சுஜாதா என்ற கலாச்சார சக்தி part 2

 

“ தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்று கேட்டு சில வருஷங்களுக்கு முன் இந்தப் பக்கங்களில் தமிழில் இருப்பதெல்லாம் ‘ ஸாப்ட் போர்னோ வகை ’ என்று சொல்லியிருந்தேன். இப்போது தமிழில் போர்னோ வயசுக்கு வந்துவிட்டது. அண்மையில் வெளிவந்த சில புத்தகங்களையும் பத்திரிகைக் கதையையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். சாரு நிவேதிதாவின் ‘ எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும் ’, கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும் ’ என்ற இவ்விரு புத்தகங்களிலும் (மெட்டா ஃபிக்ஷன் என்கிறார்கள்) எல்லை மீறிய கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லா வக்ர உறவுகளும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களை விவரிக்க வார்த்தைகள் புத்தகத்திலேயே இருக்கிறது. ‘ டோட்டல் டிஸ் இண்டக்ரேஷன் , டோட்டல் ஃபார்ம்லஸ்னஸ் ’.

கி.ராஜ நாராயணன் எழுதும் ‘ வயது வந்தவர்களுக்கு ’ என்ற கதைத் தொடர் தாய் இதழில் கொஞ்சம் ‘ wicked ’ என்று சொல்வேன். இந்த மாதிரி வார்த்தைகளையும் கதைகளையும் நாம் தினம் தினம் கேட்காமலில்லை. தெருவில் கேட்பது , கழிப்பறைகளில் எழுதுவது அனைத்துமே அச்சில் வருவது மேல்நாட்டு இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் உண்டு. தமிழில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இலக்கியம் என்பது கங்கை நதிபோல ; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து செல்லும் என்று சொல்வார்கள். அந்த வகையில் மேற்குறித்தவைகளும் பழுப்பாக மிதந்து செல்கின்றன. ”

ஆக , ஆங்கிலத்தில் வனேகட் எழுதினால் உசத்தி ; தமிழில் சாரு நிவேதிதா எழுதினால் மலம்! ஆனால் சுஜாதாவின் மேல் எனக்குச் சிறிதளவு கோபமும் இல்லை. ஏனென்றால் அவரிடம் நேர்மை இருந்தது.

மற்றவர்கள் செய்வது என்னவென்றால் என் பெயரையே இருட்டடிப்பு செய்து விடுவார்கள். 500 பக்க தொகுபபு ஒன்று வரும். அதில் என்னுடைய கதை ஒன்றும் இருக்கும். ஆனால் அத்தொகுதியில் காணும் அத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு மதிப்புரை எழுதும் ஒருவர் என்னுடைய கதையை மட்டும் விட்டுவிடுவார். மலம் என்று திட்டக் கூட மாட்டார். ஒட்டுமொத்தமான இருட்டடிப்பு. தமிழில் நான்-லீனியர் பாணியில் எழுதிய முதல் ஆள் நான்தான். இன்று வரை விடாமல் கடந்த 20 ஆண்டுகளாக அந்தப் பாணியில் எழுதி வரும் ஒரே ஆளும் நான் தான். ஆனால் சுப மங்களா பத்திரிகையில் வெளிவந்த இரண்டு டஜன் பேட்டிகளிலும்-ஒரு பேட்டி தவறாமல் ‘ நான்-லீனியர் எழுத்து பற்றி உங்கள் கருத்து என்ன ?’ என்ற கேள்வி இடம் பெற்றிருக்கும். பொள்ளாச்சி மகாலிங்கத்திடம் கூட பேட்டியாளர் இந்தக் கேள்வியைக் கேட்பார். ஆனால் எதிலுமே என் பெயர் இடம் பெற்றிருக்காது.

இந்த நிலையில் சுஜாதாவின் ‘ பழுப்பு ’ விமர்சனத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ‘ அப்பாடா , இந்த ஒரு ஆளாவது என் பெயரைக் குறிப்பிட்டுத் திட்டியிருக்கிறாரே! ’ என்ற ஆசுவாசமே எனக்கு ஏற்பட்டது.

மேலும் , உண்மையிலேயே சொல்கிறேன். என் எழுத்தை ஒருவர் மலம் என்று திட்ட அவருக்கு உரிமையிருக்கிறது. நான் எத்தனை பேரை மலம் என்று திட்டியிருக்கிறேன் ? என் எழுத்தைப் பற்றிய எவ்வளவு கடுமையான வார்த்தைகளையும் கண்டு நான் கோபமடைவது இல்லை.

