( உயிர்மை ஏப்ரல் 2008 இதழில் வெளிவந்த கட்டுரையின் விரிவான வடிவம்)
நான் மண விழாக்களுக்கோ , மரண வீடுகளுக்கோ செல்வதில்லை. இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. மணவிழா , உயிர் உற்பத்திக்காக நடைபெறும் சடங்கு ; மரணம் , உயிரின் விடுதலை. மண விழாக்களுக்குச் செல்லாததன் காரணம் , தம்பதியர் எப்போது விவாக ரத்து செய்யப் போகிறார்களோ என்று மனதுக்குள் எழும் அபத்த உணர்வு. மரண வீடுகளைத் தவிர்ப்பது , அங்கே கிடக்கும் பூத உடல் ஏற்படுத்தும் அச்சத்தினால். பிறந்தோர் யாவருக்கும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்ததே என்றாலும் , அவ்வளவு கிட்டத்தில் மரணத்தைப் பார்க்கும்போது எழும் அச்ச உணர்வு அலாதியானதுதான்.
வாழ்வில் இரண்டு மூன்று முறை மட்டுமே மரண வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அவை , நெருங்கிய உறவினர்களின் மரணம். உதாரணமாக , அம்மா. ஜனவரி தொடக்கத்திலிருந்தே ஒரே மரண செய்திகளாகவே வந்து கொண்டிருந்தன. மிகவும் பாதித்தவை நாஞ்சில் நாடனின் இளைய சகோதரர் மற்றும் அவரது மைத்துனரின் மரணம். இருவருக்குமே இளம் வயது. இரண்டு மரணங்களுமே ஒரே வார இடைவெளியில் நிகழ்ந்தவை.
இரண்டாவது மரணம் பற்றி 27.2.2008 அன்று காலை செய்தி வந்தது. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தபோது அன்றைய தினம் மாலை சுஜாதா கவலைக்கிடமாக இருப்பதாக கனிமொழியிடமிருந்து செய்தி கிடைத்தது. அப்போது நான் சவேரா ஓட்டல் மூங்கில் பாருக்கு வெளியே அமர்ந்திருக்கும் கிளி ஜோசியரிடம் ஒரு நண்பருடன் ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
செய்தி அறிந்து மனம் சிறிதும் பதற்றமடையவில்லை. ஏனென்றால் , மிக நிச்சயமாக சுஜாதா இன்னும் 20 ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்று நான் நம்பினேன்-எம்.எஃப் ஹ § சேன் , குஷ்வந்த் சிங் போன்றவர்களைப் போல. அல்லது , குறைந்த பட்சம் இன்னும் 10 ஆண்டுகள் மிக உறுதி என்பது என் எண்ணம்.
சுஜாதாவை என்னால் எந்தக் காலத்திலும் 74 வயதானவராகவோ , முதியவராகவோ எண்ணிப்பார்க்கவே முடிந்ததில்லை. 74 வயதானாலும் அவர் இளைஞராகவே இருந்தார். தோற்றத்தில் கூட அவர் ஒரு இளைஞர் தான் ; யாரும் அவரை ‘ தாத்தா ’ என்று அழைத்துவிட முடியாதபடியான ஓர் இளமைத் தோற்றம் அவருடையது.
பிறகு , மூங்கில் பாரிலிருந்து கிளம்பி நண்பரும் நானும் கடற்கரைக்கு வந்தோம். இரவு ஒன்பது மணி இருக்கும். வழக்கமாக நாங்கள் நண்பர்களைச் சந்திக்கும் இடத்தில் கவுண்டமணி நின்று கொண்டிருந்தார். நாங்கள் சந்திக்குமிடத்தை கடற்கரையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றி விட்டபடியால் கவுண்டரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சந்திக்கவில்லை. கவுண்டரை (அவரை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம்) முன்வைத்து என்னை குமுதத்தில் பாமரன் சாடியிருந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மனுஷ்யபுத்திரன் அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.
ஏற்கனவே மரண செய்திகளால் வெறுப்புற்றியிருந்ததனாலோ அல்லது வேறு எந்தக் காரணமோ தெரியவில்லை , கையிலிருந்த தொலைபேசியை கோவிலில் சிதறு தேங்காய் உடைப்பது போல் போட்டு உடைத்துவிட்டேன். நண்பரும் கவுண்டமணியும் தான் சிதறிய பாகங்களை எடுத்துக் கொடுத்தனர். கிளம்பும் போது என் கையில் ஒரு பாக்கெட் பொரியைக் கொடுத்துவிட்டுப்போனார் கவுண்டர்.
