சுஜாதா என்ற கலாச்சார சக்தி

 

“ Ionesco வின் Rhinoceros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் Incongurity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்! ”

இப்படி ஒரே ஒரு பத்தியில் அயனஸ்கோவைப் பற்றி நம் வாழ்நாள் முழுவதுமே மறக்க முடியாத படிச் செய்து விடுகிறார் சுஜாதா. ஆனால் அதே சமயம் யாரையும் புனிதப்படுத்துவதில்லை. இதே அயனஸ்கோவை வேறோர் இடத்தில் யுனெஸ்கோ என்று கிண்டல் செய்கிறார். (அதைப் படித்த போது எனக்கு காப்ரேரா இன்ஃபாந்த்தே Three Traped Tigers நாவலில் Shitspeare என்று எழுதியது ஞாபகம் வந்தது.)

மேலும் சில எழுத்தாளர்களைப் பற்றி எழுபதுகளிலேயே மிக அருமையான அறிமுகங்களைச் செய்கிறார் சுஜாதா. எஸ்.தியோடர் பாஸ்கரன் பற்றி 1976- இல் எழுதுகிறார். கி.ராஜநாராயணன் , ஞானக்கூத்தன் போன்றவர்களைப் பற்றி அவர் அப்போது 35 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருப்பதைப் போல் இன்று வரை கூட யாரும் எழுதியதில்லை-மிகப்பெரும் விமர்சகர்கள் என்று கருதப்படுகிறவர்கள் உட்பட. ஆனால் இலக்கியத்துக்குப் புறம்பான காரணங்களால் ஞானக் கூத்தனைப் பிடிக்காமல் போன அவரது இலக்கிய சகாக்களால் அவர் மோசமான முறையில் தாக்கப்பட்டபோது சுஜாதா ஞானக் கூத்தனின் சார்பாக எழுதுகிறார். அதே போல் நகுலனைப் பற்றி அவரை சிலாகிக்கும் என்னைப் போன்ற ஒரு சிலரே எழுதியிருக்கின்றனர். நகுலனின் சமகாலத்தவரான பல பேர் நகுலன் என்ற எழுத்தாளரே இல்லாதது போல் மௌனம் சாத்திருக்கின்றனர். ஆனால் , 41 ஆண்டுகளுக்கு முன்பே- 1967 இல்- நகுலனின் நிழல்கள் நாவலைப் பற்றி மிகவும் பிரமிப்புடன் எழுதியிருக்கிறார் சுஜாதா. நகுலனைத் தான் புதிதாகக் கண்டு பிடித்தாகவே எழுதுகிறார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல. கமல்ஹாசனைப் பற்றி சுஜாதா 1976 இல் இப்படி எழுதுகிறார்: “ உரக்கப் பேசும் , உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக , கற்பனையுடன் , நம்பும்படி நடிக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவின் உதயத்தை எதிர்பார்க்கிறேன். இப்போது கமலின் வயது 23!”

வாக்குப் போடும் மின் எந்திரத்தை சுஜாதா கண்டு பிடித்ததாக பலரும் சிலாகிக்கின்றனர். இதுபோல் பல்லாயிரம் சாதனங்களை பல்லாயிரம் பேர் தினந்தோறும் கண்டு பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கணிப்பொறி என்ற கண்டு பிடிப்பை விட உசத்தியான கண்டு பிடிப்பு வேறேதும் இருக்க முடியுமா என்ன ? ஆனால் சுஜாதா மனித நாகரீகத்தை மேலும் செழுமையாக்கக் கூடிய கலாச்சாரம் என்ற பிரதேசத்தில் நுழைந்து-உலக அளவிலேயே அதிகக் கண்டு பிடிப்புகள் நிகழாத ஒரு வெட்ட வெளி அது ; அதுவும் தமிழகம் என்ற பகுதியில் இந்தத் தேடலில் ஈடுபடுபவனுக்குச் சாதகமான சூழலோ சந்தர்ப்பமோ எதுவுமே கிடையாது-நூற்றுக்கணக்கான கண்டு பிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தவர் சுஜாதா. 50 ஆண்டுக்காலம் தொடர்ந்தது அந்தத் தேடலும் கண்டு பிடிப்புகளும்.

