அன்புள்ள சாரு
என் பெயர் ஸ்ரீதர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு யு.எஸ். சென்றிருந்த போது
உங்கள் இணைய தளத்தை முதன் முதலில் பார்த்தேன். அங்கு இருந்த மூன்று
வாரங்களுக்குள் அநேகமாக உங்கள் அத்தனை பதிவுகளையும் வாசித்தேன். கிட்டத்திட்ட
addict போல் ஆகி விட்டேன். முகத்தில் அறைவது போல் பளிரென்று எழுதுகிறீர்கள்.
பல எழுத்தாளர்களை வாசித்திருக்கிறேன். வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். உங்களைப் பல வருடங்களாகப் படிக்காமல் இருந்து விட்டேன் என்று வருத்தமாக இருக்கிறது.
இந்த வாரத்திற்குள் உங்கள் ராஸ் லீலா மற்றும் ஸீரோ டிகிரி இரண்டையும் வாங்க
வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
இதுதான் நான் ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதம்.
வாழ்த்துகள்
ஸ்ரீதர் .
* * *
நியூஸிலாந்தில் கார்த்தி
அன்புள்ள சாரு நிவேதிதா
அவர்களுக்கு ,
உங்களுடைய ஸீரோ டிகிரி , ராஸலீலா இரண்டையும் வாசித்தேன். வாசித்தேன் என்பதை விட படித்தேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். உங்களுடைய
குட்டிக்கதைகளை விட நீங்கள் அதிகம் ஆராய்ந்து எழுதும் கட்டுரைகளே என்னை
மயக்குதிறது. முன்பு நீங்கள் ஒரு முறை சொன்னது போல நீங்கள் எழுதுவதை , பரிந்துரைப்பதைப் படிக்காமல் மேம்போக்காக போக என்னால் இயலவில்லை.
தொடர் முறையற்ற எழுத்து எழுதுவதற்கு மிகுந்த திறமை வேண்டும். எங்கோ ஆரம்பித்து , எங்கோ முடிக்க - ஆனால் இவை அனைத்தையும் பின்னிக்கொண்டு
செல்லும் மனதுக்குப் புலப்படாத , வாசகனால் அறிந்து கொள்ள முடியாத , அனுபவிக்க
மட்டுமே முடிந்த அந்த இழையை லாவகமாக கையாளக்கூடிய திறமை உங்களிடம் இயல்பாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது வெறுமனே இருபது ஆண்டுகள்
எழுதுவதால் மட்டுமே கிடைக்கப் பெறுவதல்ல.
பரிந்துரைக்கப் படும் புத்தகங்களே இவ்வளவு விஷய கனத்துடன் இருக்கும் போது ,
எத்தனை படித்திருக்க வேண்டும் , இந்தத் தாமரைகளைப் பறிக்க எத்தனை கடினமான
சேற்றிலும் நடந்திருக்க வேண்டும். (எத்தனை கழிசடைகளை வாசித்திருக்க வேண்டும்).
நான் உங்களிடம் இரண்டு முறை அலைபேசியில் பேசியிருக்கிறேன். (அது நீண்ட
காலத்துக்கு முன்பு...நீங்கள் இந்த இணைய தளத்தைத் துவக்கியிருந்த சமயத்தில்)
பார்ப்பதற்கு வில்லன் போல் இருந்தாலும் குரலில் ஒரு தெளிவையும் கனிவையும்
உணர்ந்தேன். (யாரோ சுந்தர ராமசாமியை பார்த்து "அழகன் யா" என்று சொன்னது போல் இல்லை இது).
பிரியமுடன் , சரவணன்.
பி.கு:- இதை முன்னாலேயே குறித்திருக்க வேண்டும் , மூன்று லட்சம் சொடுக்குகளைச் சீக்கிரம் எட்ட என் வாழ்த்துகள்.
* * *
அன்புள்ள சாரு
இரண்டு லட்சம் ஹிட்ஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். தங்களுடைய இலக்கிய உலக பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல். உங்களை பெங்களூரில் சந்திக்க முயற்சிக்கிறேன்.
சமீபத்தில் கோணல் பக்கங்களின் பழைய பதிவை வசிக்க நேர்ந்தது. என் போன்றவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். உலக இலக்கியத்தை அதன் தரத்துடன் அணுக உதவும் ஒரு கருவி.
மிக்க நன்றி.
அன்புடன்
வெங்கடேசன்.
* * *