கடல் படம் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்காகவே எனக்குப் பிடித்திருந்தது. அதோடு அதில் ஜெயமோகனின் ஊடுருவல் காரணமாக சிலபல சிலம்ப வேலைகள் நடந்திருந்தன. அதுவும் பிடித்திருந்தது. (அதனால்தான் படம் ஓடவில்லை என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டனர். அது பற்றி எனக்குத் தெரியாது.) ஆனால் கடலை வெகுஜனம் ரசிக்கவில்லை என்பது வெளிப்படை.
மணி ரத்னம் பல ஆண்டுகளாகவே நல்ல படம் எடுக்கவில்லை. குருதான் அவர் எடுத்த கடைசி நல்ல படம் என்று நினைக்கிறேன். ஆய்த எழுத்து, ராவணன் எல்லாம் படு பயங்கரம். மற்றபடி பொதுவாக அவருடைய பொழுதுபோக்குப் படங்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும். (உ-ம். திருடா திருடா, தளபதி) மணியின் படம் வணிகரீதியாக வெற்றியோ தோல்வியோ, தனக்கென ஒரு தனிப்பட்ட திரை மொழியை உருவாக்கிக் கொண்ட ஒன்றிரண்டு தமிழ் இயக்குனர்களில் அவர் ஒருவர். மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் அங்கீகாரமும் மதிப்பும் பெற்றவர். அதனாலேயே அவர் படம் வெளிவந்த உடனேயே பார்க்க விரும்புவேன்.
பார்ப்பதற்கு முன் என் நண்பர் ராஜேஷிடம் படம் எப்படி என்று கேட்டேன். சராசரி, உங்களுக்குப் பிடிக்காது என்றார். அராத்துவைக் கேட்டேன். சே சே, படமா அது என்றார். கணேஷ் அன்புவைக் கேட்டேன். ம்ஹூம், தேறாது என்று உதட்டைப் பிதுக்கினார். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹரன் பிரஸன்னா தனக்கும் பிடிக்கவில்லை என்று மெஸேஜ் அனுப்பினார். (இவர்கள் அனைவரும் இளைஞர்கள்.) நான் பிரஸன்னாவுக்கு இடைவேளையில் அனுப்பிய மெஸேஜில் இப்படி எழுதியிருந்தேன்: ”படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் நான் எழுதியது போல் உணர்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் என் வாழ்வில் நடந்திருக்கிறது.”
அதிதீவிரமாக ஒரு பெண்ணைக் காதலித்து இருக்காதவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியாது என்று தோன்றுகிறது. படம் பிடிக்காதவர்கள் இப்படிச் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள். அல்லது நீங்களும் பதிலுக்கு என்னைத் திட்டலாம். ராஜேஷ் கேட்கிறார், ’காதலித்திருந்தால்தான் இந்தப் படம் பிடிக்கும்’ என்ற ஒரு மூடநம்பிக்கை பொதுவில் உலவுகிறது. Seven படத்தைப் பார்க்கவேண்டும் என்றால் சைக்கோத்தனமாகக் கொலைகள் செய்திருக்கவேண்டுமா? கொடுமை. ராஜேஷின் எதிர்க் கேள்வி சுவாரசியமானதே என்றாலும் நான் திரும்பவும் சொல்கிறேன். அதி தீவிரமாக காதலின் வலியை உணர்ந்திராதவர்களால் இந்தப் படத்தின் எளிமையான ஆனால் மிக வலுவான தருணங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.
பல உதாரணங்கள் சொல்லலாம். ஆதியும் தாராவும் திருமணம் மூடநம்பிக்கை என்று நம்புகின்றனர். ஆனாலும் சேர்ந்து வாழ்கின்றனர். மண வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் எல்லா உணர்வுகளும் அசட்டு உணர்ச்சிகள் என்று நம்புகின்றனர். எனவே ஒருவர் மீது ஒருவர் அதிகமாக உரிமை பாராட்டலாகாது. அழக் கூடாது. சண்டை போடக் கூடாது. இத்யாதி. ஆதி அமெரிக்கா போகிறான். தாரா படிப்பதற்காக பாரிஸ் போகிறாள். அதனால் என்ன? பிரிந்தால் பிரிய வேண்டியதுதான். ஒருவரின் கனவை இன்னொருவருக்காக விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. தாரா பாரிஸ் போகாமல் ஆதியைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போவது கட்டுப்பெட்டித்தனம். ஆகவே ஆகாது. இதுதான் அவர்களின் ஆரம்ப கால உடன்படிக்கை. ஆனால் ஆறே மாதத்தில் அந்த எண்ணம் தவிடுபொடியாகிறது. மோட்டார்சைக்கிளில் ஆதியின் பின்னே வரும் தாரா அழுகிறாள். ”ஏன் இப்படி அழுகிறாய்? நாம் அழக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறோம்” என்கிறான் ஆதி.
