போய் பணி நோக்கடா மோனே!
 

அன்புள்ள அறிவழகனுக்கு,

யார் இந்த நபர் என்று நீங்கள் குழம்பினால் முதலிலேயே சொல்லி விடுகிறேன்; நான் உங்களுடன் தபால் துறையில் வேலை பார்த்தவன். ஏதோ காரணத்தால் உங்களை என்னால் சாரு என்று அழைக்க முடியவில்லை. பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வருவதற்கு வாழ்த்துக்கள்.

கோணல் பக்கங்களைக் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். அதன் நடையும் யதார்த்தமும் (அல்லது யதார்த்தமின்மையும்) எனக்குப் பிடித்திருக்கிறது. நான் உங்களுடைய நாவல்களைப் படித்ததில்லை; இனியும் படிப்பேன் என்றும் தோன்றவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது அலுவலகத்தின் தமிழ்ச் சங்கச் செயலாளர் அவசர அவசரமாக என்னிடம் ஓடி வந்து நூலகத்திலிருக்கும் ஸீரோ டிகிரி பிரதியை அங்கிருந்து எடுத்து விடும்படிக் கூறியதை இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது. நமது அலுவலக மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் உங்களைப் பேச அழைக்கலாம் என்று அவரிடம் யார் யாரோ (நம்ப மாட்டீர்கள், அப்படிச் சொன்னவர்களில் நானும் ஒருவன்) யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் உங்களைப் பற்றி 'மதிப்பீடு' செய்வதற்காக அவர் இந்த நாவலை எடுத்து வாசித்திருக்கிறார். அதனால்தான் அப்படி ஓடி வந்தார் என்னிடம். "உடனே அதை நூலகத்திலிருந்து எடுத்து விட வேண்டும்; அது ஒரு ஸெமி போர்னோ." அதன் பிறகு ஸீரோ டிகிரியை நான் வாசிக்க முயற்சி செய்தேன்; என்னால் முடியவில்லை.

ஆனால் கோணல் பக்கங்கள் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் வாசிப்பு அனுபவத்தை அதில் நீங்கள் ரத்தினச் சுருக்கமாகக் கொடுக்கிறீர்கள்.

எழுதுவது என்பது சிரமமான வேலையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. என் கடிதத்தைத் திரும்ப வாசிக்கும் போது பார்க்கிறேன், அதில்தான் எத்தனை 'நான்!'

அன்புடன்,
கண்ணன்.

***

கண்ணனின் கடிதம் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது; என்னுடைய மொழிபெயர்ப்பில் நான்கள் கழன்று விட்டன. கண்ணனை நான் எப்படி மறக்க முடியும்? 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் பட்டினியால் தினம் தினம் மடிந்து கொண்டிருந்த போது நான் கேட்கும் போதெல்லாம் எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் எனக்கு உதவி செய்தவர்கள் மூவர். கண்ணன், சீனிவாசன், ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு இவர்கள் மூவரும் செய்த உதவிதான் காரணம். ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் ஏன் பட்டினி கிடக்க நேர்ந்தது என்பதையெல்லாம் தனியாக ஒரு நாவலாக எழுத இருப்பதால் இப்போது அது வேண்டாம்.

இந்தப் பக்கங்களில் பூஜா என்ற குட்டியைப் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா, அப்படி ஒரு அதி புத்திசாலி கண்ணன். ஆங்கிலத்தில் பிச்சு உதறுவார். அவரைப் பார்க்கும் போதெல்லாம், எங்கோ அமெரிக்காவில் பெரிய உத்தியோகத்தில் இருக்க வேண்டிய இந்த ஆள் ஏன் இந்த உருப்படாத துறையில் கிடந்து சீரழிகிறார் என்று ஆச்சரியப் படுவேன். ஒரு நாள் ஸ்டெனோக்ரபர்கள் யூனியனில் வருடாந்திரக் கூட்டம். நானோ நம்முடைய முதலமைச்சரைப் போலவே என்னையும் ஒரு கலைஞன் என்று நினைத்து ஒவ்வொரு கணமும் இறுமாப்பில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆள். நானா இந்தக் கூட்டத்திற்கெல்லாம் போவேன்? ஆனாலும் சீனிவாசனின் பேச்சைத் தட்ட முடியாமல் அங்கே போனேன். கண்ணன் ஒரு களச் செயலாளி என்பதால் அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார். ஸ்டெனொகிராபர்கள் யூனியனின் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்தது. ஏற்கனவே இருந்த செயலாளரே பல ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்து ஊழல் செய்து கொண்டிருந்தார். யாருக்கும் அவரை எதிர்க்கத் துணிவில்லை. "வேறு யாரையும் யாரும் ப்ரொபோஸ் செய்கிறீர்களா?" என்று கேட்கப் பட்டது. அப்போது எழுந்த நான் "கண்ணனின் பெயரை ப்ரொபோஸ் செய்கிறேன்" என்றேன். அப்போது கண்ணன் அங்கே இல்லை. இருந்தாலும் என் பேச்சைத் தட்ட மாட்டர் என்று தோன்றியது. எல்லோரும் கண்ணனுக்கே வாக்களித்தனர். செயலாளரான கண்ணன், ஆறே மாதத்தில் அகில உலகத் தொழிலாளர் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, இன்னும் பல்வேறு பதவிகளை வகித்து இன்று மிகப் பெரிய இடத்துக்குச் சென்று விட்டார். அவரது வாழ்வைத் திசை திருப்பவே அந்தப் பார்த்தசாரதிப் பெருமாள் என்னை அன்று அந்த இடத்திற்குப் போகச் செய்திருக்கிறார் போலும்.

