பிறழ்வெழுத்து பற்றி அராத்து: ஒரு விவாதம்

அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது:

சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி அவர் எழுத்து பற்றி சின்ன விவாதம் ஓடியது. நல்ல விஷயம் தான். என் பங்குக்கு கொஞ்சம் ஞானும்.

டிரான்ஸ்கிரஸிவ் ரைட்டிங்க்

பிறழ்வெழுத்து – உபயம் ஜெயமோகன்

மீறல் எழுத்து – பொது இலக்கிய வாசககர்கள்

இதில் டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங்க் என்பது கேட்க கொஞ்சம் கெத்தாக இருக்கிறது. அதன் அர்த்தத்தை தேடினாலும் ஓரளவு ஓக்கேவாக இருக்கிறது.

டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங்க் என்பதை விக்கிபீடியா சொல்வதை வைத்து அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. அது சொன்னதன் பிறகு யாரும் டிரான்ஸ்கிரஸிவ் ரைட்டிங்கை அப்படியே சிரமேற்கொண்டு எழுதவில்லை. சிலர் எழுதியதை பொதுமைப்படுத்தி அது சொல்கிறது.

ஜெயமோகன் சொல்லும் பிறழ்வெழுத்து தான் சரி என சாரு நிவேதிதா சொல்லி இருக்கிறார். எனக்கு அது ஏற்புடையதாக இல்லை. பிறழ்வெழுத்து என்றால் எனக்கு நகுலனும் , கோபிகிருஷ்ணனும் ஒத்து வருகிறார்கள்.

மீறல் எழுத்தும் எனக்கு சிலாக்கியமாகப் படவில்லை. ஏனெனில் சாரு எழுத்தில் எந்த மீறலையும் நான் பார்க்கவில்லை.

“சொன்னா சொன்ன நேரத்துக்கு வாடா , வர முடியாட்டி எவ்ளோ லேட்டாகும்னு சொல்லிடு என்கிறார். “

“மேட்டர் பண்ண ஆசைப்பட்டா , நாகரீகமா சொல்லிட்டு , ஒத்துகிட்டா மேட்டர்  பண்ணு , அத்து மீறாதே … ! அக்கா , தங்கச்சி , தோழின்னு சொல்லிட்டு மொலையை கசக்காதே ” என்கிறார்.

“குடிச்சா குடி , நல்ல சரக்கா குடி , நீயே வாங்கிட்டு வந்து குடி , அடுத்தவன டிஸ்டர்ப் பண்ணாதே ” என்கிறார்.

இது எல்லாத்தையும் விட , பூனைக்குட்டி கிட்ட லவ் காட்டு , நாயை கட்டிப் புடிச்சிக்கோ , செடி கொடிங்க கிட்ட பேசு , மீனுக்கு நாம பேசறது தெரியும்னு எம்பெருமான் காலடியில சொர்கத்துல ஒக்காந்துட்டு பேசற மாதிரியே எழுதிட்டு இருக்கார்.

இதுல என்ன மீறல் ?

மீறல்னா என்னான்னு தெரியுமா ?

பொதுவா இங்க மொலை , யோனி , மது , புணர்ச்சின்னா மீறல் என கொள்ளப்படுகிறது. அது அல்ல மீறல்.

அவருடைய ராஸலீலாவில் , நான் தான் ஔரங்கசீப்பில் , புதிய எக்ஸைலில் ஒரு மீறலும் இல்லை. அது பிறழ்வெழுத்தும் இல்லை என்பது யம் துணிபு.

ஜீரோ டிகிரி ஒரு மயக்கும் டெக்ஸ்ட். அதை கவிதைக்கு அருகில் வைக்கலாம். அல்லது ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி. சரி , சாருவுக்கு பிடித்த மொஸார்ட் சிம்பொனி போல. இதிலும் மீறலும் பிறழ்வெழுத்தும் இல்லை.

