முகமூடிகளின் பள்ளத்தாக்கு

தருண் தேஜ்பால் எழுதிய Valley of Masks என்ற அதியற்புதமான நாவல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் அநேகமாக இன்னும் ஒரு மாத காலத்தில் உங்கள் கைகளில் கிடைக்கும். அதன் இறுதி கட்ட fine tuning வேலையில் இருக்கிறேன். 2020-ஆம் ஆண்டின் பெரும்பகுதி இந்த மொழிபெயர்ப்பு வேலைகளிலேயே போய் விட்டது. சந்தர்ப்பவசமாகவே இந்தப் பணியில் நான் கலந்து கொள்ள நேர்ந்தது. ஆனால் இறங்கிய பிறகு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பது என் மதம். அதனால் 2020 முழு ஆண்டே இதில்தான் போனது. இதில் நான் அசோகா நாவலையே எழுதி முடித்திருப்பேன். ஆனாலும் பரவாயில்லை. இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை. ஏதோ இந்த மொழிபெயர்ப்பில் நானும் ஈடுபட்டேன் என்பதால் உயர்வாகச் சொல்லவில்லை. என் வாசிப்பு சற்று அதிகம் என்றே கர்வத்துடன் சொல்லிக் கொள்ளலாம். ஒருமுறை தில்லியில் நடந்த ஒரு சர்வதேசக் கருத்தரங்குக்குச் சென்றிருந்த போது ஐரோப்பாவிலிருந்து பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். அப்போது அங்கே வர வேண்டிய ஒருத்தர் ஹங்கேரியின் László Krasznahorkai. லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் பற்றி நான் அந்தக் கருத்தரங்குக்கு முன்பே பலமுறை எழுதியிருந்தேன். குறிப்பாக அவருடைய நாவல் Satantango பற்றியும், Bela Tarr இயக்கிய Turin Horse படத்தைப் பற்றிப் பேசும் போதும் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் பற்றி எழுதினேன். பேலா தார் படத்தின் கதை வசனம் க்ராஸ்னஹோர்க்காய் எழுதியதுதான்.

இதெல்லாம் அங்கே வந்திருந்த ஐரோப்பிய எழுத்தாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யார்ரா இவன் என்று பார்த்தார்கள். ஏனென்றால், அவர்களில் பலருக்கு க்ராஸ்னஹோர்க்காய் என்ற பெயரே தெரிந்திருக்கவில்லை. ஜெர்மன்காரருக்கு ஹங்கேரிய எழுத்தாளரைத் தெரியாது. ஜெர்மன் எழுத்தாளரை ஹங்கேரியருக்குத் தெரியாது. இப்படி.

எதற்குச் சொன்னேன் என்றால், அந்த அளவு வாசித்திருக்கிறேன். அதில் ஒரு பெருமையும் இல்லை. இன்று 35 வயது ஆன ஒரு தமிழ் எழுத்தாளனே நான் படித்ததில் பாதிக்கு மேல் படித்திருக்கிறான். தமிழ் எழுத்தாளனின் சாபம் அது. அல்லது வரம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை விசாலமான வாசிப்பின் பலத்தில் சொல்கிறேன், Valley of Masks மாதிரி ஒரு நாவலை நான் படித்ததில்லை. உங்களில் பலரும் அப்படித்தான் சொல்வார்கள் என்று தெரியும்.

வைரத்தைச் செதுக்குவது போல் செதுக்கியிருக்கிறேன். இந்த நாவலுக்கு உழைத்தது போல் ராஸ லீலா, எக்ஸைல் இரண்டுக்கும் கூட உழைத்தது இல்லை. இன்னும் ஒரு மாதத்தில் வரும் என்று நினைக்கிறேன். இன்று அதன் ஒரு அத்தியாயத்தைத் திருத்திக் கொண்டிருக்கும் போது இந்தப் பத்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றிய எண்ணத்தை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

***

அவள் கேட்கிறாள், அதற்காக அவர் ஏன் என்னை தண்டிக்க வேண்டும்? ஏற்கனவே கால் சரியில்லாமல் நான் தண்டிருக்கப்பட்டிருக்கவில்லையா? 

