சார்பட்டா பரம்பரை (தொடர்ச்சி)

(நேற்று எழுதிய சார்பட்டா விமர்சனத்தின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்)

சார்பட்டா பரம்பரையை நேற்றும் இன்னொரு முறை பார்த்தேன்.  இப்படி ஒரே படத்தை அடுத்தடுத்த நாளில் பார்த்தது இதுவரை நடந்ததில்லை.  அதுவே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி.  இரண்டாவது முறையாகப் பார்த்த போதுதான் படத்துக்கு நேற்று நான் எழுதிய சிறிய மதிப்புரை அதன் சிறப்புக்கு நியாயம் செய்ததாகாது எனத் தோன்றியது.

சார்பட்டா படத்தைப் பார்க்கும் அத்தனை பேரையும் ஈர்த்த ஒரு பாத்திரம்: டான்சிங் ரோஸ்.  தமிழ் சினிமாவில் இது வரை வந்த மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று.  உதாரணமாக, பராசக்தியின் நாயகன் குணசேகரன்.  பராசக்தியிலாவது குணசேகரன் படத்தின் நாயகன்.  ஆனால் சார்பட்டாவில் டான்சிங் ரோஸ் நாயகன் அல்ல.  கொஞ்ச நேரமே வரும் ஒரு துணைப் பாத்திரம்.  அப்படியும் ஏன் அந்தப் பாத்திரம் பார்வையாளர்கள் அத்தனை பேரையும் கவர்ந்தது? காரணம், பாத்திரத்தின் உருவாக்கம்.  ரங்கன் வாத்தியார் தன் சிஷ்யன் கபிலனிடம் டான்சிங் ரோஸ் பற்றிச் சொல்லும் இந்த வசனம்:

”வேம்புலியயே அடிக்குற அளவுக்கு உன்கிட்ட ஆட்டம் இருக்கலாம்! ஆனா அதுக்காகலாம் ரோஸ அடிச்சுற முடியாது! மெட்ராஸ்ல இருக்க பாக்ஸிங் பரம்பரைலயே ரோஸுக்கிட்ட இருக்க கால்பாடம் வேற எவன்கிட்டயும் கிடையாது! ஸ்டைலா டேன்ஸ் ஆடுற போலயே இருக்கும் அதுனால தான் அவன் பேரு டேன்சிங் ரோஸு! ஆப்பனண்ட் ஜனங்களுக்கே அவந்தான் கெலிக்கனும்னு எண்ணத்த குடுத்துருவான்! அந்த அளவுக்குப் பெரிய வித்தக்காரன் பா அவன்! பாக்ஸிங்கு கை எவ்ளோ முக்கியமோ கால் அவ்ளோ முக்கியம்! அப்போதான் ஆட்டம் அப்புடி காணும்! அடிப்படை நல்லா இருந்தாதான் ஆட்டம் நல்லா இருக்கும்!”

இந்த ஒரு வசனத்தில் அந்தப் பாத்திரத்தின் மொத்த சித்திரமுமே நம் மனதில் வந்து உட்கார்ந்து விடுகிறது.  இது தவிர டான்சிங் ரோஸாக வரும் ஷபீரின் நடிப்பு.  மூன்று மணி நேரப் படத்தில் டான்சிங் ரோஸ் வரும் நேரம் எவ்வளவு?  ஆனால் பார்வையாளர்கள் எல்லோரும் ஏன் இயக்குனர் ரஞ்சித்திடம் இந்த ரோஸ் பாத்திரத்தை வைத்து ஒரு முழுப் படம் எடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள்?  வெறும் நடிப்பு மட்டும்தான் காரணமா?  அந்தப் பாத்திரத்தின் உருவாக்கம்.  இதற்காக இயக்குனருக்கும் வசனகர்த்தாவுக்கும் என் விசேஷமான பாராட்டுகள். 

ஒரு படத்துக்கு வசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சார்பட்டா ஒரு பாடம்.  குறிப்பாக, பார்வையாளர்கள் எல்லோரையும் கவர்ந்த இன்னொரு பாத்திரமான டாடி (ஜான் விஜய்).  அவர் பேசும் ஆங்கில வசனங்களும் மிக வலுவானவை.  அவருக்காகவே இந்தப் படத்தை இன்னொரு முறை பார்த்தேன். 

