நாவல் – எழுத்து = விலக்கப்பட்டவற்றால் கட்டமைக்கப்படுகிற எச்சம் : நாகார்ச்சுனன் (எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் மீதான மதிப்பீடு)

(ஜெயமோகன் தளத்தில் என் எழுத்து பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன. அதோடு கூட ரொம்ப காலம் முன்பு என் எழுத்து பற்றி வந்த கட்டுரைகளையும் ஜெ. தளத்தில் வராத கட்டுரைகளையும் இங்கே மீள்பதிவு செய்கிறேன். பின்வரும் கட்டுரை என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலுக்கு நாகார்ச்சுனன் எழுதிய மதிப்புரை. இப்போதைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் புத்தகத்தின் கடைசியில் இந்தக் கட்டுரை வந்துள்ளது. அந்த விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இதை வெளியிட அனுமதி அளித்த நாகார்ச்சுனனுக்கு நன்றி.

இதேபோல் ஸீரோ டிகிரி நாவலுக்கு ரமேஷ் பிரேதன் ஒரு மதிப்புரை எழுதினார். அது என்னிடம் இல்லை. கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.

சாரு)

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் விமர்சிக்கப்படுவதற்கு முன்பு முதல் பாரா:இந்த நாவலானது, எவர்சில்வர் பாத்திரங்களாகவோ தமிழ்ச் சூழல் என்று அறியப்பட்டுக் கொண்டிருக்கிற பிரபஞ்சவிகாசக் காயலான்கடையில் ஹீரோக்களாக வேஷம் தரித்துக் கொண்ட வர்களின் வாழ்க்கையில் நடந்தேறிய வியாபாரங்களாகவோ பார்க்கப்படுவது தெரிந்ததே.

அப்படிப் பார்ப்பவர்கள், சாவை தத்தமது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றியதாக இருந்துகொள்பவர்கள்; உண்மையில் இவர்கள் ஓராயிரம் முறை நரகத்தில் தலைகீழாய்த் தொங்கியவர்கள். இதற்குக் காரணம், சாவை வெளியேற்றுவதன் மூலம் புகழ் வாழ்க்கை என்கிற நரகத்தில் இவர்களின் பெயர்கள் சிக்கி விடுவதுதான். இவர்களுக்கு இந்த விமர்சனத்தின் கடைசிபாரா சமர்ப்பணமாக்கப்படுகிறது. அங்கே போய் வாங்கிக்கொள்ளலாம்: விலை ரூ.3.25; அளவு 325 எம்-எல்; அரைக்காலனித்துவ – அரைநிலப்பிரபுத்துவ உள்பேட்டை வரிகள் தனி.

இனி நவீனத்துவ நாவல் எழுதுகின்ற சமுதாயம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்: இது உடல்களின் திசைநோக்கிய அரைவு (directed grinding of bodies) என்பதாக இயங்குகிறது. இந்த நவீன சமுதாயத்தில் அதிகாரம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ள அரசியல் பற்றிய வேறுபட்ட பார்வை தேவை. அதாவது அரசியல் என்பது ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டமாகக் கருதப்பட்டுக் கொள்ளாமல், கண்டபடி கலைத்துப் போடப்பட்ட அதிகாரத்துவ உறவுகளின் வலைப் பின்னலாக இருக்கிறது. இந்த வலைப் பின்னலை மேலாதிக்க நுண்-உத்திகள் (microstrategies of domination) என்றும் அழைக்கலாம்.

அதிகாரமும் அறிவுஜீவியும்அதாவது, இங்கே பிரச்சினைப்பாடாக இருப்பது அதிகாரம், அல்லது அதிகாரம் பற்றிய நுண்-பௌதிகம் (microphysics of power).

இன்னும் சொல்லப் போனால், அதிகாரம் என்பதே நுண் அளவில் இயங்குகிற உறவுகளின் கட்டமைப்புத்தான் எனலாம். ஒரே சமயத்தில் அதிகாரம் என்பது மேலாதிக்க வன்முறையாகவும் அதற்கான எதிர்வினையாகவும் (Response/resistance) சாத்தியப்பட்டுக் கொள்வதற்கான கூறுகள் எப்படிப் பட்டவை என்பதுதான் பிரச்சினை. அதிலும் இங்கே தனது அறிவுத்திறனை முன்வைத்து இயங்குபவனின் பங்களிப்பானது எந்தெந்த வகைப்பட்டதாக இருக்கிறது என்பது இது தொடர்பான இன்னொரு பிரச்சினை.

இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், அறிவுஜீவி நான் என்கிற தன்னிலையின் செயல் பாட்டுத்தளம் குறித்த பிரச்சினை இது.இதற்கான பதில் பின்வருமாறு ஆரம்பிக்கப்படலாம்: அறிவு ஜீவி என்று அறியப்பட்டுக்கொள்கிற நபரின் தற்காலத்திய செயல்பாட்டைக் கொஞ்சம் ஆராயலாம். அறிவுஜீவி என்கிற நபர் உலகு தழுவிய , மனிதார்த்த (universal, human) மதிப்பீடுகளை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டும், ஈடுபாடு காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது, இதுவரை. ஆனால் இதுவல்ல விஷயம் இனி. அறிவுஜீவி என்கிற நபர், இனியும் உலகு தழுவிய, மனிதார்த்த மதிப்பீடுகளைக் கட்டிக்காத்து வெளிப்படுவதைத் தனது கடமையாக எண்ணிக்கொள்ளமுடியாது; இந்த நபர், இனியும் மக்களின் சிந்தனாமுறைகளைத் திருத்திக்கொடுப்பதையோ அப்படிச் செய்யும்போது தனது தத்துவ நிலைப்பாடுகளை சோதித்து நிறுவிக்கொள்கிற விமர்சனத்தில் ஈடுபடுவதையோ கடமைகளாகக் கருதிக்கொள்ளமுடியாது.

இப்படிப் பார்த்தால், இனியும் அறிவுஜீவி என்கிற இந்த நபர் மனிதகுல முழுமை என்பதன் சார்பிலோ அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் சார்பிலோ பேசிக்கொள்கிற உரிமையைத் தனதாக எடுத்துக்கொண்டுவிட முடியாது என்றும் கூறமுடியும்.

இது ஏன் என்று பார்த்தால் ஜான்-ப்ரான்ஸ்வா லியோதார் (Jean-Francois-Lyotard) என்பவரின் விளக்கத்தில் பதிலைக் காணலாம். பிற்கால – நவீனத்துவவாதியான இவர் கூறுகிறார்:‘தத்துவவாதி எனப்படுபவன் வார்த்தைக் கூட்டங்களால் வர்ணம் பூசும் தொழிலாளி. அவ்வளவுதான். அதாவது, வார்த்தைகளில், வார்த்தைகளைக் கொண்டு விளையாடுபவன். அவற்றுக்கான இடைவெளியை மீறுபவன். இந்த விளையாட்டின் ஊடே அவன் செய்துகாட்டுவது (demonstrate) சொல்லாடல் களங்களில் உறைந்திருக்கும் அதிகார இயக்கத்தைப் பிரித்துப் போடுவதைத்தான்’.

எந்த ஒரு களத்திலும் அதிகாரத்துவ நுண்-உறவுகள் பற்றியதான பன்முகரீதியான அலசலுக்கான கருவிகளைத் தயார் செய்து, வருபவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவதுதான் அறிவுஜீவி என்கிற நபரின் இனியான செயல்பாடு.