* * *

தமிழில் என்னுடைய ஆசான்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம். ஒருவர் , ஜெயகாந்தன். என்னுடைய பதின் பருவத்தில் (இந்த வார்த்தையே கூட நான் ஜெயகாந்தனிடமிருந்து பயின்று கொண்டதுதான்) அவர் தான் என்னுடைய ஹீரோவாக இருந்தவர்.
மிகத் தீவிரமான தி.மு.க.குடும்பமாக இருந்த எங்கள் குடும்பச் சூழலில் அதனுடைய பாதிப்பு எதுவுமே என் மீது படாத வண்ணம் என்னைக் காத்தவர் என ஜெயகாந்தனைக் கூறலாம். அவரைப் படித்தே நான் சமஸ்கிருதம் படித்தேன். அவரைப் படித்தே நான் சினிமா பாடல் என்ற ஜனரஞ்சக ரசனையினின்றும் விலகி சாஸ்த்ரீய சங்கீதத்தின் பால் ஈடுபாடு கொண்டேன்.
பார்ப்பதற்கும் அவரைப் போலவே இருப்பேன். கட்டு மஸ்தான உடம்பு , நீண்ட தலைமுடி , இத்யாதி. அப்போது சென்னையில் சிறைத்துறையில் குமாஸ்தா வேலை , மில்லர்ஸ் ரோடிலுள்ள சாந்தி மேன்ஷன் முதல் மாடியில் ஒரு 35 வயது மதிக்கத் தக்க ஒருவருடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். (இப்போது அந்த மேன்ஷன் இருக்கிறதா என்று தெரியவில்லை)
என்னுடைய இயல்பு எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம்: சென்னையில் நான் ஒரு ஆண்டுக்காலம் அந்த மேன்ஷனில் அந்த அறையில் தங்கியிருந்தேன். ஆனால் , அந்த ஒரு வருடகாலமும் நான் என்னுடைய அறைவாசியான அந்த அன்பருடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை , ‘ ஒரு வார்த்தை கூட ’ என்பதை அட்சர சுத்தமாக அர்த்தப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் , ஹலோ கூட சொல்லிக் கொண்டதில்லை. ஒரு புன்சிரிப்பு. அவ்வளவுதான்.
அப்போதுதான் ‘ ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் ’ என்ற தொகுப்பு வெளிவந்திருந்தது. அதில் பால குமாரன் , சுப்ரமணிய ராஜு போன்ற பெயர்கள். மாதா மாதம் கணையாழியை விடாமல் படித்துக் கொண்டிருந்தேன். அதில் பாலகுமாரனின் ஒரு கவிதை.
உனக்கென்ன கோவில் குளம்
ஆயிரமாயிரம்
எனக்கோ
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இரைத்து இரைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே
நாளையேனும்
மறக்காமல் வா!
பாலகுமாரனுக்கு கடிதம் எழுதினேன். என்னை ஒரு அழகான இளம் பெண் என்று எண்ணி மேற்கண்ட கவிதை பாணியிலேயே ஒரு பதில் எழுதியிருந்தார் பாலா. ராயப்பேட்டை லாய்ட்ஸ் ரோடிலுள்ள அவர் வீட்டுக்குச் சென்ற போது மனிதர் என்னைப் பார்த்து அலறியே விட்டார்.
அப்போதுதான் சாவியில் சுஜாதா ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். தன்னுடைய முதல் கதை சிவாஜியில் வெளியாகி இருப்பதாகவும் , அதன் பிரதி தன்னிடம் இல்லை என்றும் , யாராவது அதைத் தந்தால் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியையும் , தன் மகளையும் கொடுப்பேன் என்று எழுதியிருந்தார் சுஜாதா. உடனே நான் “ என்னிடம் இருக்கிறது அந்த சிவாஜி இதழ். எனக்கு சாம்ராஜ்யமெல்லாம் வேண்டாம் ; பெண்ணே போதும் ” என்று சாவிக்கு எழுதினேன். அதுதான் பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய முதல் எழுத்து. பிறகு சாவியுடன் பேசிய பொழுது “ எங்கே சிவாஜி ?” என்று கேட்டார். “ அது இருக்கட்டும் ; எப்போது கல்யாணம் ?” என்றேன் நான்.