சுஜாதாவுடனான சந்திப்பு குறித்து சந்தோஷமடைய என்னிடம் ஆயிரம் விஷயங்கள் இருந்தன. அவரை நான் தொடர்ந்து என்னுடைய ஆசானாக மட்டுமல்லாமல் , சகாவாகவுமே கருதி வந்திருந்தேன். அவருடன் எனக்கு மிக நெருக்கமான , உணர்வு பூர்வமான உறவு இருந்தது. இதற்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரலாம் என்றாலும் இட வசதி கருதி ஒரே ஒரு உதாரணம்: 1966- ஆம் ஆண்டில் சுஜாதா கணையாழியில் பீட் எழுத்தாளரான ஆலன் கின்ஸ்பர்க் பற்றி எழுதியிருக்கிறார். அவரைப் பற்றிய மிகச் சரியான அறிமுகத்தை எழுதிவிட்டு இறுதியில் இவ்வாறு எழுதுகிறார்: “ கின்ஸ்பர்க் இளைஞர் கூட்டங்களில் அடிக்கடி படித்துக் காட்டும் அவருடைய ‘ ஹெளல் ’ என்கிற கவிதையின் சில வரிகளைத் தமிழ்ப் படுத்தி இந்தப் பகுதியில் சமயம் வரும்போது வெளியிட எனக்கு ஆசை. ” கின்ஸ்பர்க் பற்றி சுஜாதா இப்படி எழுதியிருப்பது எனக்குத் தெரியாது. இப்போது கடைசிப் பக்கங்கள் தொகுப்பை முழுமையாகப் படிக்கும்போதுதான் தெரிகிறது. ஆனால் , என்னுடைய எழுத்தின் ஆதர்சமாக இருந்தவர்கள் பீட் எழுத்தாளர்கள் என அறியப்பட்ட ஆலன் கின்ஸ்பர்கும் , வில்லியம் பர்ரோஸும் தான். இது பற்றி நான் அநேக முறை எழுதியிருக்கிறேன். பர்ரோஸின் Naked Lunch என்னுடைய புனித நூல். பர்ரோஸ் அரபி கற்றுக் கொண்டு மொரக்கோ சென்று வாழ்ந்தவன். கின்ஸ்பர்க் காவித்துண்டைக் கட்டிக்கொண்டு காசியில் வாழ்ந்தவர். இவர் பற்றி 1966 இல் சுஜாதா எழுதுகிறார்: “ கின்ஸ்பர்க் 1965 ல் இந்தியா வந்தார். காசியில் ஒரு குடிசை போட்டுக் கொண்டு தங்கி , கங்கையில் குளித்து , வேத மந்திரங்கள் பயின்று அந்த வயதில்லாத நகரத்தின் விசித்திர வீதிகளில் கங்கைக் கரையில் சுடுகாட்டு நெருப்பின் வெளிச்சத்தில் அலைந்து தேடினார். அவரிடம் உபதேசம் பெற்ற கல்கத்தா இளைஞர்கள் எழுதிய புத்தகங்களை அரசாங்கம் தடை செய்தது. ”

சுஜாதா குறிப்பிடும் கின்ஸ்பர்க்கின் ‘ ஹெளல் ’ கவிதையை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதை என்று கூறி என்னுடைய அத்தனை நண்பர்களிடமும் நான் வாசித்துக் காட்டுவது வழக்கம்.

இதனால்தான் சுஜாதாவை எனது தோழனாகவும் கருதினேன்.

* * *

அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. சுஜாதாவின் வீடு மாடியில் இருந்தது. வீட்டின் வெளியிலேயே செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய முதல் கேள்வியே “ உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் ?” என்பதுதான். நான் ஒருக்கணம் கூட யோசிக்காமல் சீரியஸாக “ எந்த கண்டத்தில் ?” என்று கேட்டதும் அவர் சற்று திடுக்கிட்டு விட்டார். பிறகு நான் நிதானமாகச் சொன்னேன். “ எனக்குத் தமிழில் அநேகம் பேரைப் பிடிக்காது ; ஆஃப்ரிக்க கண்டத்தில் எந்த எழுத்தாளரையும் படித்ததில்லை. அமெரிக்காவில் பீட் எழுத்தாளர்கள். தென்னமெரிக்காவில் பல பேர். அவர்களில் முக்கியமானவர் மரியோ பர்கஸ் யோசா. . . ” சொல்லிவிட்டு “ உங்களிடம் யோசா அளவுக்கான திறமை இருந்தும் நீங்கள் அதை வெளிப்படுத்தாதது பற்றி எனக்கு ஒரு மனக்குறை இருக்கிறது ” என்றேன்.

