அன்புள்ள ஜெயமோகனுக்கு,
நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய விஷயத்தை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் ஏராளமாக. நான் கலந்து கொள்ளும் சர்வதேசக் கருத்தரங்குகளிலும் உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் பற்றிக் குறிப்பிடாமல் பேசியதே இல்லை. நான் பத்தி எழுதும் ArtReview Asia என்ற ஐரோப்பியப் பத்திரிகையிலும் உங்களைப் பற்றி எழுதினேன். உங்களைப் பற்றி அதில் தனியாகவே ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு உங்களைத் தாக்கியும் விமர்சித்தும் எழுதியிருக்கிறேன். அப்போதிருந்த சாரு வேறு என்பதை மிகுந்த நுண்ணுணர்வுள்ள உங்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? மேலும், நான் நானாக உங்களை விமர்சித்து எழுதியதே இல்லை. ஒருபோதும். எதிர்வினை மட்டுமே ஆற்றியிருக்கிறேன்.
நீங்கள் என்னைப் பற்றிக் கீழ்வருமாறு எழுதியிருக்கிறீர்கள். அதை இந்த அதிகாலையில் படித்தேன்.
”எவரையாவது நான் தனிப்பட்ட முறையில் தாக்கியிருக்கிறேன் என நான் எண்ணவில்லை- அதற்கன வாய்ப்புகள் வரும்போதெல்லாம்கூட என் வழி அமைதியே. சாரு நிவேதிதா என்னைப்பற்றி என்னென்ன எழுதியிருக்கிறார் என்று சிலருக்கு நினைவிருக்கலாம். நான் என் மகனை அடித்து சித்திரவதை செய்கிறேன், அவன் மனவளர்ச்சி இல்லாத சிறுவன் என்றுகூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்!”
என்னைப் பற்றி நீங்கள். அன்புள்ள ஜெ, என் எழுத்தின் மீது ஆணையாகச் சொல்கிறேன். ஒருபோதும் நான் இப்படி எழுதியதில்லை. இப்படி எழுதும் அளவுக்கு நான் ஒருபோதும் என் ஆயுளில் தரம் தாழ்ந்தவனாக இருந்ததில்லை.
சமீபத்தில் ஒரு பெண் என்னிடம் நான் அவரைத் தாக்கி என்னவெல்லாம் எழுதினேன் என்று என்னிடம் சொன்னார். அப்படி எழுதியிருந்தால் நான் உயிரோடே இருக்கக் கூடாது என்று சொன்னேன். அப்படி நான் எழுதியதே இல்லை. காண்பிக்கச் சொன்னேன். நான் அல்ல; வேறு எவரேனும் கூட அப்படி எழுதுவார் என்று கற்பனையே செய்ய முடியவில்லை. அவர் படித்ததில்லை; யாரோ சொன்னார்களாம்.
என் உயிர் நண்பர் ஒருவர். 35 ஆண்டுகளாக என் இதயத்தில் வைத்துக் கொண்டாடும் நண்பர். எனக்கு உணவளித்தவர். என் உயிர் காத்தவர். அவரைப் பற்றி நான் படு மட்டரகமாக எழுதியதாக அவர் மனைவி சொன்னாராம். யோவ் லூசு, உளறாதே ஐயா. என் குடும்பத்தின் காவலன் நீர் என்றேன். இல்லப்பா, அவள் படித்துக் காண்பித்ததை நானே கேட்டேன். அவள் சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன் என்றார். அப்படியே அதை ஒதுக்கித் தள்ளி விட்டேன். என் குல தெய்வமாக நான் நினைக்கும் ஒருவரைப் பற்றி நான் எப்படி அவதூறாக எழுதுவேன்!! என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. சரி, என்ன எழுதியிருந்தேன் என்று சொல்லுங்கள் என்றேன். அவருக்கு ஞாபகம் இல்லை.
இன்னொரு உதாரணம். தபால் இலாகாவில் ராமச்சந்திரன் என்று ஒரு பிஎம்ஜி இருந்தார். ஒருமுறை எங்கள் இலாகா பற்றி எழுதும் போது தியோடர் பாஸ்கரன், ராமச்சந்திரன் இருவரும் இருந்திராவிட்டால் என் துறையிலிருந்து இதற்கும் முன்பே ராஜினாமா செய்து விட்டு வெளியே வந்திருப்பேன்; அவர்கள் இருவரும் மகாத்மாக்கள் போன்றவர்கள் என்று எழுதினேன். மறுநாள் ராமச்சந்திரன் எனக்கு போன் பண்ணினார். அறிவழகன், என்ன என்னைத் திட்டி ஏதோ எழுதியிருக்கீங்களாம் இல்ல, என்ன விஷயம் என்று கேட்டார். படிச்சிங்களா என்று கேட்டேன். இல்ல, ஒத்தர் சொன்னார் என்றார். இல்ல சார், பாராட்டித்தான் எழுதினேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். விளக்கவில்லை.
நீங்களும் அந்த ராமச்சந்திரன் சார் மாதிரிதான் எழுதியிருக்கிறீர்கள் ஜெயமோகன்.
மேலும் ஒரு விஷயம் ஜெ. உங்களுக்கும் எனக்கும் நிறைய வேலை இருக்கிறது. இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். நீங்கள் குடிக்க மாட்டீர்கள், தெரியும். அதனால் ஒரு மாறுதலுக்காக இதில் கொஞ்சம் விளையாடுகிறேன் என்று சொன்னால் அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இனி இது பற்றி எதுவும் எழுத மாட்டேன்.
சமீபத்தில் கூட உங்கள் யா தேவி படித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனிடம் அரை மணி நேரம் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தேன். அதன் பெயர் திட்டா? சரி, எப்படியோ. அதைக் கூட இனிமேல் நான் எழுத மாட்டேன். இனி என் வாழ்வில் எதிர்மறையாக எதுவும் எழுதுவதில்லை என்று இருக்கிறேன். இலக்கியத்தில், சிந்தனைத் துறையில் நீங்கள் ஒரு துருவம். நான் ஒரு துருவம். இருவரும் இருவேறு முரண்பட்ட, எதிரெதிர் நிலைப்பாடுகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என்பதை நான் எப்போதுமே உணர்ந்து வந்திருக்கிறேன்.
உங்கள் பையனையும் மகளையும் நான் எப்போதுமே நேசிப்பவன். என்றும் அவர்களுக்கு என் ஆசீர்வாதமும் அன்பும் உண்டு.
கடைசியாக, தமிழ்நாட்டில் இரண்டு பேர் மீதுதான் கடுமையான எதிர்மறையான புனைவுகள் உண்டு. ஒன்று, உங்கள் நண்பர் கமல்ஹாசன், அடுத்து அடியேன். உங்களைத் திட்டுவோர் பலர் உண்டு. ஆனால் இது போன்ற பொய்யான புனைவுகள் உங்களைப் பற்றி கிடையாது. அது உங்கள் நல்லதிர்ஷ்டம். குடித்து விட்டு வந்து அவந்திகாவை தினமும் அடிக்கிறேன் என்று கூட என்னைப் பற்றி ஒரு புனைவு. சிரித்து விட்டுக் கடந்து போகிறேன். ஒரு தற்கொலைப் படையே நம் இருவரைச் சுற்றியும் நின்று கொண்டிருக்கும் போது இது போன்ற வசவுகளையும் கடந்துதான் ஆக வேண்டும் இல்லையா?
உங்களை என்றும் நேசிக்கும்
அடியேன்
சாரு