“எனக்குக் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது. அதனால் உனக்கென்ன? நீ நேராக பாதையைப் பார்த்து ஓட்டு.” இது தாரா.
“ஏய்… நேராப் பார்த்து ஓட்டினாலும் உன் அழுகை எனக்குக் கேட்கிறதே?”
இன்னொரு இடம். இதுவும் ஆதி அமெரிக்கா செல்வதற்கு முந்தின தினம். ”அங்கே கணபதி அங்கிள் முன்னால் வந்து என்னைத் திட்டாதே” என்று ஆதியிடம் சொல்கிறாள் தாரா.
”நான் எப்போதாவது உன்னைத் திட்டியிருக்கிறேனா?”
“திட்டினேன்னு நான் சொன்னேனா? திட்டாதேன்னுதான் சொல்றேன்.”
“அதுக்காக ஏன் இப்படிக் கோபப்படுகிறாய் நீ?”
“சரி, நான் வாயையே திறக்கவில்லை, வா.”
இப்படியே படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வசனம் மட்டுமே இந்தப் படத்தை ஒரு கலை அனுபவம் தரக் கூடியதாக மேலே தூக்கிச் செல்கிறது. மணியின் தனித்துவமான ஒற்றை வரி வசனமாக இருந்தாலும் அது நமக்குள் ஏற்படுத்தும் அழுத்தம் அதீதமாக இருந்தது. தாரா ஆதியிடம் அப்புறம்?, அப்புறம்? என்று கேட்கும் இடம். இந்த இடத்தையெல்லாம் ரசிக்க வேண்டுமானால் உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் காதல் இருக்க வேண்டும். (மன்னியுங்கள்!)
காவியத் தலைவனில் ஹார்மோனியத்தைப் பயன்படுத்தாததால் ஏ.ஆர். ரஹ்மான் மீது எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. அந்த வருத்தம் இந்தப் படத்தில் தீர்ந்து விட்டது. ரஹ்மான் மணி ரத்னத்துக்காக மட்டும் விசேஷமாக இசை அமைக்கிறார் என்று தெரிகிறது. வசனத்தைப் போலவே இந்தப் படத்தை மறக்க முடியாத ஒரு கலை அனுபவமாக மாற்றும் இன்னொரு அம்சம், இசை. ஆதியும் தாராவும் சந்திக்கும் தருணங்களில் வரும் மிக வித்தியாசமான ஒரு இசை படம் நெடுகிலும் தொடர்கிறது. மெண்ட்டல் மனதில், காரா ஆட்டக்காரா, சினாமிகா, தீரா உலா (தீரா உலா என்ற வரிகளைப் பாடும் தெய்வீகக் குரல் யாருடையது?), மலர்கள் கேட்டேன் ஆகிய பாடல்கள் சமீபத்திய தமிழ் சினிமாவில் ஒரு இசை விழா என்றே சொல்லலாம். (அரபிப் பாடலும் அந்தக் காட்சியும் படத்தோடு கொஞ்சமும் ஒட்டவில்லை.)
இந்தப் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கும், வைரமுத்துவுக்கும், மணி ரத்னத்துக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் மூவருமே அவரவர் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள்.
படத்தில் எனக்குப் பிடிக்காத அம்சங்கள் நாயகன், நாயகி. நாயகியின் கைகள் தொடை சைஸுக்குக் காண்பிக்கப்பட்டிருப்பது ஏதாவது கேமரா ட்ரிக் ஷாட்டா என்று தெரியவில்லை. கடல் படத்திலும் இப்படித்தான் ஒரு ’வெயிட்’டான மங்கை நடித்திருந்தார். மணி ரத்னத்துக்கு மென் உடம்பாக ஹீரோயின் கிடைக்க மாட்டார்களோ? ஆனால் வசனம், இசை, ஒளிப்பதிவு, கதை எல்லாம் இந்தச் சிறிய குறைகளைக் காணாமல் அடித்து விட்டன.
தமிழில் இப்படி ஒரு கலாபூர்வமான சினிமாவைப் பார்த்து நீண்ட நாள் ஆகி விட்டது. ஸைக்கோ பாத்திரங்கள், ஆபாச நகைச்சுவை, வெட்டுக் குத்து ரத்தக்களறி, வக்கிரம், க்ரூப் டான்ஸ் போன்ற எதுவும் இல்லாமல் எளிமையான கதையை அருமையாகப் படமாக்கியிருக்கிறார் மணி ரத்னம். இன்னும் இரண்டு மூன்று முறை பார்க்கலாம் போலிருக்கிறது. மணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
Comments are closed.