சிரித்தார்.

திருமதி. சுஜாதாவின் அருமையான காப்பி வந்தது.

பேசி முடித்துவிட்டு வெளியே வந்த போது என் செருப்பைக் காணவில்லை. சுஜாதாவுக்கு ஒரே ஆச்சரியம். “ இப்படி நடந்ததே இல்லை! ” என்று திரும்பத் திரும்ப சொன்னார். செருப்பு இல்லாமலேயே ஆட்டோவில் திரும்பினேன்.

பின்னர் மீண்டும் சில சந்திப்புகள்.

பிறகு ஒரு மழைக்காலத்தில். காலை 10 மணிக்கு சந்திக்க வேண்டிய நேரம். திடீர் மழையினால் ஆட்டோ தண்ணீரில் தத்தளித்த படியே சென்றது. ஒரு டெலிபோன் பூத் அருகே நிறுத்தி , நிலைமையை விளக்கி , “11 மணிக்குத் தான் சந்திக்க முடியும் போலிருக்கிறது ; வரலாமா அல்லது இன்றைய சந்திப்பை ரத்து செய்து விடலாமா ?” என்று கேட்டேன். “ வாருங்கள் ” என்றார்.

நான் சென்ற போது 11 மணி.

கதவைத் திறந்து உள்ளே கூட நுழையவில்லை. அதற்குள்ளாகவே “ உங்களுக்காக ஒரு மணி நேரம் அனாவசியமாக காத்திருக்க வேண்டியதாகி விட்டது. எதற்காக நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புகிறீர்கள் ?” என்று மிகக் கோபமான குரலில் கேட்டார்.

ஒன்றுமே பதில் சொல்லாமல் , உள்ளேயும் நுழையாமல் அப்படியே திரும்பி விட்டேன். ஏற்கனவே தொட்டாற் சுருங்கியான எனக்கு இது அதிக பட்ச வார்த்தைகள். “ இனிமேல் இந்த ஆள் முகத்திலேயே விழிக்கக் கூடாது ” என்று நினைத்துக் கொண்டேன்.

* * *

தனிப்பட்ட உறவுகளில் நேரும் இப்படிப் பட்ட உரசல்கள் அவர்கள் எழுத்தின் மீது நான் கொண்டுள்ள மதிப்பை என்றுமே பாதித்ததில்லை. அதே போல் ஒருவர் எவ்வளவுதான் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாலும் அவருடைய எழுத்து எனக்குப் பிடிக்கவில்லையானால் தயவு தாட்சண்யமின்றி முகத்துக்கு நேராகச் சொல்லி விடுவேன். அசோகமித்திரனுக்கு என் எழுத்தைப் பிடிக்காது. கொஞ்சம் தந்திரம் தெரிந்ததால் சுஜாதா அளவுக்கு வெளிப்படையாக மலம் என்று சொல்லவில்லை. எனக்கும் அசோகமித்திரனைப் பிடிக்காது. அவருடைய கருத்துக்கள் இந்துத்துவ அடிப்படைவாதம் சார்ந்தவை. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அவருடைய எழுத்து எனக்கு ஒரு கொண்டாட்டம். ஒருமுறை பாரதீய ஞானபீடப் பரிசுக்கு ஒரு பெயரை முன்மொழியும் படி ஒரு படிவம் எனக்கு அனுப்பப்பட்டபோது (விலாசம் தவறிவந்திருக்கும் ; வேறொன்றுமில்லை) அசோகமித்திரனின் பெயரையே சிபாரிசு செய்து எழுதினேன்.

எனவே , சுஜாதாவை சந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கும் , அவரது எழுத்துடனான எனது உறவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரது மரண தினம் வரை விகடனைப் பிரித்தால் நான் முதலில் படிப்பது சுஜாதாவின் ‘ கற்றதும் பெற்றதும் ’ பகுதியைத் தான். ரொலான் பார்த் கூறும் வாசிப்பு இன்பம் என்ற ஒன்றை சுஜாதாஅளவுக்கு வாசகர்களுக்கு நல்கிய வேறொரு எழுத்தாளன் யாரும் இல்லை என்பதே சுஜாதாவின் விசேஷம். அதனால்தான் அவரது சலவைக் கணக்கு கூட பத்திரிகையில் பிரசுரமானது. ஆனால் தமிழ்ச் சமூகம் சலவைக் கணக்கை மட்டுமே வாங்கிக் கொள்ளும் ; அறிவை வாங்கிக் கொள்ளாது.

