கேள்வி பதில் (5)

கேள்வி: விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

(அன்புள்ள சாரு, மேலே உள்ள கேள்விக்கு விரிவாக பதில் தேவை.  இந்தக் கேள்வி நாம் எதை அந்தரங்கம் என்று சொல்கிறோமோ அதன் அடிப்படையில் கேட்கப்பட்டது அல்ல.  என் பெயரையோ ஊரையோ தெரிவிக்க வேண்டாம்.)

பதில்: சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சுவடி ஜோதிடரை சந்தித்தேன்.  நம் பகுத்தறிவுவாதிகள் இதையெல்லாம் படுமூடத்தனம் என்று சொல்வார்கள்.  நானும் இதை மூடத்தனம் என்றே நம்ப விரும்புகிறேன்.  ஆனால் எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.  அந்த ஆளுக்கு 25 வயதுக்குள் தான் இருக்கும்.  அந்தச் சந்திப்பை விரிவாக ஒரு நாவலில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

”உங்கள் மனைவி பெயர் ஐந்து எழுத்தா?”

”ஆம்.”

”மா என்று முடியுமா?”

”ஆம்.”

”கங்கம்மா?”

”இல்லை…நல்…”

”நிறுத்துங்கள்.  நிறுத்துங்கள்.  ஆம் இல்லை என்று மட்டுமே சொல்ல வேண்டும்.”

”சரி.”

”உங்கள் மனைவி பெயரைச் சொல்லி விட்டீர்கள்.  பெற்றோரின் பெயரிலிருந்து ஆரம்பிப்போம்.  ஆம் இல்லை என்று மட்டுமே சொல்ல வேண்டும்.”

”சரி.”

”தகப்பனார் பெயர் மி என்று முடியுமா?”

”ஆம்.”

”நி என்று துவங்குமா?”

”இல்லை.”

”சி என்று துவங்குமா?”

”இல்லை.”

”கி என்று துவங்குமா?”

”ஆம்.”

”கிருஷ்ணசாமி?”

”ஆம்.”

இப்படியே பெற்றோர் பெயர், மனைவி பெயர், மகன் பெயர், எனக்கு எத்தனை சகோதரர்கள், சகோதரிகள் என்பது வரை சரியாக வந்தது.  ஒரு தம்பி செத்து விட்டான் என்பதையும் சொல்லி விட்டார்.  ஆனால் இன்னமும் எனக்கான ஓலைக்கட்டு வரவில்லை.  அடுத்து ஒரு கேள்வி.

”உங்களுக்கு இரண்டு மகன், இரண்டு மகள்?”

”இல்லை.”

”அப்படியானால் இந்தக் கட்டும் இல்லை.  பொறுங்கள்.  வருகிறேன்.  கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம்.”

”இல்லை.  என் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் பெயர் விபரம் எல்லாம் சொன்னீர்கள்.  இந்தக் குழந்தைகள் விஷயத்தைப் பெரிது பண்ண வேண்டாம்.  அப்பிடி இப்பிடி எதாச்சும் ஆகியிருக்கும்.”

”அப்படின்னா?”

”இந்த அபார்ஷன் கிபார்ஷன்…”

”இல்லை ஐயா.  நூற்றுக்கு நூறு விபரங்கள் பொருந்தினால்தான் உங்கள் ஓலை என்று ஆகும்.  பொறுங்கள்.”

போய் விட்டு பத்து நிமிடம் கழித்து இன்னொரு ஓலைக்கட்டோடு வந்தார்.

எல்லாம் பொருந்தி விட்டது.  அதற்கு மேல் கேள்வி கேட்கவில்லை.  அவர் பாட்டுக்குப் பொழிய ஆரம்பித்து விட்டார்.  நீங்கள் எழுத்தாளர்.  உங்களைச் சுற்றி ஆட்கள் எப்போதுமே இருப்பார்கள்.  ஆனால் உங்களுடைய பெருமை உங்களுடைய ஆயுளுக்குப் பிறகுதான் தெரியும். என் மகன் என் வளர்ப்பு மகன் என்பதைக் கூட சொல்லி விட்டார்.  இதையெல்லாம் ஒருவர் என் ப்ளாகைப் படித்தாலே சொல்லி விடலாம் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்வர்.  ஆனால் மேலே ஒரு விபரம் சொன்னார்.   இப்போது உங்கள் மகளுக்குக் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று கூட உங்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்காது.

இது போன்ற பல உள்தகவல்களை, எனக்கு மட்டுமே தெரிந்த சில தகவல்களைச் சொன்னார்.  கடைசியில் நீங்கள் என்னதான் பாடுபட்டாலும், என்னதான் உழைத்தாலும் இன்னொருவரின் உதவி இருந்தால்தான் நீங்கள் வெளியுலகத்துக்குத் தெரிய வருவீர்கள்.  (ஓ, மொழிபெயர்ப்பாளரைப் பற்றிச் சொல்கிறார் போல என்று நினைத்துக் கொண்டேன்.)  இவ்வளவுக்கும் அவர் என்னிடம் எடுத்தது வெறும் வலது கட்டை விரல் ரேகை மட்டும்தான்.

சரி, இந்த நாடி ஜோதிடம் பொய், பித்தலாட்டம் என்றாலும் நம் பெருமாள் முருகனுக்கு நடந்ததைப் பார்த்த பின் எனக்கு விதியின் மீது மிகுந்த நம்பிக்கை வந்து விட்டது.  சராசரி எழுத்தாளர் என்று கூட சொல்ல முடியாத அளவுக்குக் கீழே உள்ள ஒருவர் ஒரே நாளில் உலகப் புகழ் அடைகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?  அந்த நாவல் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறதே?  சோ எல்லாம் தலையங்கம் எழுதினார்.  தில்லியிலிருந்து கருத்து கேட்டார்கள்.  பாரிஸிலிருந்து வந்த ஒரு பெண் அதை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து விட்டுத்தான் மறுவேலை என்று ஒற்றைக்காலில் நின்றார்.  அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமாம்.  மேற்கொண்டு பேசினால் ரசாபாசம் ஆகி விடும் என்று மிரட்டி அனுப்பினேன்.

சினிமா துறையை எடுத்துக் கொண்டால் அது முழுக்க முழுக்க விதியின் கையிலேயே சிக்குண்டு கிடப்பதைக் காணலாம்.  சிவகுமாரின் இரண்டு புதல்வர்கள் பெரிய அளவில் முன்னுக்கு வந்து விட, பாரதிராஜாவின் புதல்வர் வேலையில்லாமல் இருக்கிறார்.  திறமை இருந்தும் விஜயகுமாரின் புதல்வர் அதிகம் பிரபலமாகாமல் இருக்கிறார்.  நேற்று வந்த ஒரு புதுமுகம் சிம்ஹா இன்று தேசிய விருது பெற்று விட்டார்.  ராமராஜன் ஹீரோ ஆனது விதிவசம் இல்லையா?  இயக்குனர் ஜீவா இளம் வயதில் இறந்ததும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.  மேலும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று இளங்கோ அடிகளும், ஊழில் பெருவலி யாவுள என்று வள்ளுவரும் சொன்னதைத் தவறு என்று என்னால் நினைக்க முடியவில்லை.

 

 

 

 

Comments are closed.