மதிப்புரை – கருத்து – விமர்சனம் – அவதூறு

தினமணியில் நான் எழுதி வரும் பத்தி பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது.  மழை பொழிவது போல் என் ஞானத்தை மற்றவர்களுக்கு நான் கொடுத்து வருகிறேன்.  அந்த மழையால் யாருக்கு என்ன பயன், அந்த மழை கங்கையில் பாய்கிறதா சாக்கடையில் விழுகிறதா என்பது பற்றி மழைக்கு அக்கறை இல்லை.  எழுத்தாளன் என்றால் பன்றி என நினைக்கும் சிலர் என் தினமணி கட்டுரைகள் பற்றிச் செய்திருக்கும் அவதூறை வாசிக்கும் துர்ப்பாக்கியம் எனக்கு இன்று நேர்ந்தது.

ஒரு வாசகர் கூறுகிறார், பாரிஸ் பற்றி சாரு அவிழ்த்து விடும் பொய்கள் என. சென்னையில் உள்ள எந்த ஆட்டோக்காரரிடம் கேட்டாலும் அசோகமித்திரன் பற்றித் தெரியாது.  அதற்காக அசோகமித்திரன் சென்னையில் வசிக்கவில்லை என்று அர்த்தமா? சில ஆண்டுகளுக்கு முன்பு மைலாப்பூரில் உள்ள ராயர் கஃபே பற்றி எழுதியிருந்தேன்.  உடனே பத்து பேர் என்னை அவதூறு செய்தார்கள்.  சாரு சொல்லும் பொய்களுக்கு அளவே இல்லை.  இதில் என் சக எழுத்தாளன், நண்பன் கூடச் சேர்ந்து கொண்டான்.  அவனும் சேர்ந்தே அவதூறு செய்தான்.  எனக்கு மைலாப்பூர் தெரியும்.  அங்கே இருந்த ராயர் கஃபே இப்போது இல்லை என்று எழுதினான்.  மற்ற மூடர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.  என் நண்பனே அப்படி எழுதியதும் நான் பதில் எழுதினேன்.  நண்பனைக் காயப்படுத்தவும் செய்தேன்.  என் பக்கம் தப்பு இல்லை.  ஒருவரை விமர்சிக்கும் முன் – அதுவும் அவன் சொல்வது பொய் என்று எழுதும் முன் – இப்பேர்ப்பட்ட அபாண்டத்தை வீசும் முன் அவன் சொல்லும் விபரம் சரியா என்று சரி பார்த்து விட்டாவது திட்டலாம்.  அதுவும் இல்லை.  ராயர் கஃபே முன்பு இருந்த இடத்துக்கு எதிர்சாரியில் உள்ள தெருவுக்குப் போய் விட்டது, அவ்வளவுதான் விஷயம்.  முன்பு கச்சேரி ரோட்டில் கச்சேரிக்கு (காவல் நிலையம்) எதிர்ப்புறம் இருந்தது.  இப்போது கச்சேரிக்கு அருகில் உள்ள அருண்டேல் தெருவில் உள்ளது.  ஆனால் மைலாப்பூர்க்காரர்கள் யாரைக் கேட்டாலும் ”நான் தலைமுறை தலைமுறையாக மைலாப்பூர் வாசி.  எங்கள் கொள்ளுத்தாத்தா தான் மைலாப்பூர் கபாலி கோவிலையே கட்டினார்.  நான் சொல்கிறேன், மைலாப்பூரில் ராயர் கஃபே இல்லை.  சாரு பொய் சொல்கிறார்” என்றுதான் சொல்வார்.  காரணம், அறியாமை.  அதேபோல் நீங்கள்தான் பாரிஸையே நிர்மாணித்திருந்தாலும் பாரிஸ் பற்றி நான் சொல்வது எதுவும் தவறாக இருக்காது.  ஏனென்றால், பாரிஸில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுனருக்கோ, மளிகைக் கடை சிப்பந்திக்கோ, ஆஃபீஸ் குமாஸ்தாவுக்கோ நான் பாரிஸ் பற்றிச் சொல்லும் விபரங்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லை.  நான் சொல்லும் விபரங்கள் அனைத்தும் அறிஞர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடியவை.

ஒருமுறை அ. மார்க்ஸ்,  பாரிஸ் பற்றி நீங்கள் சொன்ன ஒரு விபரம் தப்பு என்றார்.  உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டால்  ஒரு ஃப்ரெஞ்ச் பெண்ணின் பெயரைக் கூறினார்.  அந்தப் பெண் அடிக்கடி மைலாப்பூர் வந்து செல்பவர்.  மயிலை தமிழ் பேசுபவர்.  அவரை ஒருமுறை பாரிஸில் பார்த்த போது என்னை அடிக்கும் அளவுக்கு ஆவேசம் பொங்கப் பேசினார்.  குறுக்கே நண்பர் வந்திருக்காவிட்டால் அடித்திருப்பார்.  காரணம், இங்கே மயிலை கபாலி கோவிலில் சிதறு தேங்காய் உடைக்கும் பணி செய்யும் ஒருவருக்குத் தமிழ் இலக்கியம் எந்த அளவுக்குத் தெரிந்திருக்குமோ அந்த அளவுக்கே அவருக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிந்திருந்தது.  என்ன பண்ணித் தொலையட்டும்?