இந்த அளவில் புதிய உண்மைகளாக சில வெளிப்பட்டு விடுகின்றன: சமுதாயத்தில் விரவியிருக்கிற அதிகாரமானது, அல்லது உயிராற்றலானது, எல்லையற்றதுமல்ல; பூஜ்யமாக ஆகப்போவதுமல்ல. It is neither infinite nor can be brought to an absolute zero. ‘அதிகாரம் எல்லையற்றே இருக்கிறது’ என்று நினைக்கப்படும் போது, அதிகாரம் என்பது வெறும் ஒடுக்குமுறையாகக் (repression) கணிக்கப்படுகிறது; மாறாக, ‘என்றோ ஒரு நாள் அதிகாரம் பூஜ்யமாகிவிடும்’ என்கிற நம்பிக்கை ஒரு கனவுலகைச் (utopia) சாத்தியப்படுத்துவதாக இருந்தாலும் அந்த நம்பிக்கை எதிர்காலம் தொடர்பானதாக இருப்பதில்லை; காரணம், அதிகாரத்தைப் பூஜ்யமாக்க விழைவதாக, கனவுலகைச் சாத்தியப்படுத்துவதாக, கூறிக்கொள்ளும் செயல்பாடுகளை, உயிராற்றலைக் குறைத்துவிடுகின்றன. எனவேதான் எதிர்காலம் பற்றிய கனவுலகைக் கைவிட்டுவிட்டு எதிர் – கனவு உலகங்கள் (anti-utopias) மற்றும் dystopias, heterotopias பற்றிக் கவனம் செலுத்தவேண்டிய சமயம் வந்துவிட்டது. இது பற்றி வேறு ஓரிடத்தில் கவனிக்கலாம்.

அதிகாரம் அல்லது உயிராற்றல் பற்றிய மேற்கண்ட சிந்தனை சாத்தியப்படுவதற்கு, மொழி மற்றும் உடல் பற்றிய பொருண்மையான புரிதல் தேவைப்படுகிறது. இப்புரிதலை நாவலுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ளதில் காண முடிகிறது: இங்கே மொழி வெறும் தொடர்பு சாதனமாகக் காணப்படாமல் பெயரிடுதலைச் சாத்தியமாக்குகிற ஒரு தொழில்நுட்ப அறிவாக (technology) அலசப்படுகிறது:

‘மொழி என்பது மனிதன் தன் இருப்பை நிலைப்படுத்துவதற் கான தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே அமைந்து வந்திருக்கிறது. பெயரற்ற ஒரு பொருளை எதிர்கொள்வது என்பது மனித இருப்பை அச்சுறுத்துவதாகவும் ஒருவகையில் அவனது இருப்பைக் குலைக்கக் கூடியதுமாகவே அமையும். அதனால் மனிதன் எதிர்கொண்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயரிடுதல் என்பது அப்பொருளைத் தன்னுடைய இருத்தலின் சூழலுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வினையாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில் மொழி என்பதன் மூலமாக மனிதன் தனது சூழலின் மீதான முதல் வினையைத் தொடங்குகிறான். எனவே மொழி என்பதே அறிவாகவும் அறிவு என்பதே பொருளின் மீதான ஆதிக்கமாகவும் செயல்படுகின்றன’ என்கிறார் பிரேம்.

வெவ்வேறு சூழல்களில் வாழ்கிற இனங்களாகிய மனிதத் தொகுதிகளுக்கு வெவ்வேறு பெயரிடல்கள் சாத்தியப்படுகின்றன. அவை ஒன்றோடொன்று உராயும்போது நிகழ்வதென்ன என்பதும் விளக்கப்படுகிறது:

‘மொழியின் மூலமாக அமைப்பாக்கப்பட்ட அறிவும், அறிவின் மூலமாகக் கட்டப்பட்ட ஆதிக்கமும் சீரற்ற பரவலை நிகழ்த்தும்போது அமைப்புக்குள்ளான ஓர் ஆதிக்க சமச்சீரின்மை உருவாகிறது. இதுவே இன்றைய சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அதிகார அமைப்புக்கு மூலகமாக அமைந்திருக்கிறது. இருவேறு நிலவியல்-சூழல்களில் (geographical environment) வளர்ந்த இரு மனிதக் குழுக்கள் தத்தமது சூழலியல் சார்ந்து ஒரு தொழில்நுட்பத்தை, அதாவது அறிவை (மொழியை) வளர்த்துக் கொண்டிருக்கும். இங்கு தனிப்பட்ட மனிதக் குழுக்களுக்குள்ளான மொழி என்பது பொருளுக்கும் பொருளை அறிதல் என்பதற்கும் இடையிலான முரண்பாட்டைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும். இந்த இருவேறு மனிதக்குழுக்களின் சமூக காலம் என்பதில் நேரும் வேறுபாடு அவை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு என்பதிலும் ஒரு வேறுபாட்டைக் கொண்டதாக அமையும். இங்கு இரு மனிதக் குழுக்களும் தமக்கேயான அடையாளங்களோடு கூடிய இனங்களாக வடிவமைந்திருக்கும் இரு இனக்குழுக்களும் ஒன்றையொன்று எதிர்ப்படும்போது அவற்றுக்கிடையிலான சமச்சீரற்ற தொழில்நுட்ப அறிவால் ஓர் ஆதிக்க மோதலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த இடத்தில் எந்த இனக்குழு தனது தொழில்நுட்ப அறிவால் மேலோங்கியிருக்கிறதோ அந்த இனக்குழு மற்றொரு இனக்குழுவை மேலாதிக்கம் கொள்ளும் ஒரு செயலைச் சாதித்துவிடுகிறது.

ஆக, வெவ்வேறு நிலவியல்-பரப்புகளில் (topography) வாழ்கின்ற இனங்களாகிய மனிதத் தொகுதிகள் மூலமாக, இத்தொழில் நுட்ப வித்தியாசமானது, வெவ்வேறான வடிவங்களில் மோதிக் கொள்கிறது. இந்த மோதலானது, பற்பல குறியீடுகளைச் சுற்றி நடைபெறுவதால், இதில் வெற்றி தோல்வி என்று எதுவுமே அறுதியானதாக இருப்பதில்லை. இத்தகைய மோதலில் ஈடுபடுத்தப்படுகிற நபராகிய மனிதத்தொகுதி, உடல்ரீதியாக தன்னைப் பொருண்மைப்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.இங்கே உடல் என்பதை உழைப்பில் ஈடுபடுத்தப்படும் அங்கங்கள் (organs) என்றோ, பாலுறுப்புகள் வழி இன்பத்துய்ப்பில் (orgasms) ஈடுபடுத்தப்படும் காயம் என்றோ கருதிவிடக்கூடாது. மாறாக, உடல் என்பதை நரம்பியல் சாத்தியப்பாடுகள் தம்மை மீறல்களாகப் (excesses, transgressions) பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக்கொள்ளும் கட்டமைப்பு (bundle) என்று கொள்ளலாம்.

இந்த நரம்பியல் சாத்தியப்பாடுகள் ஒருமுகப்படுத்தப்பட்டுவிடும் போது (homogenous) உடல்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரைவு ஏற்படுகிறது. உற்பத்தியும் (production) உபரியும் (Surplus) உபரியைத் தக்கவைத்துக்கொள்ளும் கலாச்சாரமும் (culture) வருகின்றன. மாறாக, இவை பன்முகப்படுத்தப்பட்டு விடும்போது அரைவானது சிதைக்கப்படுகிறது; உற்பத்தி ஓய்கிறது; கலாச்சாரம் என்று தேர்ந்தெடுக்கப்படுகிற ஒன்று உருவாகும் போக்கு சிதைக்கப்பட்டு மீறல்கள் சாத்தியமாகின்றன; அழகியல் மதிப்பீடுகள் அழிகின்றன; கனவுலகம் சிதைந்து போகிறது; சாவைப் பற்றிய பயமானது போய், சாவுக்கான இடைவெளியானது இங்கே பொருண்மையாகச் செயலாற்ற விழைகிறது. இப்படி செயல் சாத்தியமாகும்போதுதான் மாற்றம் என்பதும் சாத்தியம் என்கலாம்.