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் ஒரு “ரா” வான நாவல் . தமிழ் நாவல் உலகுக்கு அது ஒரு அதிர்ச்சி மதுப்பீடு அளிக்கும். அவ்வளவுதானே அன்றி , அது பலரும் வாழந்துகொண்டிருக்கும் , வாழ்ந்து பார்த்த ஒரு வாழ்க்கை. அதை சாரு அப்போது தைரியமாக ஒரு யூனிக் ஃபார்மேட்டில் கொடுத்தார்.

 இலக்கியம் எப்போதும் மனித வாழ்க்கைக்கு முன்னே செல்ல வேண்டும். இங்கே மனித வாழ்க்கைக்கு பல வருடங்கள் முன்னால் கற்பனையில் , ரொமாண்டிசைஷேனில் எழுதப்படுவதே இலக்கியம் என இருந்தமையால் சாருவின் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் ஒரு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. சுஜாதா , பழுப்பாக மிதந்து செல்கிறது என எலீட்டாக சொன்னார்.

எனக்கு சாருவை மிகப்பிடிக்கும் பல வாசகர்களைத் தெரியும். அவர்களில் பலர் உலக இலக்கிய வாசகர்களோ , இலக்கியவாதிகளோ அல்ல. அதே நேரத்தில் சென்ஸிபிளானவர்கள்.

ஏன் அவர்களுக்கு சாருவை , அவர் எழுத்தை அவ்வளவு பிடிக்கிறது ?

சாருவின் எழுத்தை எப்படி வகைப்படுத்துவது ?

சாரு நிவேதிதா போஸ்ட் மாடர்ன் ரைட்டர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது அவருடைய ஒவ்வொரு வரியிலும் நெளிந்துகொண்டே இருக்கும்.

சாரு ஒரு காண்டெம்பரரி ரைட்டர் . அவ்வளவுதான்.

சாரு ஒரு புதிய மொழி நடையை உருவாக்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் , மனிதர்களின் தற்கால வாழ்க்கைக்கும் , இலக்கியத்துக்கும் இடையில் உள்ள பெரும்  இடைவெளியை குறைத்து இருக்கிறார். இதுவரை தமிழிலக்கியத்தில் இல்லாத ஒரு சிந்தனா முறையை கொண்டு வந்திருக்கிறார்.

இலக்கியம் என்றால் என்ன தெரியுமா ? ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு குகைக்குள் போகும் போது , மனித மனங்களின் சிடுக்குகளை , மனித மனக்களின் பேரெழுச்சிகளை என்றெல்லாம் இருந்த இலக்கியத்தை….

“ஆட்டோவுல போய் எறங்கி , குவாட்டர் அடிச்சிட்டு , பரோட்டா சால்னா சாப்புடறப்போ” என்பதையும் இலக்கியத்துக்குள் கொண்டு வந்து இலக்கியத்தை ஜனநாயகப்படுத்தியவர். சமகாலத்துக்குள் நவீன தமிழிலக்கியத்தை இழுத்து வந்தவர்.

மீன் வாங்கபோவது , பப்பில் பியர் ஆர்டர் செய்வது , குப்பை போடுவது , மனைவியுடன் மல்லுக்கட்டு , ஹாத்வே பிராண்ட் பேண்ட் காரன் பிரச்சனை என அனைத்தையும் சர்வ சாதாரணமாக ஒரு இலக்கிய சென்ஸிபிளிட்டியுடன் கலந்து விட்டவர் எனச் சொல்லலாம்.

எனவே இவரை வகைப்படுத்த வேண்டாம். இவரே மெயின்ஸ்டிரீம். காண்டம்பரரி மெயின்ஸ்டிரீம்.

***

அராத்துவின் உள்ளடக்கம் எனக்குப் பிடித்தாலும் அவரது மொழி மீது எனக்கு விமர்சனம் உண்டு.  காண்டெம்பரரி ரைட்டர் என்பதை சமகாலத்திய எழுத்தாளர் என்று சொல்லலாம்.  ஆக, அந்தப் பிரச்சினையை விட்டு விட்டு பிறழ்வெழுத்து பற்றிய அவரது அபிப்பிராயங்களுக்குச் சென்றால், அது பற்றி எனக்கென்று முடிந்த முடிவாக எந்த அபிப்பிராயமும் இல்லை.  இன்று ஒன்று சொல்லி விட்டு, நாளையே அபிலாஷின் கட்டுரையைப் படித்து விட்டு என் கருத்தை மாற்றிக் கொண்டு விடுவேன். 

ஆனாலும் என்னுடைய காமரூப கதைகள் பிறழ்வெழுத்து வகைமையில்தான் வரும்.  உண்மையான ட்ரான்ஸ்கிரஸெவ் எழுத்து என்றால், அது ஜார்ஜ் பத்தாயும் அதற்கு முன்னால் மார்க்கி தெ ஸாத்-உம்தான்.  ஓரளவுக்கு வில்லியம் பர்ரோஸைச் சேர்த்துக் கொள்ளலாம்.  மார்க்கி தெ சாத் போல் நான் எழுதியிருந்தால் இந்நேரம் என்னை சிறையில் தள்ளியிருப்பார்கள். எனக்கென்று என் மனைவி கூட இருந்திருக்க மாட்டாள்.

மற்றபடி, அராத்து எதையெல்லாம் என் எழுத்தின் தன்மையாகச் சொல்கிறாரோ அதே தன்மைகளை வைத்துத்தான் ஜெயமோகன் என்னை பிறழ்வெழுத்து என்று சொல்கிறாரோ என்னவோ? 

பிறழ்வெழுத்து – ட்ரான்ஸ்கிரெஸிவ் – என்பதையெல்லாம் தாண்டி என் எழுத்தை எப்படி வரையறுக்கிறீர்கள் என்று என்னைக் கேட்டால் தயக்கமே இல்லாமல் ஆட்டோஃபிக்‌ஷன் என்று சொல்லுவேன்.  உலகில் எனக்கு முன்னே ஒன்றிரண்டு பேர் ஆட்டோஃபிக்‌ஷன் எழுதியிருக்கலாம்.  ஒருவர் பேரைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள்.  ஃப்ரெஞ்ச் துப்ரோவ்ஸ்கி.  அவருடைய பத்து நாவல்களும் இன்னும் ஆங்கிலத்தில் கூட மொழிபெயர்க்கப்படவில்லை.  மொழிபெயர்க்கவே முடியாது என்கிறார்கள்.  ஏனென்றால், அவர் நிறைய சிலேடைகளைப் பயன்படுத்துகிறார்.  அவர் உயிரோடு இருந்த போது கடைசி காலத்தில் என்னோடு தொடர்பில் இருந்தார்.  நம்முடைய ஸீரோ டிகிரியையும் வாசித்திருப்பதாக எழுதியிருந்தார். 

ஆக, ஆட்டோஃபிக்‌ஷன் என்ற புதிய இலக்கிய வகையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை நம் தமிழைத்தான் சேரும்.  என்னைத்தான் சேரும் என்று சொல்ல மாட்டேன்.  நான் நகுலனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டேன்.  என் அப்பன் நட்ட செடியை நான் விருட்சமாக்கினேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி ஆட்டோஃபிக்‌ஷன்தான் உலக இலக்கியத்துக்கு நம் தமிழின் பங்களிப்பு, கொடை.

ஆனால் ஆட்டோஃபிக்‌ஷனை யார் வேண்டுமானாலும் எழுதி விட முடியாது.  அதற்கு சில பிரேதங்களின் மீது நடந்தாக வேண்டும். யாரோ வெளியாட்களின் பிரேதம் அல்ல.  நம் உயிருக்கு உயிரானவர்களின் பிரேதம்.  சமீபத்தில் நான் எழுதிய “பசி மற்றும் இம்சை பற்றிய ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் கதை”யை சாதாரணமாக ஒருவர் எழுதிவிட முடியுமா?  அந்தக் கதையை நீங்கள் எழுதியதாகக் கற்பனை செய்து பாருங்கள்.  விழி பிதுங்கி விடும்.  பிரேதத்தின் மீது நடந்திருக்கிறேன்.  சமயத்தில் என் பிரேதத்தின் மீதும்.