
அன்புள்ள சாரு,
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களுடைய நீண்ட நாள் வாசகன். இப்போது உங்களின் ‘இந்தியா விற்பனைக்கு ’ கட்டுரை பற்றிய என்னுடைய எதிர்வினை இது. விவசாயிகளைப் பற்றி நீங்கள் கூறியிருப்பது முழுக்கவும் உண்மை. இந்தியாவைப் பற்றி நினைக்கும் போது என்னை மிகவும் பயமுறுத்திய விஷயம் இதுதான். இதனாலேயே நான் இந்தியாவை விட்டு வெளி தேசத்திலேயே வாழ்ந்து விடலாம் என்று திட்டமிட்டு விட்டேன்.
ஆனால் மென்பொருள் துறை பற்றி உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் முரண்படுகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக நான் இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறேன். இத்துறை பற்றி நீங்கள் சொல்வது போன்ற அபிப்பிராயங்கள் என் போன்றவர்களை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்கின்றன. உங்கள் கருத்து கிட்டத்தட்ட பாமரன் சொன்னதை ஒத்திருக்கிறது. உங்களைப் போன்ற ஒருவருக்கும் பாமரனுக்கும் இது விஷயத்தில் ஒத்த கருத்து இருப்பதென்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. பாமரன் ஒரு கற்கால மனிதனைப் போல் யோசிப்பவர். ஆனால் உங்களைப் பற்றியோ நான் மிக உயர்வான கருத்தைக் கொண்டிருப்பவன். அதனாலேயே அந்த ஆச்சரியமும் திகைப்பும்.
உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை; ஆனால் எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையால் பயன்பெற்றிருக்கின்றன தெரியுமா? இந்தத் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல; இதைச் சார்ந்துள்ள உப தொழில்கள் பலவும் இதனால் பலன் அடைந்துள்ளன. போக்குவரத்துத் துறை, ஓட்டல் தொழில், வீடு, உணவு மற்றும் நெசவுத் தொழில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இது தவிர, இன்னும் ஒரு முக்கியமான விஷயம்: இந்தத் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிபவர்களிடையே சாதி வித்தியாசம் என்பது காணாமல் போய் விட்டது. உங்களிடம் தகுதியும் படிப்பும் இருந்தால் போதும்; மற்றபடி சாதி பற்றி யாரும் இங்கே கவலைப் படுவது இல்லை. இதை ஒரு சமூகப் புரட்சி என்றே சொல்லலாம். இந்தியச் சமூகத்தில் நடந்திருக்கும் இந்தப் புரட்சி பற்றி ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன். இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ச்சி செய்தோமானால் தகவல் தொழில் நுட்பத்துறையால் பயனடைந்த லட்சக் கணக்கான குடும்பங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நம் தேசத்தின் உபரியான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது, பஞ்சாபின் விவசாயிகள் ஏற்றுமதி செய்வதற்கென்று பயிர்களைச் சாகுபடி செய்யும் போது இப்படிப் பட்ட கேள்விகள் எழவில்லையே? அவர்களும் வேறொரு தேசத்துக்குத்தான் பணி புரிகிறார்களா? தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள் வெளிநாட்டுக்குப் பணி புரியும் போது மட்டும் ஏன் இந்தக் கேள்வி எழுகிறது?
அமெரிக்கக் கலாச்சாரம் நம்முடைய கலாச்சாரத்தினுள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இது மென்பொருள் துறையால் அல்ல என்பது மட்டும் நிச்சயம். ஊடகங்களே அதற்கு முக்கியமான காரணம். எம்.டி.வி.யை இந்த நாட்டுக்குள் கொண்டு வந்தது யார்? ஃபேஷன் டி.வி. இங்கே எப்படி உள்ளே நுழைந்தது? நிச்சயமாக தகவல் தொழில்நுட்பத் துறையினால் அல்ல. கிராமத்தில் ஒரு விவசாயி கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டால் அதைப் பற்றி இங்கே யாருக்கு என்ன கவலை? ஆனால் நொய்டாவில் ஒரு குடும்பத்த்தில் நடந்த கொலை பற்றி ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பற்றி நினைத்தால் நம்பவே முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தகவல் தொழில்நுட்பத் துறையா? நிச்சயமாக இல்லை.
