writer of pop colors…

சினிமா நண்பர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பை விட எழுத்தே எனக்கு எளிது என்று சொன்னாலும் அவர்களே எழுத்தாளராகவும் இருந்து விடுவதால் நடிப்புதான் வேண்டும் என்கிறார்கள். எனக்கு நடிக்கத் தெரியாதே என்று சொன்னால் அது எங்கள் கவலை என்கிறார்கள்.

ஒரு எழுபது வயது எழுத்தாளனின் மூன்று நாள்களை முழுநீளத் திரைப்படமாக எடுக்கலாம் என்பது என் நெடுநாள் திட்டம். பொழுதுபோக்கு சினிமா அல்ல. படத்தில் வசனமே இருக்காது. வேறு நடிகர்களும் இல்லை. நான்தான் இயக்கலாம் என்று திட்டம். ராம்ஜியிடம் கதையைச் சொன்னேன். பல நாட்கள் அவர் என்னைத் தொடர்பு கொள்வதையே நிறுத்தி விட்டார். காயத்ரியிடம் சொன்னேன். ஒரு வார காலம் கொலைவெறியோடு அலைந்தாள்.

சீனி மட்டும்தான் பாராட்டினார். நான் இயக்கப் போவதால் இயக்கத்துக்கு அவர் உதவிகள் செய்வதாகச் சொன்னார். ஆவணப்படம் போல் இருபத்தைந்து லட்சம் எல்லாம் ஆகாது. ஐந்து லட்சத்தில் முடித்து விடலாம். செலவு அதிகம் இல்லாத படம். படத்தில் இசையும் ஒளிப்பதிவும்தான் மிக முக்கியமான இடம் என்பதால் அது இரண்டும் உலகத் தரமாக இருக்க வேண்டும். நடிப்பதற்கு சோமசுந்தரத்தைக் கேட்கலாம் என்று சீனியிடம் சொன்னேன். இல்லை, நீங்களே நடியுங்கள் என்கிறார். இப்படி நான் விலகி விலகிப் போனாலும் நடிப்பு என்னைத் துரத்தி வருகிறது.

சமீபத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. வேறு யாராக இருந்தாலும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் சம்பளம் ஒத்துவரவில்லை. அவர்கள் சொன்னதை விட நான் கேட்ட தொகை இரண்டரை மடங்கு அதிகம். காரணம், ஒன்றே ஒன்றுதான். நான் அணிந்திருக்கும் ஷூ. இந்தப் படத்தில் நான் அணிந்திருக்கும் ஷூவின் விலை இருபதாயிரம்.

புத்தக விழாவில் பல நண்பர்கள் என்னுடைய காஸ்ட்யூம் டிஸைனர் யார் என்று கேட்டார்கள். நான்தான்.

விஷ்ணுபுரம் விழாவுக்கு இந்தக் கோலத்தில்தான் சென்றிருந்தேன். புகைப்படம் எடுத்தது காணொலிப் புரட்சிக்காரன் கபிலன். டிஸைன் செய்தது என் பிரியத்துக்குரிய ஓவியர் சந்தோஷ் நாராயணன்.

சந்தோஷ் நாராயணன்