பிறந்த நாள் வாழ்த்து

ஜிமெயிலில் உனக்கு இடம் தீர்ந்து விட்டது. இனிமேல் தேவையெனில் பணம் கட்டு. இல்லாவிட்டால் உனக்கு இனி மெயில் வராது. நீயும் மெயில் அனுப்ப முடியாது. இப்படி ஜிமெயிலிலிருந்து ஒரு வாரம் முன்பு கடிதம் வந்தது. அதனால் ஐந்த ஆண்டுகளாக வந்த கடிதங்களைப் படித்து பதில் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கடிதம் இது. படித்ததும் உற்சாகமாக இருந்ததால் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். 20 டிசம்பர் 2019 அன்று எழுதப்பட்ட கடிதம்.

***

சாரு நிவேதிதாவின் எழுத்துகள் அனைத்தையும் அனேகமாகப் படித்துள்ளேன். அவர் பேசிய அனைத்து காணொலிகளையும் பார்த்துள்ளேன். அதனால் நான் அவதானித்த வரை அவருடைய பண்பு நலன்களைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். ஆனால், அவரை இதுவரை நேரில் சந்தித்ததில்லை. எழுத்தின் மூலம் சிலரை உள்ளுணர்வில் ஊடுருவும் திறன் இருப்பதாக நம்புவதால்- இதைச் சொல்கிறேன்.
சாரு சிந்தனை அளவில் எந்த அடையாளத்துடனும் தன்னைப் பொருத்திக் கொள்பவர் அல்ல. நிஜவாழ்விலும் ஒரு ஐரோப்பியக் குடிமகனாகவே அவரை உணர்கிறார். அவர் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவருடையச் சிந்தனையே அதற்குக் காரணம். ஏனெனில், தந்தி டிவி விவாதத்திற்குப் போய்விட்டு வந்த அடுத்த நொடியே, ‘பாண்டே என்னைப் பேசவிடவில்லை. இனிமேல் அந்தப் பக்கம் வர மாட்டேன்’ என்று உண்மை சொல்லும் மனம் தமிழ் எழுத்தாளர்களில் அவருக்கே இருக்கிறது. 
அதையும் இப்படிச் சொல்கிறார், “என்னோடு சரி சமமாக ஹாய் கூடச் சொல்லத் தகுதியற்றவர்கள், என்னோடு விவாதிப்பதற்குப் பெயர் விவாதமாம்.” நம் எழுத்தாளர்கள் ஒரு டிவியில் பேசி விட்டு அடுத்த நொடி எப்படி நெக்குருகுவார்கள் என்பதை இதோடு ஒப்பிடவும்.
சாரு பேசும் காணொலிகளைப் பார்க்கவும். 15 நிமிட காணொலியிலேயே முதலில் சொன்ன கருத்தை கடைசியில் மறுத்து வைத்திருப்பார். கூர்ந்து கவனித்தால் தெரியும். அவருடைய சிந்தனையே அப்படித்தான். எந்த ஒன்றிலும் பற்று இல்லாத மனம் அவருடையது. அதனால்தான் அவருடைய கருத்துகள் அடுத்த நொடியே மாற்றமடைகின்றன. அதனால்தான் இயல்பிலேயே அவருடைய எழுத்துகள் சிதறுண்டு கிடக்கின்றன.
பின் நவீனத்துவம் இங்கேதான் வருகிறது. சிதறுண்ட சிந்தனைகளின் கருத்தாக்கம் இறுதியில் என்ன? தனிமனித விடுதலை தான். அது மட்டுமே அவருடைய எழுத்து. அவருடைய வாழ்வு. அது அவர் வாசித்த ஆசிரியர்கள் தந்ததாக இருக்கலாம். இல்லையேல் அவருடையச் சிந்தனையின் தொடக்கப் புள்ளியே அதுவாக இருக்கலாம். மனம் எப்போதும் சார்பு நிலையுடையது. விரும்பியதையே ஆராதிக்கும். அதைத் தேடியே ஓடும். வாசிக்கும். இதுதான் நிஜமென்றும் தோன்றுகிறது. 
சாருவின் முதல் நாவலும் (எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்) தனிமனித விடுதலையைத்தான் பேசுகிறது. அடையாளங்களை அழித்து தனியாக வெளியே வா என அது அறைகூவுகிறது. நம் கலாச்சாரவாதிகளின் பழமைவாதச் சிந்தனையையும் அது உடைக்கிறது.
இந்த இடத்தில்தான் மார்க்ஸியவாதிகளும் ஆன்மீகவாதிகளும் மதவாத பாஸிஸ்டுகளும் அவரோடு முரண்படுகிறார்கள். ஏனெனில், இவை மூன்றும் மனிதத்திரளை சித்தாந்த அடிப்படையில் திரட்டி அதிகாரத்தை அடைய நினைக்கின்றன. அல்லது ஆன்மீக மண்ணாந்தைகள் ஆக்குகின்றன.

அடுத்து குடும்ப உறவுகள், அது சார்ந்த நம்பிக்கைள், பிடிப்புகள், பற்றுகள்.
சாரு அங்கே தான் நிற்கிறார். ‘இந்தக் கூட்டத்துடன் சேராதே, உனக்கான வாழ்வைக் கொண்டாடி வாழ்’ என்று சொல்கிறது அவருடைய எழுத்து. தமிழில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களின் சிந்தனையில் அபரிமிதமானச் சிதறலை ஏற்படுத்தியவர் சாரு தான். 
அதனால்தான் சாருவுக்கு எதிர்த்திசையில் நின்ற ஜெயமோகனே சொல்கிறார், ‘அப்படிப் பார்த்தால் தமிழின் ஆகப்பெரும் கலகக்காரன் சாரு நிவேதிதா தான். ஈவெரா உறை போடக்கூடக் காணாது’ என்று.
இதை நான் அன்றாட வாழ்விலும் உணர்ந்திருக்கிறேன். பெரியாரை வாசித்து சாதி வெறியில் திரியும் பலரை நேர்வாழ்வில் பார்த்ததுண்டு. சாருவை வாசித்தவர்களில் சாதி அபிமானிகளைப் பார்த்ததில்லை. அவருடைய எழுத்தின் அடிநாதமான ‘அடையாளத்திலிருந்து வெளியே வா’ என்ற அழைப்பே அதற்குக் காரணமாக இருக்கலாம். 
இன்னும் விடுபட்டது நிறைய இருக்கலாம். இது ஒரு கோணம்தான். இதிலும் முரண்கள் இருக்கலாம். ஏற்றுக்கொள்ள முடியாதவை ஏராளம் இருக்கலாம். அது அவரவர் பார்வை. என் சிந்தனையை வடிவமைத்த ஆசான்களில் ஒருவரான சாருவுக்கு வாழ்த்துகள்! 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாரு!

சதீஷ்குமார்

20.12.2019.