வெவ்வேறு நிலவியல்-சூழல்களில் வாழ்கின்ற மனிதக் குழுக்களின் மோதலால், வெவ்வேறு பெயரிடல்களின் உராய்வுகளால், குறியீட்டுத்தளங்களின் முரண்பாடுகளால், கலாச்சாரம் என்பதாக அறியப்படுவதும் அழகியல் என்பதாக உணரப்படுவதும் அழிவதை இப்படிப் புரிந்து கொள்ளலாம். இங்கே பிரச்சினை இதுமட்டுமல்ல. ஒரு நிலவியல் – சூழலில் அறிவுஜீவி என்பதாகப் புழங்கி வருபவனின் நிலைப்பாடு மற்றும் எதிர்காலம் குறித்த பிரச்சினையாகவும் இது ஆகி விட்டிருப்பது குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.

அறிவுஜீவி, கலைஞன், தத்துவவாதி என்று ஆகிவிடுபவன், நவீனத்துவத்திலும் கூட, சாவை மீறிய வாழ்வை விழைபவனாக இருக்கிறான் (He is perpetually after immortality). இவ்வாறு விழையப்படுகிற வாழ்வு, அவனுடைய பெயருடையதாக மட்டுமன்றி அவனுடைய வெளிப்பாட்டு வடிவத்துக்குமாகவும் இருக்கிறது. இந்த விழைவு, செயலைத் தவிர்ப்பதாக ஆகிறது; கடைசியில் சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்வதுமாய் இருக்கிற, சாவை மீறிய வாழ்வுக்கான, இந்த விழைவில் மாட்டிக்கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.

எழுத்து என்ற அளவில் பார்த்தால், எழுதுகிற நபரிலும் சரி, எழுதப்படுகிற வடிவத்திலும் சரி, இதன் மூலம் அர்த்தங்கள் உறைந்து போகிற தளங்களே உருவாகியுள்ளன. இத்தளங்களை உடைக்கச் செய்வதற்கு, இந்த நபரானவர், வாழ்வியலில் சுய- தகர்ப்பு (self-disintegration) செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. சுய தகர்ப்பு என்பதை தானற்ற வேறு (Other or Else) என்பதற்கான பாய்ச்சலாகக் காணலாம். இந்த நாவலும் இப்பாய்ச்சலைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ‘மனிதன் என்பவன் இப்போது எதுவாக இல்லையோ அதுதான்; இப்போது எதுவாக இருக்கிறதோ அது அல்ல’ என்று வரையறுக்கிறது. தானற்ற வேறுவுடன் தொடர்புள்ள கதை சொல்லல் (story-telling) என்ற செயல், அப்போது சாவுடன் நெருங்கி நெருங்கி உறவாடி, அதே சமயத்தில் சாவை அவ்வப்போது ஏமாற்றிவிடுவதாகவும் இருக்கிறது எனலாம். நவீனத்துவ நாவலில் இப்பிரச்சினை எப்படி அணுகப் படுகிறது என்பதை ஓரிரு உதாரணங்களுடன் பார்க்கலாம்.

கதையாகும் கார்ட்டூன் மொழி

நவீனத்துவ நாவலின் முன்னோடியான ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு (James Joyce) கதையாடலானது, உறக்கம்/விழிப்பு அல்லது கனவு/ நனவு என்பதாகப் பிடிபடுகிறது. ஜாய்ஸைப் பொறுத்தவரை, நாவல் – எழுத்து என்பது, அதன் 19ஆம் நூற்றாண்டுக்கான வரலாற்றுவாத அடிப்படைகளிலிருந்து (historicism) மாறுபட்டு, தினசரித்தனமான ஒன்றாக மாறுகிறது.

ஜாய்ஸின் முதல் நாவலான Portrait of the Artist as a Young Man புத்தகத்தில் இது இப்படிக் கூறப்படுகிறது: History is the nightmare from which am trying to awake. எனவே ஜாய்ஸில் வரலாற்று ரீதியான தர்க்கம், மொழி ஆகியவை அழிந்து, தினசரித்தனமான மொழி என்கிற unconscious சாத்தியப்படுவதற்கு ஆங்கில வாக்கியம்- வார்த்தை – எழுத்து ஆகியவை சிதைய வேண்டியிருந்தது. ஆங்கில வாக்கியம் சிதைக்கப்படும் போது அழகியலின் அழிவு சாத்தியப்படுகிறது.

சாவு பற்றிய பிரச்சினையை 19ஆம் நூற்றாண்டில் முழுமையாக அலசித் தள்ளிய களம், தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் காணப்படுகிறது. சாவுக்கும் கதை சொல்லலுக்கும் உள்ள உறவாக தஸ்தயேவ்ஸ்கி எதையாவது திட்டவட்டமாகக் கூறியிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.

எஸ்.சம்பத் எழுதிய இடைவெளி நாவலில் இப்படி வருகிறது.“சாவின் வாயிலேயே சென்று திரும்பியவர் எனும் விதத்தில் தஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவார்த்தமாக நிச்சயமாகச் சொல்லுவார் என்று தினகரன் எதிர்பார்த்தார். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கி பல நாவல்களில் சாவைப் பற்றிப் பேசியிருந்தாலும் அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம், இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சினையாகக் கண்டு அதில் அவர் முழுத் தீவிரத்துடன் பிரவேசித்துவிட்டதுதான் அதற்குக் காரணம் என்று நினைத்தார்”.

ஆக, 19ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரை சாவு பற்றிய பிரச்சினை, குற்றமும் தண்டனையுமாகிய வடிவங்களில்தான் தாஸ்தாயெவ்ஸ்கியைத் துன்புறுத்தியது. இதே பிரச்சினையை ஃப்ரான்ஸ் காஃப்கா எப்படிக் கையாள்கிறார் என்று பார்க்கலாம்: காஃப்காவின் நவீனத்துவ நாவலில் பிரச்சினையானது, தினசரித்தனமான அலுவலக fantasy–யாகக் கோடிகாட்டப்படுகிறது. காஃப்காவின் பார்வையில், குற்றம் என்ற எதுவும் வருமுன்பே தண்டனை என்பது வாழ்க்கைப் பூராவுமான தினசரி ஆஃபிஸ்தனமாக ஆகிவிடுகிறது. அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டுவிடுகிற மனிதனின் நிஜ வாழ்க்கை உண்மையில் ஒரு fantasy. இந்த நிலை ஒரு தண்டனை. இத்தகைய தண்டனையைப் பெற்றுவிட்ட ஆஃபிஸ் மனிதன், தனது அறிவைப் பயன்படுத்தி, தான் செய்துவிட்ட ஒன்றாக ‘குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அவனுடைய அறிவு, தண்டனையை அவன் ஏற்கனவே பெற்றுவிட்டதற்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்கிறது. அவன் என்றால் இனி அது ஒரு மனிதன் அல்ல; மாறாக ஒரு file, ஒரு dossier, புள்ளி விபரம், ஓர் அறிக்கை, ஒரு கார்ட்டூன் (caricature) அவ்வளவுதான்.