“ அதெல்லாம் சும்மா நகைச்சுவையாக எழுதுவது ; சுஜாதாவுக்கு 2 பையன்கள் தான் ; பெண் கிடையாது ” என்றார் சாவி.
நான் தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்த போது சரஸ்வதி மஹால் நூலகத்தில் சிவாஜியைப் பார்த்திருக்கிறேன். திருச்சியிலிருந்து திருலோக சீத்தாராம் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகை. மற்றபடி என்னிடம் அந்தப் பிரதி இல்லை.
“ அப்புறம் ஏன் பொய் சொன்னீர் ?” சாவி.
“ ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் என்பார்களே. . . அதுதான். . .ஹிஹி. . . ”
“ சரி , சுஜாதா சொன்ன பொய்க்கும் நீங்கள் சொன்ன பொய்க்கும் சரியாப் போச்சு ” என்று கூறி என்னிடம் கதை கேட்டார் சாவி. அனுப்பி வைத்தேன். பிரசுரமானது. தொடர்ந்து அனுப்பினேன். தொடர்ந்து பிரசுரமானது. அப்படியே எழுதி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளனாக ஆகியிருப்பேன். அப்போதும் சுஜாதாவே வழி மறித்தார். வேறொரு திசையைக் காட்டினார்.
ஜெயகாந்தனின் தீவிர வாசகனாக இருந்த எனக்கு ஜெயகாந்தன் காட்டிய இந்திய மரபும் , அதன் விழுமியங்களும் மட்டுமே போதுமானதாக இல்லை. இந்திய எல்லையை நான் தாண்ட வேண்டியிருந்தது. கல்லூரிப் பருவத்தில் நான் படித்த ஜி.கே.செஸ்டர்டனும் , ஆஸ்கார் ஒயில்டும் , டி.ஹெச்.லாரன்ஸும் காட்டிய உலகம் ஜெயகாந்தனின் உலகிலிருந்து வேறுபட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நான் சுஜாதாவைப் பற்றிக் கொண்டேன். சில விஷயங்கள் மிக நன்றாக ஞாபகம் இருக்கின்றன. ஒரு கதையில் அவர் ‘ நியாட்ஷே ’ என்று எழுதியிருந்தார். வெகு சாதாரணமாக போகிற போக்கில் நியாட்ஷே என்று சொல்லி விட்டுப் போவான் வசந்த். அதை வைத்துக் கொண்டு இனி என் வாழ்வு நீட்ஷேவுடன் தான் என்று புரிந்து போனது.
இச்சம்பவம் நடந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே விரிவுரை ஆற்றியபோது ஒரு மாணவன் “ உங்களுடைய ஸீரோடிகிரியில் நீட்ஷேவின் பாதிப்பு பெருமளவுக்கு இருப்பதாக உணர்கிறேன். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன ?” என்று கேட்ட போது அந்தக் கணத்தில் சுஜாதா என்ற எனது ஆசிரியருக்கு நான் மானசீகமாக நன்றி கூறினேன்.
* * *
சாவி கொடுத்த உற்சாக ஆதரவில் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளனாக ஆகியிருப்பேன் என்று சொன்னேன் அல்லவா ? அந்த நேரத்தில் சுஜாதா ஒரு பத்திரிகையில் தனது நண்பர் கமல்ஹாசன் ‘ பிரக்ஞை ’ என்ற காலாண்டிதழின் ஆயுட்கால சந்தாதாரர் என்று எழுதியிருந்ததைப் படித்து பிரக்ஞையைத் தேட ஆரம்பித்தேன். முதலில் எனக்கு அந்த வார்த்தையே பிடித்திருந்தது. எங்கு தேடியும் பிரக்ஞை கிடைக்கவில்லை. சென்னையிலிருந்த அந்த ஒரு வருட காலமும் ஒவ்வொரு வார விடுமுறையிலும் தஞ்சாவூர் போய் விடுவேன். அங்கே மேல வீதிக்குப் பக்கத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் தெருவில் எனக்கு ஒரு காதலி இருந்தாள். அப்படிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாள் தஞ்சாவூர் பொது நூலகத்தில் ‘ பிரக்ஞை ’ இதழைக் கண்டேன். அப்படியே சுருட்டி பேண்ட்டுக்குள் வைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
தி.நகர் பஸ் நிலையத்துக்கு எதிரே இருந்தது பிரக்ஞை அலுவலகம். அது ஒன்றும் அலுவலகம் இல்லை. பிரக்ஞை ஆசிரியர் குழுவிலிருந்த ஒருவரின் வீடு. அந்த வீட்டு மாடியில் கூரை வேய்ந்திருந்தது. ஒருவர் பெயர் ரவீந்திரன். மற்றவர் பெயர் ரவி ஷங்கர். இன்னொருவர் வீராச்சாமி. ரவீந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரவி ஷங்கர் அந்தக் காலத்து பிராமண இடது சாரிகள் மற்றும் புத்திஜீவிகளைப் போலவே தாடி வைத்திருந்தார். (கிட்டத்தட்ட இப்போதய தசாவதாரம் கமலைப் போல் இருந்தார் ரவி ஷங்கர்). வீராச்சாமியை இப்போது தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரியும்.
