தீராநதி: ‘ செக்ஸைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தாண்டி ஆழ்மன ஏக்கம் என்ற ஒன்றிற்குள் சென்று பிணாத்திக் கொண்டிருக்கிறார் சாரு. ’ _ இப்படி ஷோபாசக்தி ஒருமுறை குறிப்பிட்டார். இது ஆழ்மன நிம்மதியின்மையால் எழுகின்ற பிரச்னையா சாரு ?
சாரு: பெரிய செக்ஸ § வல் சர்வே ஒன்றை எடுத்தால்தான் இதற்கு பதில் தெரியும். அப்புறம் ஒருவனின் செக்ஸ் அனுபவம் என்பது இன்னொருவனுக்கு பொய்யாகவும் , புனைவாகவும்தான் தெரியும். தன்னுடைய செக்ஸ § வல் பார்ட்னர் , அதாவது மனைவியின் முழு நிர்வாணத்தைப் பார்த்த இந்தியர்களே இங்கு கம்மி. பெர்லினில் ஒரு இடம் இருக்கிறது. பத்து இருபது பெண்கள் எப்போதும் நிர்வாணமாக அங்கே இருப்பார்கள். அங்கு ஒரு நீச்சல் குளம். நீங்கள் விரும்பினால் அப்பெண்களுடன் குளத்தில் ஜலக்கிரீடை செய்யலாம். இதை நான் எழுதினால் ‘ இது மாதிரியெல்லாம் எங்கேயுமே இல்லை ’ என்பார்கள். அப்படிச் சொன்னால் ‘ போடா பொக்கா ’ என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். என்னிடமே ஒருமுறை ஷோபா சக்தி நேரிலேயே சொன்னார். ‘ ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் உறவு என்பது நீங்கள் சொல்வது போலெல்லாம் இருக்காது ’ என்றார்.
என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார் ; ‘ எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா , பொய்யா ?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை ’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன் ; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல , உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்.
மேலும் செக்ஸ் என்பது கடலைப் போன்றது. இந்தப் பூமியில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான செக்ஸ் இருக்கிறது. ‘‘ நான் எழுதுவது போன்ற செக்ஸ் இல்லை ; அது ஃபாண்டஸி ’’ என்று கூறுவது மிகவும் பத்தாம்பசலித்தனமானது. ஃப்ரான்ஸில் வசித்தாலும் பத்தாம் பசலிகளுக்கு விடிவே இல்லை என்பதையே ஷோபா சக்தியின் கூற்று நிரூபிக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் , இந்தியாவில் தீவிர இடது சாரியாக உள்ளவரும் மதவாதிகளின் மொழியிலேயே பேசுவதும் சிந்திப்பதும்தான். ஷோபா சக்தியின் மேற்கண்ட கூற்று இங்கே இந்துத்துவவாதிகள் செக்ஸ் பற்றி கொண்டுள்ள அதே பழைய கருத்தையே பிரதிபலிக்கிறது.
சரி , ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஷோபா சக்தியின் ‘ ம் ’ நாவலில் ஒரு அப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான பாலுறவு மிக விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரி incest உறவுகள் சரீர வேட்கையின் காரணமாகவே நடப்பவை. ஆனால் ‘ ம் ’ மில் அது ஒரு ‘ காதலாக ’ சொல்லப்படுகிறது. ஆக , உலகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா ? இதன் மூலம் திருவாளர் ஷோபா சக்தி கூறும் ‘ உண்மை ’ என்ன ?
மேலும் ஒன்று , நான் ஒரு womanieser என்ற வகையில் எனக்கு பெண்களைப் பற்றியும் , காமத்தைப் பற்றியும் , போகத்தைப் பற்றியும் சற்றே அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘ உள்ளே ’ போகப் போகத்தான் ‘ கற்றது கைம்மண்ணளவு ; கல்லாதது உலகளவு ’ என்பது தெரிய வருகிறது. எனவே ஷோபா சக்தி போன்றவர்கள் இவ்விஷயத்தில் அடக்கம் காட்டுவது நல்லது.
தீராநதி: உங்களின் ‘ நேநோ ’ சிறுகதைத் தொகுதி தமிழ் நான் _ லீனியர் ரைட்டிங் ஸ்டைலுக்குக் கிடைத்த நல்ல தொகுதி. ஏன் நீங்கள் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கவில்லை ?
சாரு: அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். ‘ நேநோ ’ வில் வராத சில கதைகள் என்னிடம் இருக்கிறது. ‘ கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ என்ற கதை ரொம்பவும் முக்கியமான சிறுகதை. இந்தக் கதையை வெளியிடுவதற்குக் கூட வழி கிடையாது. அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவேயில்லை. எனக்காக நாகார்ஜுனனே போய் டைப் பண்ணி , புத்தகமாகத்தான் வெளிவந்தது. அதேபோல் நாடகம்...