கழிவுநீர் இன்ஸ்பெக்டர் வெடிக்கிறான். தன் கிளாஸை மேஜையின் மீது விசிறி அடித்து விட்டுக் குதித்து எழுகிறான். இது போன்ற சமயங்களில்தான் அவன் தீக்குச்சியைப்போன்ற உருவம் உள்ளவன் என்பது மறந்து போகிறது. இவனைப் போல் இருபத்து நான்கு பேரை என்னால் துளி வியர்வை சிந்தாமல் வீழ்த்த முடியும். அவனது கோபம்தான் அவனை பிரம்மாண்டமானவனாக மாற்றுகிறது: சரியில்லாத கால்! சரியில்லாத கால் என்பது துர்நாற்றம் அல்ல. அந்தக் காலுடன் உன்னால் வாழ முடியும். சாப்பிட முடியும். தூங்க முடியும்.  மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார முடியும். விளங்காத அந்தக் கால் உன்னைக் குமையச் செய்யலாம்.  ஆனால் அது உனக்குப் பரிதாபத்தையும், அனுதாபத்தையும் கூடக் கொண்டுவரும். ஒரு இன்ஸ்பெக்டருடனான திருமணத்தையும் கூட! துர்நாற்றம் உனக்கு வெறும் அருவருப்பையும் நிராகரிப்பையும்தான் கொண்டுவரும். ஒரு துர்நாற்றம்தான் இன்னொரு துர்நாற்றத்துடன் உட்காரும்; ஒரு துர்நாற்றம்தான் இன்னொரு துர்நாற்றத்துடன் சாப்பிடும்; ஒரு துர்நாற்றம்தான் இன்னொரு துர்நாற்றத்தை மணந்து கொள்ளும். சொல்கிறேன் கேள், இப்போதும் அவர்களோடு இருக்கும் போதெல்லாம் என் குமட்டலைச் சமாளிக்கத் திணறிக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால்தான் என்னுடைய சீருடையை நான் துவைப்பதே இல்லை. அதன் துர்நாற்றத்தை மறக்கக்கூடாது என்றுதான் அதை என் அலுவலகத்தில் வைத்திருக்கிறேன். சொல்கிறேன் கேள், நான்தான் அவர்களை துர்நாற்றம் பிடித்தவர்களாக ஆக்கியவன். ஒற்றைக் காலுடன் இருக்கும் என் மனைவிதான் அவர்களை துர்நாற்றம் பிடித்தவர்களாக ஆக்கியவள். நீயும் என் மாமியாரும்தான் அவர்களை துர்நாற்றம் பிடித்தவர்களாக ஆக்கியவர்கள். நாம் எல்லோரும், நீங்கள் செல்லுமிடமெல்லாம் காணும் மக்கள் எல்லோரும் – நாம் எல்லோரும்தான் அவர்களை துர்நாற்றம் பிடித்தவர்களாக ஆக்கி இருக்கிறோம். நாம் அவர்களுக்குச் செய்தது இன்னதென்று நாம் உணரத்தான் வேண்டும். அந்த துர்நாற்றம் நம் நாசிகளைத் தாக்கி, அந்தக் குமட்டல் நம் தொண்டையில் எழும்வரையில், நாம் செய்தது என்ன என்பதை நாம் உணரவே மாட்டோம்.

***

திடீரென்று கழிவுநீர் இன்ஸ்பெக்டர் பாடத் தொடங்குகிறான். கடவுளர் செய்யும் அநியாயங்களின் பக்கபலத்துடன் மனிதர்கள் செய்யும் அநியாயங்களைப் பற்றிய ஒரு மெதுவான சோகப் பாடலை கண்களைப் பாதி மூடியபடி பாடுகிறான். நான் என் நாற்காலியில் சாய்ந்து கொள்கிறேன். பாடி முடித்ததும் தன் கிளாஸை எடுத்து, அதை வெளிச்சம் பட உயர்த்திப் பிடித்துச் சொல்கிறான், எங்களுக்குப் பாடல்கள் இல்லையெனில் நாங்கள் எல்லோரும் கொலைகாரர்கள் ஆகியிருப்போம்.