முதல் மாடியிலிருந்த
என் நண்பனின் வீடு
மேஜையோ நாற்காலிகளோ
இல்லை
தரையில் அமர்ந்தபடி
காலை பத்து மணியிலிருந்து
வைத்த இடத்தில் வைத்தபடி
எழுதிக்கொண்டிருக்கிறாள்
மோகினிக்குட்டி
தட்டச்சு செய்துகொண்டே
இடையிடையே பேசுகிறாள்
சும்மா இருக்கும்போது
இன்னொன்றில் ஈடுபட இயலாது
என்கிறேன்
மாலை மங்கி இரவு சூழ்கிறது
எட்டு மணி நேரமாக
உன் அருகே
வைத்த இடத்தில் வைத்தபடி
அமர்ந்திருக்கும்
என்னைப் பார்த்து
ஏன் சும்மா இருக்கிறாய்
ஏதாவது பேசு
என்கிறாய்
சும்மா இருக்கும்போது
எப்படிப் பேசுவது என்கிறேன்
நீ ஒரு பித்தன் என்கிறாய்
அடிக்கடி கேட்ட வார்த்தை
அப்போது ஒரு பூனைக்குட்டி
திறந்திருந்த கதவின் வழியே வந்து
என் மடியில் அமர்ந்து கொண்டு
அழுதது
இன்ஸ்டாமார்ட்டில் உணவு வாங்கிக்
கொடுத்தேன்
முடித்து விட்டு வந்து
மோகினிக்குட்டியின் மடியிலமர்ந்து
’வளர்த்தவர்கள் என்னைத் தெருவில்
விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்’
எனச் சொல்லிக் கதறியது…