நன்கொடையும் இலவசமும்…

2011இல் வெளிவந்த எக்ஸைல் நாவலின் முதல் வடிவம் பத்து பிரதிகள் என்னிடம் உள்ளன. தேவைப்படுவோர் எழுதவும். அனுப்பி வைக்கிறேன். அது இனிமேல் மறுபிரசுரம் ஆகாது. எனவே collectors’ copyதான். விலை இல்லை. நன்கொடைதான். எழுதுங்கள். மேற்கண்ட குறிப்பில் உள்ள நன்கொடை என்ற வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் விதத்தில் எழுதி விட்டேன். அதற்காக வருந்துகிறேன். நண்பர்கள் கோபப்பட வேண்டாம். நன்கொடை என்ற வார்த்தையைப் புத்தக உலகில் பலரும் கேள்விப்பட்டதில்லை என்பதையே எனக்கு வந்த எக்கச்சக்கமான கடிதங்கள் தெரிவிக்கின்றன. பல ஆங்கிலப் புத்தகங்களில் விலை போட்டிருக்க மாட்டார்கள். நன்கொடை என்றே போட்டிருப்பார்கள். அதன் பொருள் அந்தப் புத்தகம் நன்கொடையாக வாசகர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. இந்தப் புத்தகத்துக்கு விலை வைக்க முடியாது. எவ்வளவு விலை வைத்தாலும் அது இதற்கு ஈடாகாது. எனவேதான் நன்கொடை என்று போட்டு ஒரு பெரும் தொகையைப் போட்டிருப்பார்கள். அநேகமாக கலெக்டர்ஸ் காப்பிக்கெல்லாம் அப்படித்தான் இருக்கும்.

கடிதம் எழுதிய பெரும்பாலான நண்பர்கள் நன்கொடை என்பதை இலவசம் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதற்காகத்தான் வருந்துகிறேன் என்று எழுதினேன். தங்களுக்குத் தவறான அர்த்தம் தொனிப்பது போல் எழுதி விட்டதற்காக. அவர்கள் நினைப்பது போல் இருந்திருந்தால் இலவசமாகத் தருகிறேன் என்று எழுதியிருப்பேன்.

என் எழுத்தோடு பரிச்சயம் உள்ளவர்களுக்குப் புரிந்து விட்டது. ஒரு நண்பர் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார். அவர் பணமே அனுப்பியிருக்க வேண்டியதில்லை. அவர் வாசகர் வட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவர், எனக்கு மிக நெருக்கமானவர். எனவே நன்கொடை அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகத்தை அனுப்ப இருக்கிறேன். நண்பர்களே, ஏற்கனவே என் ப்ளாகில் எழுதுவது அனைத்துமே இலவசமாகத்தானே கிடைக்கிறது? ஆயிரத்தில் ஒருவர்தானே சந்தா/நன்கொடை அனுப்புகிறார்? அதிலும் ஒரு பத்து பேர்தான் தொடர்ந்து மாதாமாதம் அனுப்புகிறார்கள். புதிதாக ஒருவர் கூட அனுப்புவதில்லை. அப்படியிருக்க ஒரு collectors’ copyயையுமா இலவசமாகத் தர முடியும்?

மேலும், எதையும் இலவசமாகப் பெறுவதோ கொடுப்பதோ தவறு என்று நினைப்பவன் நான். லாசரா பற்றி ஒரு பிரமாதமான நிகழ்ச்சியை சப்தரிஷி சொல்லுவார். ஒரு சிறுபத்திரிகை ஆசிரியர் லாசராவிடம் கதை கேட்டாராம். என்ன சன்மானம் தருவீர்கள்? இது லாசரா. “சார், என்னிடம் பணமே கிடையாதே?” இது பதில். லாசரா அதற்கு “நான் பணம் கேட்கவில்லையே? உங்களால் பதிலுக்கு என்ன தர முடியும்? இலவசமாகக் கொடுப்பதிலோ பெறுவதிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தப் பொருளுக்கு மதிப்பு இருக்காது” என்கிறார். பிறகு அந்த ஆசிரியர் வேறு ஏதோ ஒன்றைத் தந்து கதை பெறுகிறார். அது என்ன அந்த ஏதோ ஒன்று என்பது மறந்து விட்டது. அவர் தோட்டத்தில் விளைந்த பூசணியாகக் கூட இருக்கலாம்.