காஃப்காவின் Metamorphosis நாவலில் இப்பிரச்சினை இன்னும் தீவிரமாக்கப்படுகிறது. காலையில் பூச்சியாகத் தன்னை அடையாளம் காணும் கிரகோர் சம்சாவின் பிரச்சினை, பூச்சியாக மாறியது ஏன் என்பதல்ல; அன்றைய தினம் ஆஃபிஸுக்குப் போவது எப்படி என்பதுதான். ஆக, பூச்சியாக மாற்றம் பெரும் எதிர்-அழகியல் கொண்ட செயல், ஆஃபிஸுக்குப் போவது என்கிற கார்ட்டூன் தனத்துடன் இணைக்கப்படும்போது மரபான- அழகியல் காற்றில் பறக்கவிடப் படுகிறது. The Trial, The Castle நாவல்களில் காஃப்கா இதே பிரச்சினையைக் கையாள 16ஆம் நூற்றாண்டின் மதரீதியான மொழிக்குப் போகிறார். இப்படி மதம் கார்ட்டூனாக மாற்றப்படும் சாத்தியப்பாடும் இங்கே தோன்றுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால எழுத்தே இப்படி எதார்த்தத்தை மீறிய மொழியாக இயங்கும்போது, தமிழில் எதார்த்தவாதம் இன்னும் மேலாதிக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.இந்த எதார்த்தத் தள மொழி-அறிவு என்பது தன்னிலை குறித்த ஒடுக்குமுறைத் தொழில்நுட்பமாகவே (technology of the self) இருந்துவந்துள்ளது எனலாம். இதனால்தானோ என்னவோ அழகியலின் அழிவுக்கான முயற்சிகள் தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்படுவதில்லை.

‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலை விட்டுவிட்டுப் பார்த்தால், எழுத்தாளன் என்கிற தன்னிலையின் கட்டுமானத்தை, கதை சொல்பவன் (narrator, story-teller) தொடர்பான பிரச்சினைகளை, மொழியின் மேற்கூறப்பட்ட உடைப்புகளை, எதிர்கொள்ள முடியாமலேயே போய்விட்டது எனலாம். அதே சமயம் கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த சில குறிப்பிட்ட நாவல்கள் தமது பாதையில் இப்பிரச்சினையை அலசும் கதையாடல்களாக உருவாக வேண்டியிருந்தது. நாவல் எழுதுகிற, இலக்கிய ரீதியான தன்னிலை (Novelistic, literary self) என்பது ஒரு நோய்க்கூறாக ஆகிவிட்டிருக்கிறது என்றால், அதற்கான அறிகுறிகளைச் சுட்டுவதாக இந்த நாவல்கள் அமைந்தன. அவ்வளவுதான். எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலும் புதிய மொழியை, பெயரிடலைச் சாத்தியமாக்கிவிடவில்லை என்றே கூற முடிகிறது. இது எப்படி என்று பார்ப்போம்.

அறிவுஜீவியின் வம்சாவழியியல்

நாவல்-எழுத்தானது எதார்த்தரீதியாகச் செயலாற்றும் போது, சமுதாய வரலாறு (social history) என்கிறதான ஒரு documentaryத்தனமான கதையாடலை அது நியாயப்படுத்துவதைக் காணமுடிகிறது. ஒரு தளத்தில் documentary-யாகவும், இன்னொரு தளத்தில் தனக்கே உரித்தான உன்னதங்களாக கலை இலக்கியம், படைப்பாற்றல் ஆகிவற்றை உசுப்பேற்றிவருவதாக இது இருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த மாயைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் சூழலில், அறிவுஜீவி என்கிற ஜந்துவின் வரலாற்று நிலை (historic position) மீண்டும் பிரச்சினைக்குரியதாகிறது.

சமுதாய வரலாறு என்கிற நிச்சய objective சமாச்சாரம் அழித்துக் கொள்ளப்பட வேண்டிய மாயை. இந்த வாக்கியம் உண்மை எனப்படும் பட்சத்தில், சிந்தனை வரலாறு (intellectual history) என்பதும் இப்படியாக அழித்துக்கொள்ளப்பட வேண்டிய மாயையே. இவ்வாறு அழித்துக் கொள்ளப்படும் போக்கில் அறிவுஜீவி என்பதாக வளையவரும் நபரின் வம்சாவழியியல் (genealogy of the intellectual) உருவாகிறது. இதில் விலக்கப்பட்டவற்றில் எச்சங்கள் மனம்/உடல் சார்ந்தவை என்பதால், எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் இவற்றைக் கண்டறிவது மிகச் சுலபமாகிவிடுகிறது.நாவலில் காணப்படும் ஜாப்ளானின் பைத்தியக்காரத்தனம், ராபர்ட்டின் பேயோட்டம், ஆர்த்தியின் வெளி, இன்னும் சூர்யா, அருண், குருஜி ஆகியோரின் முறைசாராப் பாலுறவு சமாச்சாரங்கள் இன்னபிறவாக விலக்கப்பட்ட எச்சங்கள் வெளிவருகின்றன. இவை அனைத்தும் ஒடுக்கி வைக்கப்பட்டதன் (repressed) மூலம்தான், அறிவுஜீவி என்பதான தன்னிலையின் அடையாளங்காணல் (self-identification) சாத்தியப்படுகிறது. எனவே நாவலின் கதையாடல்-மொழி இவ்வாறான விலக்கப்பட்ட எச்சங்களின் தொகுப்பாக (accumulation) உருவாகிறது.இந்த விலக்கப்பட்ட சமாச்சாரங்கள் பேசப்படக்கூடாது என்கிற அறவியல்ரீதியான (moralistic) பார்வை விமர்சகர்கள் நடுவே இருக்கிறது தெரிந்ததே. இப்பார்வை, எழுதுதலிலும் சரி, வாசிப்பிலும் சரி, சர்வாதிகாரத்தைச் செயல்படுத்தும் ஒன்றாக இருக்கும் எனலாம்.

விலக்கப்பட்டவர்களின் பேச்சை, மொழியைக் கேட்பது, எழுதுவது என்பது இத்தகைய விமர்சகர்களுக்கு முடிவதில்லை.வெவ்வேறு நிலவியல்–பரப்புகளில் வாழும் இனக்குழுக்களாக, அறிவுஜீவிகள், சுற்ற–அமைப்பினர் (kinship structure) மற்றும் “ஜாப்ளான், பாப்பம்மாள், வேலிமுட்டி அடிக்கும் தொம்பர்கள், ரஹ்மத் லாத்தா” போன்றோர் அடங்கிய விலக்கப்பட்ட உருவங்கள் ஆகிய மூன்றைக் கூறலாம். இம்மூன்று குழுக்களும் சிற்சில குறியீடுகளைச் சுற்றி மோதும் போது இவ்வினக்குழுக்களின் வாழ்வியல் அடிப்படைகள், அறவியலைத் தாண்டி, வன்முறை ரீதியாக, வெளிக்கொண்டு வரப்பட்டே ஆகவேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையிலேயே எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலின் மொழி உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சமுதாயத்தில் ஜாதி என்பது ஓர் உள்சட்டக மொழியாக, அடிப்படை சமுதாய விலக்காக (interdiction/domination) இருக்கிறது. அப்போது அறிவுஜீவி என்பதாக வளையவருகிற நபரின் வம்சாவழியியல் அவனுடைய பிறப்பு, வளர்ப்புச் சூழ்நிலைகளிலிருந்தே, அவனுடைய சுற்ற- – அமைப்பு (kinship structure) என்ற இடத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். இதற்கு யாருமே விதிவிலக்காக இருக்க முடியாது என்கிற அளவுக்கு இந்த விலக்கப்பட்ட சமாச்சாரம் மிகத் தீவிரமாக இந்த நாவல் – மொழியின் மூலமாக நிறுவப்பட்டுள்ளது.இதே உண்மையை இவ்வளவு தீவிரமாக வேறு நாவல்கள் பதிவு செய்திருக்கின்றனவா என்று பார்த்தால், தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரம் இங்கே முக்கியமாகி விடுகிறது. பல்வேறு வகைப்பட்ட பிறழ்வுகளுடன் அறிவுஜீவியின் வம்சாவழியியலை இந்த நாவல் பதிவு செய்கிறது குறிப்பிடத்தக்கது.

