பூச்சி 174: அவையடக்கம்

தேர்வுக்குப் படிப்பது போல் புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை மறுநாள் இந்நேரம் சந்திப்பு முடிந்திருக்கும்.  உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  அதற்கான விவரங்களை இறுதியில் மீண்டும் தருகிறேன்.  இவ்வளவு மும்முரமான வேலைக்கு இடையில் பாலா எனக்கு ஜெயமோகனின் பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததைப் படித்து, படித்ததோடு நில்லாமல் அது பற்றிய ஒரு மேலதிகத் தகவலையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.  பேசாமல் ஜெயமோகனின் பதிவை மட்டும் கொடுத்து விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருக்கலாம்.  ஜெயமோகனே அவரது வழக்கம் போல் தேவையான அளவுக்கு எழுதி விட்டார். அதற்கு மேல் விளக்கமே வேண்டாம்.  ஆனால் ஸூம் சந்திப்புகளைத் தொடர்ந்து ஏழெட்டு மாதங்களாக நடத்தி வருபவன் என்பதால் இது குறித்து என் கருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

பொதுவாக என்னோடு நெருங்கிப் பழகியவர்கள் சொல்லும் ஒரு விஷயம், சாரு குழந்தை மாதிரி என்று.  ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்றால், குழந்தைகளுக்கு ஏற்றத்தாழ்வு, சிறியவன் பெரியவன், வேண்டியவன் வேண்டாதவன் போன்ற வித்தியாசங்கள் தெரியாது.  நான் பாரதிராஜாவுடனும் ஒரே மாதிரிதான் பேசுவேன். என்னைச் சந்திக்க வரும் ஒரு பதினெட்டு வயது கல்லூரி மாணவனிடமும் ஒரே மாதிரிதான் பேசுவேன்.  அதனால் பாரதிராஜாவுக்கு மரியாதை குறையும் என்று அர்த்தம் அல்ல.  அனாவசிய போலி மரியாதை இருக்காது.  சொல்லப் போனால் அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்களிலேயே மறக்க முடியாத நண்பர்கள் வரிசையில் நான் இருப்பேன்.  உங்களைப் போல் வெளிப்படையாகப் பேசும் மனிதனை இதுவரை நான் கண்டதில்லை என்று சொல்வார்.  சொல்வது மட்டும் அல்ல, தன் நண்பர்களிடமும் அப்படித்தான் என்னை

அறிமுகப்படுத்துவார்.  எனக்குக் கொடுத்த அழைப்பிதழில்கூட என் பெயருக்கு முன்னால் அதையேதான் எழுதிக் கொடுத்தார்.  நிர்வாண மனிதன் என்றோ என்னவோ, அந்த மாதிரி ஒரு வார்த்தை.  மறந்து போனேன். 

என்னோடு கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஒரு சக எழுத்தாளர் – இளைஞர் – நீங்கள் என்ன இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டார்.  அவர் எளிமை என்று சொன்னது என் இயல்பான தன்மையை.  பந்தா இல்லாத தன்மையை.  மற்றபடி ஆடை அணிகலன்கள் அம்பானி வீட்டு ஆள் மாதிரிதான் இருக்கும்.  முன்பு சொன்னேன் அல்லவா, குழந்தையைப் போல் இயல்பாக இருப்பது, அது.  என் பக்கத்து வீட்டுக் குழந்தை.  ஒன்றரை வயது.  தினமும் இரண்டு முறை என்னை வந்து பார்த்து சிரித்து உரையாடி  விட்டுத்தான் போவான். அவன் தாத்தா என் மீது கேஸ் போட்டவர்.  பூனைக்கு உணவு வைக்கிறேன், அது அவர் வீட்டுக்குத் தொந்தரவாக இருப்பதாகச் சொல்லி கேஸ்.  குழந்தைக்கு அந்தப் பகையெல்லாம் தெரியுமா?  அது பாட்டுக்கு வரும் போகும்.  இப்படித்தான் நானும்.

அதைத்தான் எல்லோரும் சாரு குழந்தை மாதிரி என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் புதியவர்களுக்கு நான் பழகுவதற்கு எளியவன் அல்ல.  முரடன்.  போக்கிரி.  ஜெயமோகனின் பதிவில் ஒரு சம்பவம் சொல்கிறார்.  அவரும் அ.கா. பெருமாளும் ரயிலில் சென்று கொண்டிருக்கிறார்கள்.  அப்போது அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்து விட்டு பக்கத்து இருக்கை ஆள் பெருமாள் யார் என்று கேட்கிறார்.  ஜெ. சொல்கிறார்.  உடனே அந்த ஆள் சுசீந்திரம் பற்றி அளக்க ஆரம்பித்து விடுகிறார்.  பிறகு ஜெ. கோபப்பட்டு சீறுகிறார்.  இப்படி எனக்கு நடக்கவே நடக்காது.  நடந்ததும் இல்லை.  ஏனென்றால், நான் ரயிலில் செல்வதில்லை.  தவிர்க்கவே நினைப்பேன்.  சரி, எல்லா ஊரிலுமா விமான நிலையம் இருக்கிறது?  ரயிலில்தான் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முதல் வகுப்பு அல்லது, ஏசி இரண்டாம் வகுப்பு ஆகியவை மட்டுமே என் தேர்வு.  காரணம், மேட்டுக்குடி மனிதர்கள்தான் ஒருவருக்கொருவர் சுலபத்தில்