* * *
‘ ந்ருஸிம்ஹப்ரியா ’ என்ற ஸ்ரீ வைஷ்ணவப் பத்திரிகை பற்றி சுஜாதா டிசம்பர் 1965 க ¬¬ யாழி இதழில் முதல் முதலாகக் குறிப்பிடுகிறார். அப்போது என் வயது சரியாக 12. அப்போது அதை நான் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘ ந்ருஸிம்ஹப்ரியா ’ வை அதன் பிறகும் தொடர்ந்து சுஜாதா தன் கட்டுரைகளில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அப்பத்திரிகையை கடந்த பல ஆண்டுகளாக நான் வாசித்து வருகிறேன். நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் , பெரியவாச்சான் பிள்ளையும் , இன்னும் பலப் பல வைணவ இலக்கியங்களும் எனக்கு அறிமுகமானது சுஜாதாவின் மூலமாகத்தான் என்று சொல்லலாம். ஸீரோ டிகிரியின் மொழியில் ஒரு சீரான தாள லயத்தை ஒருவர் உணர முடியும். இதற்குக் காரணமாக அமைந்தது என் உணர்விலும் உயிரிலும் கலந்திருந்த ஆழ்வார் பாசுரங்கள்தான்.
உலக இலக்கியத்தை எவ்வளவு தீவிரமாக வாசிக்கிறேனோ அதே அளவு தீவிரத்துடன் வைணவ இலக்கியத்தை வாசித்து வருகிறேன். வேளுக்குடி வரதாச்சாரியாரைப் பற்றிய குறிப்பு ஸீரோ டிகிரியில் உண்டு. அவரது புதல்வர் வேளுக்குடி கிருஷ்ணன் அமெரிக்காவில் பெரிய உத்தியோகத்தில் இருந்தவர் , தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு , அமெரிக்காவையும் ஆடம்பர வாழ்வையும் உதறிவிட்டு இங்கே வந்து உபந்யாசம் செய்யத் துவங்கியதிலிருந்து அவரை விடாமல் கேட்டு வருகிறேன். அவரது கம்ப ராமாயண உபந்யாசத்தை ( 18 மணி நேரம்) முழுவதுமாகக் கேட்டு விட்டு ஒருவர் கம்பனுக்குள்ளே நுழைந்தால் அது ஒரு அதியற்புத அனுபவமாக அமையும்.
இப்போது கூட பொதிகை சேனலில் தினந்தோறும் காலை ஆறரை மணிக்கு அவரது உபந்யாசத்தைக் கேட்கலாம். ஆறேழு மாதங்களாகத் தொடரும் அந்த உபந்யாசத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். மைலாப்பூர் மாதவப் பெருமாள் கோவிலிலும் அவர் அவ்வப்போது உபந்யாசம் செய்வதுண்டு. முதல் ஆளாக முதல் வரிசையில் அமர்ந்திருப்பது அடியேன்தான். தமிழை வளர்க்கிறோம் என்று இன்றைய தினம் சில சினிமா டைரக்டர்களும் , அரசியல்வாதிகளும் புறப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் என்ற வார்த்தையை போலீசு என்று எழுதினால் தமிழ் வளர்ந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் உண்மையிலேயே தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பதும் , வளர்ச்சி அடைந்து வருவதும் வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பெரியார்களாலும் , தமிழ் இலக்கியவாதிகளாலும்தான் என்பது என் கருத்து.
