எனக்குப் பூனைகளைப் பிடிக்காது : நிர்மல் ம்ருன்ஸோ

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது. பூனைகளைக் கொஞ்சுவது, உணவு வைப்பது போன்ற எதிலும் ஈடுபாடே கிடையாது. சிலர் அதன் பட்டுத் தோலை வருடி அது சுகத்தில் சொக்குவதைப் பார்த்து மகிழ்வார்கள். எனக்கு பூனை என்பது எல்லா உயிரினம் போல அதுவும் மரியாதைக்குரிய ஒரு உயிரினம், அவ்ளோவுதான் !

இப்போது என்னவென்றால் வீட்டிலிருந்து வெளியே கால் வைத்ததும் இரண்டு பூனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. யார் வீட்டுப் பூனைகளோ அல்ல. தெருப் பூனைகள். நாம் நடந்து செல்லும்போது குறுக்கு மறுக்காக நடக்கிறது. என் கால்களுக்கிடையில் ஓடுவது, என் காலில் அதன் உடலை கொண்டு தேய்ப்பது என எப்பொழுதும் என்னைப் போட்டுப் படுத்தி எடுக்கின்றன. என்னதான் செய்தாலும் கீழே குனிந்து அவைகளை நான் தொடுவதில்லை. வருடுவதில்லை. குறிப்பாக அவைகளின் கண்களைப் பார்ப்பதில்லை . பூனைகளின் கண்கள் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களின் கண்களும் நம்மை மயக்கும்.

சில நேரம் பேசுவேன்.

“என்ன வேணும்?”

“எங்க உங்க அம்மாக்காரி?“

“சரி போதும், எனக்கு ஃபோன் பேசணும்.”

இப்படி ஏதேனும்…

இவ்வளவுதான் எனக்கும் பூனைகளுக்கும் இடையில் இருந்து வரும் தொடர்பு. நேற்று வீட்டுக்கு வெளியே வந்து சாருவோடு ஃபோன் பேசிக் கொண்டிருந்தேன். பசங்கள் ஆன் லைன் வகுப்பு என்பதால் நான் வீட்டை விட்டு வெளியே சென்றுதான் பேச வேண்டும். பூனையின் காதலர் சாரு. என்னவோ தெரியல, நம்ம பூனையின் ஆட்டம் அதீதமாக இருந்தது. என்னமோ சத்தம் போட்டு என் கால்களுக்கிடையில் ஓடிக் கொண்டே இருந்தது. நானும் ஒவ்வொரு இடமாக மாறினாலும் பூனையின் அதற்றல் உரசுதல் மியாவ்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. நாம் ஒருவரிடம் பேசும் பொழுது இப்படி கால்களுக்கிடையில் டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? எனக்கு எரிச்சல் வந்தது. சாருவிடம் இந்த நிலவரத்தை ஃபோனில் சொன்னேன். ஆச்சரியப்பட்டார். பொதுவாக பூனைகள் இப்படி சுத்தாதே என்றார். போட்டோ எடுத்து போடுங்கள் என சொன்னார்.

ஃபோன் பேசி முடிக்கும் பொழுது அந்தப் பூனை செஞ்சது என்னை மிரள வைத்துவிட்டது. என் டிராக் பேண்ட்டைப் பிடித்து சர சரவென என் கால்களில் ஏற ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் விட்டால் மரம் ஏறுவதைப் போல ஏறி தோளுக்கு வந்திருக்கும். மெல்ல நகர்ந்து தவிர்த்து நடந்தேன். ஒருவேளை என் ஃபோனை வாங்கி சாருவுக்கு ஹெலோ சொல்ல ஆசைப்படுகிறதோ என்று கூட தோன்றியது. சாருவுக்காக போட்டோ எடுத்து அனுப்பிவைத்தேன். நான் அனுப்பிய ஃபோட்டோவுக்கு சாருவிடமிருந்து வந்த ஒரு வரி பதில்.

You are blessed!

May be an image of cat

(நிர்மல் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவு. ஒரு சிறுகதை போல் இருந்ததால் இங்கே பகிர்கிறேன். You are blessed என்ற தலைப்பும் இந்தக் கதைக்குப் பொருத்தமே! – சாரு)