‘ ரத்தத்தின் நிறம் சிவப்பு ’ என்ற அவரது தொடர்கதை குமுதத்தில் வெளிவந்தபோது ஆயுதம் தாங்கிய கும்பல் அப்பத்திரிகை அலுவலகத்தைச் சுற்றி வளைத்தது. சுஜாதாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. தொடர்கதை உடனடியாக நிறுத்தப்பட்டது. உயிருக்கே உத்தரவாதம் இல்லாதபோது அவர் எப்படி மரியா பர்கஸ் யோசா அளவுக்கு எழுதுவது ? பின்னால்தான் இவ்விஷயம் எனக்குப் புரிந்தது.

கல்கி , அரு.ராமனாதனுக்குப் பிறகு அவர்களைப் போல் சுவாரசியமான சரித்திரக் கதையாசிரியர்கள் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சுஜாதாவின் ‘ காந்தளூர் வசந்த குமாரன் கதை ’ அக்குறையைத் தீர்த்தது. ஆனால் ஏழெட்டு பாகங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டிய அந்த நாவல் ஆரம்பித்த ஜோரிலேயே நின்று போனது.

சுஜாதாவுக்கு தமிழ் நாட்டில் எழுத்துச் சுதந்திரம் இல்லை. அவரைத் தமிழ்ச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை. மேலும் , கணையாழியில் தெரியும் சுஜாதாவை மிக வசதியாகப் புறக்கணித்த இந்தச் சமூகம் , அவரிடமிருந்து தனக்கு வேண்டியதை மட்டுமே எடுத்துக் கொண்டது.

இவ்வளவு தடைகளுக்கிடையிலும் அவருடைய எழுத்தை கடந்த 45 ஆண்டுகளாக அவருடைய கடைசி தினம் வரையிலும் நம்மால் உற்சாகமாகப் படிக்க முடிந்தது. உதாரணமாக , இப்போது விகடனில் வெளிவரும் வண்ணதாசனின் பத்தியை என்னால் ஒரு வரிகூட படிக்க முடியவில்லை. ஆனால் இலக்கியச் சூழலில் வண்ணதாசன் தான் இலக்கியவாதியாக மதிக்கப்படுபவர் ; சுஜாதாவுக்கு அந்த அங்கீகாரம் கடைசி வரை கிடைக்கவில்லை. இதுதான் தமிழின் நவீன இலக்கியம் உலக அளவில் மிகப் பின் தங்கிய அளவில் இருப்பதன் காரணம். பெரும்பாலான எழுத்தாளர்கள் இன்னும் 60 களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுஜாதா கடைசி வரை சமகாலத்தவராகவே வாழ்ந்தார். அவருடைய சமீபத்திய ஒரு கதையில் ஒரு காதலன் காதலியிடம் ‘ ச்சோ ச்வீட் ’ என்று கொஞ்சுவான். இது இன்றைய இளைஞர்களின் மொழி என்பது சுஜாதாவுக்குத் தெரிந்திருக்கிறது. பல இலக்கியவாதிகள் இதை அறிய மாட்டார்கள்.

சுஜாதா இன்னும் 20 ஆண்டுகள் இருந்திருந்தால் அப்போதும் 2028 இன் இளைஞர்களின் உலகை எழுதியிருப்பார் ; அப்போதும் சமகாலத்தவராக இருந்திருப்பார்.

* * *

சுஜாதாவின் மிக வீரியமான பகுதியை தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ளவே இல்லை என்று குறிப்பிட்டேன். அவருடைய கணையாழி கடைசிப் பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசிய கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் கடைசிப் பக்கங்களெல்லாம் தொகுக்கப் பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஹிந்து பத்திரிகையும் அதையே எழுதியிருந்தது. வெகுஜனப் பத்திரிகைகளில் வராத சுஜாதாவின் சீரியஸ் எழுத்துக்கள் ஒரு சில ஆயிரம் பிரதிகளே விற்பதும் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