இதற்கெல்லாம் எனது சாளரங்களைத் திறந்து விட்டவர் சுஜாதா.
சுஜாதாவிடம் எனக்குப் பிடிக்காதது அவருடைய மட்டையடிப் பகுத்தறிவுவாதம். என்னதான் அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பற்றியும் , ஆழ்வார்கள் பற்றியும் பேசினாலும் அதெல்லாம் அவரது இலக்கிய அனுபவங்களாகவே இருந்தன. அவருக்கு ஜோதிடம் போன்ற விஷயங்களில் அறவே நம்பிக்கை இருக்கவில்லை. அதையெல்லாம் பற்றி எப்போதுமே அவர் கிண்டலுடனேயே எழுதி வந்தார். ஒரு பிரிட்டிஷ் பிரஜையைப் போலவே அவர் இந்திய மரபை அணுகினார். இந்திய மரபின் மாந்த்ரீகத்தையும் , தாந்த்ரீகத்தையும் விஞ்ஞானப் பார்வையில் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ? வள்ளலாரையும் , ராமகிருஷ்ண பரமஹம்சரையும் , ரமணரையும் , ஷீரடி பாபாவையும் அவர்கள் செய்த சித்து வேலைகளையும் பற்றிப் புரிந்து கொள்ள எந்த மேலைநாட்டு விஞ்ஞான அறிவும் உதவாது என்பதை சுஜாதா அறியவில்லை. பின்னாளில் அவர் ஆன்மீகத்தின்பால் ஈர்க்கப்பட்டார் ; தனது இறுதிக் குறிப்பில் பெருமாள்பகவான் என்று எழுதியிருக்கிறார்- என்றாலும் 50 ஆண்டுகளாக அவர் கொண்டிருந்த பகுத்தறிவுக் கண்ணோட்டத்தின் அடிப்படை அவரிடம் மாறி விட்டதற்கான ஆதாரம் அவரது எழுத்தில் காணக் கிடைக்கவில்லை.
ஆனால் அவர் படித்த புத்தகங்களைப் படித்து , அவர் காட்டிய திசைவழிச் சென்று நான் ஒரு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டேன். இருப்பிடத்தையும் கேசவப் பெருமாள் கோவிலருகே மாற்றிக் கொண்டு விட்டேன். தினமும் எழுந்தவுடன் தர்சனம் தருவது கேசவப் பெருமாளின் திருமுகம்தான்.
* * *
சுஜாதாவை நேரில் சந்திக்காமலேயே , அவர் எனது ஆசானாக இருந்து வந்திருக்கிறார் என்பதைக் கூட பிரக்ஞாபூர்வமாக உணராமலேயே நான் அவரிடமிருந்து பலப்பல வருடங்களாக பல்வேறு விஷயங்களைக் கற்று வந்திருக்கிறேன். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவனாதலால் யாரிடமும் வலிய சென்று பார்ப்பதில்லை ; பேசுவதில்லை. ஜெயகாந்தனின் வீட்டுக்கு ஓரிரு வீதிகள் தள்ளித்தான் 10 ஆண்டுக்காலமாக வசித்து வந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் ; ஒரு முறையாவது அவரோடு கஞ்சா புகைக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அதோடு சரி.
அதேதான் சுஜாதா விஷயத்திலும் நடந்தது. அப்படியிருக்கும் போது 1994- ஆம் ஆண்டு கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் என் கதை முதல் பரிசு பெற்றது. ‘ நினைவுகளின் புதர்ச்சரிவுகளிலிருந்து ’ என்ற அக்கதை அதே ஆண்டு மே மாத கணையாழியில் வெளிவந்தது. இக்கதையை ஸ்ரீவைஷ்ணவ இனத்தில் பிறந்து வளர்ந்த ஒருவரால்தான் எழுத முடியும் என்பதால் இதைப் படித்த சுஜாதா கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கனிடம் “ சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒருத்தரும் எழுகிறார் போலிருக்கிறதே ?” என்று கேட்க , கஸ்தூரி ரங்கன் “ இல்லை அதே சாருநிவேதிதா தான் ” என்று சொல்லியிருக்கிறார். “ அப்படியானால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன் ” என்று சுஜாதா தெரிவிக்க அவரை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் இந்திரா பார்த்தசாரதியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்தார்.