பிரதாப முதலியார் சரித்திரம் வந்து நூறு வருடங்களாகி விட்ட நிலையில், இப்பிரச்சினையை நேரடியாகக் கையிலெடுக்கும் நாவல் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்தான். ஜான்பால் என்கிற எழுத்துருவங்களின் (word-beings) வம்சா வழியியல், ஜாதி ரீதியாக எழுதப்படுகிறது. இந்த எழுத்துருவங்களின் மூதாதையர் முத்துப்பிள்ளை என்கிற அதீத, மீறல் தன்மை (excess) கொண்டவர். இவரின் ஆவியானது வௌவாலின் நிழலாக (totem) அந்த ஊரின் மீது கவிழ்வதை இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது, ஆவியானது உற்பாதங்களை சமுதாயத்தில் கொண்டு வருவதாக இருக்கிறது. இந்த முத்துப்பிள்ளை ஆவியான கதையில், இவருக்குக் குற்றவியல் தன்மை (criminality) ஜாதியை மீறல் மற்றும் தகப்பன் புணர்ந்த ஊர்வேசியைத் தானும் புணர்தல் போன்ற வழக்கங்கள் இருப்பதால் தமது தந்தை ஸ்தானத்தில் உள்ள உறவினரால் இவர் அகாலமாகக் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. கொன்ற மனிதரின் வம்சம் முத்துப்பிள்ளையின் நினைவை விலக்க முயன்று தோல்வி அடைகிறது. அந்த வம்சத்தின் வழித்தோன்றல்களான பால் போன்ற அறிவு ஜீவிகளுக்கும் கூட முத்துப்பிள்ளை ஒரு சவாலாக ஆவியாக விளங்குகிறார். – இப்படியாக ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலின் வம்சாவழியியல் பகுதியானது, சமுதாய வரலாற்றையும் அறிவு ஜீவி எனப்படுகிற நபரின் வரலாற்றையும் கதையாடலின் ஊடாக நகர்த்துகிறது. இவ்விரண்டு போக்குகளும் ஒருங்கே சாத்தியப்பட, நாவலின் அலகாகிய வாக்கியம், பெரும் மாற்றத்துக்கு உள்ளாக்கப் படுகிறது. இதுவரைத்திய நாவல்- எழுத்து என்பது இந்த நாவலில் பெரும் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்று எம்.டி.முத்துக்குமாரசாமி தமது விமர்சனத்தில் கூறுவது இதைத்தான்.ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலின் அலகான வாக்கியத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. வாக்கியம் என்பது இங்கு களரீதியான உருவகங்களால் (spatialised metaphors) அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வாக்கியம் என்று ஏற்கனவே அறியப்பட்ட ஒன்றின் காரண – காரிய தர்க்கம் பெயர்த்தெடுக்கப்பட்டு விடுகிறது; ஆக, இனியான வாக்கியம் ஒவ்வொன்றிலும் (exclusions) என்பது இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது.

இந்த உண்மையை பின்வரும் நிகழ்வு – விவரணைகளிலிருந்து புரிந்து கொள்ளமுடியும்: முத்துப்பிள்ளையின் ஆவி, புரட்சி நடப்பதற்கு முன்பு, கிழிந்த சட்டை மனிதர்களின் மூதாதைப் பெண்ணின் ஆவியுடன் புணர்கிறது- ஒரு கிராமமே கனவுகளில் லயித்துச் சிரிக்கிறது- ராசப்பன் வெளியுலத்தை மறந்து சீட்டாடிக் காணாமல் போகிறார்.ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலுக்கு முந்தைய நாவல்களில் வம்சாவழியியல் என்பது பிரதானப்படுத்தப் படுவதில்லை. மாறாக, ‘சூழல்’ என்கிற எதார்த்தவாதக் கருத்தமைவு அங்கே உருவாவதைக் காண முடிகிறது. ஆனால் இந்தச் சூழல் என்கிற விஷயமே, ஜாதி ரீதியான விலக்கப்படலை, அழகியல் ரீதியாகச் செயல்படுத்துகிற ஒன்றுதான் என்பதை ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. ‘சூழல்’ என்று எதார்த்தரீதியாகச் சொல்லப்பட்ட ஒன்று, அழகியல் ரீதியாகக் கட்டமைக்கப்படும் போது, பல விலக்கப்படல்கள் (exclusions) நடக்கின்றன; ஜாதி என்கிற உள்சட்டக மொழியும் அதில் அடக்கம் என்பதுதான் இதன் அர்த்தம்.

இன்றைய தமிழிலுள்ள எழுத்து வகைகளைப் பட்டியலிட முற்படும் எந்தவொரு விமர்சன முயற்சியிலும் இது தெரியவரும். உதாரணமாக, கதையும் கடவுளும் என்று கட்டுரையில் தமிழவன் எழுதுவதைக் காணலாம். பூமணியின் பிறகு நாவலைப் பற்றி பேசும் தமிழவன், ‘syntagmatic பாணியிலுள்ள வழக்கமான எதார்த்தவாதக் கட்டமைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலில், பட்டாளத்துக்காரன் நிகழ்ச்சி மட்டுமே விதிவிலக்காக இருக்கிறது’ என்கிறார். தமக்கெதிரான புற — வன்முறையைச் சமாளிக்கிற விதமாக சக்கிலியர்கள் அமைத்துக் கொண்டுள்ள மதில்கோட்டையாக உள்ள சடங்குகள், எதிர் — வன்முறை, புராணங்கள், அதீத நம்பிக்கைகள் ஆகியவை இந்த நாவலில் இல்லை என்பதையும் தமிழவன் நிறுவிக்காட்டுகிறார். ஆக, கதை என்பது மொழிரீதியான அறிதல் முறை என்கிற அளவில் பார்க்கும்போது, சக்கிலியர்களின் மொழி–அறிதல் முறை – என்பது பிறகு நாவலில் சுத்தமாக இல்லை. பிறகு நாவலை, இன்னும் அது போன்று எத்தனையோ நாவல்களை, ‘எதார்த்தமாக’ அணுகிக் கொண்டிருக்கும் விமர்சகர்களுக்கு, இது பெரிய தலையிடியாக அமைகிறது. இந்த அறிதல் முறை இல்லாமல் போவதால்தான், எதார்த்தவாதக் கட்டமைப்பான ‘சூழலை முன்வைத்து தமிழில் எழுதுபவர்கள்’ தலித் இலக்கியம் படைத்துவிட்டதாக எவ்வளவுதான் மார்தட்டிக் கொண்டாலும் உண்மை நிலை அதுவல்ல!

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலின் முகவுரையை ஒரு சொற்பாடு (statement) என்று எடுத்துக்கொண்டால், அங்கே ‘அழகியல்’ மற்றும் அறிதல் முறை பற்றிய மூன்றுவிதமான அதிகாரப் படிநிலைகள் (hierarchies of domination) இருப்பதைக் காணமுடிகிறது. மேலே கூறப்பட்ட மூன்று விதமான இனக்குழுக்களும் அவற்றின் சுற்ற – அமைப்புகளும் (kinship structures), இவற்றோடு பொருந்திப் போவனவாகும். இருப்பினும் இந்த மூன்றுவிதமான அதிகாரப் படிநிலைகளிலும் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலின் இறுதிக்கட்டமாகிய புரட்சியில் காணப்படுவது போன்ற சடங்கியல் ரீதியான வன்முறை நேரடியாக உணர்த்தப்படுவதில்லை. அதற்கான சாத்தியப்பாடு இல்லை. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் சடங்காகக் கட்டமைக்கப்படும் ‘அறிவு ஜீவி’களிடையேயான வாக்குவாதம், சச்சரவு ஆகியவற்றில், வன்முறையானது மறைமுகமாக மட்டுமே செயலாற்ற முடிகிறது. நாவலின் முகவுரையில் பாலா – சூர்யா கடிதப் போக்குவரத்தை கவனித்துப் பார்த்தால் இது விளங்கும். இக்காரணத்தால்தான் பாலா/சூர்யா/கிரண்/நீரஜா ஆகியோரின் அழகியல் மற்றும் செயலாற்றுத் தளம் ஒன்றேயானதாக இருக்கிறது. இந்த செயலாற்றுத் தளத்துக்கு விதிவிலக்காகிப் போன மிஸ்ரா, பைத்தியக்காரனாக ஆகிறான். மிஸ்ராவிடமும் சரி, ஜாப்ளானிடமும் சரி, வன்முறையானது அழகியல்/அறவியலை தாண்டி வேறு ஏதோ ஒரு ரூபத்தில் வெளிப்பட்டுவிடுகிறது!

