சென்னை வாழ்க்கை

இந்தியாவிலேயே சென்னைதான் மனிதர்கள் வாழவே முடியாத நகரமாக மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்று தெரியாது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்படித்தான் கதை.

நான் எழுதப் போவது சென்னைவாசிகளுக்கும் சென்னைக்குக் குடியேறிய எழுத்தாள சிகாமணிகளுக்கும் பிடிக்காது. ஏனென்றால், அப்படி வந்த எழுத்தாளர்கள் ஏதோ சென்னையை ஒரு சொர்க்கலோகம் மாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். மைலாப்பூரில் ஒரு பிராமணர் (ஐயர்) முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். கர்னாடக இசை ஒலிக்கும். முகப்பில் மஹா பெரியவரின் பெரிய படம். முடி வெட்ட முந்நூறு ரூபாய். ஆனால் இரண்டரை நிமிடத்தில் வெட்டி விடுவார். கத்தரிக்கோலை மண்டையில் வைத்து எடுக்க முந்நூறு. இது பற்றி எழுதியதும் முடிதிருத்தும் கலைஞர்களை அவதூறு செய்த சாரு நிவேதிதாவைக் கைது செய் என்று வடசென்னையில் போஸ்டர் ஒட்டினார்கள். அடப்பாவிகளா, நீங்கள் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படித்தான் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருப்பீர்கள், அந்த மைலாப்பூர் சலூன்கடைக்காரரின் மகன் இன்னொரு சுந்தர் பிச்சையாகி விடுவான் என்று நினைத்துக்கொண்டேன். நல்லவேளை, என்னைக் கைது செய்யவில்லை.

சலூன் என்று மட்டும் அல்ல. எங்கே போனாலும் ஏமாற்றுவேலைதான். ஆட்டோதான் ஆக பயங்கரம். முப்பது ரூபாய் தூரத்துக்கு நூற்றைம்பது என்று கேட்கிறார்கள்.

சரி, ஸ்விக்கி, ஸொமாட்டோ என்பதெல்லாம் எத்தனை பெரிய புரட்சி! வீட்டில் இருந்தபடியே வெளியிலிருந்து வரவழைத்துச் சாப்பிடலாம். என் போன்றவர்களுக்கு சொர்க்கம் தரையில் வந்த மாதிரி. ஆனால் சென்னை நகரில் கழுதைப் பீ, பன்றிப் பீ போன்ற சமாச்சாரங்களைத்தான் சாப்பாடு என்று அனுப்புகிறார்கள். அவ்வளவு கொடுமையாக இருக்கிறது. ருசியாக இருக்க வேண்டும் என்றால், ஒரு மீன் குழம்பு 800 ரூ. அதுவும் இரண்டு கரண்டிதான் இருக்கும். இரண்டு பேர் ஒரு வேளை சாப்பிடலாம். அதுவும் ஒரே மீன். ஒரே ருசி. கொஞ்சம் விலை குறைந்தால் பன்றி மூத்திரம் மாதிரி இருக்கும். ஏற்கனவே எழுதினேனே, நல்ல ருசியான கூழ். (அதிலும் உப்பை அள்ளிக்கொட்டுகிறார்கள்.) ஒரு டம்ளர் 150 ரூ. அதன் விலை 15 ரூபாய்தான் கொடுக்கலாம். பத்து மடங்கு விலை. பகல் கொள்ளை. மில்லட் மேஜிக் என்ற உணவகத்தில்தான் இந்தக் கொள்ளை.

காலையில் இட்லி சாப்பிடலாம் என்றால் அதற்கு வருகிறது பாருங்கள் சட்னியும் சாம்பாரும். பன்றி மூத்திரம் எல்லாம் சாதாரணம். அதை வர்ணிக்க வார்த்தையே இல்லை. டாஸ்மாக்கில் குடித்து விட்டு வந்தவன் எடுக்கும் வாந்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே மந்தைவெளியில் ஒரு கடையில் இட்லிக்கு நாலு விதமான சட்னி தருவதாகக் கேள்விப்பட்டு போனேன். ஒன்று நோய் பீடித்த நாய்ப்பீ, இன்னொன்று கழிச்சல் கண்ட மாட்டுப்பீ, மூன்றாவது மனித மலம், நாலாவது பன்றிப் பீ. இந்தக் கருமத்தை எல்லா கழிசடைகளும் நக்கி நக்கித் தின்று கொண்டிருந்தன. இந்தக் கடையை எனக்கு சிபாரிசு செய்த கழிசடையைத் திட்டியபடியே திரும்பி வந்தேன்.

