திரும்பி விட்டேன்…

இரண்டு வார ஜப்பானியப் பயணம் இனிதே முடிந்து நேற்று (24.10.2024) நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தேன். பொதுவாக என் தோற்றத்தின் காரணமாகவோ என்னவோ கஸ்டம்ஸில் என்னை வாட்டி எடுப்பார்கள். நேற்று அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை.

ஜப்பான் ஒரு சில விஷயங்களில் மலிவாகவும் ஒரு சில விஷயங்களில் நம்ப முடியாத அளவுக்கு செலவு வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இப்போது ஆகியிருக்கும் செலவில் நான் இரண்டு வாரம் சீலே, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருக்க முடியும். சீலேயில் அறை வாடகை இந்தியா மாதிரிதான். ஆனால் ஜப்பானில் மூன்றரை மடங்கு அதிகம். ஒரு நாளைக்குப் பத்தாயிரம் ரூபாய். அதேபோல் உள்நாட்டு ரயில் செலவு நம் ஊரை விட எட்டு ஒன்பது பத்து மடங்கு அதிகமாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. மற்றபடி அத்தியாவசியச் செலவுகளான உணவும் சாக்கேயும் பியரும் படு மலிவு. நம் ஊரை விட மலிவு. நூறு யென் கடை என்று ஒரு கடை உள்ளது. அங்கே ஒரு சப்பாத்து நூறு யென்னுக்கு வாங்கினேன். அது இந்தியாவில் இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். நூறு யென் என்பது ஐம்பது ரூபாய்.

இத்தனை செலவு ஆகும் என்று முன்கூட்டியே தெரியும் என்றாலும், ரொப்பங்கி இரவுகள் நாவலுக்காகத்தான் மீண்டும் ஒருமுறை ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஐந்தே நிமிடம்தான் பேச முடிந்தது. அந்த ஐந்து நிமிடத்தில் ஜப்பான் பற்றி நூறு புத்தகங்கள், ஐம்பது திரைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத ஒரு அடிப்படை விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். இப்படி இந்தப் பயணத்தில் நிறைய கிடைத்தது.

ஆனால் பயணத்தில் ஆர்வமுள்ளவர்கள் செல்லக் கூடிய இடம் அல்ல ஜப்பான். அங்கே நண்பர்கள் இல்லாமல் தனியாகப் பயணிப்பது சற்று கடினம். எந்த இடத்திலுமே ஆங்கிலத்தைக் காண முடியவில்லை. பயண நிறுவனங்களின் மூலம் சென்றால் மொழிப்பிரச்சினை இருக்காது. அவர்களே வழிகாட்டிகளை ஏற்பாடு செய்து விடுவார்கள். தென்னமெரிக்காவில் ஓரளவுக்கு எல்லோருமே ஆங்கிலம் பேசுகிறார்கள். அதற்கு அமெரிக்க நாட்டின் அண்மையும் செல்வமும் காரணமாக இருக்கலாம்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் இல்லாத நாடு ஜப்பான். அதாவது, “யாரும் வராதீர்கள்” என்பது மாதிரியான அறை வாடகை. இருந்தும் ஏன் நான் திரும்பத் திரும்ப ஜப்பான் செல்கிறேன் என்றால், கலாச்சார ரீதியாக ஜப்பானுக்கும் எனக்கும் ஓர் ஆழ்ந்த பிணைப்பு இருக்கிறது. எல்லா முக்கியமான ஜப்பானிய எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறேன். எல்லா முக்கியமான ஜப்பானியத் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். இந்த முறை கூட Yusawa பகுதியில் உள்ள ஒரு ரயில் சுரங்கப் பாதைக்குப் போகலாம் என்று இருந்தேன். அந்த சுரங்கப் பாதை யாசுநாரி கவாபாத்தாவின் ஸ்நோ கண்ட்ரி நாவலில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. கவாபாத்தாவுக்கு அந்த நாவலுக்காகவே நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் இந்த முறை யுசாவாவில் உள்ள ரயில் சுரங்கப்பாதைக்குச் செல்லாததற்குக் காரணம், இப்போது அங்கே பனி விழாது. பனியில் உறைந்திருக்கும்போதுதான் அங்கே செல்ல வேண்டும். அதற்கு ஃபெப்ருவரிதான் நல்லது. இந்த ஃபெப்ருவரியோ அடுத்த ஃபெப்ருவரியோ போகலாம் என்று முடிவெடுத்து விட்டேன். தோக்யோ நகரிலிருந்து அது 180 கி.மீ. காரில் போனால் இரண்டரை மணி நேரம். அதிலும் அந்த சுரங்கத்துக்குப் போக இன்னும் நேரம் ஆகும். காலையில் எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும். மத்தியானமாகப் போகலாம் என்றால் நாலு மணிக்கே நாம் பார்க்க வேண்டிய பகுதிகளை மூடி விடுவார்கள்.

ஹொக்கெய்தோ மாநிலத்துக்கும் சென்றேன். ஆனால் அங்கேயும் பனி விழா நடக்கும் ஃபெப்ருவரியில்தான் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஃபெப்ருவரியில் ஹொக்கெய்தோ அலாஸ்கா மாதிரி இருக்கும். அப்போதுதான் போக வேண்டும்.

பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுவேன்.

இந்த ஜப்பானியப் பயணத்தின் போதும் சென்ற முறை போலவே நண்பர்கள் செந்தில்குமார், கமலக்கண்ணன், முத்துப் பிரகாஷ் என்னை கவனித்துக் கொண்டனர். அவர்கள் எனக்காக செலவு செய்த நேரம், பணச் செலவு போன்றவற்றுக்கு சாதாரணமாக நன்றி சொல்ல முடியாது. அதேபோல் க்யோத்தோ நகரில் கணேஷ், ஒசாகா நகரில் டி.ஜே. வாசுதேவன் ஆகிய நண்பர்களும் உடனிருந்து பிரமாதமான வரவேற்பை அளித்தனர். இவர்களுக்கு எப்படி இந்த நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை. சென்ற முறை செந்தில்குமார் சென்னை வந்த போது அவரை என்னால் ஒரு மணி நேரம் கூட சந்திக்க முடியவில்லை. காரணம், எனக்கு வீட்டில் பரோல் கிடைக்கவில்லை. அதற்கு முதல் நாள் தான் பரோலில் வெளியே சென்றிருந்தேன். என் வீட்டில் தினமும் பரோல் கிடைக்காது. ஆனால் செந்தில்குமாரும் முத்துவும் என்னோடு தினமுமே உடனிருந்தார்கள். நள்ளிரவு முடிந்து அதிகாலை வரை கூட. அதற்காக அவர்கள் இருவரின் குடும்பத்தாருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும்.

புகைப்படங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியிடுவேன்.

இந்தப் பதினைந்து நாள் இடைவெளியில் சந்தா/நன்கொடை வரத்து அறவே நின்று விட்டது. கவனியுங்கள்.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai