ஏழாம் தேதி புத்தக வெளியீடு

வரும் ஏழாம் தேதி நந்தனம் புத்தக விழாவில் உள்ள பிரதான அரங்கத்தில் மனுஷ்ய புத்திரனின் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் வெளியாகின்றன. அதில் மனுஷின் கவிதைகள் பற்றிப் பேசுகிறேன். ஏற்கனவே அவருடைய கவிதைகள் பற்றி நான் பேசிய மிக முக்கியமான உரை காணாமல் போய் விட்டது. பதிவு செய்த பேச்சு யாரிடமும் இல்லை. இந்த முறை அப்படி நடக்காமல் கபிலன் அதைப் பதிவு செய்து விடுவார் என நம்புகிறேன். ஆனால் இந்த முறை இரண்டு நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசுகிறார்கள். அவர்கள் முன்னே பேச்சில் நான் ஒன்றுமே இல்லை. ஒருவர் தென்றல் வீசுவது போல் பேசுவார். இன்னொருவர் பேச்சில் மேதமை பொங்கும். அவர்களின் முன்னே நான் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருந்தாலும் காமராஜர் பேச்சை ரசிக்கவும் ஆட்கள் இருந்தார்கள் இல்லையா? அப்படி என் மனதில் பட்டதைப் பேசுவேன்.

நட்சத்திரப் பேச்சாளருக்காகப் பெரும் கூட்டம் இருக்கும். ஆனால் எனக்கென்று ஒரு ராசி இருக்கிறது. எவனாவது முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஏய் செக்ஸ் ரைட்டர் என்று குரல் கொடுத்து என் லயத்தைக் கெடுத்து விடுவான். சில முறை மேடையில் இருப்பவர்களே அப்படி செய்து இருக்கிறார்கள். இந்த முறை எனக்கு நிச்சயமாக பௌன்ஸர்கள் தேவை. வினித், உங்களால் வர முடியுமா? இன்னும் ஒருவர் இருந்தால் நல்லது.

பௌன்ஸராக இருக்க உடல் வலு தேவையில்லை. ஏனென்றால் – நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் – ஒரு ஆள் என்னை போதையில் கொல்ல முயன்ற போது என்னைக் காப்பாற்றியது மனுஷ்ய புத்திரன். நம்பாவிட்டால் மனுஷிடம் கேளுங்கள். ஒரு ஆகிருதியான ஆள் என் கழுத்தில் அமர்ந்து விட்டான். என்னால் மூச்சு விட முடியவில்லை. மனுஷ்தான் பாய்ந்து வந்து விழுந்து அவனைப் புரட்டித் தள்ளினார். ஏதோ டுபான்ஸ் கதை மாதிரி இருக்கும். சத்தியமாக இப்படியேதான் நடந்தது. எனவே மனோபலம்தான் தேவை. உடல் பலம் தேவையில்லை.