ஆனால் பெங்களூரில் பாருங்கள், ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நாகூர் சீத்தாராமைய்யர் ஓட்டலில் சாப்பிட்ட சட்னி கிடைக்கிறது. இட்லி சென்னை இட்லியை விட இரண்டு மடங்கு பெரிது. சட்னி மூன்று விதம். இங்கே இட்லி என்று ரவாவைக் கொட்டி ஏமாற்றுகிறார்கள். பெங்களூரில் நிஜ இட்லி.

இதெல்லாம் ஏன் நினைவு வந்தது என்றால், இங்கே என் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக பணிப்பெண்களே கிடைப்பதில்லை. வந்தால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ நின்று விட்டு ஓடி விடுகிறார்கள். காரணம், பாத்திரத்தில் பற்று இருக்கக் கூடாது என்கிறோம். தரையைத் துடைத்தால் வழுக்கி விழுந்து விடும் அளவுக்கு நீர் ஓடக் கூடாது என்கிறோம். ஓடி விடுகிறார்கள். அதனால் பெருமளவுக்கு நானும் அவந்திகாவும்தான் பங்கு போட்டுக்கொண்டு பாத்திரம் தேய்க்க வேண்டியிருக்கிறது. ஒரு பணிப்பெண் வந்தார். ஒரு மாதத்தில் நின்று விட்டார். மேலே சொன்னதுதான் காரணம். இன்னொருவர் வந்தார். முன்னவரை விட மோசம். மூன்றாவது ஒருத்தர் வந்தார். முந்தைய இரண்டு பேரை விடவும் படு மோசம். இத்தனைக்கும் சம்பளம் மற்ற வீடுகளை விட நம் வீட்டில் இரண்டு மடங்கு.

மதியம் மூன்று மணி வரை இப்படி வீட்டுப் பணிகளிலேயே போய் விடுகிறது எனக்கு.

இந்திரா பார்த்தசாரதிக்கு 95 வயது. இந்த வயதில் அவர் தானே சமைத்து, தானே பாத்திரம் தேய்க்க வேண்டுமானால் எப்படி இருக்கும்? எனக்கு 70 வயதுதான். ஆனாலும் இருபத்தைந்து வயது ஆளைப் போல் இளம் தோழிகளோடு பப் செல்கிறேன். குடிக்கிறேன். ஆடுகிறேன். ஆனால் என் நேரமெல்லாம் அடுப்படியிலேயே போய் விடுவது பெரும் துன்பமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு துணி துவைக்கும் தொழிலாளியை விட அதிகமாக நான் துணி துவைத்திருக்கிறேன். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பப் பெண்ணை விட அதிக நேரம் நான் சமையல்கட்டில் இருந்திருக்கிறேன். அதனால்தான் எழுபது வயதிலாவது அடுப்படியிலிருந்து விடுதலை பெறலாம் என்றால் மைலாப்பூரில் பணிப்பெண்கள் கிடைக்காததால் அது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. வருகின்ற பணிப்பெண்களெல்லாம் விரிதியானா படத்தில் வரும் பாத்திரங்களைப் போல் இருக்கிறார்கள்.

அதனால் நாம் மும்பை போய் விடலாம் என்கிறாள் அவந்திகா. பூனைகளையும் அழைத்துக்கொண்டு போக வசதி இருக்கிறது. அது பிரச்சினை இல்லை. “மும்பை போனால் இங்கே எனக்கு இருப்பது போல் அங்கே சப்போர்ட் சிஸ்டம் இருக்காதே?” என்று நண்பர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் மும்பையில் உங்களுக்கு சப்போர்ட் சிஸ்டமே தேவைப்படாது என்றார்கள். ராம்ஜியும் இதே வார்த்தைகளைச் சொன்னார். காரணம், அங்கே சமூகமே சப்போர்ட் சிஸ்டத்தைத் தருவதாக இருக்கிறது.

உதாரணம் சொல்கிறேன். இங்கே அவந்திகா துபாய் செல்ல வேண்டும். கார்த்திக் வீட்டுக்கு. நான் சீலே செல்ல வேண்டும். பத்து பூனைகளையும் வீட்டில் ஒரு பத்து மணி நேரம் பார்த்துக் கொள்ள வேண்டும். உலகத்திலேயே சுலபமான வேலை. காலையில் எட்டு மணிக்கு அவைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். மதியம் ஒரு மணிக்கு. மாலை ஏழு மணிக்கு. பிறகு பணியாள் தன் வீட்டுக்குப் போய் விட்டு மறுநாள் வரலாம். காலை எட்டிலிருந்து மாலை ஏழு மணி வரை ஹாய்யாக இருக்கலாம். மலஜலமெல்லாம் பூனைகள் வீட்டில் இருக்கும் மண் தொட்டியில் போகும். மணக்கும் மண் என்பதால் நாற்றம் இருக்காது. அதை குப்பையில் அள்ளிப் போட வேண்டும். ஒரு மாதம் பார்த்துக்கொள்ள வேண்டும். முப்பதாயிரம் சம்பளம். சென்னையில் ஆள் கிடைப்பார்கள். ஆனால் என்ன நடக்கும் தெரியுமா? நாம் ஒரு மாதம் கழித்து வந்து பார்த்தால் பத்து பூனையில் ஆறுதான் இருக்கும். அதுவும் எலும்பும் தோலுமாக. மீதி நான்கு? ஜாலியான குரலில் இரண்டு பூனை செத்துப் போச்சு சார், இரண்டு பூனை ஓடிப் போச்சு சார் என்பார்கள்.

இதுதான் சென்னை.

சமைப்பதற்கு ஆள் தேடினால் அதை ஒரு நாவலாகவே எழுதலாம். மேலே பீ பீ என்று எழுதியிருக்கிறேன் அல்லவா, அப்படித்தான் சமைக்கிறார்கள்.

பிராமண மாமிகளுக்கு மட்டும்தான் சமைக்கத் தெரிகிறது. அபிராமணப் பெண்களுக்கு சமையலே மறந்து விட்டது. உண்டால் வாந்தி வருகிறது. பிராமண மாமிகளோ பூனைகள் சாப்பிடும் சிக்கனைப் பார்த்து விட்டுத் தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். வீட்டில் சமைக்கவில்லை மாமி, வெளியிலிருந்து வாங்கித்தான் கொடுக்கிறேன், உங்களுக்கு ஒரு பாதகமும் இல்லை என்று சொன்னால் ஐயோ ஐயோபேசாதேங்கோ பேசாதேங்கோ என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்கள்.

அதனால் சமையலும் நானும் அவந்திகாவும்தான். பாத்திரம் தேய்ப்பதும் இரண்டு பேரும்தான்.

ஆனால் மும்பை எப்படி இருக்கிறது? அவந்திகா ஒரு சினிக். எதையுமே பாராட்ட மாட்டாள். அவள் சொல்கிறாள், கார்த்திக் வீட்டில் ஒரு பதினெட்டு வயது சமையல் பெண். என்னை விட நன்றாக சமைக்கிறாள் என்றாள் அவந்திகா.

இன்னொரு விஷயம். வீட்டில் பாத்திரம் தேய்த்து வீடு துடைக்க ஒரு பெண்மணி. ஒருநாள் பாத்திரம் தேய்த்து விட்டு, வீடு பெருக்கி விட்டு, நாளை வந்து துடைக்கிறேனே என்றாராம். என்ன என்று கேட்ட போது, நேற்று என் கணவருக்கு ஹார்ட் அட்டாக், இப்போது ஐசியூவில் இருக்கிறார் என்கிறார். என்னம்மா இது, ஏன் வேலைக்கு வந்தீர்கள் என்று கேட்டால், வந்துதானே ஆக வேண்டும் என்கிறாராம். அதாவது, வராமல் ஜூட் விடுவது என்ற விஷயமே அங்கே தெரியாது. உடனே கம்யூனிஸ குண்டாந்தடியை எடுக்காதீர்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர் போவார்களாம். அதைத் தவிர ஒரு நாள் கூட வராமல் இருப்பதில்லை.

அதனால்தான் மும்பை சென்று விடலாம் என்கிறாள் அவந்திகா.

அதை விடுங்கள். சென்னை சாப்பாட்டுக்கே வருகிறேன். மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா என்று எழுதியிருந்தேன். ஒருவர் கிடைக்கும் என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அவருக்கு மைலாப்பூரில் ஒரு சிலைதான் வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

இதிலும் எனக்கு சீனி ஒருத்தர்தான் இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. வேளச்சேரியில் மகிழ்நிலம் என்று ஒரு கடையை அறிமுகப்படுத்தினார். ரொம்ப தூரம் சாரு என்றார். இல்லை. அடையார் ஏ2பியிலிருந்து வரவும், முருகன் இட்லியிலிருந்து வரவும், மில்லட் மேஜிக்கிலிருந்து வரவும் 45 நிமிடங்கள்தான் ஆகின்றன. அதேதான் மகிழ்நிலத்திலிருந்தும் ஆகிறது. ருசி அற்புதம். விலை அதிசயம். கூழ் 35 ரூபாய்தான். 150 எங்கே இருக்கிறது, 35 எங்கே இருக்கிறது?

சீனி ஒருத்தர்தான் இருப்பது மன உளைச்சல் என்று எழுதியதைக் கண்டு நீங்களோ சீனியோ மன உளைச்சல் அடைய வேண்டாம். வேறு யாராவது சொல்லியிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். இதற்குக் கூட சீனியை விட்டால் வேறு ஆள் இல்லை, பாருங்கள்.

இவரையாவது அனுப்பி வைத்ததற்குக் கடவுளுக்கு நன்றி.