ஒரே ஒரு பத்தியில் , ஒரு சில வாக்கியங்களில் , சமயங்களில் ஒரே ஒரு வார்த்தையில் கூட தன்னுடைய கண்டு பிடிப்பை நமக்கு உணர்த்தி விடுகிறார் சுஜாதா. கலாப்ரியாவின் பெயரைக் குறிப்பிடும் போது அடைப்புக் குறிக்குள் ‘ சசி ’ என்று எழுதுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரனின் ‘ காலமும் 5 குழந்தைகளும் ’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது தமிழின் ஓர் அற்புதம் என்று நினைத்தேன். அதனாலேயே அசோகமித்திரன் தொடர்ந்து இனவாத வெறுப்பை உண்டு பண்ணும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும் அது பற்றிப் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர் காலமும் 5 குழந்தைகளும் போலவே பல அற்புதங்களை சிருஷ்டித்தவர். இப்போது சுஜாதாவின் கடைசிப் பக்கங்களை ஒரு சேரப் படிக்கும்போது இதை அவர் 1976 இலேயே எழுதியிருப்பது தெரிகிறது. இதோ சுஜாதா:

“ காலமும் 5 குழந்தைகளும் சிறுகுதைத் தொகுதியில் இருக்கும் வழி , கடன் , புலிக்கலைஞன் போன்ற அற்புதங்களை அசோகமித்திரன் ஒரே வருஷத்தில் எழுதி இருக்கிறார். பிரமிக்கிறேன். ”

* * *

பின் நவீனத்துவத்தின் முக்கியமான பண்பு பகடி. சுஜாதாவின் கேலியும் , கிண்டலும் , எள்ளலும் , பகடியும் கலந்த நடை தமிழில் மிகவும் பிரசித்தமானது. ஆனால் பல எழுத்தாளர்களுக்கு முற்றிலும் அசாத்தியமானதாக இருக்கும் அந்தப் பண்பு சுஜாதாவிடம். பக்கத்திற்குப் பக்கம் விரவிக் கிடக்கிறது. அவரது அத்தனை எழுத்தையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம் என்றாலும் 1976 இல் அவர் எழுதிய ஒரே ஒரு பத்தியை இங்கு தருகிறேன்:

“ ஆர்.ஜி.பதி கம்பெனி பதிப்பித்துள்ள ரூ. 3.50 விலையுள்ள மாயாஜால மர்மங்கள் என்கிற நான்கு பாகங்கள் அடங்கிய புத்தகத்தில் யாவரும் பிரமிக்கத்தக்க பல ஜாலங்கள் , பல சித்துக்கள் , விளையாடும் மை வகைகள் , சிங்கி வித்தை , சொக்குப் பொடி சூக்ஷி அஷ்ட கர்ம கருமை , முனிவர்கள் , வாராகி , ஜாலாக்காள் , குட்டிச்சாத்தான் , யக்ஷணி , அனுமான் , மாடன் , பகவதி , இருளி , காட்டேரி வசியங்களும் கோகர்ண கஜகர்ண இந்திர மகேந்திர ஜாலங்களும் , குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் விபூதி பிடித்தல் , வேப்பிலை அடித்தல் , பேய் பிசாசுகளை ஓட்டுதல் , பில்லி சூனியங்களை அகற்றல் , சதிபதிகள் பிரியாதிருத்தல் , ஈடு மருந்தை முறித்தல் , பாம்பு , தேள் , நாய் , பூனை , எலிக்கடி விஷங்களை ஒழித்தல் , ஜாலாக்களின் ஜெகஜ்ஜால வித்தைகள் , முள் மீது படுத்தல் , நெருப்பைக் கையில் அள்ளுதல் , மிதித்தல் , சட்டி ஏந்துதல் , மடியில் கட்டுதல் , ஜலத்தின் மீது படுத்தல் , உட்காருதல் , வயிற்றில் ஈட்டி பாய்ச்சுதல் போன்ற எண்ணற்றவைகளுடன் எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆட்டு மந்தையை மாட்டு மந்தையாக்குதல் வரை விவரங்கள் இதில் அடங்கியுள்ளது.

விலாசம் 4 வெங்கட்ராமய்யர் தெரு சென்னை- 1. 1976 ல் எல்லாரும் வைத்திருக்க வேண்டிய புஸ்தகம். ”

மேற்கண்ட பத்தியின் கடைசி வாக்கியத்தில் தான் சுஜாதா ஆகாசத்துக்குப் பறந்து விடுகிறார்.

