தனிமனித சுதந்திரம்

முத்து என்று எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.  மிகவும் நெருக்கமான நண்பர்.  நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகச் சிறந்த படிப்பாளி என்றால் அவர்தான்.  எனக்கு அறிவின் மீது தீராக் காதல் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.  ஆனால் நட்பு என்றால் அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.  அவருக்கு என் எழுத்தின் மீது துளியும் மரியாதை இல்லை என்பதை நீண்ட காலம் கடந்து கண்டு கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன்.  அது எனக்கு மிகப் பெரிய இழப்பு.  அதிலிருந்து எனக்கு முத்து என்ற பெயர் மீதும் ஒரு நெருக்கம்.  

இந்த நிலையில் அ. முத்துலிங்கத்தின் எழுத்து எனக்கு அறிமுகமாயிற்று.  எடுத்த எடுப்பிலேயே அவர் எழுத்து எனக்குப் பிடித்துப் போயிற்று.  தமிழில் சுவாரசியமாக எழுதுபவர்களில் அ. முத்துலிங்கமே முதன்மையானவர்.  இது பற்றி இப்போது அல்ல, முன்பே பலமுறை எழுதியிருக்கிறேன்.  நான் ஒரு நாளில் ஆறு மணி நேரம் வாசிப்பவன்.  வாசிப்பு இன்பம் பற்றி அதிகம் எழுதியவன் நான்.  ஆனால் எனக்கு வாசிப்பு ஒரு துன்பம்.  ஏனென்றால், நான் தேர்ந்தெடுத்து வாசிக்கும் நூல்கள் அப்படி.  சமீபத்தில் 1855இல் எழுதப்பட்ட அரசு ஆவணங்களின் தொகுப்பைப் படித்தேன்.  மண்டை காய்ந்து விட்டது.  படித்து முடிக்க ஒரு வாரம் எடுத்தது.  அப்படி மண்டை காயும் போதெல்லாம் நான் எடுத்துப் படிப்பது முத்துலிங்கத்தைத்தான்.  அவர் கட்டுரை எழுதினால் கூட அது ஒரு சுவாரசியமான கதை போல் இருக்கும்.  

ஒரு கட்டத்தில் அவரோடு எனக்குக் கடிதத் தொடர்பும் ஏற்பட்டது.  என்னை விட மூத்தவரான அவரை நான் முத்து என்றே அழைக்க ஆரம்பித்தேன்.  அநேகமாக அவரை முத்து என்று அழைக்கும் ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.  அவரும் ஆட்சேபம் இல்லை என்று சொல்லி விட்டார்.  

சமீபத்தில் அவரிடம் நான் எழுதியிருக்கும் அன்பு நாவலைப் படித்துப் பார்க்குமாறு கடிதம் எழுதினேன்.  இப்படி என் வாழ்நாளிலேயே நான் செய்ததில்லை.  ஒருபோதும் என் எழுத்தைப் படியுங்கள் என்று என் சக எழுத்தாளர்களிடம் நான் கேட்டதில்லை.  அது ஒரு அத்துமீறல் என்று கருதுவதே காரணம்.  இன்னொரு காரணம், அசோகமித்திரன்.  அவரை நான் என் தந்தை என்றே நினைத்துப் பழகியிருக்கிறேன்.  அவருக்கு என் எழுத்து பிடிக்காது என்பதும் எனக்குத் தெரியும்.  அதை அவர் பலமுறை சொல்லியும் இருக்கிறார்.  ஆனால் என்னைப் பிடிக்கும்.  அவரிடம் பல பிரபலங்கள் தங்கள் நூல்களைக் கொடுத்து மதிப்புரை எழுதச் சொல்லி வற்புறுத்தி அவரை மன உளைச்சலுக்கு உட்படுத்துவது வழக்கம்.  ஒரு சமயம் அப்படி ஒரு பெரிய பிரபலம் அவரிடம் தன் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்து மதிப்புரை எழுதச் சொல்லி தொந்தரவு செய்தது.  அது அந்தப் பிரபலத்தின் முதல் சிறுகதைத் தொகுதி.  ஏற்கனவே ஜெயகாந்தன் மரணப் படுக்கையில் கிடந்த போது தன் புத்தகம் ஒன்றைக் கொடுத்து மதிப்புரை எழுதச் சொல்லி அவரைத் துன்புறுத்தியது எல்லோருக்கும் தெரிந்திருந்த செய்தி.  இப்போது அசோகமித்திரன்.  தினமுமே பிரபலத்திடமிருந்து ஃபோன் வரும்.  அசோகமித்திரன் மசியவில்லை.  ஒருநாள் அந்தப் பிரபலம் பட்டு வேட்டி, பட்டுப் புடவை சகிதமாக வீடு தேடி வந்து விட்டது.  அசோகமித்திரனால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.  மையமாக எழுதிக் கொடுத்து விட்டார்.

இதனால் எல்லாம்தான் நான் எந்த எழுத்தாளரிடமும் என் எழுத்து பற்றி, என் நூல்கள் பற்றிப் பிரஸ்தாபிப்பது இல்லை.  அடிக்கடி அசோகமித்திரனை சந்தித்துக் கொண்டிருந்த நான் அவரிடம் என் ஒரு நூலைக் கூட கொடுத்தது இல்லை.