இந்த நேர்ச்சந்திப்புக்கு முன்னால் நடந்த வேறொரு விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். எனது நெருங்கிய நண்பர்களான மனுஷ்யபுத்திரனுக்கும் , கனிமொழிக்கும் சுஜாதா நேரடியாக பல விஷயங்களை கற்பித்திருக்கிறார் ; வெகுஜன பத்திரிகைகளில் தான் எழுதும் பிரபலமான பத்திகளில் அவர்களைப் பற்றி விடாது எழுதி வந்திருக்கிறார் ; உற்சாகப் படுத்தியிருக்கிறார் ; இன்ன பிற. ஆனால் அவரை எனது மானசீக குருவாக ஏற்று தொலைவிலிருந்தே அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த என்னைப் பற்றி அவர் மிக மோசமான கருத்தையே கொண்டிருந்தார். இவ்வளவுக்கும் நான் அவருடைய நேர் வாரிசாகவே அவருக்குரிய பல்வேறு விஷயங்களை என் எழுத்தில் ஸ்வீகரித்துக் கொண்டிருந்தேன். அவருடைய அங்கதம் , எளிமையும் சுவாரசியமும் கூடிய பாணி , அதனூடே உள்குத்தாக மறைந்திருக்கும் கனமான சிந்தனைக் கீற்றுகள் , எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நடை என்று என் எழுத்தின் பல்வேறு சாதகமான அம்சங்களுக்கு முன்னோடியும் , ஆசானும் சுஜாதா தான்.
மார்ச் 1976 கணையாழி கடைசிப் பக்கங்களில் அவர் தமிழில் கிடைக்கும் போர்னோ எழுத்து பற்றி இப்படி எழுதுகிறார்:
“ தமிழில் போர்னோ கிராஃபி இருக்கிறதா என்ன ? “
சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது கடைகளில் தொங்கிய முத்தம் , பருவம் , தில்குஷ் , மோகினி போன்ற முன்பக்கமும் ஸ்டேப்பில் அடித்த பத்திரிகைகளில் சிலவற்றை ஆராய்ந்தேன். ம்ஹூம்! ஜாக்கெட்டின் பட்டன்களை அவிழ்ப்பதுடன் போர்னோ நின்று விடுகிறது. உண்மையான போர்னோ எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும். . . அமெரிக்கர்களை இதில் மிஞ்ச முடியாது-ஃபிலிப் ராத் , வானர்காட் போன்றவர்களைத் தனிப்பட்டுக் குறிப்பிடலாம்.
தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால். . . சங்கப் பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப் பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. திருக்குறளில் காமத்துப் பாலில் சில வரிகள் பளிச்சிடுகின்றன. இருந்தும் வள்ளுவரின் காமத்தில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள் , ஊடல் , வளை கழல்வது இன்னபிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும் out of proportion கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். . . இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம் (உலோபியின் தருமம்!) ; சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள்! அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno :
அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள. . .
மேலே ‘ திருப்புகழில் ’ தேடிக்கொள்ளவும்.
சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பதங்கள் என்று தேவதாசிகளுக்கான நடனப் பாடல்கள் ராகதாளத்துடன் நிறைய எழுதப்பட்டன. இவைகளில் எல்லாம் கண்ணனின் லீலைகளை விஸ்தாரமாக வர்ணித்து அவன் இப்படிச் செய்தான் , இங்கே கடித்தான் , சகியே அவனைக் கூட்டிவா. . . பசலை! என்ற ரீதியில் எழுதப்பட்ட அந்தப் பாடல்களை எவரும் பாடியதாகத் தெரியவில்லை. சில அந்தரங்க சபைகளிலேயே நடனமாடியிருக்கலாம். பக்தியும் போர்னோவும் கலக்கும் வினோதம் இந்திய இலக்கியத்தின் தனிப்பட்ட அம்சம்.
இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிக போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனில் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன் , கு.ப.ரா. போன்றவர்கள் தலைவைத்துப் படுக்கவில்லை. ஏன் நம் புதுக் கவிஞர்களும் புது எழுத்தாளர்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். (தமிழ் நாடனின் ‘ காமரூபம் ’ சற்று வேறு ஜாதி) எடுத்துக் கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும். அதற்கப்புறம் என்னடா என்றால் ‘ அவர்கள் இருவரும் இருளில் மறைந்தார்கள். ’ ஏன் மறைய வேண்டும் ?”