* * *

29.2.08 அன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ள ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையிலுள்ள சுஜாதாவின் குடியிருப்பில் ஒரு கண்ணாடிப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. கனிமொழி , ரவிக்குமார் , நான் மூவரும் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறோம். அப்போது ரவிக்குமார் இதே சூழ்நிலையை வைத்து சுஜாதா எழுதியிருக்கும் ‘ பெட்டி ’ என்ற சிறுகதை பற்றிக் குறிப்பிடுகிறார். எதிர் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மரணச் சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த வாத்தியாரின் சமஸ்கிருத உச்சரிப்பின் துல்லியத்தைப் பற்றி சுஜாதா பாராட்டி எழுதியிருப்பார் என்று தன்தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அது உண்மைதான். மரண வீட்டில் கூட ஒரு விசேஷமான தன்மையைக் கண்டு பிடித்து எழுதிவிடக் கூடியவர் தான் சுஜாதா காரணம் , அவரது உள் மனதில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை உட்கார்ந்து கொண்டிருந்தான்.

சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வேறு சில நண்பர்களை நோக்கி நகர்ந்தேன். ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். என்ன என்று கேட்ட போது “ நடமாடும் வயகரா வருகிறது என்றேன் ” என்றார். “ அடடா , நடமாடிக் கொண்டிருந்த சீனியர் வயகரா இங்கே படுத்துக் கிடக்கும்போது நான் எம்மாத்திரம் ?” என்றேன் பதிலுக்கு. அந்த வார்த்தை சுஜாதாவின் இளமைத் துள்ளலுக்கு ஒரு குறியீடு. பின் வரும் பத்தியைப் படியுங்கள்:

“ ராட்சச வினியோகமாகும் நம் பத்திரிகைகளில் நான் ரசித்துப் படிப்பது விளம்பரங்களை. அழகில்லாதவர்களை அழகாக்கி டென்னிஸ் கோர்ட் மார்பைப் பதினைந்து நாட்களில் பீறிப் பிதுங்க வைக்க Money Back காரண்டி வழங்கும் இந்த விளம்பரக்காரர்களின் வார்த்தைகளில் நாம் இருப்பது செயற்கை சாதனங்களின் சொர்க்கத்தில். வாலிய வயோதிக அன்பர்களே என்று திடுக்கிட வைத்து அழைக்கும் இழந்த சக்தி லேகிய விளம்பரங்களை நம் நாடெங்கும் நான் பலப்பல பாஷைகளில் பார்த்திருக்கிறேன். இந்த இழந்த சக்தி நம் தேசிய குணங்களில் ஒன்றென்று தெரிந்தும் டில்லியில் ஏஜி ஆபீஸ் வாசலில் மத்யானத்தில் கூட்டம் கூட்டி சாண்டே கா தேல் ( Sande ka Tel ) விற்பவன் (உடும்புத் தைலம் என்று நினைக்கிறேன்) அதை உபயோகிப்பவர்களுக்கு-எதிரே எலக்ட்ரிக் கம்பத்தைக் காட்டி- அது போல் நிற்கும் என்று சத்தியம் செய்கிறான். பத்திரிகைகளிலும் எத்தனை பழனி லேகியங்களும் மஸ்தானா நைட் பில்ஸ்களும் பார்க்கிறேன். இல்வாழ்க்கையில் இணையில்லா வெற்றி தந்து தேக புஸ்டியை (ஆம்! புஸ்டி) ஊக்குவித்து புஜபல பராக்கிரமத்தை உண்டாக்கப் பெரிதும் உதவும் இந்த ஒரிஜினல் சித்த வைத்தியத் தயாரிப்பில்தான் நம் வாழ்க்கையின் மறுமலர்ச்சி இருக்கிறதாம். ”

நான் சிறிது காலம் எஸ்பஞோல் (ஸ்பானிஷ்) வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது என் வகுப்புத் தோழி ஒருத்தி என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தாள். நேநி என்ற அவளுடைய பெயருக்கும் , சுத்த ஸ்ரீரங்கத்துத் தோற்றத்துக்கும் பொருத்தமே இல்லாதிருந்தது. மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் தமிழில் பேசினாள். ஒருநாள் அவளிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில்: தமிழில் பேசினால் ‘ கள் ’ விகுதி போட்டுப் பேச வேண்டியிருக்குமாம். ஆனால் என்னுடன் அப்படிப் பேச முடியாதாம். நீ , வா , போ என்று ஒருமையில் பேசினால் மற்றவர்களுக்கு ‘ எப்படியோ ’ தெரியுமாம். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசுகிறாளாம். அவளுடைய முழுப்பெயர்:நப்பின்னை.