வெகுஜன சினிமா மற்றும் பத்திரிகைகளை ஏதோ நான்தான் முதல் முதலாகத் தாக்குகிறாற் போல் எனது நண்பர்கள் விசனப்படுகிறார்கள். ஆனால் சுஜாதா இதையெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகள் வரை செய்து கொண்டிருந்தார். அவருடைய கடும் விமர்சனங்களுக்கும் , கேலிக்கும் ஆளாகாத ஆளே இல்லையோ என்று சொல்கிற அளவுக்கு எழுதியிருக்கிறார். மொத்தம் 540 பக்கங்கள் வரக்கூடிய ‘ கணையாழி கடைசிப் பக்கங்கள் ’ என்ற அந்தப் புத்தகம் முழுவதையும் இதற்கு நான் உதாரணமாகக் கூறலாம். அவற்றில் ஒரு சில:

“ டில்லித் தமிழர்கள் தமிழ்ப் படத்துக்காக ஏங்கியிருப்பவர்கள். அதனால் எந்த ஓட்டைப் படம் வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் போய் தரிசிப்பார்கள். படங்களின் தரத்தைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. “ மாடப் புறாவைப் பார்த்தாயா ” என்று கதாநாயகன் கேட்கும்போது நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டு “ சரி பாடப் போகிறாயா ? பாடு பாடு! ” என்று சமாளிக்கும் ‘ பிலாசபி ’ அவர்களது. கொச்சையும் , இலக்கணத் தமிழும் கலந்த வசனங்கள். ‘ ப ’ னாவில் ஆரம்பிக்கும் ஒன்பது எழுத்து , ஏழு எழுத்து பீம்சிங் படங்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ‘ பாங்கோ ’ டிரம்கள் , நம் நாட்டுத் தபலா , கிழக்கத்தி மேற்கத்தி வாத்தியங்களில் வினோதக் கலவையான சங்கீதம் , கண்ணதாசனின் ஆழ்வார் , கம்பர் இவர்களிலிருந்து முழுதாக எடுத்து தமிழ் தேசிய உருவம் கொடுத்து , மெட்டுக்குள் திணிக்கப்பட்ட பாடல்கள். வாலி! கேட்க வேண்டாம். காப்பி அடிப்பவரைக் காப்பி அடித்து அரைகுறை யாப்பிலக்கணப்படி அசிங்கமான எதுகைமோனைகள் அமைந்த பாடல்கள். 7,8 பிளேடுகளை விழுங்கி விட்டுப் பேசும் பிறமொழி நடிகர்கள். யாரைக் கண்டாலும் ‘ பளேர் ’ என்று கன்னத்தில் அறையும் அம்மாக்கள். சிவாஜி கணேசனின் கன்னங்கள்-சினிமாஸ்கோப் ஆகிருதி. ஜெமினி கணேசனின் மேற்படி , மேற்படி ‘ எங்கள் எம்.ஜி.ஆர் ’ மேற்படி. மேற்படி கன்னடத்து நடிகைகள் ( “ யன்னை யதற்காகக் கூப்பிட்டீர்கள் ?”) டைரக்டர்கள்-பிற மொழிப் படங்களிலிருந்து ஒட்டவைத்து திடீரென்று மனசில் மத்தாப்பு வெடிக்கும் , மனசாட்சி பெரிய உருவமெடுத்து நிற்கும் , பறவைகள் சிறகடிக்கும்.

தமிழ் சினிமாவுக்கு கதியில்லை என்றேன். ஸ்ரீதரின் ‘ நெஞ்சில் ஓர் ஆலயம் ’ சிறந்த படங்களில் ஒன்று என்றால் தமிழ் சினிமாவுக்கு கதியில்லை என்று மறுபடி சொல்வேன். ”

சிவாஜி கணேசன். இவர் முக்கால்வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார் , அல்லது கை கால் , கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிகச் சிலவே!. . . எல்லோரும் நாடகத்தில் போல் ஒரே திக்கில் பார்த்துக் கொண்டு இடமிருந்து வலம் வரிசையாக நின்று கொண்டு நடிக்கிறார்கள். ‘ ரியலிஸம் ’ இல்லை.