சார்பட்டா ஏன் மற்ற எல்லா தமிழ்ப் படங்களிலிருந்தும் வித்தியாசப்படுகிறது என்றால், டாடி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் போன்ற கதாபாத்திரங்கள் கதையின் நகர்வில் முக்கியமான பங்கை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்.  ஆனால் குத்துச்சண்டை அறிவிப்பாளராக வரும் டைகர் கார்டன் தங்கம் என்ற ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டால், இதுவே மற்ற படமாக இருந்தால் அது ஒரு துணைப் பாத்திரமாக நம் கவனத்தில் வராமலேயே போயிருக்கும்.  ஆனால் சார்பட்டாவில் அந்தப் பாத்திரத்துக்கும் உயிர் இருக்கிறது.  யார் அந்த நடிகர் என்று கேட்கிறோம்.  இது போன்ற ஆயிரமாயிரம் அறிவிப்பாளர்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக் கடந்து வந்திருக்கிறோம்.  அந்தக் காலத்தில் ஒரு மாட்டு வண்டியில் ஸ்பீக்கரில் பேசியபடியே சினிமா நோட்டீஸைக் கொடுத்துக் கொண்டு வருவார்கள்.  கிராமங்களில் நடக்கும் ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பாக்ஸிங் நிகழ்ச்சிகளிலும் இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களைப் பார்க்கலாம்.  அரசியல் கூட்டங்களில் தலைவர் வரும் வரை இந்த அறிவிப்பாளர்தான் நம்மோடு தொடர்பில் இருப்பார்.  இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களால் ஆனதுதான் நம் தமிழ் வாழ்க்கை.  சார்பட்டாவில் அவர் பெயர் டைகர் கார்டன் தங்கம். 

அதேபோல் இன்னும் சில பாத்திரங்கள்: குத்துச்சண்டைப் போட்டிகள் மூலம் காசு பார்க்கும் காளி வெங்கட், காவி உடையில் பட்டை அடித்தபடி ரங்கன் வாத்தியார் கூடவே வரும் சாமியார், பீடி ராயப்பன். இந்த உதிரிப் பாத்திரங்கள் அனைவருமே ஒரு முழுப் படம் அளவுக்குக் கதைகளைக் கொண்டுள்ள முழுமையான பாத்திரங்களாக அமைத்ததுதான் சார்பட்டாவை மற்ற எல்லா தமிழ்ப் படங்களிலிருந்தும் வித்தியாசப்படுத்துகிறது.  பொதுவாக மற்ற படங்களில் நடிகர்களின் திறமையினால் மட்டுமே அந்தந்தப் பாத்திரங்களின் முக்கியத்துவம் பேசப்படும்.  பாலையா, நாகேஷ், எம்.ஆர். ராதா போன்றவர்கள் உதாரணம். ஆனால் சார்பட்டாவில் பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு நடிகர்களை அடையாளம் காண்கிறார்கள் பார்வையாளர்கள். 

மேலும், இயக்குனர் ரஞ்சித்துக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் என் தனிப்பட்ட பாராட்டுகள்.  ஒரு கால் நூற்றாண்டுக் காலமாக – அல்லது அதற்கும் மேலாகவே இருக்கலாம் – தமிழ் சினிமா மதுரை ஜாதி அரசியலில் பீடிக்கப்பட்டு இருந்தது.  ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பெருமையைப் பேசுவதாகவே தமிழ் சினிமாவின் அடையாளம் அமைந்து போயிருந்தது.  இதில் கமல்ஹாசன் உட்பட பலருக்கும் பங்கு இருக்கிறது.  அந்தக் குறிப்பிட்ட ஜாதி அடையாள நாயகர்களின் காலடி மண்ணை எடுத்துப் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டு குலவைச் சத்தம் கொடுத்துப் பாடினார்கள்.  அதற்கும் தலித் கலைஞரே இசையமைத்தார். அதையும் தமிழ்கூறு நல்லுலகமே கை தட்டி ரசித்தது.  எல்லாமே ஜாதிப் பெருமை பேசும் படங்கள். 

