விருது மறுக்கப்பட்டது தொடர்பாக: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

அன்புள்ள சாரு,

இன்றுதான் தங்களுக்கு விருது மறுக்கப்பட்ட நிகழ்வை முழுமையாக அறிந்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் மூன்றாம் உலக நாடுகளின் தனித்துவமான அரசியல் சமூக நிலைமைகளை, குறிப்பாக நகரங்களில் நிலவும் பிறழ்வுகளை எழுதுவதின் வாயிலாக விவரிப்பவை மட்டுமல்ல, மிக அதிமாக சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களின் மத்தியில் உடலின் தன்னாட்சியை (autonomy) முன்னிறுத்தும் படைப்புகள் தங்களுடையவை. என்றாலும், ஃபாசிச எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தக் கூடியவை. குறிப்பாக மத விவகாரங்களில் தங்களது ஹை-பிரிட் தன்மை முழுக்க ஒழுங்குகள், சடங்குகளால் அன்றி, உணர்வு, இசை இவற்றால் அமையப்பெற்று, தூய்மைவாதத்திற்கு வெளியே இருப்பது மட்டுமல்ல, இயல்பிலேயே ஜனநாயகத்தன்மை மிக்கதும் கூட. ஜனநாயகத்தன்மை இயல்பிலேயே திரவநிலை கொண்டது. எதுவொன்றையும் திடமாக ஒரு கல்லைப் போல மாற்றிவிடாது. இதுவே தங்களது நிலைப்பாடுகளின் தளர்விற்கும் காரணம். எனினும் சில அடிப்படைகள் தங்களிடம் மாற்றமில்லாதவை. மேலே குறிப்பிட்ட இரு விசயங்கள் உட்பட.

சில மாதங்கள் முன்பு, மார்க்ரெட் அட்வுட்டின் ‘ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ நாவலை அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணப் பள்ளி நூலகங்களில் இருந்து நீக்கப்பட்டதற்கான அவரது எதிர்வினையில் ‘விவிலியத்தை விடவும் அந்த நாவலில் பாலியல் வெளிப்படைத்தன்மை குறைவாகவே உள்ளதென்று’ எழுதியிருக்கிறார். தற்போது தங்களுக்கும் இதே நிலைமை. முழுமுற்றான சுதந்திர உணர்வு அங்கே நாடு முழுக்க சீராகப் பரவியிருக்கும் என்பதை நம்புவதும் முட்டாள்தனமாக முடிந்திருக்கிறது.

மற்றபடி தமிழ் இலக்கிய உலகின் உள்விவகாரங்களில் இயங்கி மனச்சோர்வு கொள்வதைக் காட்டிலும் இராமராஜன் படம் பார்ப்பது நல்லதென்று நினைப்பவன் நான் என்பதால் உள்விவகாரங்களில் கருத்து சொல்கிற அளவிற்கு இலக்கிய உலகில் எனக்கு அனுபவம் குறைவு.

இந்த நிகழ்வை ஒட்டி தங்களுக்கு எனது வருத்தங்களைப் பதிவு செய்யவே இக்கடிதம்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்