கண்ணன், ராகவன் எனக்குப் பொருள் உதவி. சீனிவாசன் வேறு விதமான உதவி. சீனிவாசன்தான் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருபவர். "என்ன சீனிவாசன், இட்லி மிளகாய்ப் பொடி இப்படி இனிக்கிறது? அய்யர் வீடுங்கிறது சரியாத்தான் இருக்கு..." என்று அப்போது சீனிவாசனை அடிக்கடி கடிந்து கொள்வேன். அதற்கு அவர் "யோவ் முனியாண்டி, உம்ம முனியாண்டி விலாஸ் காரமெல்லாம் சாப்பிட்டால் என் கதி அதோ கதிதான்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லுவார். சீனிவாசன் எடுத்து வரும் உணவைச் சாப்பிட்டால் பிறகு அடுத்த நாள் மதியம் அவர் கொண்டு வரும் வரை என் உயிரைக் காப்பாற்றுவது அழுகல் தக்காளியும் டீயும் தான். சீனிவாசன் என்றைக்காவது விடுப்பு எடுத்துக் கொண்டு விட்டார் என்றால் தொலைந்தது கதை. இப்படி அவர் செய்தது அன்ன உதவி மட்டும் அல்ல; வேறோர் முக்கிய உதவியும் உண்டு. அதிகாரிகள் 40 பக்கம், 50 பக்கம் என்று மேட்டர்களை டைப் செய்யக் கொடுக்கும் போது - அப்போது கம்ப்யூட்டரும் கிடையாது; கையாலேயே லொட்டு லொட்டு என்று தட்ட வேண்டும்; பிறகு எல்லாவற்றையும் கரெக்ஷன் செய்து கொடுத்த பிறகு அத்தனை பக்கத்தையும் திரும்பவும் டைப் செய்ய வேண்டும். அச்சு அசலாக செக்கிழுப்பது போலவே இருக்கும். அப்போது ரேஷ்மாவும் என்னோடு இருந்தாள். அதனால் ரேஷ்மாவைக் கவனிப்பதிலேயே என்னுடைய அலுவலக நேரமெல்லாம் போய் விடும். அப்போது சீனிவாசன்தான் தன்னுடைய வேலையோடு சேர்த்து என்னுடைய வேலையையும் செய்வார்.

ரேஷ்மாவுக்கு மதிய உணவு ராஜி என்ற பெண்மணி எடுத்து வருவார். ராஜி ஒரு தெய்வப் பிறவி. அலுவலகத்துக்கு அன்று அவர் விடுப்பு எடுத்திருந்தாலும் ரேஷ்மாவுக்காக வளசரவாக்கத்திலிருந்து மவுண்ட் ரோடு வரை வந்து கொடுத்து விட்டுப் போவார். இதற்காகவே பத்து கி.மீ. தூரம் பஸ்ஸில் வர வேண்டும். இப்படி நான் நன்றிக் கடன் பட்டிருப்பது ஒருவருக்கா, இருவருக்கா?

மற்றொருவர் ரவீந்திரன். கோவைக்காரர். இப்போது ந்யூயார்க்கில் இருக்கிறார். பத்து ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை. மந்தைவெளியில் மூன்றாவது மாடியில் ரேஷ்மாவுக்கு மட்டும் சோறு ஊட்டி விட்டு (அயோக்கியக் கழுதை, நான் ஊட்டி விடாமல் ஒரு வேளை கூட சாப்பிட்டதில்லை, எட்டு வயதில் என்னை விட்டுப் பிரியும் வரை) பசியுடன் அமர்ந்திருப்பேன். இரவு பதினோரு மணி அளவில் படிக்கட்டுகள் அதிரும் ஒலி கேட்டால் என் வயிறு குளிரும். ரவி ஆஜானுபாகுவானவர் என்பதால் அவர் வரும்போதே தெரிந்து விடும். மூச்சு இறைக்க கையில் இருக்கும் ஐந்து கிலோ அரிசிப் பொட்டலத்தை வைப்பார். "என்ன ரவி இதெல்லாம்?" என்று போலியாகக் கேட்பேன். "போன தடவை வந்த போதே கவனித்தேன்; அரிசி டின் காலியாக இருந்தது" என்பார்.

