புத்தக விழா

ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாவுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டாட்ட மனநிலையும் அதிகரிக்கிறது.  மதுரையிலிருந்தும் இன்னும் பல வெளியூர்களிலிருந்தும் என்னுடைய ஒரு கையெழுத்துக்காக இந்தப் புத்தக விழாவுக்காக வருகிறார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் புத்தகங்களை ஒளித்து ஒளித்துப் படித்த சமூகம் இப்போது என் எழுத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. என் நூல்களை வாங்க  இப்போது யாரும் தனியாக வருவதில்லை.  குடும்பத்தோடு வந்து ஸீரோ டிகிரி நாவலை வாங்கிச் செல்கிறார்கள்.  காலம் மாறி விட்டது.

அவந்திகாவைப் போல் யாரும் கருவாட்டுக் குழம்பு செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இன்று ஒரு வாசகர் ஒரு டப்பா நிறைய கருவாட்டுக் குழம்பு கொண்டு வந்து கொடுத்தார்.  அவநம்பிக்கையுடன்தான் வாங்கி வைத்தேன்.  அவர் பெயர் ரொம்பவும் நல்ல பெயர்.  வழக்கம் போல் மறந்து விட்டேன். 

வீட்டுக்குக் கொண்டு வந்து சாப்பிட்டால் அச்சு அசலாக அவந்திகா செய்தது போலவே இருந்தது.  நெத்திலிக் கருவாடும் கொடுவாக் கருவாடும் போட்ட முதல் தரக் குழம்பு.  கருவாட்டுக் குழம்பு செய்வது சற்று கடினம்தான்.  இதை அந்த நண்பரின் அம்மா செய்தாரா இளம் பெண்கள் செய்தார்களா என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.  அம்மாதான் செய்திருப்பார் என்று தோன்றுகிறது.  நான் கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டு சில மாதங்கள் ஆகியிருக்கும்.  என் பிராமண நண்பர் ஒருவர் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.  ஆனால் அதை அவந்திகா செய்யவில்லை.  அவள் அப்போது ஊரில் இல்லாத்தால் பணிப்பெண்தான் செய்தார்.  அதனால் குழம்பு அவ்வளவு சுவையாக இல்லை.  ஆனால் கருவாடு முதல் தரம்.

குழம்பு பிரமாதமாக இருந்ததால் மீதிக் குழம்பை நாளைக்கு எடுத்து வைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் – குறிப்பாக சென்னையில் – கருவாட்டுக் குழம்பு அழிந்தே போய் விட்டது.  எங்கேயோ வடபழனி ஓட்டலில் கிடைக்கிறது என்று எழுதாதீர்கள்.  எங்கேயோ ஒரு ஓட்டலில் கிடைக்கலாம்.  வாங்கியும் சாப்பிட்டேன்.  பாடாவதியாக இருந்தது.  

இன்றைய கருவாட்டுக் குழம்பையும் அதைக் கொடுத்த நண்பரையும் ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்.  கருவாட்டுக் குழம்பில் பறங்கிக் காய், உருளைக் கிழங்கு, மொச்சைக் கொட்டை, கத்தரிக்காய், முருங்கைக்காய் எல்லாம் போட வேண்டும்.  இன்றைய குழம்பின் இன்னொரு சிறப்பு, கருவாடும் அற்புதமாக இருந்தது என்பதுதான்.  சில சமயம், நீங்கள் உயிரைக் கொடுத்து சமைப்பீர்கள்.  கருவாடு தரங்கெட்டதாக இருக்கும்.  அப்படி இருந்தால் குழம்பு கோய்ந்தா.