நம்முடைய ஜனநாயகம் இன்னும் முதிராத நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் வருங்காலத்திலாவது முதிருமா என்பது பற்றியும் எனக்கு நிச்சயம் இல்லை. இந்த நிலையில் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி இங்கே யாருக்கு என்ன கவலை? மனித வாழ்வுக்கும் உயிருக்கும் இங்கே மதிப்பே கிடையாது. ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் யாருக்கு என்ன போயிற்று?
இந்தியாவை ஒரு கும்பல்தான் ஆண்டு கொண்டிருக்கிறது. அக்கும்பலின் சுயநலத்துக்கேற்பவே இங்குள்ள சட்டதிட்டங்கள் இயற்றப் பட்டு வருகின்றன. பெரியார் சொன்னார்: “ஆகஸ்ட் 15, 1947 : இந்திய ஜனநாயகத்தின் ஒரு கறுப்பு நாள். ஒரு வியாபாரியிடமிருந்து இன்னொரு வியாபாரிக்கு அதிகாரம் கை மாறி இருக்கிறது; அவ்வளவுதான் ” என்று. பெரியாரின் கூற்று எவ்வளவு உண்மையாகி இருக்கிறது பாருங்கள்! ஆளும் வர்க்கமாக இருந்தவன் இன்னும் ஆளும் வர்க்கமாகவே இருந்து கொண்டிருக்கிறான். ஆனால் சராசரி மனிதனுக்கு என்ன கிடைத்தது? இந்தியா பெற்ற சுதந்திரமோ, ஜனநாயகமோ அந்த சராசரி மனிதனுடைய வாழ்வில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்தது? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசனின் கீழ் வாழ்ந்த ஒரு சாமான்யனுக்கும் இன்றைய சாமான்யனுக்கும் வாழ்க்கை நிலையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதானே உண்மை?

தற்சமயம் நான் தென்னாப்ரிக்காவில் இருக்கிறேன். இங்கேயுள்ள இந்தியர்களிடம்
“உங்களுடைய முன்னோர்கள் தென்னாப்ரிக்காவுக்குப் படகில் வந்து சேர்ந்தது பற்றிச் சந்தோஷம் கொள்ளுங்கள் ” என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இவர்களின் நிலை காலப்போக்கில் மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்தியாவிலேயே இருந்திருந்தால் இவர்களுடைய வாழ்க்கை இன்று என்ன கதியில் இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
மலேஷியாவில் வாழும் இந்தியர்களைப் பற்றியும் இதையே சொல்லலாம். மலேஷியாவில் வாழும் என்னுடைய உறவினர்கள் இந்தியாவில் இருந்ததை விட இப்போது எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் மலேஷியாவில் குடியேறாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால் அவர்கள் இந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியாது என்பது நிச்சயம்.
சாரு, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பொருளாதாரம் இப்போது உலகமயமாகி விட்டது. எங்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களும் உள்ளனர்; அதே போல் உலகம் முழுவதிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்களால் எக்கச்சக்கமான பணம் இந்தியாவுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் லட்சக் கணக்கான இந்தியர்கள் பயன் பெறுகின்றனர். மென்பொருள் துறை பற்றி உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்காக இன்னும் பல்வேறு தகவல்களை உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். ஆனால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள இந்தச் சிறு கடிதம் போதும் என்று நினைக்கிறேன்.
கண்ணன்,
ஜோஹன்னஸ்பர்க்,
தென்னாப்ரிக்கா.
***
பதில் எங்கே என்று கேட்கிறீர்களா? அருமையான ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த கண்ணனின் கடிதத்தைத் தமிழாக்கம் செய்வதற்குள் எனக்கு விழி பிதுங்கி விட்டது. பதில் ராவு எழுதுகிறேன்.
24.7.2008.
5.30 p.m.