|
எனக்கு இந்த சாதி, மொழி, மதம், தேசம் போன்ற எந்த விஷயங்களிலும் நம்பிக்கை கிடையாது. ஒரு படைப்பாளி என்பவன் கடவுளைப் போல; கடவுளுக்கு மதமோ தேசமோ அல்லது வேறு ஏதாவது அடையாளமோ உண்டா என்ன? படைப்பாளியும் அப்படிப் பட்டவன்தான். மேலும், வரலாறு முழுவதுமே மக்கள் கூட்டம் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் காரணமாக இலங்கையிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களின் குழந்தைகள் இன்று ஃப்ரெஞ்சையும் ஜெர்மனையும்தான் தங்கள் தாய் மொழியாகக் கொண்டிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் அடுத்த தலைமுறையில் அவர்களுக்கு ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் போகும்.

( பாரிஸில் நண்பர்களுடன் )
பாரிஸில் ஒருநாள் ஈஃபல் டவருக்குப் பக்கத்தில் நடந்த ஒரு விவசாயிகளின் வாரச் சந்தைக்குச் சென்றிருந்தேன். நம்மூர் கிராமங்களில் நடக்கும் வாரச் சந்தை மாதிரியேதான் இருந்தது. ஒரே வித்தியாசம், அவர்கள் கால் சராய் அணிந்திருந்தனர். வீட்டில் செய்த ஒயின் போத்தல்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. சில கடைகளில் இலவசமாகவே கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு கடையில் ஒரு தமிழரைப் பார்த்தேன். தமிழில் பேச ஆரம்பித்தேன். அவருக்கோ ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியவில்லை. பெயர்? முருகன் என்றார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து ஃப்ரான்ஸ் வந்து, அங்கே ஏதோ ஒரு கிராமத்தில் குடி பெயர்ந்து ஒரு ஃப்ரெஞ்ச் பெண்ணை மணந்து கொண்டவராம் அவருடைய கொள்ளுத் தாத்தா.
கேரளாவில் ஒரு ஊரில் அத்தனை பேருமே ஆஃப்ரிக்கர்களைப் போல் தோற்றம் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் தெரிந்திருக்கவில்லை. என்னவென்று விசாரித்துப் பார்த்தால், கதை கிழக்கு ஆஃப்ரிக்காவுக்குப் போகிறது. தான்ஸானியாவுக்கு வெகு அருகில் இந்தியப் பெருங்கடலில் ஒரு குட்டியூண்டு தீவு இருக்கும். ஸான்ஸிபார் என்று பெயர். இந்தக் கேரளத்து ஊரிலுள்ளவர்களின் மூதாதையர் அந்த ஸான்ஸிபார் என்ற தீவிலிருந்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தியப் பெருங்கடலின் வழியே வந்து சேர்ந்தவர்கள்.
இந்தியாவையே எடுத்துக் கொண்டால், 1947க்கு முன்பு பாகிஸ்தானும், பாங்ளாதேஷும் இந்தியாவின் அங்கம். ஆக, 1947க்கு முன்பு நீங்கள் பாகிஸ்தானை உங்கள் தாய்நாடாக மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். இப்போது அதே பாகிஸ்தானை வெறுக்க வேண்டும். வெறுக்காமல் நேசித்தீர்களானால் நீங்கள் ஒரு பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கில் போடப் படுவீர்கள். ஆனால் அப்படி உங்களைத் தூக்கில் போட சிபாரிசு செய்யும் அத்வானியோ பாகிஸ்தானில் பிறந்தவர். முஷாரஃப் இந்தியாவில் பிறந்தவர். ஆகவே, இந்த தேசம், தேசப் பற்று என்பதெல்லாம் வெறும் கற்பிதம் என்பது என்னுடைய கருத்து.
அப்படிப்பட்ட நான் ஊர்ப் பாசம் உள்ளவனாக இருப்பேனா? இதையெல்லாம் இங்கே சொல்ல வந்ததன் காரணம், கென் பற்றி நான் எழுதியிருந்ததைப் படித்து விட்டு பல நண்பர்கள் கென்னிடம் “சாருவும் நீங்களும் ஒரே ஊர்க்காரர்களா? சாரு உங்களுக்குச் சித்தப்பாவா? ” என்ற ரீதியில் பல கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். படிப்பவர்கள் கூட இவ்வளவு முட்டாள்தனமாக சிந்திப்பார்களா?
ஏன் ஐயா, வா.மு. கோமு என்ற எழுத்தாளர் எனக்கு என்ன மாமனா மச்சானா? அவர் பேசும் கொங்குத் தமிழைப் புரிந்து கொள்ளவே நான் ரொம்பவும் கஷ்டப் பட்டுப் போவேன். சிறுகதைகளில் என்னையே தாண்டியவர் என்று அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். என்ன காரணம்? ஊர்ப் பாசமா? தெருப் பாசமா? அவர் என்ன, எனக்கு மாமனா, மச்சானா?
ஆனால் ஒன்று...சீலேவின் ஸந்தியாகோ நகரில் உள்ள பாரில் அமர்ந்திருக்கிறீர்கள். அப்போது திடீரென்று ஒரு தமிழ் சத்தம் கேட்கிறது. அப்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
இப்படி இந்த விஷயத்தில் பல அடுக்குகள் உள்ளன. உதாரணமாக, கடந்த மாதம் சித்ர லேகா என்ற பெண் என்னைப் பார்க்க விருப்பப்படுகிறார் என்ற அறிந்தேன். இவர் நிக்கி, வெங்கி இருவரின் நீண்ட நாள் தோழி. அமெரிக்காவில் இருக்கிறார். எனக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும், நிக்கியும், வெங்கியும் சொல்லிச் சொல்லி கிட்டத்தட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றையே எழுதி விடக் கூடிய அளவுக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தது.