‘ ரெண்டாம் ஆட்டம் ’ என்று மதுரையில் ஒரு நாடகம் போட்டோம். நான்தான் அதை கன்சீவ் பண்ணேன். நம் நண்பர்கள் எல்லாம் நடித்தார்கள். நானும் நடித்தேன். எல்லோரையும் அடித்து தூக்கிப் போட்டு மிதித்தவர்கள் எல்லாம் பொதுமக்கள் கிடையாது. நாடகத்தில் பிஹெச்டி வாங்கியவர்கள் , சக நாடகக் கலைஞர்கள். சண்டையை விலக்கியவர் மு. ராமசாமி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் , சண்டையை மிகத் தீவிரமாக மூட்டிவிட்டவர் அ. மங்கைதான். ‘ அடிங்கடா அவனை ’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த நாடகம் சம்பந்தமாக நான் 500 பக்கம் உள்ள புத்தகத்தை அகஸ்தோ போவாலைப் பற்றி ‘ ஃபாரம் தியேட்டர் ’ என்று ‘ வெளி ’ பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறேன். இப்படி அடித்தவுடன் அதற்குப் பிறகு நாடகத்தையே விட்டு விட்டோம்.
தொடர்ந்து நீங்கள் செயல் வீரனாக இருக்க வேண்டுமென்றால் அடிவாங்க வேண்டும். நீங்கள் பெரிய ‘ கொரில்லா ’ மாதிரி இருக்க வேண்டும். அந்த அளவுக்கெல்லாம் சமூகத்தில் நமக்கு இடமே கிடையாது.
தீராநதி: பொது மக்களைவிட எழுத்தாளனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் சக படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்களா ?
சாரு: ஆமாம். நிச்சயமாக கோடிட்டு உறுதியாகச் சொல்கிறேன். பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான ஆட்கள். பொது மக்களிடம் சென்று நீங்கள் நாடகம் போடலாம். அவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சக படைப்பாளிகள்தான் ஜனநாயக உணர்வே இல்லாத ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய காம்ரேட் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.
தீராநதி: ஜனநாயகத்தைக் கோரியும் , மனித உரிமைகளின் அடி ஆழம் வரை சென்றும் விவாதிக்கும் படைப்பாளிகள் பொதுமக்களைவிட வன்முறையாகச் செயல்படுகிறார்களே , ஏன் ?
சாரு: அது எனக்குத் தெரியவில்லை. யார் அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி படிக்கிறானோ , அவனே பாசிஸ்ட்டாகி விடுகிறான். ‘ ஒருவிதமான ‘ ஐரனி ’ தான் இது. அல்லது விதி. கம்யூனிஸம் என்பது மிகப்பெரிய ஜனநாயகக் கோட்பாடு. எல்லா மனிதனும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உயரிய சித்தாந்தம். ஆனால் அது எப்படி பாசிஸமாக மாறியது ? உதாரணம் ; மாவோ. இது ஏதோ கம்யூனிஸத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்திலும் நடக்கிறது. ஆன்மிகவாதி என்ன சொல்கிறான். ‘ நான் சொல்வது மக்களுக்காக. நான் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம் ’ என்று அவன் நினைப்பதனாலேயே அதை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறான். இப்படி அதீத ஜனநாயகம் பேசுபவன் சர்வாதிகாரியாகவும் , அதீத ஆன்மிகம் பேசுபவன் பாசிஸ்ட்டாகவும் ஆவதெல்லாம் இந்த உள் முரண்களால்தான். இதற்கு நேர்வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் , அது அநாவசியம் , வேண்டாம்.
தீராநதி: இளையராஜாவின் இசையை விமர்சித்து கோணல்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ?’ உங்களின் இசை ரசனை பற்றி விளக்கமுடியுமா ?
சாரு: ‘ ஆல் இண்டியா ரேடியோவின் சங்கீத் ’ சம்மேளன் மூலமாக ரவிசங்கரின் இசைக் கச்சேரிகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் இசைத் தேடல் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே எங்கள் ஊர் பள்ளி வாசல்களில் கேட்கும் ‘ நகரா ’ இசை மூலம் என் இசை ரசனையைப் பெருக்கிக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் , இலக்கியத்தைவிட எனக்கு இசையின் மேலும் சினிமாவின் மேலும்தான் ஆர்வம் அதிகம். சினிமா சம்பந்தமாக நான் நிறைய எழுதி இருப்பதால் அச்சந்தேகம் யாருக்கும் எழவில்லை. இசை பற்றி நான் அதிகம் எழுதாதது கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 25 வருடங்களுக்கு முன்னால் ‘ மீட்சி ’ இதழில் ‘ சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் ’ என்ற எஸ்.ராமநாதன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்நாடக இசைக்கும் , நாட்டுப்புற இசைக்கும் உள்ள இணைத்தன்மைகள் பற்றி ஒரு ஒப்பீட்டுக் கட்டுரை எழுதி இருக்கிறேன். ‘ ஷங்கர்லால் இசைவிழா ’ என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அதைப் பாராட்டி அப்போது அசோகமித்திரன் கூட ஒரு கடிதம் போட்டார். நான் டில்லியில் இருந்தபோது பல இசைக் கலைஞர்களின் கச்சேரியை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்பிற்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய செவியும் அறிவும் உணர்வும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.
