
ஜூலியஸ் சீஸர் நாடகத்தின் மூன்றாவது அங்கம். சீஸர் கொல்லப் பட்டதை நியாயப் படுத்தி மக்களிடையே உரையாற்றுகிறான் ப்ரூடஸ். மக்கள் உடனே அவன் பக்கம் சாய்கிறார்கள். அடுத்து உரையாற்ற வருகிறான் சீஸரின் நெருங்கிய நண்பனான மார்க் ஆண்டனி. அவனுடைய உணர்ச்சிகரமான உரையைக் கேட்டதும் சீஸரைக் கொன்ற ப்ரூடஸையும் மற்ற சதிகாரர்களையும் கொல்வதற்குப் புறப்படுகிறது மக்கள் கூட்டம்.
அப்போது அந்த இடத்திற்கு வருகிறான் சின்னா. சின்னா ஒரு கவிஞன். இவனும் சதிகாரர்களில் ஒருவனோ என்று சந்தேகப்படும் மக்கள் கூட்டம் “நீ யார்? இங்கே எதற்காக வந்திருக்கிறாய்? ” என்று கேட்கிறது.
“நான் ஒரு கவிஞன்; சீஸரின் மரணத்துக்காக என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் ” என்கிறான் சின்னா.
“உன் பெயர் என்ன? ”
” சின்னா. ”
“அப்படியானால் இவனைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போடுங்கள் ” என்று ஆர்ப்பரிக்கிறது மக்கள் கூட்டம். காரணம், சீஸரைக் கொன்ற சதிகாரர்களில் ஒருவனின் பெயரும் சின்னாதான்.
“ஐயோ, நான் அந்த சின்னா இல்லை. நான் கவிஞன் சின்னா...கவிஞன் சின்னா... ”
“ஓ, அப்படியானால் இவன் கவிஞன் என்பதற்காகவே இவனைக் கொல்லுங்கள்... ”
***
ஒரு நண்பர் என்னைக் கேட்டார். அரிஸ்டோக்ரட் மாதிரி வாழ்கிறீர்கள்; ஆனால் பணம் இல்லை என்கிறீர்களே?
போலிப் புலம்பலில் என்னுடைய நிலைமை பற்றி விரிவாக விளக்கிவிட்டேன். அதையே திரும்பவும் சொல்ல வேண்டாம்.
இரண்டரை லட்சம் ஹிட்ஸ் கொடுத்திருப்பதால் விளம்பரம் ஏதாவது கிடைக்கும்; சமாளித்து விடலாம் என்று நினைத்தேன்.
சினிமாப் பாடல்கள் பற்றிய கட்டுரைக்காக ரூ. 1000/- ஆகக் கூடிய அந்தப் பழைய புத்தகங்களை இன்னும் வாங்க முடியவில்லை.
ஆனால் சமீபத்தில் ஒருநாள் பார்க் ஷெரட்டன் சென்ற போது வெஸ்ட்மின்ஸ்டர் பாரின் மேலாளர் ஆறுமுகம், பானுவைப் பற்றி நான் இந்தப் பக்கங்களில் எழுதியிருந்தது பற்றி விசாரித்ததாகக் கூறினார். வெஸ்ட்மின்ஸ்டருக்கு வருபவர்கள் கூட இந்தப் பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பது எவ்வளவு ஆச்சரியமான, சந்தோஷமான விஷயம்!
ஆனால், விளம்பரம் மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது. இன்னும் பத்து தினங்களில் இந்த இணைய தளத்தைப் புதுப்பிப்பதற்காக சில ஆயிரங்களைக் கட்ட வேண்டியிருக்கிறது. யாரால் சிரமமின்றி உதவ முடியுமோ உதவுங்கள். என்னுடைய ICICI வங்கிக் கணக்கு எண்: 602601 505045 பெயர்: K. ARIVAZHAGAN. T. NAGAR BRANCH, CHENNAI.
கவிஞன் சின்னாவைப் பற்றி ஏன் இங்கே? இரண்டரை லட்சம் ஹிட்ஸுக்குப் பிறகும், இது பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வந்த பிறகும் இணைய தளத்தைப் புதுப்பிக்க பணம் இல்லாமல் சிங்கி அடிக்க வேண்டியிருக்கிறது என்பதை நினைத்த போது நானும் கவிஞன் சின்னாவைப் போலவே உணர்ந்தேன்.
***
20.7.2008.
7.50 p.m.