நான் ஒரு எழுத்தாளனாக ஆகியிருக்காவிட்டால் உலகப் புகழ் பெற்ற சமையல்காரனாக இருந்திருப்பேன். இப்போதும் என் மதம் உணவுதான். ஃபுல்காவும் கருப்பு சன்னா (கொண்டக்கடலை) கறியும் கொடுக்கவில்லை என்று ஒரு சிநேகிதியின் மேல் பல காலமாக கொலைவெறியில் இருக்கிறேன். கடையில் ஃபுல்கா கிடைக்கும். ஆனால் கருப்பு சன்னா கறி கிடைப்பதில்லை. வெளுத்த சன்னா கறிதான் கிடைக்கிறது. அதுவும் வீட்டில் செய்வது போல் இல்லை. கைலாஷ் பர்பத்திலேயே இதுதான் லட்சணம். நானே செய்து சாப்பிடலாம். அதற்கு நேரமோ பொறுமையோ இல்லை. அவந்திகா, “நான் உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைத்துத் தருகிறேன், ஃபுல்கா, சப்பாத்தி பிஸினஸ் மட்டும் வேண்டாம்” என்று சொல்லி விட்டாள். எனக்குத் தெரிந்து ஸ்ரீ ஒரு உலக மகா சமையல்காரி (வேறு மாதிரி மரியாதையாக எப்படிச் சொல்வது?) ஆனால் பெங்களூர் போனால் பப்புக்குப் போகவே நேரம் கிடைப்பதில்லை. ஃபுல்காவும் சன்னாவும் சமைக்கச் சொல்லி சாப்பிட ஏது நேரம்?
என்னை ஒரு Gastronome என்று சொல்லிக் கொள்ளலாம். உணவின் மீது அதீத விருப்பம் உள்ளவர்.
பெரூவில் கிடைக்கும் Ceviche என்ற உணவுக்காகவே என்னுடைய தென்னமெரிக்கப் பயணத்தில் பெரூவைச் சேர்த்துக்கொண்டேன். இன்னொரு காரணம், அப்போதுதான் மரியோ பர்கஸ் யோசாவின் நெய்பர்ஹூட் நாவலைப் படித்திருந்தேன். அதில் முக்கியமாக இடம் பெறும் இடம் Miraflores. அங்கேதான் தங்கினேன். அங்கே உள்ள உலகின் ஆக மோசமான சேரி பற்றி நெய்பர்ஹூட் நாவலில் வருகிறது. அங்கே போனால் உயிரோடு திரும்ப முடியாது என்றார்கள். அங்கேயும் போனேன்.
செவிச்சே?
மீராஃப்ளோரெஸில் செவிச்சேவுக்கு இரண்டு உணவகங்கள் உள்ளன. ஒன்று, La Mar. இது செவிச்சேவுக்கு உலகப் புகழ் பெற்ற உணவகம். ஆனால் Punto Azulதான் லா மாரை விடவும் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருந்தார் என் நண்பர் ஒருவர். அதனால் புந்த்தோ அஸூல் சென்றோம். கூடவே ரவி என்ற நண்பரும் வந்திருந்தார்.
செவிச்சே என்பது நம் ஜப்பானிய சுஷி மாதிரி. சுஷி போல் சஷீமி என்ற உணவு வகையும் உண்டு. சுஷிக்கும் சஷீமிக்கும் உள்ள வித்தியாசம், சுஷியில் பச்சை மீனோடு கொஞ்சமாக சோறு இருக்கும், வேறு காய்கறியும் இருக்கும், முட்டை இருக்கும். ஆனால் சஷீமியில் வெறும் பச்சை மீன் தான். செவிச்சேயில் பச்சை மீன், எலுமிச்சை (சாத்துக்குடி சைஸில் இருக்கும்), வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், அவகாதோ மற்றும் சில காய்வகைகள் இருக்கும். உலகின் மிகச் சிறந்த உணவு என்றால் எனக்கு செவிச்சேதான். இரண்டாம் இடம் சஷீமிக்கு. இட்லியெல்லாம் முதல் பத்தில் இருக்கும். முதலாவது, இரண்டாவதில் இடம் இல்லை.
செவிச்சேவோடு பெரூவின் ப்பிஸ்கோ மதுவை அருந்தியபடி சாப்பிட வேண்டும். பிஸ்கோ பெரூவில் மட்டும்தான் கிடைக்கும். சீலேயில் கூட கிடைக்கவில்லை. அது எனக்கு இன்னமும் ஆச்சரியமான, நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
இத்தனையும் எதற்கு எழுதினேன் என்றால், ஆறாம் தேதி மும்பை செல்கிறேன். அந்தேரி மேற்கில் தங்குவேன். ஏழாம் தேதியும் மும்பைதான். எட்டாம் தேதி லலித் ஓட்டலில் மாலை ஆறு மணிக்கு க்ராஸ்வேர்ட் விழா. முதல் பரிசு யாருக்கு என்பது விழாவில் தெரியும். லலித் ஓட்டலும் அந்தேரியில்தான் இருக்கிறது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். அந்தேரி கிழக்கிலோ மேற்கிலோ நல்ல மராத்தி உணவு எங்கே கிடைக்கும்? சரவண பவன், சங்கீதா மாதிரி சொல்லக் கூடாது. வீட்டு உணவு போல் இருக்க வேண்டும். சென்னையில் வீட்டு உணவு எங்கே கிடைக்கும்? வீட்டில் கூட வீட்டு உணவு கிடைக்காது. சென்னையில் கிடைப்பது சாணி. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உள்ளன. சாலி கிராமம் ப்ரஸாத் லேப் அருகில் ஒரு மெஸ் சொல்கிறார்கள். அதன் சரியான முகவரி கேட்டு பிச்சைக்காரனுக்கு எழுதியிருக்கிறேன். சென்னையில் என்ன பிரச்சினை என்றால், எங்கேயுமே வீட்டுச் சாப்பாடு போல் இல்லை. ஈரோடு அம்மன் மெஸ்ஸை ஈரோட்டில் பெரிதாகச் சொல்வார்கள். இங்கே அது சென்னைக்கு வந்ததும் சென்னை மாதிரி ஆகி விட்டது.
அந்தேரி பகுதியில் அல்லது அக்கம்பக்கத்தில் நல்ல மராத்தி உணவு எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள். உணவு என்றால் என்னைப் பொருத்தவரை அசைவ உணவுதான். சைவம் அல்ல. (ஆனால் சைவ உணவுக்கும் நான் எதிரி அல்ல. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் உணவுக்கும், அய்யங்கார் உணவுக்கும் நான் அடிமை!) சைவப் பிள்ளைமார் வீட்டு இட்லி மிளகாய்ப் பொடிக்கு ஈடு இணை இல்லை.
charu.nivedita.india@gmail.com