இளையராஜாவை விட யுவன் ஷங்கர்ராஜா பல மடங்கு இசை ரசனையுள்ளவர். ‘ புதுப்பேட்டை ’ யில் அவர் கொடுத்திருக்கும் இசை பெரிய சிம்பொனி மாதிரி இருக்கிறது. மேற்கத்திய இசையில் ரொம்பவும் ஆழமான ரசனை உள்ளவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதே போல ஏ.ஆர்.ரஹ்மான் ‘ குரு ’ படத்திற்குப் போட்டிருப்பதும் உயர்தரமான இசை என்று சொல்ல முடியும். நான் எழுதிய இசைக் கட்டுரைகள் ‘ கலகம் காதல் இசை ’ என்று தொகுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. இதுதான் எனக்கும் இசைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் சான்று. இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கும் மேலாகச் சென்று இசையில் சாதனை செய்தவர்கள் சுமாராக பதினைந்து பேரையும் மறந்துவிட்டு , மறுத்துவிட்டு இவர் இருப்பது நன்றி கெட்டதனம். ஒருவன் தன்னை இசைஞானி என்று கூப்பிட்டால் , எனக்கு முன்னால் பதினைந்து ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று தன்னடக்கத்துடன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
இளையராஜா கொடுக்கின்ற பேட்டிகளில் எல்லாம் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் அவரை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. ‘ பாப் மார்லி ’ யை குப்பை என்கிறார். கத்தாரை குப்பை என்கிறார். ஆந்திராவில் சென்று கத்தாரை குப்பையென்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
தீராநதி: யுவன் ஷங்கர் ராஜாவின் இசை குறித்து பேசியதால் கேட்கிறேன். இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் ஒரு மன அமைதியின்மை நிலவுகிறது. அதே யுவன் ஷங்கர்ராஜாவின் இசையைக் கேட்டால் ஒரு விளிம்பு நிலை கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரு கொண்டாட்டம் பீறிடுகிறது. இது சரியான ஒப்பீடா ?
சாரு: யுவனைப் பொறுத்த அளவில் நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் , இளையராஜாவின் இசையில் நீங்கள் சொல்வது போன்ற ஒரு குணாம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை நான் உணர்ந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பேன். எனக்கு அவரிடம் அப்படி ஒரு குணாம்சமே இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் _ என் எரிச்சல் சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அவர் செய்கின்ற பல ‘ லந்து ’ களால் என் புலனுணர்வுக்கு அது எட்டாமலேகூட போய் இருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால் , அதற்கு அவரின் ஆன்மிகத் தேடல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்மிகத் தேடல் இருந்தாலே அது ஒருவித அமைதியையும் , அமைதியின்மையையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும்.
தீராநதி: உங்களுடைய எழுத்துகளில் சொல்லத்தகுந்த அறமாய் ஒரு மெலிதான திராவிட அரசியல் தன்மை இழையிடுவதாகத் தெரிகிறது. அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயும் இருக்கிறது. திராவிட அரசியலின் தொடர்ச்சியில் வரும் ஒரு எழுத்தாளனாக உங்களை நீங்கள் உணருகிறீர்களா ?
சாரு: இதற்கு முன்னால் அப்படி இருந்த ஒரு எழுத்தாளரை உங்களால் சொல்ல முடியுமா ?
தீராநதி: நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக பிரமிள் ?
சாரு: இவ்வளவு அப்ஜெக்டிவ்வாக நான் இதுவரை யோசித்ததில்லை. ஆனால் , எனக்கும் திராவிட அரசியலுக்குமான ஒரு தொடர்பு முப்பது வருடமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. இல்லை என்றால் கருணாநிதிக்கு ஒரு கடிதம் என்னால் எழுதியிருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வைத்தே ஒரு நாவல் எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. அதை ஏன் யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. உலக அளவில் இப்படி எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட ஓர் இயக்கமாக சீலேவில் பெரோன் மூமெண்ட்டை மட்டுமே சொல்லலாம். அதற்கடுத்தது திராவிட இயக்கம்.
வேறு எங்கேயும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே ஒரு வீழ்ச்சி இவ்வளவு டிராமாடிக்காக நடந்ததில்லை. சிவாஜி கணேசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் கட்டித் தழுவிக் கொண்ட காட்சியை உங்களால் மறக்கமுடியுமா ? எப்படிப்பட்ட நாடகத் தன்மை கொண்ட காட்சி அது! இவற்றையெல்லாம் தொடர்ந்து மனதில் நான் பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அத்தன்மை என்னிடமும் இருக்கத்தான் செய்யும்.
நன்றி - குமுதம் தீராநதி
* * *