பிறகு என்ன? சோறு பொங்கி, சாம்பார் செய்து, ரம் குடித்து விட்டு நடு ராத்திரியில் சாப்பிடுவோம்.

எனக்கு மறதி அதிகம் என்றாலும் இந்த அற்புதமான மனிதர்களை என்றுமே நான் மறக்க மாட்டேன். நான் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் என் மகளைப் பட்டினி போட்டதில்லை. அவளுக்கென்று சிறிதளவு அரிசி வீட்டில் எப்போதுமே இருக்கும். நான் வாங்கி வந்த வரம் எப்படியென்றால், ஒரு வேளை சாப்பிடாவிட்டாலும் பத்து நாள் பட்டினி கிடந்தாற்போல் பசிக்கும். இப்படிப்பட்ட ஆள் மூன்று வேளை பட்டினி கிடந்தால் என்ன ஆகும்? அப்போதுதான் சினிமா நடிகைகளைப் பற்றி கிசுகிசு எழுதுவேன். ஒரு நடிகைக்கு 50 ரூ. கிடைக்கும். பிக் பாக்கெட் அடிப்பேன். விந்து வங்கி சென்று விந்தை விற்பேன். இப்படி என்னவெல்லாமோ செய்தேன். ஆனால் இதை விட்டு விட்டு அந்த எளுத்தாளன் ஏன் கிசுகிசுவை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குகிறான்? இவ்வளவு ஏன், மாமா வேலை பார்த்தது பற்றிக் கூட ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேனே? ஏன் அதை அவன் விட்டு விட்டான்? தில் இருந்தால் வா, அதைப் பற்றியும் பேசுவோம்.

இந்த எளுத்தாளர் மீது எனக்கு ரகசிய மோகமாம். நான் என்ன ஹோமோசெக்ஸா? இந்த ஆளின் மூஞ்சியைப் பார்த்தால் ஹோமோசெக்ஸ் கூட ஹெட்ரோ செக்ஸாக மாறி விடுவானே ஐயா? சரி, இவருடைய எழுத்தைச் சொல்கிறாரோ என்று பார்த்தால், கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ள முயல்பவர்கள் அரளி விதையை அரைத்துக் குடித்து விட்டால் அவர்களுக்கு எதையோ ஒன்றைக் கரைத்துக் குடிக்கச் செய்து வாந்தி எடுக்கச் செய்வார்கள், அந்த அய்ட்டம் மாதிரி அல்லவா இருக்கிறது இவருடைய எழுத்து?! இந்த லட்சணத்தில் இவரை ஆர் நடிகையோடு சேர்த்து கிசு கிசு எழுத வேண்டும் என்ற ஆசை வேறு இருக்கிறது. நடிகைகள் எல்லாம் இவரைப் பார்த்து 'அங்கிள் ஜீ' என்றும் 'பண்டிட் ஜீ' என்றும் அழைப்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த விபரம் ஆயிற்றே? இவர் வாயைத் திறந்தால் மூடுவதற்கு மூணு மணி நேரம் ஆகும். அப்படிப் பட்ட 'பேச்சுத் திறமை' வாய்ந்த இவரிடம் எந்த நடிகை கிட்ட நெருங்கிப் பேசுவாள்? அது சரி, இவருக்கு ஏற்கனவே 'ஓம் ஷாந்தி ஓம்' பட விமர்சனம் மூலமாக போஸ்ட் மாடர்னிசம் பற்றி டியூஷன் எடுத்தேன்; அதையே இவர் இன்னும் சரியாகப் புரிந்து கொண்டதற்கான அறிகுறி தெரியவில்லை. இப்போது 'நான் ஆர் நடிகையைக் காதலிக்கிறேன், அந்தக் காதலுக்கும் நீங்கள்தான் ட்யூஷன் எடுக்க வேண்டும்' என்றால் நான் என்ன செய்வது? எனக்கு இருக்கும் வேலைப் பளுவில் ஒரே ஆளுக்கு எவ்வளவு விஷயத்தில்தான் ட்யூஷன் எடுப்பது? இதற்கிடையில் சாருதான் தமிழ் நாட்டு கிசுகிசு அத்தனைக்கும் மொத்த குத்தகை என்று பிராது வேறு...போய் பணி நோக்கடா மோனே!

***

8.5.2008.
10.15 a.m.