
( Louvre Museum )
அன்புள்ள சாரு,
கீழே தாங்கள் திரு சோமசுந்தரத்துக்கு எழுதிய பதிலை பார்த்தேன், அந்தப் பதில் உங்களுக்கே திருப்தியாக இருக்கிறதா சொல்லுங்கள். இப்படி ஒரு பதிலை நீங்கள் தருவீர்கள் என நான் எதிர் பார்க்கவில்லை.
அன்புள்ள சோமசுந்தரம்,
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நான் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. இதை அரசியல்வாதிகள் அல்ல; விஞ்ஞானிகள் விவாதிக்க வேண்டும் என்பதே என் கருத்து. மேலும், அமெரிக்கா என்ற இண்டர்நேஷனல் ரௌடியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமா என்பதும் என்னுடைய கேள்வி. அது இந்தியாவின் உள்நாட்டு அமைதியைக் குலைத்துவிடும்.
அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்ற நிலையில் இருந்து இப்போது தேவை என்கிற நிலைக்கு வந்துவிட்டீர்கள் அதற்காக திரு சோமசுந்தரத்தைப் பாராட்டுகிறேன். அமெரிக்காவுடன் எல்லா உறவும் வேண்டும் மென்பொருள் தொழிற்நுற்பம் தொடங்கி. ஆனால் அணு ஒப்பந்தம் போடும்போது மட்டும் அது ரவுடியாகி விடுகிறது எப்படி. மேலும் நாம் அணு எரிபொருள் அமெரிக்காவிடம் மட்டும் வாங்கப்போவதில்லை அமெரிக்காவிடமும் வாங்குகிறோம் அவ்வளவுதன். திரு பிரணாப்முகர்ஜியின் நேற்றைய பேச்சை கேட்டிருக்ககூடும்.
காங்கிரஸ்காரர்கள் கறுப்புப் பூனைப் படைகளுடன் செல்வார்கள்; கடைசியில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படையால் கொல்லப்பட்டாலும் அவர்களின் வாரிசு பதவிக்கு வருவார்கள். பதவி ருசிக்காக அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கக் கூடியவர்கள். ஆனால் நம்மைப் போன்ற சாமானிய மக்கள் அப்படி இல்லையே?
இந்தப் பதில் திரு. சோமசுந்தரம் கடிதத்திற்கு எந்த அளவு தொடர்பு உடையது என்று தெரியவில்லை.
25 ஆண்டுகளுக்கு முன் தில்லி கனாட் ப்ளேஸில் உள்ள அமெரிக்க நூலகத்தை என் வாழ்விடமாகக் கொண்டு இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது அதன் உள்ளே நுழைவது ஏதோ ஒரு நாட்டின் ராணுவத் தலைமையகத்தின் உள்ளே நுழைவது போல் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா உலக நாடுகளில் செய்யும் ரவுடித்தனங்களே இதற்குக் காரணம். அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வந்தால் தனது தற்காப்புக்காக கூடவே ஒரு ராணுவத்தையே அழைத்துக் கொண்டு வருகிறார்.
இப்போது ஏன் நீங்கள் அமெரிக்க நூலகத்திற்குள் நுழைந்தீர்கள். அங்கு சில கிடைக்காத அல்லது வசதியான சூழல் இருக்குமென்றுதானே. அது ரவுடி நாட்டின் நூலகம் என்பதற்காக தவிர்த்தீர்களா? அது போல் இந்திய அரசுக்கும் சில விஷயங்களில் அது தேவைப்பட்டிருக்கலாம்.
உலகில் உள்ள ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளையும், முஸ்லீம்களையும் பகைத்துக் கொண்ட ஒரு நாடு அமெரிக்கா. இந்தியாவோ இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களைப் போல் வாழும் ஒரு தேசம். இந்த நிலையில் இந்தியா மேலும் மேலும் அமெரிக்காவின் எடுபிடியாக மாறினால் தீவிரவாதிகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பும். அதன் பிறகு இங்கே யாருமே நிம்மதியாக நடமாட முடியாது. நாம் ஏன் நம்முடைய அமைதியான வாழ்வை விட்டுத் தர வேண்டும்? ஏன் நாம் ஈரான், சீனா போன்ற நாடுகளுடன் இன்னும் அதிக நேசத்துடன் உறவு கொள்ளக் கூடாது?
சீனாவும் இதே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது. ஈரான் இன்னும் இந்த தொழில் நுட்பத்தில் தன்னிரைவு அடையவில்லை. இப்போது எந்த தீவிரவாத இயக்கத்தின் பார்வை இந்தியாவை விட்டு வைத்திருக்கிறது. இந்திய முஸ்லீம்கள் அவ்வளவு முட்டாள்கள் என்று அரசியல்வாதிகள் போல் நீங்களும் கூறக்கூடாது. முஸ்லீம்கள் அமெரிக்காவுடன் சேருபவர்களை எல்லாம் அடிப்பதாக இருந்தால் முதலில் சவுதியையும் பாகிஸ்தானையும்தான் அடிக்க வேண்டும். உலக உணவு உற்பத்தியில் அமெரிக்கா அதிக ஏற்றுமதி செய்யும் நாடு. நிச்சயம் நாம் உணவுக்காக அவர்களை நோக்கும் காலம் வரும் என்கிறது கணிப்புகள். அப்போதும் இதே பதிலை சொல்ல முடியுமா ?
சைனா என்ன உலக நியாய மகா பிரபுவா? சிக்கீமிலும் அருணாசலப் பிரதேசத்திலும் அவர்கள் அடிக்கும் கூத்து அறிந்ததுதானே.
அணுசக்தி நம்முடைய நாட்டுக்குத் தேவையா? விஞ்ஞானிகளின் கருத்து அதுவானால் நமக்கும் அது சரிதான்.
மேலே உள்ள பதில் அணுசக்தி நாட்டுக்கு தேவையா? என்பது தெரியாமல் கட்டுரை எழுதப்பட்டுவிட்டதை ஒப்புக்கொள்கிறது. ஒரு முறை “ஓம் சாந்தி ஓம்” ஹிந்திப் படத்தை பற்றிய பாமரனின் விமர்சனத்தை நீங்கள்
இந்தியில் அச்சா, ஆவோ, ஜாவோ போன்ற வார்த்தைகள் கூடத் தெரியாத பாமரன் இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிக் கண்டபடி திட்டியிருக்கிறார். அட்சரம் கூடத் தெரியாத இந்த விஷயத்தில் ஒருவர் மூக்கை நுழைக்கலாமா ? பாமரன் மூக்கை மட்டும் நுழைக்கவில்லை; விமர்சனம் வேறு செய்திருக்கிறார். பாமரனுக்கு ஏன் இந்த வீண் வேலை ?
மேற்கண்டவாறு குறிப்பிட்டீர்கள். இப்போது இது உங்களுக்கும் பொருந்தாதா ?
ஆனால் அமெரிக்காவுடன் வேண்டாம் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். கிட்டத்தட்ட ஜெயலலிதாவும் இதே ரீதியில்தான் கூறியிருக்கிறார். இவ்விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் மிகவும் சரியானது.
சாரு உங்களின் எல்லா எழுத்துக்களையும் படித்துக் கொண்டே இருப்பவன். உங்களின் வாசகர்களாக பல பேரை மாற்றியவன் நான். ஆனால் இப்படி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதியது நிறைய வாசகர்களை நிச்சயம் பாதிக்கும்.
அன்புடன் செல்வன்