இதுவரை இப்படி நின்றதில்லை
எப்போதும்
என் உடலை
பொய்மேகங்களால்
மறைத்துக்கொண்டே
இருந்திருக்கிறேன்
சமயங்களில் மேகம் கலைந்து
என் மேனியின் சில துளிகள்
தெரிந்ததுண்டு
அதைக் கண்டு
பரிகசித்தோர்,
அவமதித்தோர்
பலருண்டு
இப்போது
மோகினிக்குட்டீ
உன் முன்னே
மேகம் கலைத்து
நிர்வாணம் கொண்டு
நிற்கின்றேன்
ஏன் இதுவரை
பொய்மேகம் அணிந்தாய்
என்கிறாய்
தெரியவில்லையே தாயே
யோசி
யோசி
யோசி
’என் நிர்வாணம் கண்டு
அவர்கள் பார்வை
பறிபோகுமென்று
அஞ்சினேன்.’
’அப்புறம் என்னிடம் மட்டும்
ஏன் மேகம் கலைத்தாய்?’
‘நீயும் நிர்வாணமாய் நிற்கிறாய்
மேலும்
மேகங்கள் அலுத்து விட்டன
மேகங்களைச் சுமந்து சுமந்து
நானென் பெலத்தை இழந்தேன்
நோய்மையில் வீழ்ந்தேன்
மோகினிக்குட்டீ
நீ உனது
நிர்வாணத்தினால்
என்னை மீட்டாய்
மேகங்களைக் களைந்து
என் பெலம் மீளப் பெற்றேன்
தாயே
உன் திருவடி
தொழுகின்றேன்.