எழுத்து, படிப்பு…

என் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர அத்தனை பேருக்கும் கொரோனா வந்து விட்டது.  அதுவாக வரவில்லை.  கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கினார்கள்.  இப்போது சிகிச்சையில் இருப்பதால் அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலேயே எழுதுகிறேன்.  இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது கூட திட்டுகிறார் என்று காண்டாவார்கள்.  நான் சென்ற ஃபெப்ருவரியிலிருந்து தனிமையில் வாழ்கிறேன்.  14 மாதங்கள் முடிந்து விட்டன.  கிடந்த கொலைப் பட்டினியில் பத்து கிலோ குறைந்து விட்டது.  எப்போதாவது பேண்ட் போட்டால் முழங்காலுக்கு இறங்கி விடுகிறது.  பெல்ட் போட்டே ஆக வேண்டியிருக்கிறது.  ஸ்விக்கிக்கு என் வீட்டில் தடை இருப்பதே காரணம்.  அவந்திகா சமைத்து முடிக்கும் நேரத்தில் என் பசி மரத்து விடும்.  ஒரு கவளம்தான் சாப்பிட முடியும்.  ஆனால் இப்போதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கொழுப்பு, ஷுகர் இத்யாதி எல்லாம் கட்டுக்குள் இருக்கின்றன.  பட்டினிதான் ஆரோக்கியம் போல.

ஒரு விஷயத்தில் அவந்திகாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.  எதற்குமே என்னை வெளியே அனுப்புவதில்லை.  ஏடிஎம், காய்கறி, பழம், வேறு வேலைகள் – எதுவாக இருந்தாலும் அவள்தான்.  போய் வந்து குளித்தும் விடுவாள்.  என் இதயத்தில் பாதி அடைப்பு இருப்பதால் அதி கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.  நாலைந்து நாவல்கள் பாக்கி இருக்கின்றன.  அது மட்டும்தான்.  வேறெந்தக் கவலையும் இல்லை.  அதுகளை முடித்து விட்டால் சந்தோஷமாகக் காத்திருக்கலாம். 

இதுவரை கொரோனா விஷயத்தில் என் நண்பர்களில் ஒருத்தர் கூட என் பேச்சைக் கேட்டது இல்லை.  ஒன்றும் செய்வதற்கில்லை… 

எழுதுவதிலும் படிப்பதிலும் மட்டுமே ஈடுபட்டு வருகிறேன்.