பேசிக் கொள்ள மாட்டார்கள்.  எனக்கு நான் அறியாத மனிதர்களோடு பேசவே பிடிக்காது. நான் மிருகங்களோடும் தாவரங்களோடும் உரையாடுபவன்.  மீறிப் பேசினால் இப்படித்தான் தங்கள் காலி மண்டையை நம்மோடு பகிர்வார்கள்.  நமக்கு என்ன தலையெழுத்தா, இவர்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று?  சரி, அப்படியே ஒரு இக்கட்டில் ஒரு சராசரியிடம் மாட்டி, அவர், அ.கா. பெருமாள் யார் என்று கேட்டால், “நமக்கு எத்தனியோ விஷயங்கள் தெரியாம இருக்குங்க.  அது மாதிரி அ.கா. பெருமாளையும் தெரில.  தெரியாததுல ஒண்ணும் தப்பு இல்ல.  அதுனால அத அப்டியே விட்ருங்க.  உங்க வேலையப் பாருங்க” என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லி பேச்சைத் துண்டித்து விடுவேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  என் இருபத்தைந்தாவது வயதில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Inspector General of Prisons என்ற அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தேன்.  பொன். பரமகுரு அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார்.  அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே டெய்லர்ஸ் ரோட் என்று நினைக்கிறேன், ஷாந்தி மேன்ஷனில் ஒரு அறையில் வசித்தேன்.  எதிரே சட்டக் கல்லூரி விடுதி.  என் அறையில் இன்னொரு அன்பர்.  ஒரு வருடம் அவர் என்னோடு அறைவாசி.  இப்போது நான் சொல்வதை நீங்கள் யாருமே நம்ப முடியாது.  ஆனால் உண்மை.  அந்த அன்பரோடு நான் ஒருநாள் கூடப் பேசியதில்லை.  அவரும் பேசியதில்லை.  அவர் பாட்டுக்கு வருவார்.  போவார்.  நான் பாட்டுக்கு வருவேன், போவேன்.  இது அல்ல முக்கியம்.  அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது என்பதுதான் விசேஷம்.  ஆனால் பார்த்தால் அசட்டுத்தனமாக ஒரு புன்முறுவல் பூத்துக் கொள்வோம்.  அதுதான் நான்.  எனக்கு சம்பந்தம் இல்லாதவர்களோடு பேசவே மாட்டேன்.  ஒரு வார்த்தை கூட. 

ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  ஒரு தம்பி என்னிடம் “அங்கிள், நீங்கள்ளாம் மொத்தமா எத்தனை ரைட்டர்ஸ் இருப்பீங்க?” என்று கேட்டான்.  பள்ளியின் வைரம்.  உடம்பெல்லாம் மூளை.  எனக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சந்தேகம் என்றால் அவனைத்தான் கேட்பேன். நான் அவனுக்கு என்ன பதில் சொன்னேன் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?  ஒரு கேள்விதான் என் பதில்.  “மெட்ராஸ்ல எத்தன தெருநாய் இருக்கும்னு நெனைக்கிறே?  அவ்ளோ இருப்போம்!”   இதற்குப் பிறகு ஏதாவது கேட்பானா அவன்?   

சாமான்யர்கள் உளறுவதற்கு அவர்களுக்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம்.  அவர்களுக்கு அவையடக்கம் சொல்லித்தர நான் ஆள் இல்லை.  புதியவர்களோடு உரையாட எனக்கு நேரமோ பொறுமையோ இல்லை.  எனக்கும் எத்தனையோ உறவுகள் இருக்கின்றன.  அவந்திகா உறவிலும் என் உறவிலும். யாரோடும் நான் வைத்துக் கொள்வதில்லை.  என் சொந்தத் தங்கை நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எனக்கு வாட்ஸப் பண்ணியது.  நான் பதிலே அனுப்பவில்லை.  தொடர்ந்து நாலைந்து நாட்கள் அனுப்பி விட்டு நிறுத்துக் கொண்டது.  அவர்களோடெல்லாம் உரையாடுவதற்கோ பாசம் பாராட்டுவதற்கோ எனக்கு ஆர்வம் இல்லை.  ஆனால் ஹைதராபாதிலிருந்து ஒரு வாசகர் முதல் முதலாகக் கடிதம் எழுதினார். நேரம் இருப்பவர்கள் அதைப் படித்துப் பாருங்கள்.