ஒருமுறை அனுராக் காஷ்யப் என்னோடு பேசிக் கொண்டிருந்த போது அந்தப் “புகழ் பெற்ற” மதுரை மூவர் பற்றிப் பெருமையுடன் சொன்னார்.  நான் அவரிடம் மிக வருத்தத்துடன் அவர்களின் ஜாதிப் பெருமை பேசும் அவர்களின் சினிமா அரசியல் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொன்னேன்.  இப்படி தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இந்திய அளவில் “புகழ் பெற்றது” தமிழ் சினிமாவின் ஜாதிப் பெருமை சினிமா.     

அந்த அவலத்தை மாற்றி அமைத்திருக்கிறது சார்பட்டா பரம்பரை.  இனி ஜாதிப் பெருமை பேசும் படங்களை எடுப்பதற்கு யாரும் தயங்குவார்கள்.  சார்பட்டா அந்தப் போக்கை தன்னுடைய சுவாரசியமான கதை சொல்லலாலும், மிக வலுவான சினிமா மொழியினாலும் மாற்றி விட்டது.  சமீபத்தில் ஒரு படம் வந்தது.  மதுரை சார்ந்த ஜாதிப் பெருமை பேசும் படங்களுக்கு எதிரான தலித் அரசியலைக் கொண்ட படமாகவே இருந்தாலும் அதன் அமெச்சூர்த்தனமான உருவாக்கத்தினால் எல்லோரது கேலிக்கும் பரிகாசத்துக்கும் ஆளானது அந்தப் படம்.  அதில் வரும் நாயக பிம்பமும், அபத்தமான குறியீடுகளுமே அதை ஒரு கேலிக்குரிய படைப்பாக ஆக்கி விட்டது. 

ஆனால் சார்பட்டா ஒரு புதிய கதையைச் சொல்கிறது. இதிலும் நாயகன் வருகிறான்.  என்ன நடக்கப் போகிறது என்பதையும் நாம் யூகித்து விட முடிகிறதுதான்.  ஆனாலும் மூன்று மணி நேரம் போவதே தெரியாமல் போகிறதே? அதுதான் இயக்குனரின் திறமை.   

இதுவரை பேசப்படாத, இதுவரை சொல்லப்படாத மனிதர்களின் கதையை தமிழ் சினிமாவில் புதிய முறையில் சொல்லியிருக்கிறது சார்பட்டா.  தமிழ் சினிமாவை சாதி அரசியலிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது சார்பட்டா.  இந்த இரண்டுக்காகவும் இயக்குனரையும் அவர் குழுவையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

இயக்குனர் ரஞ்சித்தை நான் கபாலிக்காகவும், காலாவுக்காகவும் நிறைய விமர்சித்திருக்கிறேன்.  ஒருவேளை ரஜினி என்ற பிரம்மாண்டமான பிம்பம் அவரது சுதந்திரமான போக்குக்குத் தடையாக இருந்திருக்கலாம்.  ஆனால் சார்பட்டாவைப் பார்க்கும் போது ரஞ்சித்திடம் நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.  ரஜினியையே வைத்து அமிதாப் தெ லாஸ்ட் லியர் (இயக்கம்: ரித்துபர்னோ கோஷ்) படத்தில் கொடுத்த மாதிரி ஒரு படத்தை ரஞ்சித்தால் தர முடியும்.  நான் சொல்வது லாஸ்ட் லியரின் மறு பதிப்பை அல்ல.  ரஜினியை வைத்து வேறோர் genreஇல் வேறு மாதிரி படம்.  அது ரஞ்சித்தால் முடியும்.

சார்பட்டா பரம்பரை – தமிழில் ஒரு புதிய பாணி சினிமாவை உருவாக்கி இருக்கிறது.  தமிழ் சினிமாவில் சார்பட்டா ஒரு மைல்கல்.  என்ன காரணங்கள் என்று மேலே பட்டியல் இட்டிருக்கிறேன்.  அதில் முக்கியமானது, ஜாதிப் பெருமை சினிமாவை ஒழித்துக் கட்டியது.

இயக்குனர் ரஞ்சித்துக்கும் தமிழ் இலக்கியத்தில் பேட்டை என்ற நாவலின் மூலம் வட சென்னை வாழ்க்கையை அச்சு அசலாக நமக்குக் கொடுத்த தமிழ்ப் பிரபாவுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்…