லை. ஆனால் , இலக்கியவாதிகளில் ஒருவருக்கு விருது கொடுத்தால் மட்டும் அதை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது. இலக்கியவாதிகளில், ஒட்டு மொத்தமாக எல்லோராலும் ஒத்துப்போகிற ஒரு எழுத்தாளன் என்று சொல்லக்கூடிய ஒருவர்கூட இல்லை.

சாரு நிவேதிதா: ஒரு சமூகம் சுரணையுணர்வுடன் இருக்கிறது என்பதன் அறிகுறியே விருது. இந்தக் கலைஞனை அங்கீகரிக்கிறோம் என்று சமூகம் நினைக்கிறது. அதன் அடையாளமே விருது. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் இந்தச் சுரணையுணர்வு இல்லாததால் விருது என்பதே கேலிக் கூத்தாகி விட்டது.

இந்திரன்: சமீபத்தில் சு. சமுத்திரத்திற்கு ' வேரில் பழுத்த பலா' வுக்கு விருது கொடுத்தார்கள். உடனே கணையாழி ' சாகித்ய அகாதமியிலும் இடஒதுக்கீடா?" என்று எழுதுகிறது. கணையாழி ஒரு உயர்சாதி மனோபாவத்தைக் காட்டிக்கொள்கிறது என்றுதானே பொருள்? இதை யாராவது கேள்வி கேட்டார்களா?

ஆனால் விருதுகளுக்காக வேலை செய்பவர்கள் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது தெரியுமா ? எவ்வளவு சீரியஸ் எழுத்தாளனா இருந்தாலும் டெல்லியில் ' லாபி' பண்ணத் தெரிந்தவன்தான் விருது வாங்க முடியும்.

சாரு நிவேதிதா: விருது என்று சொல்லும்பொது வைரமுத்துவை விட்டுவிட்டு என்னால் பேச முடியவில்லை. ஏனென்றால் அவரும் ஒரு விருது கொடுக்கிறார். கலாப்ரியாவுக்கு விருது கொடுக்கிறார். தொகை ஐயாயிரம் ரூபாய். நாளைக்கு நானே ஐந்நூறு ரூபாய்க்கு ஒரு விருது ஏற்படுத்தித் தரமுடியும். நம்முடைய அரசியலில் எந்த விதமான கேலிக் கூத்துக்களையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோமோ அதையெல்லாம் இலக்கியத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த ஐயாயிரம் ரூபாய் விருதை வாங்கிக் கொண்டு கலாப்ரியா , " தமிழின் தாலி இங்கே வைரமுத்துவின் மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது" என்று தன் சந்தோசத்தைச் சொல்கிறார். என்ன கொடுமை பாருங்கள்!

இந்திரன்: வைரமுத்து விருது கொடுப்பதன் நோக்கம் அது அல்ல. ஒரு பிரபல கவிஞனுக்குள் இருக்கும் தீவிர வாசகனின் செயல்பாடு அது. தான் மட்டுமே கவிஞன் என்று நம்பிக் கொண்டிருக்கிற தமிழ் சூழலில் இது ஒரு ஆரோக்கியமான விஷயம். பரம்பரை பரம்பரையாக விருது கொடுத்த மன்னனை வாழ்த்தி வாழ்ந்த பழம் புலவர்களின் மரபில் கலாப்ரியா வழுக்கி விட நேர்ந்தது துர்பாக்கியம்தான். விருதுகளுக்கு இருக்கிற பெயர்களை வைத்துப் பார்த்தாலே பத்துபேர் படித்தால் போதும் என்ற மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. ஞானபீடம் , குறள் பீடம் என்று ஒரு பீடத்தில் தூக்கி வைக்கிறார்கள். அதாவது மக்கள் தொடாத ஒரு இடத்தில் எழுத்தாளரைத் தூக்கி வைப்பதைத்தான் விருதுகள் செய்கின்றன.

சாரு நிவேதிதா: பிபலங்களுக்குக் கொடுக்கப்படுகிற பட்டங்கள்கூட அப்படித் தானே இருக்கிறது நீதியரசர் , கவிப்பேரரசு என்று?

இந்திரன்: விருதுகள் , பட்டங்கள் எல்லாமே தமிழ்ச் சூழலில் எழுத்தாளனை சகமனிதனிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகள்தான். விருது என்று சொன்னவுடன் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயகாந்தனும் நானும் சின்னப்ப பாரதியின் புத்தக வெளியீட்டுக்காக நாமக்கல் போயிருந்தோம். அப்போது ஜெயகாந்தன், ராஜராஜன் விருதுக்கான லட்ச ரூபாய் பெற்றிருந்தார். அவரிடம் நான் அதுபற்றிப் பேசியபோது அவர் சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது.

" ஜெயகாந்தன் ஒரு சிறந்த எழுத்தாளன் என்று புரிந்து கொள்வதற்கு ஒரு பல்கலைக்கழகத்திற்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். நான் சிறுகதை எழுதத் தொடங்கிய காலத்திலேயே நான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்பதைக் கண்டுபிடித்தார்கள் , ஆர்.கே. கண்ணனும், சின்னப்ப பாரதியும். உண்மையில் எனக்கு லட்ச ரூபாய் கொடுத்தவர்கள் அவர்கள்தான். இன்றைக்கு இந்தப் பல்கலைக்கழகத்திற்கே நான் தருவேன் லட்ச ரூபாய்" என்று சொன்னார்.

