அவதூறுக்கு ஒரு எதிர்வினை (1)

ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி நரசிம்மன்:

ஒரு பதிப்பகத்தின் ஜீவனே எழுத்தாளன்தான். நாம் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் என்று இல்லாமல் ஒட்டுமொத்த எழுத்தாளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டியது எந்த ஒரு பதிப்பகத்தின் கடமை என்று நினைக்கிறேன்.

மிஷ்கினிடம் வேலை பார்த்த அசோசியேட் டைரக்டர் அந்த கேரக்டர் சாருவை வைத்துதான் படத்தில் அமைத்தோம் என்று சொல்வதே பொய் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும், உங்களை நம்பி ஒரு வார்த்தை பேசியவரின் கருத்துக்களை இப்படி வெளியே பேசுவது அநாகரிகத்தின் உச்சகட்டம்.

அவர் இலக்கியவாதியா இல்லையா ?அவர் எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ இவை அனைத்தும் உங்கள் தனிப்பட்ட கருத்து. இதை வைத்து நீங்கள் ஒரு அற்புதமான ஆய்வுக் கட்டுரைகூட எழுதலாம் அது உங்கள் சுதந்திரம். உங்கள் வழிக்கே வராத, இத்தனைக்கும் நான்கு நாட்கள் முன்பு நீங்கள் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பற்றிச் சிலாகித்து பேசிய ஒரு மூத்த எழுத்தாளர் பற்றி எழுதும்போது காறி உமிழ்வது போன்ற வார்த்தைகளை உபயோகிகித்து அவரைத் தரம் தாழ்த்திப் பேசுவது பெரும் அதர்மம்.சில நேரங்களில் ஏதோ ஒரு வேகத்தில் நம் மூளை நம் சொல் கேட்டு வேலை செய்யாமல் இப்படி முகநூலில் ஒரு ஐம்பது லைக்ஸ் அள்ளிக் கொள்ளும் என அவதூறாக எழுதுவது வாடிக்கையாகிவிட்டது. இதில் எழுதப்படுபவரின் தரத்தை விட எழுதியவரின் தரம்தான் தெளிவாக தெரிகிறது. எழுதியது தவறு எனத் தெரிந்தவுடன் முதலில் அந்தப் பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்பது உங்களை உயர்த்தும் ஒருபோதும் தாழ்த்தாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் எங்கள் பதிப்பகத்தின் மிக முக்கியமான அங்கமாக எங்கள் பதிப்பகத்தின் மையப்புள்ளியாக எங்கள் பதிப்பகத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் எங்களையும் உட்பட நாங்கள் மதித்து மரியாதை கொடுக்க வேண்டியது எழுத்தாளர்களுக்கு மட்டுமே . இந்த ஒரு எண்ணமே ஒரு பதிப்பகத்தை உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன். ஒரு பதிப்பாளராக இப்படி ஒரு பதிவு அதுவும் நாங்கள் பதிப்பிக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி வந்ததை எண்ணி வருத்தப்படுகிறேன் ஒரு சக பதிப்பாளரின் செயலை எண்ணி வெட்கப்படுகிறேன்.