பாரிஸில் உள்ள பஸ்ஸில் திருக்குறளை ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பில் பார்த்தேன் என்று எழுதினேன்.  பச்சைப் பொய்.  நான் ஃப்ரான்ஸில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன், அப்படி நான் பார்த்ததில்லை என்று கன்னாபின்னா என்று என்னைத் திட்டி எழுதினார் ஒரு பெண் எழுத்தாளர்.  பார்க்காவிட்டால் நான் என்ன செய்யட்டும்?  கபாலி கோவிலில் தேங்காய் உடைப்பவருக்கு அந்தக் கோவிலுக்கு எதிரே உள்ள தெருவில் 25 ஆண்டுகளாக அலுவலகம் வைத்திருக்கும், மூங்கில் குருத்து போன்ற அருமையான சிறுகதைகளை எழுதியிருக்கும் எழுத்தாளர் திலீப்குமாரைத் தெரியாதே?   ஒரு கஃபேயில் ஜான் பால் சார்த்தர் அடிக்கடி வந்த கஃபே என்று எழுதி வைத்திருந்தது.  ஆனால் அங்கே போகும் சிதறு தேங்காய்களுக்கு சார்த்தர் என்றால் யார் என்றே தெரியவில்லை என்றால் நானா பொறுப்பு?

ஒரு அன்பர் எழுதுகிறார், நான் அமேரிக்காவில் என் தாத்தா காலத்திலிருந்து வசிக்கிறேன்.  இங்கே அவேகேடோ என்றுதான் சொல்கிறார்கள்.  சாரு சொல்வது உடான்ஸ்.  அவகாதோ தப்பு.  சாரு பொய்யன்.  திரும்பவும் சிதறு தேங்காய் பிரச்சினை.  ஒருவரை அவதூறு செய்யும் முன்னால், யோசியுங்கள்.  நான் அமெரிக்காவுக்குப் போனதில்லை.  அமெரிக்காக்காரன் என்ன சொல்கிறான் என்பது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை.  அமெரிக்காக்காரனோ ஆஃப்ரிக்காக்காரனோ அவகாதோவை எப்படி உச்சரிக்கிறான் என்று நான் எழுதவில்லை.  avocado வை அவகாதோ (அல்லது அவகாடோ) என்று சொல்வதுதான் சரியான உச்சரிப்பு என்று மட்டுமே எழுதினேன்.  அதுகூட அவகாதோ பழத்துக்காக அல்ல.  பழம் எல்லாம் தின்று செரித்து நம் சூத்து வழியே பீயாக வெளிவருவது. மலத்தைப் பற்றி அல்ல என் கவலை.  நான் உச்சரிப்பு பற்றிக் கவலைப்பட்டது போர்ஹேஸின் பெயருக்காக.  Borges என்ற பெயரை எந்தச் சம்பந்தமும் இல்லாமல் எஸ்.ராமகிருஷ்ணன் போர்ஹே என்று எழுதி வைக்க ஒட்டு மொத்தத் தமிழகமே இன்று போர்ஹே போர்ஹே என்று உச்சரித்துக் கொண்டிருக்கிறது.  அது கேட்பதற்கு நாராசமாக இருக்கிறது.  தவறான உச்சரிப்பு பல சமயங்களில் ஒருவரை அவமானப்படுத்துவது போல் உள்ளது.  ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த ஐந்து ஆண்டுகளுமே வானொலியில் வெங்கட்ரமன் என்றே உச்சரித்துக் கொன்றார்கள்.  அப்பேர்ப்பட்ட அருவருப்பைச் சுட்டிக் காட்டவே அவகாதோ உதாரணம்.  காந்தி பெயரைக் கூடத்தான் பிரிட்டனில் கேண்டி என்று உச்சரித்தார்கள்.  நான் பிரிட்டனில்தான் 20 ஆண்டுகள் வாழ்கிறேன், இங்கே கேண்டி என்று தான் சொல்கிறார்கள் என்று கடிதம் எழுதுவதா?  என்ன முட்டாள்தனம் இது!  வேண்டுமானால் avocado வுக்கு உச்சரிப்பு லிங்க் தருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=qm77fV38fHQ

ஒன்று செய்யுங்கள் நண்பர்களே, பலரிடமும் கையெழுத்து வாங்கி தினமணி ஆசிரியருக்கு எழுதி அந்தத் தொடரை நிறுத்துங்கள். எனக்கும் வேறு வேலை நிறைய இருக்கிறது.  அதையாவது செய்யப் பார்க்கிறேன்.

 

Comments are closed.