மகிழ்ச்சியான தினம்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான நாவலை எழுதி முடித்தேன். அதுவும் நான்கே நாட்களில். 125 பக்கம். பேய் வேகத்தில் எழுதினேன். அடை மழை போல் கொட்டின வார்த்தைகள். இருவருக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் ஒரே அமர்வில் படித்து விட்டார்கள். அதுவே பெரிய வெற்றி. நான் நினைத்தது போலவே இறுதி அத்தியாயம் பிரமாதம் என்கிறார்கள். நானும் அப்படி சமீப காலத்தில் எழுதியது இல்லை. நேற்று முடித்து அனுப்பும்போது நள்ளிரவு. இதைக் கொண்டாடுவதற்கே கோவா போகலாம் என்று இருக்கிறது. அநேகமாக அடுத்த மாத இறுதியில் செல்வேன். என்னோடு வர விரும்புபவர்கள் எனக்கு எழுதலாம். ஆனால் ஏற்கனவே பழகியவர்களாக இருந்தால் நலம். புதியவர்களோடு பழகுவதில் சில பிரச்சினைகள் உண்டு. என்னோடு பயணம் செய்ய, என்னோடு தங்க என்ன தேவை என்றால், ஏற்கனவே ஆரோவில் சந்திப்புகளுக்கெல்லாம் வந்திருக்க வேண்டும். மிகவும் புதிதாகப் பழகி என் மனதுக்கு நெருக்கமானவர்கள் ஹைதராபாதில் இன்பராஜ் மற்றும் கணபதி.

இலங்கையில் அதிகம் பேர். கிட்டத்தட்ட முப்பது பேர் இருப்பார்கள். எல்லோருக்கும் நாவலில் நன்றி தெரிவித்திருக்கிறேன். அனோஜன், ப்ரஷாந்த், ந்ர்மி, நரேஷ், அனு (அனிதா), டினோ, தனஞ்சயன் நடராஜா, ஸ்ரீவத்ஸன், ஹரி, நிரோஷன், சிந்துஜன், பூபதி, டோனா, ஃபஷ்ரி, அஜாஸ் முஹம்மது, சஃபார் அஹ்மது, அபிஷா, காரையன் கதன், வி.எம். ரமேஷ், ஏ.எல்.எம். ஷரீஃப், சுஹைல், தரணி, ராயல் பேர்ல் ஓட்டல் ப்ரவீன், றியாஸ் குரானா, இமான், அஸ்லம், ஃபரீனா இன்னும் பலர். சில முக்கியமான பெயர்களை விட்டிருப்பேன். மன்னிக்கவும். இவர்கள் இல்லாதிருந்தால் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. இவர்கள் இல்லாதிருந்தால் பயணம் இத்தனை இனிமையாக இருந்திருக்காது. அன்பைப் பொழிந்தார்கள்.

ஃபரீனா என்னிடம் விடை பெற்றுச் சென்ற பிறகு திரும்பவும் வந்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் என் கையெழுத்தைப் பெற்றுச் சென்றார்.

டோனா ஒருநாள் என்னை வைத்து 200 கி.மீ. தூரம் காரில் பயணம் செய்தார். எல்லாம் ஹேர்பின் வளைவுகள். சீனி, அனோஜன் அளவுக்குக் கார் ஓட்டினார். 200 கி.மீ. முடிந்தும் சளைக்கவில்லை. இன்னும் போகலாமா என்று கேட்டார். நர்மி என்னை ஆகாச உசர கட்டிடங்களில் ஏறச் செய்து சாகசக்காரனாக மாற்றினார். எத்தனையோ இனிமையான அனுபவங்கள்.

உங்கள் அன்புக்கு என் எழுத்தைப் பரிசாக அளிக்கிறேன்.

நேற்று எனக்கு அத்தனை மகிழ்ச்சியான தினம். உங்களால்தான் பெட்டியோ (செல்லக்குட்டீ…) என்ற அந்த நாவல் சாத்தியமாயிற்று.