“ ராஜராஜசோழன் ’ சிவாஜி கணேசன் நடிக்கும் தமிழ்ப் படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்றாஸில் தஞ்சைக் கோயிலையும் நந்தியையும் அட்டையில் செட் அமைத்துப் பிடித்திருக்கிறார்களாம். இதைவிட. . . த்தனமான காரியம் இருக்க முடியாது. ”

“ வர்ணப் படம் என்றால் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஏழு வர்ணங்களும் கசிந்தாக வேண்டும் என்று நினைப்பவர்களைத் திருத்துவது கடினம். தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெட்சர் கேஸ். நான் சமீபத்தில் படம் எடுப்பதாக இல்லை. ”

அடுத்து , எங்க வீட்டுப் பிள்ளையில் வரும் ‘ கண்களும் காவடிச் சிந்தாடட்டும் ’ என்ற பாட்டைப் பற்றி:

“ கண்களும் காவடிச் சிந்தாடட்டும்

காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்

பெண்களும் ஆண்களும் ஒன்றாகட்டும்

பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

இதை எழுதியவர் பஞ்சு அருணாசலம் என்ற ஒரு பேர்வழி. ஒரு சந்தேகம். காவடிச் சிந்து என்பது ஒரு வகை பாட்டு. நடனமல்ல. கண்கள் எப்படிக் காவடிச் சிந்து ஆட முடியும் ? பெண்களும் ஆண்களும் ஒன்றாகட்டும் என்றால் என்ன அர்த்தம் ? எல்லாரும் அர்த்தநாரீசுவரர்கள் ஆகிவிட வேண்டுமா ? இந்த மாதிரி எழுதி தமிழ் சினிமா பாட்டுக் கேட்கிறவர்கள் காதில் ‘ பூ ’ வைக்கிறார்கள். ”

வெகுஜனப் பத்திரிகைகள் பற்றி:

“ பார்வதி பரமேச்வரர் படமானாலும் கவர்ச்சியாக இருப்பது முக்கியம்.

‘ ஆனந்த விகடனும் ’, ‘ கல்கியும் ’ ஒன்றையன்று மிஞ்சுகின்றன. எடை போட்டுப் பார்த்ததில் ‘ கல்கி ’ தீபாவளி மலருக்குத்தான் பரிசு. எட்டு அவுன்ஸ் அதிகம். ”

இதையெல்லாம் சுஜாதா எழுதியிருக்கும் ஆண்டு 1965. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளைப் பற்றிய அவருடைய கிண்டல் இது:

“ ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறு கதையின் ஆரம்பம் இப்படி: சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தோளில் தொட்டாள் உஷா. தொடர்ந்து “ இந்தாருங்கள் ” என்று அழைத்தாள்.

உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம் எழாது. இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்:

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை. . .

இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப் பட்டுப் படிக்கிறோம் , இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார் என்று!இப்படித் தப்பிக்கிறார்: “ தலை இல்லை என்றா சொன்னேன் ? மன்னிக்கவும் ; எனக்கு ஞாபக மறதி அதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு. . . எப்படியோ உங்களைக் கதைக்குள் இழுத்துவிட்டார். ”

இதே போல் தொடர்கதையின் முடிவில் எப்படி தொடரும் போடுகிறார்கள் என்பதற்கு சுஜாதா தரும் உதாரணம்:

பம்பரம் கொண்ட சோழன் வெண்கல நாச்சியாரின் சொற்களைக் கேட்டு பிரமித்து நின்றான். ‘ சரேல் ’ என்று எங்கிருந்தோ ஒரு கட்டாரி பாய்ந்து வந்தது. . . - சரித்திரத் தொடர் கதை

“ சேகர்!நீ சொல்வது நிஜமா ? என்னால் நம்பவே முடியவில்லையே ” என்றாள் வனிதா. விதி சிரித்தது.

- சமூகத் தொடர்கதை

ஜன்னலில் தெரிந்த கை ஒரு வலது கை. கடிகாரம் கட்டிய கை. மணி 6.20

- மர்மத் தொடர்கதை

என் அன்புள்ள வாசகர்களே இந்த மாதிரிக் கதைகளை வாசிப்பதை விட சரும அரிப்பைப் பற்றி ‘ நிக்ஸோடர்ம் ’ விளம்பரத்தைப் படிக்கலாம் என்று நான் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா இல்லையா ?