சுஜாதா இதை எழுதிய பிறகு 13 ஆண்டுகள் கழித்து 1989- ஆம் ஆண்டு என்னுடைய முதல் நாவல் ‘ எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் ’ வெளி வருகிறது. பின்னர் அதைத் தொடர்ந்து வெளி வந்தது ‘ கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ என்ற சிறுகதைத் தொகுதி.
சுஜாதா தமிழில் போர்னோ பற்றிப் பேசும்போது மிகச்சரியாகவே ஆங்கில எழுத்தாளர்களான ஃபிலிப் ராத்தையும் , கர்ட் வனேகட்டையும் ( Kurt Vonnegut ) குறிப்பிடுகிறார். இது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். ஏனென்றால் அவர் இதை எழுதி இப்போது 32 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றைக்கும் இந்த இருவரையும் படித்த தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சுஜாதாவின் உலக இலக்கியப் புலமைக்கு இது ஒரு உதாரணம். தமிழின் வெகுஜன இதழ்களில் எழுதுவதாலேயே சுஜாதாவைப் போல் ஆகி விடலாம் என்று நினைத்த பைங்கிளி எழுத்தாளர் யாருமே அவரது நிழலைக் கூட தொடமுடியாமல் போனதற்குக் காரணம் இதுதான். சுஜாதா ஒரு பைங்கிளி எழுத்தாளர் அல்ல. வெகுஜன இதழ்களில் எழுதிய ஒரு இலக்கியவாதி. மாறுவேடத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு கலைஞன்.
ஃபிலிப் ராத்தையும் , கர்ட் வனேகட்டையும் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவிலும் போர்னோ என்று கூறினாலும் , பின்னர் சில ஆண்டுகளல் போர்னோ என்பதே ஒருவித இலக்கிய வகையாக (நிமீஸீக்ஷீமீ) மாறிவிட்டது. அது வேறு விஷயம்.
மேற்குறிப்பிட்ட நாவலையும் , சிறுகதைகளையும் எழுதிய போது எனக்கு ஃபிலிப் ராத்தையும் , வனேகட்டையும் அவ்வளவாகத் தெரியாது. அமெரிக்க நூலகத்தில் கொஞ்சமாக மேய்ந்திருக்கிறேன் ; அவ்வளவுதான். ஸீரோ டிகிரி வெளி வந்தபிறகு தான் ( 1989) எனக்கும் சில அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் இருந்த இணைத்தன்மைகளை அறிந்து கொண்டேன். அவர்களுள் முக்கியமானவர்கள் ஜெர்ஸி கோஸின்ஸ்கி மற்றும் சார்லஸ் ப்யூகாவ்ஸ்கி.
இப்போது தமிழில் போர்னோ என்ற சுஜாதாவின் குறிப்பை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறமிருக்க , காலச்சுவடு பத்திரிகையில் இரண்டு பேர் கர்ட் வனேகட்டை நான் நகலெடுத்து எழுதுவதாக அவதூறு செய்தி எழுதியிருந்தனர் என்பதையும் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
உலகில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே விதமான எழுத்துப் பாணி இருப்பது சர்வ சகஜமான ஒரு விஷயம். என்னுடைய எழுத்தில் மலையாள எழுத்தாளர் வி.கே. என்னின் பாணி அப்படியே மாற்றுக்குறையாமல் இருப்பதாக சில நண்பர்கள் கூறியிருக்கின்றனர். அதற்குப் பிறகு தான் நான் வி.கே.என்னைப் படித்தேன். ஆச்சரியகரமான ஒற்றுமை!
ஆனால் வனேகட்டையும் படித்து , சாரு நிவேதிதாவையும் படித்த சுஜாதா என்ன செய்திருக்க வேண்டும் ? தமிழில் செறிவான போர்னோ வந்து விட்டது என்று கொண்டாடி இருக்க வேண்டும். (இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ; இன்னமும் நான் போர்னோவை எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பதே அடியேனுடைய அபிப்பிராயம்). ஆனால் கடைசிப்பக்கங்களில் சுஜாதா என்ன எழுதினார் தெரியுமா ?
இதோ:
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்..
நன்றி : மனுஷ்யபுத்திரன், உயிர்மை