பொதுவாக 011 என்று தொடங்கும் போன் அழைப்பு எதையும் நான் எடுப்பதில்லை. தில்லியிலிருந்து ஏதாவது ஒரு கால் செண்டரிலிருந்து ஒரு பெண் “ஆர் யூ மிஸ்டர் ஆ…றீ… வா… ஸா… கா…” என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன். தில்லிக்காரர்களுக்கு அறிவழகன் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும். அதனால்தான் நான் தில்லியில் உத்தியோகத்தில் இருந்த போது என் பெயரை ரவி என்று வைத்துக் கொண்டேன்.
நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு போன் அழைப்பு. எடுக்கவில்லை. பிறகு ஒரு கைத்தொலைபேசியிலிருந்து. தெரியாத எண். எடுத்தேன். ஒரு பெண் குரல். நீண்ட நாள் பழகியது போல் பேசி விட்டு ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் உங்களோடு பேச விரும்புகிறார் என்றார். அதிர்ச்சியில் ஒருக்கணம் உறைந்து போனேன். ஆசியாவின் போக்கையே மாற்றிய 50 பேரில் ஒருவராகப் பேசப் படும் எழுத்தாளர் அவர். ஓரிரு முறை சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகளின் மாலைவேளையில் நடக்கும் காக்டெய்ல் பார்ட்டிகளில் சந்தித்திருக்கிறேன். அவ்வளவு தான்.
அவர் சொன்ன விஷயம் இன்னும் ஆச்சரியம். ஸீரோ டிகிரி படித்தேன். இந்தியாவில் இப்படி ஒரு நாவலைப் படித்ததில்லை; most astounding book. இன்னும் பலது சொன்னார்.
கடைசியாக, “தில்லி வாருங்கள்; ஒருநாள் மாலைப்பொழுதில் சாவகாசமாக விஸ்கி அருந்தியபடி உரையாடலாம்” என்றார். மை காட், என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்த மாதம் தில்லி கிளம்பலாம் என்று இருக்கிறேன்.
என் எழுத்து ஆங்கிலத்தில் சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு மிகவும் உறுதியாகத் தெரிந்த விஷயம். ராஸ லீலா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். white tiger புக்கர் பரிசு பெற்ற நாவல். அந்த நாவலை சமீபத்தில் நான் குஜராத் சென்றிருந்த போது இரண்டே நாளில் படித்து முடித்தேன். காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் பத்து மணி வரை படிப்பேன். இந்த அளவுக்கு வெறித்தனமாகப் படிக்க வைத்த புத்தகம் இந்தியாவில் இல்லை. வெளிநாட்டில் mario vargas llosa. நான் சொல்ல வந்த விஷயம், ஒய்ட் டைகரை விட நூறு மடங்கு அதிகமாக ராஸ லீலாவில் நான் சாதித்திருக்கிறேன். ராஸ லீலாவோடு ஒப்பிட்டால் ஒய்ட் டைகர் ஒரு ஜுஜுபி. ஒய்ட் டைகருக்கு புக்கர் பரிசு. ராஸ லீலா கிணற்றில் கிடக்கிறது. காரணம், அது இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. விரைவில் நடக்கும் என்று விரும்புகிறேன்…
Comments are closed.