சினிமா இசையமைப்பாளர்கள்: “( மேற்கத்திய) மெட்டுக்களையெல்லாம் அவர்கள் நாடுகளில் அனுமதியின்றிக் காப்பியடித்தால் கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்குப் போடுவார்கள். நம் நாட்டிலோ விஸ்வநாதனுக்கும் , ஷங்கர் ஜெய்கிஷனுக்கும் அந்தக் கவலை இல்லை! ”

சினிமாப் பாடல்கள்:

“ பாலிருக்கும் பசியிருக்கும்

பழமிருக்காது

பஞ்சனையில் தூக்கம் வரும்

காற்று வராது! ”

இலக்கிய வாதிகள்:

“ சாகித்திய அகாடமி அவார்டு திரு.சு.சமுத்திரத்துக்கு கிடைத்ததில் சந்தோஷம். எழுத்துடன் சம்பந்தப்படாத துணை வேந்தர்களுக்கும் துணி வியாபாரிகளுக்கும் போகாமல் பரிசு ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் இந்த பரிசுகள் கிடைத்ததுமே எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸையா பாசாங்கு வந்து விடுகிறது. அது கருந்தாட்டாக்குடி ஜமீன் அறக்கட்டளைப் பரிசாக இருந்தாலும் சரி. பரிசு பெற்றவுடனே தமிழ் இலக்கியத்தை உஜ்ஜீவிக்கிற வேகம் வந்து கொஞ்சம் போலும் உளற ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் அகிலன் நினைவு நாவல் பரிசு பெற்ற ஒரு இளம் எழுத்தாளர் ஏற்புரையில் , தமிழில் ஒரே ஒரு நாவல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அது ஜேஜே சில குறிப்புகள். அதற்கு மேல் படிக்க தமிழில் வேறு ஏதும் கிடையாது. மலையாளத்தில்தான் உள்ளது என்றாராம். இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் கூட்டி வந்து டிபன் காபி பரிசு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ”

தமிழ்ச் சமூகம்:

“ பிரமிளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு ’ என்று ஒரு பத்திரிகை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது. பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை. கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருக்கிறோம். இதைவிட அதிகமாக ஒரு ஜனக் கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன். ”

நுண்ணுணர்வு:

“ குமுதம் இதழ் தற்போது ஓட்டக்காரர்களாலும் ஆட்டக்காரர்களாலும் பாட்டுக்காரர்களாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டி.ராஜேந்தர் தயாரித்த குமுதம் இதழில் ஒரு பகுதியை கருத்து தெரிவிக்காமல் அப்படியே தருகிறேன்.

என் பையனைப் பொறுத்த வரைக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு. ஸ்கூல் ஒர்க் பண்ண , ஸ்டடி பண்ண ஒரு டியூஷன் , தமிழுக்கு ஒரு டியூஷன் , இப்படி மூணு டியூஷனுக்குப் பையன் போறான். இதைத் தவிர கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு , ஜிம்னாஸ்டிக் வகுப்பு , தலைகீழாய் பையன் நடப்பான் , ஸாமர்சால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். இதைத் தவிர சனி ஞாயிறில் சினிமா ஃபைட்டிங் , காலையிலே கத்துக்கறான். கம்புச் சண்டை , மான் கொம்புச் சண்டை , குத்துச் சண்டை இந்த மாதிரி அதுக்கான ஸ்டண்ட் மாஸ்டர் வச்சு கத்துத் தர்ரேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு. . .மேற்கோளிட்ட இந்த வாக்கியங்களின் சமூகவியல் சார்ந்த அர்த்தம் தெரிய வேண்டுமெனில் எனக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பவும். ”

சுஜாதா வெகுஜன கலாச்சாரம் , இலக்கியம் என்று எந்தத் துறையையுமே விட்டு வைக்கவில்லை. தமிழர்கள் போற்றிக் கொண்டாடுகிற அத்தனை விஷயங்களையும் அத்தனை புனித பீடங்களையும் ( Icon s) போட்டு உடைக்கிறார்.

இந்த வகையில் சுஜாதாவை தமிழின் முதல் பின் நவீனத்துவ எழுத்தாளர் என்று சொல்லலாம். De – Canonization என்ற புனித பிம்பங்களை உடைத்தல் என்பதிலிருந்து இவரது பின் நவீனத்துவம் துவங்குகிறது. இவரது புனைகதைகளில் நாம் அடிக்கடி காணும் வடிவ சோதனைகள் , கட்டங்கள் , குறுக்கெழுத்துப் போட்டிகள் , கேலிச் சித்திரங்கள் , எழுத்தையே சித்திரங்களாக மாற்றுதல் , கண்ணாடியின் பிம்பத்தில் தெரிவதைப் போல் எழுதுவது போன்றவை அனைத்தும் பின் நவீனத்துவ விளையாட்டுகளே ஆகும். டொனால்ட் பார்த்தெல்மேயின் ‘ கீர்க்கேகார்ட் ஷ்லெகலுக்குச் செய்த துரோகம் ’ என்ற கதையில் வரும் கறுப்புச் சதுரத்தையும் சுஜாதாவின் கறுப்புச் சதுரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

