அராத்து எழுதிய ஒரு மாய எதார்த்தவாதக் கதை


ஒரு ஊரில் ஒரு பழக்கம் இருந்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புணரலாம். பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் யார் பெற்ற பிள்ளை என்று யாருக்கும் தெரியக்கூடாது. 
அந்த ஊரில் வேசி மகன் என்பது வசை அல்ல. நம் உலகில் பத்தினி மகனே என்பது வசையா என்ன? அந்த ஊரின் வாழ்க்கை முறையே அதுதான் என்பதால், எந்த சிக்கலும் இல்லாமல் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 
அந்த ஊரில் ஒரு முறை  சாருநிவேதிதாவை பேச அழைத்திருந்தார்கள். 
சாரு நிவேதிதா வெளிப்படையானவர், ஓபன் மைண்ட்டெட், எந்த ஒரு கலாச்சாரத்தையும் பழக்கத்தையும் கேவலமாக பார்க்கும் குணம் கொண்டவர் அல்ல என்பதால் அவரை அழைத்திருந்தார்கள். 
சாரு நிவேதிதாவும் அவர்களுடன் உரையாடிவிட்டு, மாலையில் மது அருந்திவிட்டு, அந்த ஊர் வழக்கப்படி யாரோ ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். 
அந்த ஓர் இரவின் உறவின் மூலம் பிறந்த ஒரு குழந்தை சாரு நிவேதிதாவின் முக ஜாடையில் இருந்திருக்கிறது. 
இவர் முகம் கொஞ்சம் வித்தியாசமான முகம் என்பதால் பலருக்கும் அது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. 
அந்தப் பையனை மட்டும் அந்த ஊர்க்காரர்கள், சாரு நிவேதிதா மகனே, சாரு நிவேதிதா மகனே என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதை அவர்கள் ஒரு வசையாக தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இருந்தாலும், மற்றவர்களுக்கு இது கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கிறது. 
இதைத்தொடர்ந்த பல செயல்கள் மற்றும் மன உளைச்சல்களால் அந்த ஊரின் கலாச்சாரமே அழிந்து போய், பலரும் வெளியே வந்து, புது சமூகத்தில் கலந்து, பல்வேறு ஊர்கள் நாடுகள் எனப் பிரிந்து சென்று விட்டார்கள்.
மற்ற மகன்களுக்கு, சாரு நிவேதிதா பெயரை கேட்டாலே எரிய ஆரம்பித்திருக்கிறது. 
சாருநிவேதிதா பெயர் எங்கேயாவது தென்பட்டாலே போதும்…
சாரு ஒரு மெண்டல்,சாரு ஒரு அயோக்கியன் சாரு ஒரு பொம்பளை பொறுக்கி சாரு ஒரு பைத்தியம் 
எனப் புலம்ப ஆரம்பிப்பார்கள்…
அங்கிருந்து ஓடி வந்து வெவ்வேறு வேலைகள் செய்து கொண்டிருக்கும் பிள்ளைகளும் அதை ஆராதித்து, சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள். 
ஒருமுறை, உங்கள் கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் விட்டுவிட்டு, வெவ்வேறு இடங்களில் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்வதற்கான உந்துதல் எப்படி கிடைக்கிறது என்று கேட்கப்பட்டது. 
ப்ளைண்டிங் ஆப்சன் ஆப் தி லைட் நாவலில் எப்படி, புதைகுழி சிறையில் இருந்து கொண்டே பைபிள் படித்து நம்பிக்கை வளர்த்துக் கொண்டார்களோ, 
அதுபோல நாங்கள் கும்பலாக சேர்ந்து ஒவ்வொருவராக சாருவை திட்டி திட்டி, வாழ்வதற்கான உந்துதலை உண்டாக்கிக் கொள்கிறோம் என்று கூறினார்கள். 
அப்போது பலத்த கரகோஷம் எழுந்தது.
அந்த கும்பலில் இருந்த சாருநிவேதிதா மகன் மட்டும் மனப்பிறழ்வு ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டான்.