அதே சமயத்தில் அறிவுஜீவியாக அங்கீகாரம் பெறத் துடிக்கும் சூர்யாவின் adolescent பாலுறவு விளையாட்டுக்களில் இந்த வன்முறை இருந்ததில்லை என்பதும் அவனுடைய சுற்ற- – அமைப்பு மனிதர்களிடம் இந்த வன்முறை மீண்டும் மீண்டும் வெளியில் வருவதாகவே இருக்கிறது என்பதும் உண்மையே. இது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதற்கு நாவலின் பகுதிகள் ஒன்றும் இரண்டும் இவ்வளவு அதிகமாக எழுதப்பட வேண்டியதாகி உள்ளன.

நாவலின் முகவுரையில் சொற்பாடாக்கப்படும் அழகியல் குறித்த பிரச்சினையிலிருந்து அறிவுஜீவியின் வம்சாவழியியலுக்குத் தாவும் போது ஆரம்பிக்கிற இந்தக் கதையாடலுக்கு மிஸ்ராவைத் தவிர இடையூட்டலாக இருப்பது, க்ளிங்க்கோவிட்ஸ் என்கிற எழுத்துருவின் (world-being) குறிப்பு மட்டுமே:.

‘குறிப்பு : சூர்யா எழுதிக்கொண்டிருந்த நாவலில் இப்போது மிஞ்சியிருப்பது இவ்வளவுதான். நானூற்று முப்பத்து இரண்டு பக்கங்கள் உள்ள அந்த நாவலைத் தொடர்ந்து மாற்றி மாற்றி எழுதிக்கொண்டிருந்த சூர்யா ஒரு கட்டத்தில் நாவலின் இந்தத் துவக்கப் பகுதியைத் தவிர மற்றெல்லாப் பக்கங்களையும் எரித்து விட்டான். இனிமேல் அவன் இதைத் தொடர்ந்து எழுதக்கூடும் என்றாலும் இப்பக்கங்கள் அவனிடமே இருந்தால் இது வெளிவரும் சாத்தியமேயில்லை என்று தோன்றியதால் நீ எழுதியது போதும் என்று சொல்லி எடுத்து விட்டேன். ஒவ்வொரு முறை மாற்றி எழுதியபோதும் சூர்யா என்னிடம் நாவலை காண்பித்திருக்கிறான். நாவலைப் பற்றி பல முறை பேசியிருக்கிறான். அவற்றிலிருந்து என் நினைவில் எஞ்சிய பகுதிகளை இங்கே நான் தொகுத்திருக்கிறேன்’.

ஆக, நாவலின் எரித்துவிட்ட பகுதிகளை நினைவுகூர்கிறான் க்ளிங்க்கோவிட்ஸ். எரித்துவிடல் என்பது ஜாதிரீதியான புனிதத்தைக் குறிக்கும்போது, நினைவு-கூர்கிறவன் கேள்வியைப் பின்வருமாறுக் கேட்கலாம். (ஆனால் இது ஜாதி என்பதற்ற ஐரோப்பிய சமுதாயத்துக்கு மட்டுமே பொருந்துமா என்றும் கேட்கப்படலாம்): அழகியல், அறவியல் மதிப்பீடுகள் வரலாற்றில் எப்படி உருவாக்கப்படுகின்றன? எப்படி வகைப்படுத்தப்படுகின்றன? எப்படியெல்லாம் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன?

இதற்கான அலசலை தத்துவக் களத்தில் முன் வைத்தவர் ஃப்ரெட்க்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche)தான். இதைச் சாதிக்க அவர் பிரயோகித்த அறவியல் தொடர்பான வம்சாவழியியல் (genealogy of morals) அலசலில் அவருக்குக் கிடைத்த விஷயம் பின்வருமாறு: ‘மதம், துறவறம் (renunciation) மற்றும் அழகியல் ஆகிய மூன்றுக்குமாக பின்னிருந்து பொதுவாகச் செயற்படுவது அதிகாரம் பற்றிய எதிர்மறையான புரிதலே, அறிவே (negative understanding of power, as repression)’ என்கிறார் நீட்ஷே. இதைக் கூறிவிடுவதோடு அல்லாமல், இந்த எதிர்மறையான புரிதல் களையப்பட்டு அதிகாரம் பற்றிய ஆக்கப்பூர்வமான புரிதலை, அதிகாரத்தை உயிராற்றலாக உணர்தலே (bio-power or positive understanding of power, as affirmation of the body) ஏற்கப்பட்டாக வேண்டும் என்று நீட்ஷே கூறுகிறார். இதுவே அதிகார மட்டம் பற்றிய பொருண்மையான (materialist), உறவு ரீதியான (relational) ஆய்வுக்கு இட்டுச் செல்லவல்லது என்று நீட்ஷே கூறுகிறார்.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலைப் பொறுத்தவரை, நாவலின் எரித்துவிட்ட பகுதிகள் மீட்கப்படும் போது, அதிகாரம் பற்றிய எதிர்மறையான புரிதல் களையப்படுகிறது. உதாரணமாக, எரிக்கப்பட்ட பகுதிகளில் பேசப்படும் துர்க்கையம்மன் சிலை மீது மூத்திரம் பெய்தல் மற்றும் ஆவி/பேய் கண்டு பயந்து போதல் ஆகியவற்றை நாவல் தொடர்புபடுத்தும் கட்டங்களில் அதிகாரம் பற்றிய எதிர்மறையான புரிதல் களையப்படுகிறது என்பதைக் கூறலாம்.

அதே சமயத்தில் பாலுணர்வு (sexuality) பற்றிய வன்முறை வெளிப்படும் இடங்களை எடுத்துக்கொண்டால், அங்கே சூர்யா/நான்/கிரண்/… போன்ற எழுத்துரு – தன்னிலைகள் யாருமே இருப்பதில்லை. இதைப் புரிந்து கொண்டால், அறிவு ஜீவிகள் ஆகிய ஜந்துகளின் பாலுறவுகளில் (sexual relationships) பொருண்மைத்தனம் (materiality) என்பது இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினை இந்த நாவலிலும் தீர்க்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது.

சூர்யாவின் adolescent விளையாட்டுக்களிலிருந்து அவனுக்கும் கிரணுக்கும் அல்லது அவனுக்கும் ஆதிக்கும் உள்ள பாலுறவுகள் பற்றிய fantasy ரீதியான கதையாடல்கள் வரை எடுத்து ஆய்வு செய்யும்போது இதையே பார்க்க முடிகிறது. அதாவது விளையாட்டுக்கள் (games) என்பதிலிருந்து, பாலுணர்வு வன்முறை என்ற கட்டத்துக்குப் போக முடியாமல் சிக்கிக் கொள்கிறது என்றே கூறலாம்.

அறவியலின் வன்முறைபாலுணர்வு, வன்முறை என்ற கட்டத்திற்குப் போக முடியாமல் இருப்பதைப்போலவே செயல் என்கிற பொதுவான அளவிலும் இந்த வன்முறை சிக்கலில் ஆழ்ந்திருப்பதைக் காணலாம். அதிகாரம் வெளிப்படுகின்ற ஆக்கபூர்வமான (positive) செயலாக இல்லாமல் அறிவுஜீவி என்கிற ஜந்துவை சிந்தனையும் அழகியலும் பீடிக்கின்றன.

ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில், ஜே.ஜே. என்கிற எழுத்துரு குஷ்டரோகிக்குக் காசு போடுவதா வேண்டாமா என்பதை யோசிக்க உலகத் தத்துவங்களையெல்லாம் துணைக்கு அழைக்கிறான். காசு போட்டு இந்த பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று தோன்றி விடுவதே சிந்தனையாக இங்கே வளைய வருவது ஒரு முட்டாள்தனம் (folly)தான்; ஆனால் அந்த முட்டாள்தனத்தைச் செயல்படுத்துவதுதான் நியாயம் என்றிருக்கையில், தனது முட்டாள்தனத்தை ஈடுசெய்ய ஜே.ஜே. -வானவன் உலக அறிவைத் துணைக்கு அழைக்கிறான். ஜே.ஜே.வின் அழைப்பு முட்டாள்தனத்தை விலக்கி வைப்பதாக இருப்பதால் அது வன்முறை. இந்த வன்முறை நாவலில் அழகியலால் மறைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பதிலாக ஜே.ஜே. அந்தக் குஷ்டரோகியையே அடித்திருக்கிறான் என்று வந்திருந்தால் கூட அவனுடைய அதிகாரம் வெளிப்பட்டிருக்கும்; வடிவம் தெளிவாகி இருக்கும். நாவலிலோ ஜே.ஜே.வின் அழகியல் மற்றும் சிந்தனைத் தளங்கள் இந்த வன்முறையை ஈடுசெய்வதாக வருகின்றன. எல்லாப் பரப்புக்களிலும் நிரம்பி வழியும் அழகியல், வன்முறையை மறைக்கிறது. குஷ்டரோகி என்ற, அங்க அவயங்களை கண்ணுக்குத் தெரியாமலேயே இழந்து கொண்டிருக்கிற, சாவின் வடிவமாக (a sign of living death) இருக்கிற உருவத்தை victim-ஆக நிறுத்துகிற, பெயரிடுகிற பொறுப்பி லிருந்து ஜே.ஜே.வும் சுந்தர ராமசாமி நாவலை வாசிப்பவர்களும் தப்பிக்கிறார்கள். இதனால்தான் குஷ்டரோகிகளுக்கு சிசுருஷை செய்த காந்தியை, அவரைப் போன்றவர்களை, தமது அழகியலை விட்டுக் கொடுக்காமலேயே ஜே.ஜே.வாலும், ஜே.ஜே.-வின் வழித்தோன்றல்களாலும் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் இந்த அழகியலை எதிர்ப்பதாக ஆரம்பித்து இதே இடத்துக்கு வருகிறது. காக்டெயில் பார்ட்டிக்குப் போய் வரும்போது ஜிப்பைக் கழற்றி சிறுநீர் கழிக்கிறார்கள். அப்போது காலடியில் படுத்திருக்கும் ஓர் உருவத்தைக் காண்கிறார்கள். நண்பன் 20 ரூபாய் நோட்டு ஒன்றை அங்கே வைக்கப் போக சூர்யா, அங்கே படுத்திருப்பவர்கள் எல்லோருக்கும் அதைச் செய்ய முடியுமா என்று தர்க்கிக்கிறான். நண்பனின் செயல் folly-யாக இருக்க அதை — ஈடுசெய்வதாக, அழகியல் குலையாமலிருக்க, தத்துவம், விவாதம், தர்க்கம் ஆகியவை வருகின்றன.’எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற நவீன கால தத்துவமும் இந்திய சமூகத்தில் இந்த அளவில்தான் செயல்படுகிறது என்கிற கடுமையான குற்றச்சாட்டு, நாவலில் வைக்கப்படுகிறது:

The main threat to existentialism is non-availability of good quality condoms.

அதாவது வம்ச விருத்தி என்கிறதான ஜாதீய ரீதியான சமாச்சாரம் தான் இந்திய சமூகத்தில் முக்கியமான சமூக நிகழ்வாக இருக்கிறது. இந்த ஜாதீயரீதியான சமாச்சாரமும் existentialism என்கிற தர்க்க தத்துவவியலும் செயலைத் துறந்து சமாதான சகவாழ்வு நடத்துவதற்கு condoms உதவியாக இருக்கின்றன. இது எப்படி என்று பார்ப்போம்.

வம்ச விருத்தியைப் புறக்கணிக்கும் பாலுணர்வு தவிர, தேவைக்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய நல்ல, தரமான, உன்னதமான condoms, existentialism என்கிற நவீனகாலத் தத்துவம் இங்கே வருவதற்கு, செயல்படுவதற்கு அபாயம் விளைவிக்கின்றன எனலாம். ஆக existentialism என்கிற தத்துவம், இங்கே இந்திய சமுதாயத்தில் சிந்தனையின் கற்பாகவும் ஜாதீய ரீதியான அழகியல் என்பதன் கவசமாகவும் புழங்குவதும் இந்த நாவலில் சுட்டிக் காட்டப்படுகிறது. நாவலின் வம்சா வழியியல் பகுதியில் தன்னிலை என்பதன் இவ்வாறான மறைமுக அதிகாரம் பேசுபொருளாக்கப்படுகிறது எனலாம். வம்சாவழியியலானது, சுற்ற–அமைப்பு (kinship structure) மூலமாகவும் தன்னிலையின் வாழ்க்கை என்றறியப்படும் விஷயம் மூலமாகவும் விலக்கப்பட்ட சமாச்சாரங்களைப் பேச வைப்பதாக இருக்கிறது. சுற்ற-அமைப்பும் தன்னிலையின் வாழ்க்கையும் ஒன்டோடொன்று தொடர்பு கொண்டவை என்பதும் ஒன்றை விட்டுவிட்டு இங்கே இந்திய சமூகத்தில் வேறொன்றைப் பேசுவது, பேச வைப்பது, இயலாத காரியம் என்பதும் இந்த நாவலில் தெளிவாக்கப்படுகிறது.நாவலின் முடிவுரை, கடிதப் போக்குவரத்தில் போய் முடிகிறது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். நாவலின் இதர பகுதிகள் இந்தக் கடிதப்போக்குவரத்து போய் முடியும் இடத்திலிருந்து தொடங்குவதும் குறித்துக் கொள்ளப்பட்டாக வேண்டும். இதனால் தான் நாவலின் முகவுரை ஒரு சொற்பாடு (statement) என்று கூறப்பட்டது. இதேபோல் கடிதப்போக்குவரத்தில் நின்றுவிடுகிற கதையாக பிரேமிளின் ப்ரஸன்னம் கதையைக் கூறலாம். ஜாதி என்கிற விலக்கப்படலை ப்ரஸன்னம் அடையாளம் காண்கிறது; ஆனால் பிரேமிளின் எதார்த்தவாதமும் அறவியல் தொனியும் (moralising tone) அவரை, இதர விலக்கப்பட்டவற்றை முன்வைத்துப் பேச முடியாமல் செய்துவிடுகின்றன. மருத்துவம் என்கிற உடல் தொடர்பான விஷயத்துக்குப் போனாலும் ஆன்மீக/ அநுபூதிவாதியாகவே அவர் ப்ரஸன்னம் கதையில் பேசுவார். கலை இலக்கியம் என்பது புனிதமில்லை என்றாகிவிட்ட நிலையில் இவருக்கு வேறொரு புனிதக்களம் தேவைப்படுகிறது. எனவே, கதை கடைசியில் புனிதக்கள மாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிர மத்துக்குப் போய்த் தொங்குகிறது; அடுத்ததாக generate ஆவது என்று எதுவுமில்லை; கதைசொல்லுதல் என்கிற செயல்பாடே கிட்டத்தட்ட நின்று போய்விடுகிறது எனலாம். இக்காரணத்தால் ப்ரஸன்னம் கதை கடிதப் போக்குவரத்து என்கிற சொற்பாட்டு நிலையையே தாண்டவில்லை என்று கூறிவிடலாம்.