நப்பின்னை எப்படி என்னைப் பற்றிச் சொன்னாளோ , அதே மாதிரியாகத்தான் நானும் சுஜாதாவைப் பார்த்தேன். சமயங்களில் ‘ நமக்கு எழுதவே இடம் வைக்காமல் எல்லாவற்றையும் இந்த மனிதரே எழுதித் தொலைத்து விடுவார் போலிருக்கிறதே! ’ என்று கூட அச்சப்பட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்கதை சில்வியா. அந்தக் கதையைப் படித்து மிரண்டு போனேன். காரணம் , நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த ‘ ராஸ லீலா ’ நாவலின் இரண்டாவது பகுதியை அது மிகவும் ஒத்திருந்தது. நான் என்னுடைய நாவலில் ஸில்வியா ப்ளாத்தின் எந்தக் கவிதை வரிகளை மேற்கோள் காட்டியிருந்தேனோ அதே வரிகளை அவரும் மேற்கோளாக வைத்திருந்தார். ஒரு 20 வயதுப் பெண்ணுக்கும் அவளுடைய தந்தையைப் போன்று மதிக்கத் தக்க வயதுள்ள ஒரு ஆடவனுக்கும் இடையிலான ஃப்ராய்டிஸ முடிச்சுக்களைக் கொண்ட உறவுதான் என் நாவலின் அடிச்சரடு. ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கைதான் அதன் ஆதாரம். சுஜாதாவின் ஸில்வியாவும் இதே கதைதான். நல்ல வேளையாக அவர் அந்தக் கதையை குறுநாவலாக முடித்து விட்டதால் நான் தப்பினேன்.

இப்படி , அடுத்த தலைமுறை எழுத்தாளர்களையும் தன் எழுத்தினால் கலவரப்படுத்திக் கொண்டிருந்ததால் தான் ‘ தலைமுறை இடைவெளி ’ யைக் கடந்த ஒருவராக அவரைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.

* * *

சுஜாதாவுக்கு இரங்கல் செலுத்த வந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் “ சுஜாதாவுக்கு வாசிப்பில் மிகத் தீவிரமான ஆர்வம் ( Passion ) இருந்தது. அப்படிப்பட்ட ஒருவரால்தான் கடைசி வரைக்கும் அதே தீவிரத்துடன் எழுதவும் முடியும் ” என்றார்.

சுஜாதா குறித்த மிகச்சரியான அவதானிப்பு என்று இதைச் சொல்லலாம் சுஜாதா. கடைசி வரை படித்து கொண்டிருந்தார். உயிர்மையில் வெளிவந்த என்னுடைய அரசியல் கட்டுரைகளைப் படித்து விட்டு “ சாருவை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள் ” என்று கூறியிருக்கிறார். மேலும் , உயிர்மையில் நான் எழுதிக் கொண்டிருந்த சினிமா கலைஞர்களைப் பற்றிய கட்டுரையை மிக விரும்பிப் படித்திருக்கிறார். இது பற்றிப் பலரிடமும் சொல்லி வந்திருக்கிறார்.

இதே போல் சுஜாதாவிடமிருந்த மற்றொரு விசேஷமான குணம் , அவருடைய வாசிப்பில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கும் அவருக்கும் உள்ள உறவு அந்த எழுத்தாளரின் படைப்பை அணுகுவதில் குறுக்கீடு செய்ய விடமாட்டார். உதாரணமாக , கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்: பிராமண சங்கத்தின் பரிசை அவர் ஏற்றுக் கொண்டபோதும் , முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போது திருவரங்கத்தில் 5000 வைணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சுஜாதா எழுதிய போதும் , பாய்ஸ் படத்திற்கான அவரது வசனங்களுக்காகவும் மூன்று முறை. ஆனால் சுஜாதா இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தியதில்லை. இது தமிழ் எழுத்தாளர்களிடையே மிகவும் அரிதான ஒரு பண்பு.