அப்படிப்பட்ட நான் முத்துலிங்கத்திடம் அன்பு நாவலைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.  அவரிடம் மட்டும் அல்ல.  ஒரு ஐம்பது பேரிடம்.  ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், ரவிக்குமார், சமஸ், பா. வெங்கடேசன், வாஸ்த்தோ, கார்ல் மார்க்ஸ், என் யோகா குரு சௌந்தர் மற்றும் பலர்.  இப்போது பெயர்கள் மறந்து விட்டேன்.  அ.முத்துலிங்கம் கனடாவில் வசிப்பதால் அவருக்கு பிடிஎஃப் பிரதியை அனுப்பவா என்று கேட்டேன்.  அவர் புத்தகத்தை வாங்கியே படித்து விட்டு அது பற்றி எனக்கு ஒரு கடிதமும் எழுதினார்.  அது அந்த நாவல் பற்றிய ஒரு மதிப்புரை.  மனுஷும் அருமையான ஒரு மதிப்புரையை எழுதினார்.  அதை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருந்தேன்.

இதோடு முடிந்திருந்தால் இந்தப் பதிவை எழுதியிருக்க மாட்டேன்.  முத்துலிங்கம் சில தினங்கள் முன்பு என்னை ஒரு கேள்வி கேட்டிருந்தார்.  “இதுவரை உங்கள் புத்தகம் எதையும் படிக்கச் சொல்லி என்னிடம் கேட்டதில்லையே?  இதை மட்டும் ஏன் கேட்டீர்கள்?”

அது எனக்கு ஒரு சுவாரசியமான கேள்வியாகப் பட்டது.  பாருங்கள், ஒரு கேள்வியைக் கூட சுவாரசியமாகக் கேட்கிறார்.  நான் அதற்கு பொதுவில் பதில் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஓஷோவின் அடிப்படைத் தத்துவம் மனித சுதந்திரம்.  என்னுடைய தாரக மந்திரமும் சுதந்திரம்.  என் எழுத்து முழுவதும் ஆர்ப்பரித்து எழுவது சுதந்திரம்.  ஆனால் நான் அடிமை.

ஓஷோ சொல்கிறார், ஆரம்பத்திலிருந்தே நான் திருமணத்துக்கு எதிரானவன் என்று.  திருமணம் ஒருவரை அடிமைப்படுத்துகிறது.  அதுதான் எங்கள் இருவரின் கருத்தும்.  ஆனால் நான் திருமண பந்தத்தில் மாட்டிக் கொண்டவன்.  அதன் காரணமாகவே அடிமையாக வாழ்பவன்.  ஒரு ஆயுள் கைதி பரோல் வாங்குவது போல் நான் மாதா மாதம் பரோல் எடுத்து சுதந்திர வெளியில் பறந்து விட்டு மிண்டும் சிறைக்குள் நுழைகிறேன்.

எழுத்தாளர்களிலேயே மிகக் கொடுமையான சித்ரவதையை அனுபவித்து அந்த அனுபவத்தினூடேயே எழுதிய ஒரே ஆள் மார்க்கி தெ சாத் மட்டும்தான்.  ஆஸ்கார் ஒயில்டை சிறை வாழ்க்கை கொன்று விட்டது.  சிறையிலிருந்து வந்த பிறகு அவர் அதிகம் எழுதவில்லை.  இறந்து விட்டார்.  மார்க்கி தெ சாத் மட்டுமே நீண்ட காலம் சிறையில் இருந்து நீண்ட காலம் மனநோய் விடுதியில் இருந்து நீண்ட காலம் எழுதினார்.

அடுத்து நான்.  என் சக எழுத்தாளர்கள் தன் சக எழுத்தாளன் ஒருவன் எந்த நிலையில் எழுதிக் கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.  நான் செத்த பிறகு தெரிந்து கொள்வதை விட நான் உயிரோடு இருக்கும்போதே அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.  என் எழுத்தில் சுய பச்சாதாபம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று நினைத்தேன்.  அதை சாதித்து விட்டதாகவே நம்புகிறேன்.  

அன்பு நாவல் என் வாழ்வு பற்றிய சாசனம்.  அவ்வளவுதான்.  இப்போதுதான் அசெக்ஷுவல் என்ற அட்டகாசமான, குதூகலமான நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் பதினைந்து நாளில் என்.டி.எஃப் மூலம் வெளியாகும்.  

கீழே இருப்பது அன்பு நாவல் குறித்த அ. முத்துலிங்கத்தின் கடிதம்.

வணக்கம். 10 பக்கம் படித்த, 20 பக்கம் படித்த, பாதி படித்த பல புத்தகங்கள் என் முன்னே குவிந்து கிடக்கின்றன. என்னை அன்பு புத்தகம் படிக்கச் சொல்லி  கேட்டிருந்தீர்கள். ஒருமுறையும் அப்படி கேட்டதில்லை. இந்தியாவில் நண்பரிடம் சொல்லி வாங்கிவிட்டேன். நேற்று படிக்கத் தொடங்கி இனறு முடித்துவிட்டேன். புத்தகத்தின் வெற்றி அதுதான். கையில் எடுத்தால் அதை முடித்த பின்னர்தான் கீழே வைக்கலாம். இதைவிட வேறு என்ன வேண்டும் எழுத்தாளனுக்கு. மாபெரும் வெற்றியல்லவோ. உங்கள் எழுத்து நடை கடவுள் தந்தது. 30 வருடம் கடந்தாலும் நடை புதுமையாகவே இருக்கிறது. வாழ்த்துகள்.
ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வசனமும் அன்பைப்பற்றி நேராகவோ மறைமுகமாகவோ பேசியது. எத்தனைவிதமான அன்பு வெளிப்பாடுகள். இதன் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகள்.
அன்புடன்
அ. மு