சித்ர லேகா காஸ்மபாலிடன் க்ளப்பில் தங்கியிருந்தார். போய்ப் பார்த்தேன். இரவு உணவுக்காக ஆர்டர் கொடுக்க வேண்டி வந்த போது சித்ர லேகா தனக்கு கோழி பிரியாணியும், மூளை வறுவலும், ரத்தப் பொரியலும் சொன்னார். பிறகு, நானும் அதே விஷயங்களைச் சொல்லவே அவர் ஆச்சரியத்துடன் விபரம் கேட்ட போதுதான் தெரிந்தது அவர் தெலுங்குப் பெண் என்று. அவருடைய அசாதாரணமான அழகைப் பார்த்தவுடனேயே நான் யூகித்திருக்க வேண்டும்.

( பொம்பிதூ நூலகம் , பாரிஸ்)
இப்படி ஒவ்வொரு இனத்துக்கென்று ஒவ்வொரு வித குண நலன்கள் உள்ளன. சாதி என்பதை விட இதை Clan என்று சொல்லலாம். கென்னின் கதைகளைப் படித்த போது நான் பிறந்து வளர்ந்த இடங்களைப் பற்றிய ஒருவித நாஸ்டால்ஜிக் உணர்வு எனக்கு ஏற்பட்டது; அவ்வளவுதான். மற்றபடி கென் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவரை என் வாரிசு என்று சொல்லவில்லை.
சுப்ரமணியபுரம் படத்தைப் பார்த்தபோதும் எங்கள் பகுதி பற்றிய ஞாபகம் ஏற்பட்டது. மதுரை வாழ் மக்களுக்கு நேர் எதிரான குணநலன்கள் வாய்க்கப் பெற்றவர்கள் எங்கள் பகுதி மக்கள். பயங்கரமான சொகுசுப் பேர்வழிகள். காரணம், பஞ்சாபைப் போல் அது ஒரு பொன் விளையும் பூமி. தோட்டத்தில் தன் பாட்டுக்கு வளரும் சுரைக்காய்க் கொடி. தினமும் 20 சுரைக்காய் பறிக்கலாம். நானே பறித்திருக்கிறேன். இப்படியே எல்லா காய்கறிகளும். சொல்ல மறந்து விட்டேனே, எங்கள் நிலப் பகுதி கீழத் தஞ்சை மாவட்டம் என்று அழைக்கப்படும்.
பண்ணையாரும் சரி, பண்ணைக் கூலியும் சரி, ஒரே விதமாகத்தான் இருப்பார்கள். பண்ணையாரின் மனைவியை பண்ணைக் கூலி வைத்திருப்பான். பண்ணைக் கூலியின் மனைவியை பண்ணையார் வைத்திருப்பார். எப்போது பார்த்தாலும் குடி கூத்து கும்மாளம்தான். ஒவ்வொருத்தனும் அரை டஜன் பெண்களோடு வாழ்ந்து கொண்டிருப்பான். செக்ஸும், சாப்பாடும், இசையும்தான் வாழ்க்கை. இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்வதனாலோ என்னவோ அரிவாள் கத்தி என்றாலே காத தூரம் ஓடி விடுவார்கள். வன்முறையே இல்லாத ஒரு நிலப் பகுதி அது.
ஒருமுறை ஒரு இலக்கியக் கூட்டத்தில் இந்திரா பார்த்தசாரதியின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் நான் “நீங்கள் தஞ்சாவூர் மாவட்டம்தானே? ” என்று கேட்டேன். “ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்? ” என்று கேட்டார். ” உங்கள் எழுத்தைப் படித்தாலே தெரியாதா? ” என்றேன். அவர் எழுத்திலும் அடியேனின் எழுத்தைப் போலவே செக்ஸ் கொஞ்சம் தூக்கலாகத் தெரியும்.
தமிழில் முதல் முதலாக பாலியல் பிரச்சினையைத் தொட்டு எழுதிய கு.ப.ராவும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரே. அதற்கடுத்து, இந்தப் பாலியல் விஷயத்தையே ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதிய தி. ஜானகிராமனும் எங்கள் பகுதிதான். இந்தக் குணாம்சம்தான் என்னுடைய எழுத்திலும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்.
இரண்டு விஷயம் அந்தப் பகுதி மக்களின் சொத்து. கிண்டல் மற்றும் சோம்பேறித் தனம். இந்த சோம்பேறித் தனத்தினாலேயே எங்கள் பகுதியிலிருந்து யாரும் இலக்கியவாதிகளாகப் பரிணமிக்க முடியாது என்று நினைத்திருக்கிறேன். கடின உழைப்பு என்பதை எங்கள் பகுதி மக்களிடம் பார்க்கவே முடியாது. ஆனால் இலக்கியமோ உங்களுடைய முழு வாழ்நாளையும் வேண்டி நிற்பது.
இதற்கு விதி விலக்காக விளங்குபவர்களும் சிலர் உண்டு. தமிழக முதல்வரையும் அடியேனையும் எடுத்துக் கொள்ளலாம்.
என் எழுத்தைப் பற்றிச் சொல்பவர்கள் என்னுடைய விசேஷ அம்சமாக என் எழுத்தின் பகடி பற்றிச் சொல்வார்கள். எங்கள் ஊர் எனக்குக் கொடுத்த சொத்து அது. எங்கள் பகுதி மக்களிடம் ஒருவர் மாட்டினால் மீண்டு வருவது கடினம். அந்த மக்களிடம் உள்ள பகடியில் நூற்றில் ஒரு மடங்குதான் அடியேனிடம் வந்துள்ளது.
***
22.7.2008.
6.50 p.m.
|