ஆனால், எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில், கதை சொல்லல் என்கிற செயல்பாடு க்ளிங்கோவிட்ஸ்/ கரோலின் ஃபோர்ச்சே என்று வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட முடிகிறது. மேலும் நாவலின் ஐந்தாம் பகுதியில் கமலநாதன் என்கிற அறிவுஜீவியற்ற சாதாரண நபர் சூர்யாவுக்கு எழுதிய கடிதமும் வருகிறது. தனது ஆக்கங்களை எரித்து அதன் மூலமாகத் தன்னை purify செய்ய முயன்று கொண்டிருக்கிற சூர்யா இன்னமும் மறைத்துவிட்ட கடிதம் இது. கடிதத்தில், சூர்யாவின் தங்கை ஆர்த்தி – கமலநாதன் இடையிலான incest உறவை சூர்யா தடுக்க எத்தனித்துத் தோல்வியடைந்ததும் பதிவு செய்யப்படுகிறது.

இப்பதிவின் மூலமாக புதிய உண்மை ஒன்று வெளிப்படுகிறது: கிரணுடன், ஆதியுடன் கொண்டிருந்த உறவுகளைவிட சூர்யாவின் ultimate fantasy–யாக இருப்பது சகோதரன் – சகோதரி பாலுறவு என்பதாகும். இந்த fantasy-யை diagnose செய்வதற்கோ அதனை அதன் மட்டத்தில் வைத்துப் புரிந்து கொள்வதற்கோ சூர்யா தயாராக இருந்ததில்லை என்பதைத்தான் கமலநாதனின் கடிதமும் அக்கடிதத்தை சூர்யா மறைக்கிற செயலும் காட்டுகின்றன. ஒரு தமிழ் சினிமா ஹீரோவைப் போல் சூர்யா தனது குடும்பப்பெருமையைக் கட்டிக் காக்கத் துணிந்தவனாக இருக்கிறான் என்பதையும் இக்கடிதம் காட்டுகிறது. முதலில் கடிதஜீவியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நிறுவிக்கொண்ட சூர்யாவைத் தகர்த்துக் கொள்ள இக்கடித வடிவமே உதவுகிறது.

புதிய கடவுளர்களின் வருகை?

நாவலின் கதையாடலில் உள்ள முக்கிய பிரச்சினை என்ன வென்று பார்த்தால், விலக்கப்பட்ட எச்சங்களுள் குற்றவியலையும் பாலுணர்வையும் நியமங்களாக (norms) மாற்ற முயலும் எத்தனிப்பைக் கூறலாம். விலக்கப்பட்டுள்ள எச்சங்கள் பல என்பதும் அவற்றில் ஒவ்வொன்றுக்கான கலாச்சார – -உள்வரலாறும் வம்சாவழியியல் ரீதியாக எழுதப்பெற வேண்டும் என்பதும் தெளிவு. சூர்யா/பாலா ஆகியோரின் மத்தியதர வாழ்க்கைச் சொல்லாடலின் விளிம்பில்தான் இவை உள்ளன என்றாலும் இவற்றை norms-ஆக மாற்றுவதன் மூலம் இன்னொரு romanticism-க்குள் போய்விடக்கூடிய அபாயம் இருப்பதும் குறித்துக் கொள்ளப்படவேண்டும். ஆதி என்கிற எழுத்துருவை சூர்யா கிட்டத்தட்ட வழிபாட்டு நிலைக்குக் கொண்டு வருவதில் இந்த அபாயம் அடங்கியுள்ளது எனலாம். அதே சமயத்தில் கிரண் ஆதியை ஒரு நிபுணர் (expert) என்ற அளவில் சொல்லி சர்வ சாதாரணமாக treat செய்வதும் பதிக்கப்பட்டுள்ளது.நாவலுக்கு முன்னொரு கட்டத்தில் பிரேம் எழுதியதிலும் இதே பிரச்சினையைக் காணமுடிகிறது: “உலகக் கலகக்காரர்கள் அனைவரையும் சக ஜீவன்களாகக் கொண்டும் கலைஞர்களைத் தவிர வேறு யாரையும் மனிதர்களாகவே கணிக்காத வெறியோடு இயங்கும்/இயங்க யத்தனிக்கும் ஒரு கலை இலக்கிய ஆய்வுக்கூடமே கிரணம்” என்று, பிரபஞ்ச விகாசத்தின் சாயலாக ஒளிர வேண்டிய மனித மனங்களைப் பற்றிப் பேசியவர் இவர். இப்போது இவ்வகையான பிரபஞ்சவிகாச மொழி உடைந்துபோய் காயலான் கடையாக ஆகியிருப்பதை உள்வாங்கியதைப் போல நாவலுக்கு முன்பு எழுதியிருப்பது ஆச்சரியம்தான். வர்க்கம் சாரா மனிதப்பகுதியின் சிதைந்து போனதாகக் கூறப்படும் கலாச்சாரம் இவருக்கு ‘உலகக் கலகக்காரர்களுடையதாக’ கிரணம் பத்திரிகையில் எழுதும்போது ஏன் concrete-ஆகத் தெரியவில்லை என்பதையும் கூட இவர் பேசியாக வேண்டும். He has a lot to explain and speak for.எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் என்ற இந்த நாவல், புழங்கும் பல்வேறு எழுத்து வகைகளின் பின்னலாக இருப்பதாலேயே அந்த எழுத்து வகைகளின் கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பாகவும் இருக்கிறது.

இவ்வாறு கட்டுடைக்கப்படுகிற எழுத்து வகைகள் பின்வருமாறு:

1. அறிவுஜீவிகளுக்கிடையிலான கடிதப் பரிமாற்றம் (முகவுரை)

2. சமுதாய வரலாறு என்றியப்பட்ட எதார்த்தவகை நாவல் (பகுதிகள் ஒன்று, இரண்டு)

3. தமிழின் பிரபல பாக்கெட் நாவல் வகை கொண்டுவந்த விறுவிறுப்பு எழுத்து (பகுதி மூன்று)

இவ்வகை எழுத்துக்கள் செலுத்தும் அதிகாரமட்டம் குறைக்கப்படவேண்டிய தேவை நிறைய. எனவே இந்த நாவல் உள்வாங்கப்படுவதற்கான தேவையும் நிறைய. இருந்தாலும் நாவல்- – இலக்கணமாக அறியப்பட்ட ஒன்றின் சமன்பாட்டைக் குலைக்க முற்படுகின்ற இந்த எழுத்து, வாக்கிய – இலக்கணத்தில் இறுகிப் போயிருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த நாவலும் கூட “கடவுளைக் கரைசேர்க்கும் முயற்சியே” என்றுதான் கூற வேண்டியுள்ளது.

நீட்ஷேதான் சொன்னான்: “நம்மால் கடவுளைக் கைவிட்டு விட முடியுமென்று தோன்றவில்லை; ஏனெனில் நாம் இலக்கணத்தைக் கைவிடவில்லை.”கடைசி பாராவிமர்சனத்தைத் தாண்டி இங்கே வந்துவிட்டவர்கள் போஸ்ட் — ஸ்ட்ரக்சுரலிசமும் பெப்ஸி கோலாவும் என்கிற புதிய நாவலை எதிர்பார்க்கலாம். அதை யார் எழுதுகிறார்கள் என்பதல்ல முக்கியம். படிக்காவிட்டாலோ ஓரிரண்டு வரிகளில் ‘விமர்சனம்’ செய்து விட்டாலோ 10,641 முறை விமானத்தில் பறந்து சென்று குண்டு வீசிவிட்டு வருகிற பழிக்கு ஆளாவதைத் தவிர வேறுவழியில்லை.

நாகார்ஜுனன் (கலாச்சாரம்: அ.கலாச்சாரம் = எதிர்கலாச்சாரம், அமைப்பியல்வாதக் கட்டுரைகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டது)