முகநூலில் செல்வகுமார்…

செறிவான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள்கூட தங்கள் மூளையை எங்காவது அடமானம் வைக்க முடியும் என்றால், காலாகாலத்துக்கும் அவர்கள் இலக்கியத்தில் சேர்த்தவை அனைத்தும் குப்பை என்று ஆகிவிடாதா?

உயிர் பிரிந்தால், அடுத்த நிமிடத்திலிருந்து உடல் அழுகத் தொடங்கிவிடுவது போல, சார்பற்ற நிலை அழிந்தால் மனம் இப்படி அழுகத் தொடங்கிவிடுவது இயல்புதான். அள்ளி புதைத்துவிட்டு போக முடியுமே தவிர அதன்பின் அந்த மனம் உருவாக்கும் எழுத்தை ஏறெடுத்தும் பார்க்கமுடியுமா? எழுத்து முதலில் எழுதியவன் மனதை செம்மைபடுத்த வேண்டும். அப்போதுதான் அதில் பிறருக்கு கண்டுணர ஏதேனும் கிடைக்கும்.

இலக்கியம் என்றவுடன் சாரு யார், எதற்கு என்று பார்க்காமல் செல்வதும், பேசுவதும், சுமூக சூழலை எதிர்பார்ப்பதும், எல்லாவற்றையும் விட நபர்களை சாராது…. படைப்பை படைப்பாக மட்டும் விமர்சிப்பதையும்… இதெல்லாம் அற்புத குணங்கள், இவற்றை இந்தக் கிறுக்கு பிடித்த கும்பலுக்காக அவர் இழந்து விடுவாரோ என்ற அச்சம்தான் எனக்கு வருகிறது

ஜெயமோகனுக்கோ அல்லது வேறு பீடங்களுக்கோ அவர்களின் அங்கீகாரம் வேண்டி, அந்த ஆளுமை எழுதிய/எழுதப் போகும் ஒரு முன்னுரை/ கட்டுரை, வேறெங்காவது தன் பெயர் உதிர்த்தலின் மூலம் பெறும் இலக்கிய அந்தஸ்து எழவுக்காக இளம் படைப்பாளிகள் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணங்களைப் பார்த்து வருகிறோம். (அப்படிப்பட்ட மோசமான உதாரணங்கள் வாசகர்வட்டத்தில் உருவாகாதது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.)

ஊமைக் குசும்பன்களான ஒன்றிரண்டு இலக்கியக் குஞ்சுகள் தங்கள் தனிப்பட்ட லாப கணக்குக்காக சாருவை சீண்டுவதில் செலவழிக்கும் நேரத்தை சற்றே எழுதும் கலையை கற்க செலவிட்டால்… அவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

செல்வகுமார் கணேசன்

***

மேலே உள்ளது முகநூலில் செல்வகுமார் எழுதியுள்ள பதிவு.  முதல் பத்தியில் எழுதியிருப்பதோடு மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.  தில்லியில் நிர்பயாவைக் கற்பழித்த கும்பல் தமது சிறை அனுபவங்களை எழுதினால் கூட அது இலக்கியமாகத்தான் ஆகும்.  அதிலிருந்தும் எனக்கும் வேறு வாசகர்களுக்கும் ஞானம் கிடைக்கும்.  திருடன் மணியன் பிள்ளை கதை ஒரு உதாரணம்.  இதை நான் ஆரம்ப காலத்திலிருந்து சொல்லி வருகிறேன்.  ஆனால் எழுத்தாளன் வேறு; கலைஞன் வேறு.  கலைஞனாக உயர்ந்து நிற்க எழுத்தின் தொழில்நுட்பம் தவிர வேறு சமாச்சாரங்கள் தேவை.  அதை இப்போது சொன்னால் கூட யாரும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.  வாசகர் வட்ட நண்பர்கள் விதிவிலக்கு.

சாரு