Dear Charu,

I have been a big fan of yours for quite a long time i should say. i am 47 and ippo Hyderabad la last 10 yrs a irukken. Started reading your articles in Kumudham and Kungumam before graduating to your novels. Honestly, i can’t remember any other writer from whom i learnt so much, be it world cinema, world music, world literature  , the list goes on. your transgressive writing style, evidenced in 100 degree, dhegam etc. were shockers for me. what a layered writing in the most hard hitting style imaginable and that too keeping the readers thoroughly engaged, which many writers dont manage to do.  I realised how much we have in common, right from our love for mylapore, Nageswara Rao Park, Rayar cafe to the eateries of Vellore ( i worked in Ranipet for sometime and am a big fan Vellore’s Lalith vihaar and Gyan Vaishnav and amma biryani), taste in world cinema etc.

Neenga recommend panni naa partha Malayalam movies like Ozhivu divasathe kali opened my eyes to the new age malayalam movies. 

More than anything else, your generosity to fellow unsung writers is unparalleled. unga Pazhuppu nira pakkangal is your tribute to tamil readers. my biggest gratitude to you for introducing the Genius called “Thanjai Prakash”. neenga sonna ella books ayum naa padichutten, Karamundar voodu, Kallam, Thanjai prakash sirugathaigal, each story a potential time bomb.  Had he been alive, you and him would have been one great pair of geniuses. Neenga sonneengale , ” Thanjai Prakash, un dhisai nokki vanangugiren” endru ungaloda Pazhuppu  nira pakkangal” bookla. Yaarukku sir irukku ivalo periya manasu. I salute you and doff my hat to you charu. 

also, i started reading Pa Singaram’s Puyalil oru thoni, a great historical account  of the Malay tamils but only problem is the engagement. it is also multilayered like your works and Thanjai Prakash’s works but not as engaging but not everyone is Charu

i would love to interact with you and would be a honour to meet you when i come to chennai. 

Cheers,

Viswanathan N R 

( Vishy)

நேற்று இரவு 9.46க்கு வந்த இந்தக் கடிதத்துக்கு 9.50க்கு பதில் எழுதினேன்.  என்ன காரணமோ இந்தக் கடிதம் எனக்குள் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்கியது. என் எழுத்தோடு தொடர்பு உள்ளவர்களோடு மட்டும்தான் என்னால் உரையாட முடிகிறது.  அதே சமயம், இலக்கியமே தெரியாத மனிதர்களோடு பேசலாம்.  அவர்களிடம் மிகப் பெரிய வாழ்க்கை இருக்க வேண்டும்.  ராமேஸ்வரத்தின் நீச்சல் காளியோடு நீண்ட நேரம் அப்படிப் பேசியிருக்கிறேன்.  நாலு கொலைகள் செய்த ஒரு கொலைகார அன்பரோடு அப்படிப் பேசியிருக்கிறேன்.  சினிமாவில் லைட்பாயாக இருப்பவர்களோடு பேசலாம், ஆட்டோக்காரர்களோடு பேசலாம்.  அமார்த்யா சென் மாதிரி நினைத்துக் கொண்டு பேசுவார்கள்.  பொறுத்துக் கொண்டு கேட்டால் நிறைய கிடைக்கும்.  சமயங்களில் அவர்களோடு கூட நான் பேசுவதில்லை.  அப்புறம் எப்படித்தான் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று என்னைக் கேட்கலாம்.  எவ்வளவு அதிக பட்ச மனிதர்களைச் சந்திக்க முடியுமோ அத்தனை அதிக பட்ச மனிதர்களை சந்திக்கும் ராகவன் போன்றவர்கள்தான் என்னுடைய source.  இப்படி நிறைய பேர் எனக்கு நண்பர்கள். 

ஜெயமோகனின் கட்டுரையைப் படியுங்கள்.  இந்தக் கட்டுரை உங்களை மாற்ற வேண்டும்.  மாற்றம் தேவையாக இருந்தால்.  ஆனால் பேச வேண்டிய அவசியம் இருக்கும்போது அவையடக்கம் என்று சொல்லி அமைதியாக இருந்து விடாதீர்கள்.  எங்கே பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எவ்வளவு பேச வேண்டும் என்பதெல்லாம் உள்ளுணர்வால் வர வேண்டிய விஷயம்.  அந்த உள்ளுணர்வைப் பெற  இந்தக் கட்டுரை உதவி செய்யும்.

புதுமைப்பித்தன் சந்திப்பு: