இஸ்தாம்பூல் – அய்யனார் விஸ்வநாத்

முகநூலில் அய்யனார் விஸ்வநாத் எழுதிய பதிவை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

விஷம் என்று கையால் மைப்பேனாவால் எழுதி ஒட்டப்பட்ட சிறிய கண்ணாடி குடுவையை தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்போம். அதில் துருக்கி விஷம் அல்லது இஸ்தாம்பூல் விஷம் என எழுதி ஒட்டப்பட்டிருந்தால் அதை உடனே எடுத்துக் குடித்துவிடும் மனநிலைதான் எனக்கு இன்றும் இருக்கிறது. இந்தக் கொரானா காலத்திலுமா என்றால், ஆம். உயிரோடு இருக்க வேண்டிய வேட்கையை இன்னொரு இன்னொரு அல்லது இன்னுமொரு முறை இஸ்தாம்பூல் போக வேண்டிய ஆசைதான் தருகிறது. மிகைப்படுத்துகிறேன் என எண்ண வேண்டாம். இப்போது மனம் இப்படித்தான் இருக்கிறது.

கடந்த டிசம்பரில் இஸ்தாம்பூல் பயணம் போவதற்கு முன்பு சாருவின் நிலவு தேயாத தேசத்தையும் தன்பினாரின் நிச்சலனத்தையும் வாசிக்க எண்ணியிருந்தேன். இரண்டுமே நடக்கவில்லை. சரி பயணத்தில் வாசிப்போம் அல்லது இஸ்தாம்பூல் நகரத்திலிருந்து அந்நகரம் பற்றிய நூல்களை வாசிப்போம் என முடிவு செய்து இரண்டையும் கொண்டு போய் இருந்தேன். ஆனால் அந்நகரம் என்னை முழுமையாய் வாரி எடுத்துக் கொண்டுவிட்டதால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. பயணம் முடிந்து திரும்பி வந்த பின்னரே இரண்டையும் வாசித்து இரண்டாவது பயணத்துக்கான திட்டங்களை மனதளவில் செய்து கொண்டேன்.

இந்தப் பேரழிவுக் காலகட்டத்தில் மனமும் இயல்பும் திருகி இருக்கும் நாட்களில் நான் திரும்பத் திரும்ப துருக்கிய நிலம் சார்ந்த நூல்களையும் படங்களையும் மட்டுமே பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் முதலிடம் தருகிறேன். நூரி பில்கே சிலானின் க்ளைமேட்ஸ் படம் பார்க்காமல் இருந்தது. அதை டொரோண்டில் ஒரு வாரம் காத்திருந்து தரவிறக்கிப் பார்த்தேன். இந்த மனநிலையை இயற்கை உணர்ந்ததோ என்னவோ க்ளைமேட்ஸ் முழுக்க இஸ்தாம்பூலில் பதிவு செய்யப்பட்ட படம். அதே உணர்வுக் கொந்தளிப்புகளோடு பார்த்து முடித்தேன்.

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஆண்டலோயோ எனக்கு எப்போதைக்குமான பிடித்த படம். காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் முதல் காட்சியிலிருந்தே மனம் அலைவுற ஆரம்பிக்கும். கடைசி வரை அப்படியே அந்த இருட்டின் கதகதப்பிலேயே மனமும் நினைவும் படத்தோடு ஒன்றி இருக்கும். விண்டர் ஸ்லீப்பின் கேப்படோசியா நகரமும் வெண்மையும் எனக்குத் தந்த துயரத்தை நேரில் பார்க்க வாய்க்கவில்லை. போலவே ஓரான் பாமுக்கின் கார்ஸ் நகரத்தையும் அந்தப் பனிச்சூழலோடுப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. எனவேதான் இரண்டாம் மூன்றாம் பயணங்கள் தேவைப்படுகின்றன. நூரியின் த்ரீ மன்கிஸ் படத்தையும், த வைல்ட் பியர் ட்ரீ படத்தையும் திரும்பப் பார்த்தேன். என் தந்தையின் உக்கிர நினைவுகளோடு வைல்ட் பியர் ட்ரீயின் இறுதிக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது.

சென்ற வாரத்தில் நெட்பிலிக்சில் ஓட்டோமேன் தொடரையும் பார்த்து முடித்தேன். இந்தத் தொடர் முன்நிறுத்தும் பாஸ்போரஸ் நீரோட்டமும், அதை ஒட்டிய மாளிகையும், கொம்பு வளைவும், கலாட்டா கோபுரமும், ஹையாசோஃபியாவும் மகத்தான திளைப்பைத் தந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வரலாற்றுச் சின்னங்களோடு என்னையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஓட்டமேன் பேரரசின் வரலாற்று அருங்காட்சியகத்தில் பார்த்திருந்த இறைத் தூதர் முகம்மதுவின் பற்களும், மோசஸின் கைத்தடியும், சவுதி காவாவின் சாவியும் இப்போதும் சிலிர்ப்பைத் தருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக ஹிஸ்திக் லால் தெரு எனும் அற்புதம். மனித ஜீவிதத்தின் அத்தனைக் கொண்டாட்டங்களும் ஒன்று சேர்ந்த ஒரு இடமென்றால் அது இந்த ஐந்து கிலோ மீட்டர் நீளம் கொண்ட தெருதான். இந்த கொரானோ காலம் அந்தத் தெருவையும் பாதித்திருக்குமோ என எண்ணும்போதுதான் மனம் பதபதைக்கிறது. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் மனிதக் கூட்டங்களாலும் பாடல்களாலும் இசையாலும் நறுமணங்களாலும் நல் உணவுகளாலும் நிரம்பி இருக்கும் அந்த ஹிஸ்திக் லால் வீதி இன்று எப்படி இருக்கும் என்பதை யோசிக்கவே பயமாக இருக்கிறது.

இஸ்தாம்பூல் பயணம் போவதற்கு முன்பாக ஓரான்பாமுக்கை ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வைத்துப் பார்த்தேன். அவரது உரையைக் கேட்டேன். ஏன் எழுத வேண்டும் என்கிற அவரது பிரமாதமான உரையை சாருவின் அருகில் அமர்ந்து கேட்டேன். இந்த அபூர்வமான இசைத்தன்மை எனக்கு வாய்த்தது. ஒரு நகரத்தின் முதன்மையான கலைஞனும் அந்நகரத்தை கொண்டாடும் கலைஞனும் என் அருகருகே ஒரே நேரத்தில் இருப்பது என்பது அபூர்வமான தருணமில்லையா? அது எனக்கு வாய்த்தது.

போலவே இஸ்தாம்பூலின் வரலாறு, அதன் கலை இலக்கியம், அந்நகரப் புவியியலின் இண்டு இடுக்கு மூலை சந்து எல்லாம் அறிந்த நண்பன் சுதாகரும், வா நரகத்துக்குப் போகலாம் என அழைத்தால் கண்ணை மூடிக் கொண்டு உடன் வரும் நண்பன் தேவாவும் இணைந்து கொண்டதால் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும் ஒரு பயணம் சாத்தியமானது.

இதில் ஒரே ஒரு பிரச்சினைதான். இஸ்தாம்பூல் சார்ந்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட எந்த ஒரு நூலை வாசித்தாலும் அதில் இருக்கும் பிழைகள் முதன்மையாய் கண்முன் வந்து நிற்கின்றன/ நிற்கும். இதுவரை முழிபெயர்க்கப்பட்ட பல நூல்கள் அபத்தமானவை. பிழையானவை. அது இன்னதென்று சுட்டிக் காட்டிக் கெக்கலித்துக் கொள்ளும் கீழ் மனநிலை எனக்கு கிடையாது. அல்லது அம்மனநிலையை கடந்து விட்டேன். இனிமேல் இஸ்தாம்பூல் சார்ந்த படைப்புகளை யார் மொழிபெயர்க்க முனைந்தாலும் அதன் முதன் பிரதியை வாசித்து பிழைத் திருத்தம் சொல்ல தயாராக இருக்கிறோம்/ றேன். இதன் அர்த்தம் நான் மேட்டிமை மிகுந்தவன் என்பது அல்ல. துருக்கி சார்ந்த அல்லது இஸ்தாம்பூல் சார்ந்த ஒரு படைப்பு பிழையோடு வரக்கூடாது என்கிற ஆதங்கம் மட்டும்தான் இதில் நிரம்பி இருக்கிறது.

என் வரவேற்பரையில் தினமும் காலையில் எழுந்து பார்க்கும்படி மூன்று புகைப்படங்களை ஒட்டி வைத்திருக்கிறேன். ஒன்று கலாட்டா டவர், இரண்டு இஸ்திக் லால் தெருவின் வரலாற்றுப் புகழ் பெற்ற ட்ராம் மூன்றாவதாக டர்க்ஸின் மீசை. ஆம் நான் ஒரு திருவண்ணாமலைக்காரன் போலவே துருக்கியன். திருவண்ணாமலை நகரம் எப்படி ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதில்லையோ போலவே துருக்கியும் குர்துக்களுக்கு எதிரானது இல்லை. நான் நிலம் சார்ந்தவன். இந்தக் கட்சிகளும் அரசுகளும் அவர்களின் அரசியல்களும் என்னோடு இயைந்தது இல்லை. இவர்கள் என்னைச் சுரண்டி வாழ்பவர்கள். நான் அசலான நிலம். நான் இந்த அசலான நிலத்தின் ஊழியன்.