* * *

சுஜாதாவை ‘ வாத்தியார் ’ என்று குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். முற்றிலும் சரி. தமிழ்ச் சமூகம் கலாச்சார செழுமையற்ற ஒரு சமூகம். கேரளத்தில் கலா கௌமுதி , மாத்யமம் , மாத்ருபூமி என்று ஏழு இலக்கியப் பத்திரிகைகள் வாராந்தரிகளாக வெளி வருகின்றன. விற்கும் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம். இங்கே இருக்கும் இரண்டு இலக்கியப் பத்திரிகைகளும் , மாதாமாதம் வெளிவருபவை. அதுவும் 10,000 பிரதிகள் அதிக பட்சம். எவ்வளவு வித்தியாசம் என்று கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பள்ளிக்கூடங்கள் , கலாசாலைகள் போன்றவை மாணவர்களின் மூளையில் தகவல்களைத் திணித்து அவர்களை வெறும் எந்திரங்களாகவே மாற்றிக் கொண்டிருக்கின்றன. எனவே கலாச்சாரத்துக்கும் மேற்படி ஸ்தாபனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இப்படியாக சில நூற்றாண்டுகளாகவே கலாச்சாரமோ , ஞானமோ அற்ற பிரஜைகளையே உருவாக்கிக் கொண்டு வந்த தமிழ்நாட்டில் , சுஜாதா கடந்த 40 ஆண்டுகளாக இந்தச் சமூகத்திற்கு ஒரு மாபெரும் Alma mater -ஆகத் திகழ்ந்தார்.

இம்மானுவல் கான்ட் , Zen Satori, மஹாயானம் , ஸென் கவிதைகள் , யாப்பருங்கலக் காரிகைக்கு குணசாகரர் எழுதிய உரையிலும் , ஆழ்வார் பாசுரத்திலும் , தி.ஜானகிராமன் காலத்திலும் தமிழ்மொழி எவ்வெவ்வாறு வேறுபட்டிருந்தது , இ.இ.கம்மிங்ஸ் , ஜான் அப்டைக் , அழகிரிசாமி , கு.ப.ராஜகோபாலன் , அருணகிரி நாதர் , ஸல்வதோர் தாலி , நபகோவ் , கம்பன் , நகுலன் , சத்யஜித்ரே , ஹெமிங்வே , என்.எஸ்.கிருஷ்ணன் , ந.முத்துசாமி , ஏ.கே.ராமானுஜன் , ஞானக் கூத்தன் , கசடதபற இலக்கிய இதழ் , அஃ , அசோகமித்திரன் , வில்லியம் ஃபாக்னர் , சாமுவல் பெக்கெட் , ஸாமர்ஸெட் மாம் , பத்திரகிரியார் , சிவவாக்கியர் , கலாப்ரியா , அயனெஸ்கோ , காஃப்கா , மதுரை ந.ஜயபாஸ்கரன் , எம்.பி.சீனிவாசன் , புறநானூறு , சூடாமணி வசனம் , ஜி.நாகராஜன் , தொல்காப்பியம் , உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம் , ராபர்ட் ஃப்ராஸ்ட் , தெறிகள்-காலாண்டிதழ் , ஷ்யாம் பெனகல் , Artificial Intelligence , பி.வி.காரந்த் , வீரமாமுனிவர் , கமல்ஹாசன் , எஸ்.டி.பாஸ்கரன் , மிருணாள் சென் , அ.மாதவையா , வேதநாயகம் பிள்ளை , கி.ராஜநாராயணன் , எம்.எஸ்.ஸத்யு , கிரீஷ் காஸரவள்ளி , யு.ஆர்.அனந்த மூர்த்தி. . .

- இதெல்லாம் 1965-75 என்ற வெறும் பத்தாண்டுகளில் சுஜாதா தமிழர்களுக்குக் கற்பித்த விஷயங்கள். பெயர்களைத் தூவிச் செல்வதல்ல அவர் பாணி. நின்று , நிதானித்து , அந்தப் பொருளின் சாராம்சத்தையே பிழிந்து தந்து விடுகிறார். உதாரணமாக இதைப் பாருங்கள்:

Next part update soon