விருது என்பது உண்மைக் கலைஞனை நிராகரித்து , இலக்கியத்திற்குப் புறம்பான காரணங்களுக்காக போலிகளை கௌரவிக்கும் என்றால், இலக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இலக்கியச் சீரழிவைச் செய்கிறது என்றுதானே அர்த்தம்?

சாரு நிவேதிதா: மீண்டும் நம் ' உள் வட்டம்' வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் பேசுகிற விஷயத்திற்கு வருவோம். அதாவது, பத்து பேர் படித்தால் போதும் என்று நினைக்கும் மனோபாவம். இதுதான் உள்வட்டம். இந்த மனோபாவம்தான் விருது கொடுக்க்கும் கமிட்டியில் இருப்பவர்களிடமும் இருக்கிறது. அந்தக் கமிட்டியில் மூன்று பேர் இருக்கிறார்கள். அந்த மூன்று பெரும் விலை போவதற்கு தயாராகவும் இருக்கிறார்கள். இந்த மூன்று பேரும் செய்கிற காரியங்கள்தான் உண்மையான எழுத்தாளர்களைத் தேர்வு செய்து மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்குப் பதிலாக ஊழலுக்கு வழி வகுக்கிறது.

இந்திரன்: எல்லா விருதுகளும் ஒரு அரசியலுடனும், ஒரு அமைப்போடும்தான் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஒரு கேவலமான சமூகத்தில் அதன் அரசியலோடும் அமைப்போடும் சம்மந்தப்பட்டுக் கொண்டு , ஒரு உயர்வான விருதை எப்படி எதிர்பார்க்க முடியும்? உன்னுடைய சமூகம் அழுக்காக இருக்கும்; ஆனால், அந்தச் சமூகம் கொடுக்கும் விருது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அது எப்படி? இதனால்தான் உண்மையான எழுத்தாளனை மக்கள் முன் அடையாளம் காட்டுவதற்கு விருதுகள் தடையாக இருக்கின்றன என்கிறேன். ஏனெனில், விருதுகள் இவைதான் சிறந்த எழுத்து என்று ஒரு மதிப்பீட்டை உருவாக்கி விடுகின்றன. அப்படியானால் சமூக மதிப்பீடுகளுக்கு எதிரான ஒரு கலக இலக்கியவாதியை அது மறுக்கிறது என்றுதானே அர்த்தம்?

சாரு நிவேதிதா: சமூகம் மோசமாக இருக்கிறது , கேவலமானதாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சரிதான். ஆனால் தென் அமெரிக்க நாடுகளில் மிக மோசமான சர்வாதிகாரிகள் ஆட்சியில் இருந்த போதும் அங்கு நோபல் பரிசு பெறக்கூடிய அளவுக்கு இலக்கிய எழுச்சி சாத்தியமாகியிருக்கிறதே?

இந்திரன்: ஆனால் இங்கே இலக்கிய விருதுகளைத் தேர்வு செய்கிற நடுவர்களின் தேர்வு உட்பட எல்லாமே மூடி மறைக்கப்பட்டுத்தான் நடைபெறுகிறது. ஏன் ஒரு விருது கொடுக்கும் செயல் இவ்வளவு ரகசியமாக நடைபெற வேண்டும் ? ஏன் இங்கு ஜனநாயகத் தன்மை இல்லாமல் போய்விட்டது? சாகித்ய அகாதமி விருது கொடுக்கும்போது முதலில் பலபேர் கொண்ட கமிட்டியிலிருந்து வடிகட்டப்பட்டு கடைசியில் மூன்றுபேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் சாகித்ய அகாதமியின் தலைவர். மாற்ற இரண்டு பேர் யார் என்பது ரொம்பவும் ரகசியம். இப்படி ஒளிவு மறைவாக செய்வதே சமூகத்திற்கு எதிரான விஷயம்தான் என்கிறேன்.

சாரு நிவேதிதா: லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களிடையே ஒரு முக்கியமான மேதை ஹூலியோ கொர்த்தஸார். இன்று ஹூலியோ கொர்த்தஸார் இன்ன சதுக்கத்தில் நின்று தன்னுடைய சிறுகதையை வாசிக்கிறார் என்று செய்தித் தாள்களில் செய்தி வரும். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இருநூறு பேர் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து அந்தச் சதுக்கத்தில் கொர்த்தஸாரின் சிறுகதையைக் கேட்கக் கூடி நிற்பார்களாம். அதுதான் உண்மையான விருது. அதுபோன்ற ஒரு நிலை வந்தால் விருது பற்றிய இந்த உரையாடலே தேவையில்லை. என்னைக் கேட்டால் தமிழில் விருதுகள் கொடுப்பதில் நடக்கும் அரசியலையும் கலாட்டாவையும் பார்க்கும்போது பேசாமல் இந்த விருதுகளையே நிறுத்தி விடலாம் என்று தோன்றுகிறது.

இந்திரன்: ஆனால் , நீங்கள் சொல்வது போல் விருதுகளை நிறுத்திவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. விருதுகள் கொடுப்பதாக இருந்தால் நல்ல படைப்பாளிகளை, கவிஞர்களைத் தேடி கண்டுபிடித்து மக்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் கமிட்டி மெம்பர்கள் தேர்ந்தெடுப்பது உட்பட எல்லா செயல்களும் வெளிப்படையாக கண்ணாடிபோல தெரியும்படி இருக்கவேண்டும்.

***

நன்றி : குமுதம்