விளக்கம்: லஃபீஸ் ஷாஹீத்

இறைதூதரின் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் முக்கியமான ஒருவர் அலி இப்னு அபூதாலிப் (ரழி). நபிகளாரின் சிறிய தந்தையாரின் மகனான அலி (ரழி) யிற்குத் தான் நபிகள் நாயகம் தன்னுடைய மகளான பாத்திமா (ரழி) யை திருமணம் செய்து கொடுத்து இருந்தார். நபிகளார் இறந்த பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் நான்காவது கலீஃபாவாக (ஆட்சியாளர்) பொறுப்பேற்றவர் அலி தான். மிகச்சிறந்த அறிஞரான அலி ஆத்மீகத்திலும் ஆழ்ந்து போனவர். இஸ்லாமிய உலகின் புகழ் பெற்ற சூஃபி வழியமைப்புகளின் நிறுவனர்களில் கிட்டத்தட்ட அனைவருமே அலியுடன் பரம்பரை ரீதியாக தொடர்பு கொண்டவர்கள். நக்ஷபந்தியா தரீக்காவை தவிர (இதன் வழித் தொடர் இன்னொரு புகழ்பெற்ற நபித் தோழரான அபூபக்கருடன் இணைகிறது). ஆன்மீக அளவில் இஸ்லாமிய உலகின் அனைத்து மறைஞான மரபுகளினதும் தந்தையாக கருதப்படும் அலி இப்னு அபூதாலிபின் புகழ்பெற்ற ஒரு Quote :’மனிதன் உயிருடன் இருக்கும் பொழுது உறக்கத்தில் இருக்கிறான். அவன் மரணிக்கும் பொழுது தான் விழித்துக் கொள்கிறான்’இஸ்லாமிய மரபில் இவ்வுலக வாழ்வு ஒரு சோதனை களம். மரணத்தின் பிறகான வாழ்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் களம். சோதனைக் களமான இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுடன் ஒப்பிடுகையில் போலியான ஒன்று. இவ்வுலக வாழ்வில் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் மரணத்துடன் முடிவடைந்து விடக் கூடிய ஒன்று. உண்மையான, நிரந்தரமான இன்பமும் துன்பமும் மறுவுலக வாழ்க்கையில் எமக்கு கிடைக்கும். ஆனால் இதனை மனிதன் யதார்த்தமாக மரணத்தின் பிறகு தான் உணர்ந்து கொள்வான். அப்போது தான் அவனுக்கு உண்மையான ஞானம் பிறக்கும்.’கல்லறையில் உறங்கும் மனிதன் போல இரு’ என்பதன் அர்த்தம் இவ்வுலகின் புறக் கண் பார்வையை தாண்டிய அகக் கண் ஊடாக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து கொண்டு கர்வத்தை அழித்து இறைவனிடம் சரணாகதி அடைந்து விடு என்பதுவே. இஸ்லாமிய உலக கண்ணோட்டத்தினை பிரதிபலிக்கும் நாயக வாக்கியம் இது.!