* * *

சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும் வரவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகம் ஒரு நன்றி கெட்ட உலகம். பல விதமான மனநோய்க் கூறுகளைக் கொண்ட உலகம். ஒருவேளை சுஜாதா பட்டினி கிடந்து இறந்திருந்தால் எல்லோரும் வந்திருப்பார்கள். ஆனால் அவரோ ஒரு Celebrity . லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டவர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களுரில் கமல்ஹாசனுடன் ஒரு உணவு விடுதியில் அமர்ந்திருந்த போது ‘ முப்பது பேர் சுற்றி நின்று எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சாப்பிடவும் முடியவில்லை ; பேசவும் முடியவில்லை ’ என்று எழுதியவர். இலக்கிய உலகத்திற்கு இது போதாதா ? தமிழ் இலக்கிய உலகம் என்பது ஓர் இருண்ட பகுதி. இங்கே சுஜாதா போன்ற வெளிச்சங்களுக்கே இடம் கிடையாது. இங்கே யாரும் அயல் இலக்கியத்தைப் படிக்க வேண்டாம்(கூடாது) ; உள்ளுர் சமாச்சாரங்களையும் படிக்க வேண்டாம் (கூடாது) ; 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை 60 பக்க சைஸில் ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டால் போதும் ; ‘ சுவரில் விரலை ( nail ) அடித்தான் ’ என்பது போன்ற மொழி பெயர்ப்புகளைப் படித்து ஞான விருத்தி செய்து கொள்ளலாம் ; எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய பெயர் 100 சக எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரிந்திருக்கக் கூடாது. இந்த வரைமுறைகள் எதிலுமே அகப்படாத சுஜாதாவை இவர்கள் கண்டு கொள்வார்களா ?

இது ஒரு பக்கம் இருக்க , சுஜாதாவுக்கு இதுவரை எந்தவொரு இலக்கியப் பரிசுமே வழங்கப்படவில்லை என்பது மற்றொரு தகவல். (ஒருவேளை , அதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் பிராமண சங்கப் பரிசை நேரில் சென்று வாங்கிக் கொண்டாரோ ?) ஆனால் சுஜாதாவுக்கு சிறிதும் சம்பந்தமேயில்லாத சினிமா உலகம் அவரை கௌரவித்தது. என்னுடைய ஆசானின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி எனக்கு நடிகர் பார்த்திபன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்!

சில திரைப்படங்களுக்கு சுஜாதா வசனம் எழுதினார் என்பதால் அவரை ஒரு சினிமாக்காரர் என்று நான் சொல்ல மாட்டேன். 50 ஆண்டுகளாக எழுத்துலகில் அவர் எழுதிக் குவித்தது கணக்கில் அடங்காதது. அதோடு ஒப்பிட்டால் அவருடைய சினிமா வசனம் வெறும் தூசு. ஆனாலும் சினிமாக்காரர்கள் நன்றி பாராட்டினார்கள்.

எத்தனையோ பெரிய மதிப்பீடுகளைப் பற்றியும் , கலாச்சார விழுமியங்களைப் பற்றியும் கதையளந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் நன்றி என்ற அடிப்படையான மனிதப் பண்பு பற்றி சினிமாக்காரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலை!

மேலும் , சுஜாதாவுக்கு மரியாதை செய்த சினிமாத்துறை நண்பர்கள் யாரும் சுஜாதாவை ஏதோ ஒரு சீனியர் வசனகர்த்தா என்று அடையாளப்படுத்தவில்லை. அவர்களுக்கும் கல்லூரிப் பருவத்திலிருந்தே சுஜாதா பள்ளியிலும் , கல்லூரியிலும் கிடைக்காத ஒரு மாற்றுக் கல்வியையும் , மாற்றுக் கலாச்சாரத்தையும் , மாற்று சினிமாவையும் கற்பித்திருக்கிறார். மேற்கத்திய சினிமா பற்றி அவர் எழுதிய விமர்சனங்கள் அனைத்தையும் படித்தால் ஒரு அற்புதமான சினிமா கலைஞன் உருவாக முடியும். இதன் காரணமாகவே அந்தச் சினிமா நண்பர்கள் அனைவரும் அவருக்கு நன்றி பாராட்டினார்கள்.

* * *

எவ்வளவு எழுதினாலும் சுஜாதா பற்றி இன்னும் எதுவுமே எழுதவில்லை என்ற உணர்வே மேலோங்குகிறது. சில இலக்கியவாதிகள் சுஜாதாவின் எந்தெந்த சிறுகதைகள் , நாவல்கள் இலக்கியமாகத் தேறும் ; எதெது தேறாது என்று மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட அசட்டுத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் , சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் கிடையாது. 50 ஆண்டுகளாக தமிழ் மொழியின் பல போக்குகளை நிர்ணயித்து வந்தவர் ; தமிழ் மொழியை உயிர்ப்பூட்டிப் புதுப்பித்தவர் ; 50 ஆண்டுகளாக தமிழ்ச் சூழலின் கலாச்சார சக்தியாக விளங்கியவர். யோசித்துப் பார்க்கும் போது பாரதிக்குப் பிறகான தமிழ் வாழ்வின் இத்தனை அம்சங்களிலும் இவ்வளவு வீரியமாக பாதிப்பு செலுத்திய கலைஞன் சுஜாதாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே தோன்றுகிறது.

 

* * *

முற்றும்