அஜ்வா, நீருக்கடியில் சில குரல்கள்

பிரபு காளிதாஸின் நீருக்கடியில் சில குரல்கள் நாவல் இன்று வெளியாகிறது. விழா கவிக்கோ மன்றத்தில். கூடவே சரவணன் சந்திரனின் அஜ்வா நாவலும். அஜ்வா நாவல் பற்றி இன்னும் நான் எழுதவில்லை. அது போன்ற ஒரு நாவல் இதுவரை தமிழில் வந்ததில்லை. அமெரிக்க பீட் எழுத்தாளர்களிடம் மட்டுமே அப்படி ஒரு உலகைப் பார்த்திருக்கிறேன். பின்வருவது நீருக்கடியில் சில குரல்கள் நாவலுக்கு நான் இருவேறு தருணங்களில் எழுதிய இரண்டு முன்னுரைகள்:
இப்போது உங்கள் கைகளில் ’தவழும்’ ’நீருக்கடியில் சில குரல்கள்’ என்ற நாவலின் இலக்கியத் தரத்தை விட இது எத்தனை பிரதிகள் விற்கும் என்ற யோசனையே இந்தக் கணம் என் மனதில் எழுகிறது. அதிக பட்சம் ஆயிரம் பிரதிகள். பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தால் மூவாயிரம். இப்படிப்பட்ட சூழலில் தமிழில் எழுதத் துணியும் ஒரு இளைஞரைப் பார்த்து நான் பெரும் ஆச்சரியம் அடைகிறேன். இவர்களெல்லாம் எதை நம்பி, எதன் பொருட்டு எழுத வருகிறார்கள்? பார்வை அற்றவர்களின் மத்தியில் ஓவியம் வரையவும் காது கேளாதவர்களின் மத்தியில் சங்கீதம் இசைக்கவும் எத்தகைய துணிச்சல் வேண்டும்? துணிச்சல் மட்டும் போதாது; கொஞ்சம் பைத்தியமாகவும் இருக்க வேண்டும். பாரதியிலிருந்து துவங்கி சி.சு. செல்லப்பா, க.நா.சு., தி. ஜானகிராமன், அசோகமித்திரன் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்தப் பைத்தியக்காரக் கூட்டத்தில் சேர்வதற்காக வந்திருக்கும் ‘தம்பி’ பிரபு காளிதாஸுக்கு என் வாழ்த்துக்கள்.

***

சென்ற மாதம் ஒருநாள் பிரபு காளிதாஸ் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரால் எழுத முடியும் என்றே நம்பினேன். ஏனென்றால், அவர் அவ்வப்போது சொல்லும் பல சம்பவங்கள் ஒரு பெரிய நாவலின் அத்தியாயங்களைப் போலவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் சொல்லியும் இருக்கிறேன். ஆனால் எப்போதுமே நாவல் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. சறுக்கி விடக் கூடிய எல்லா அபாயங்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அது. எந்த ஒரு நல்ல நாவலுமே ஒரு maze போன்றதுதான். அதன் உள்ளே சென்று மீண்டு வருவதற்கு மிகப் பெரிய எழுத்து வன்மை வேண்டும். நம்முடைய முன்னோடிகள் அனைவரையும் படித்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட ஒரு நாவல் எழுதுவதற்கு மிகத் தீவிரமான ஒழுங்கும் உடல் வலுவும் தேவை. கடினமான உடல் உழைப்பைக் கோரும் இலக்கிய வடிவம் அது. அதன் உள்ளே நுழையும் போது தனது புதிர்த் தன்மையின் காரணமாக நுழைபவரின் மன ஒழுங்கையும் சிதைத்து விடக் கூடிய கண்ணிகளை அது தன்னகத்தே புதைத்து வைத்திருக்கிறது. இது எல்லாவற்றையும் ஒரு எழுத்தாளர் தாண்ட வேண்டுமானால் நம்முடைய முன்னோடிகள் அத்தனை பேரையும் உள்ளுக்குள்ளே செரித்துக் கொண்டிருக்க வேண்டும். அதைத் தவிர வேறு ஏதும் வழியில்லை.
பிரபு காளிதாஸ் இந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்டவர். இருந்தாலும் ’நீருக்குள்ளிருந்து சில குரல்கள்’ என்ற இந்த நாவலின் மென்பிரதியை அவர் எனக்கு அனுப்பிய போது கொஞ்சம் அவநம்பிக்கையுடன் தான் துவங்கினேன். ஆனால் ஒரே பக்கத்தில் அது என்னை உள்ளிழுத்துக் கொண்டது. மாலை ஏழு மணி அளவில் துவங்கிய நாவலை நள்ளிரவில் முடித்து விட்டுத்தான் உறங்கினேன். இந்த அளவுக்கு ஒரே அமர்வில் படிக்கத் தூண்டும் மற்றொருவர் மரியோ பர்கஸ் யோசா. எடுத்தால் கீழே வைக்க முடியாது. அத்தனை வேகமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அதே சமயம் இலக்கியத் தரத்திலும் கொஞ்சமும் கீழே போகாது. அப்படி இருந்தது பிரபு காளிதாஸின் இந்த நாவல்.
இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால், இதில் விவரிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையைத் தமிழ் இலக்கியம் இதுவரை கண்டதில்லை. அந்தக் காரணத்தினாலேயே நீருக்கடியில் சில குரல்கள் தமிழ் நாவல் வரிசையில் என்றென்றும் பேசப்படும். குறிப்பாக ஜி. நாகராஜன் எதையெல்லாம் romanticise செய்தாரோ அதையெல்லாம் பிரபு காளிதாஸ் அசலாகக் கொடுத்திருக்கிறார். இதுதான் அசல். அந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். ஜி. நாகராஜன் என்ற தவறான முன்னுதாரணம் இருந்தும் பிரபுவால் எப்படி அந்த வாழ்க்கையின் அசல் தன்மையைப் பதிவு செய்ய முடிந்தது? காரணம், பிரபு அவர்களை மேலே இருந்து பார்க்கவில்லை. உடனிருந்து பார்க்கிறார்.
நாவலில் ஒரு தந்தை வருகிறார். அவரால் தன் மகனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மனித உறவுகளில் காணப்படும் மிகச் சிக்கலான பகுதி அது. அந்தத் தந்தை பாத்திரத்தை நான் வெகுவாக ரசித்தேன். இந்தியாவில் எல்லா தந்தைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்னொரு முக்கிய பாத்திரம் ரவியின் காதலி. தன் மீது உயிரையே வைத்திருந்த ரவியை விட்டு விட்டு அவள் இன்னொருத்தனோடு ஓடிப் போகிறாள். ஓடிப் போகும் பெண்கள் தமிழுக்குப் புதிது அல்லதான். ஆனால் அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கிறான். அவன் இல்லாத சமயத்தில் அவள் ரவியைப் பயன்படுத்திக் கொள்கிறாள். இதுகாறும் தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டு வந்த காதல் என்ற விஷயத்தின் மற்றொரு பரிமாணம் இது. இதில் உடலே பிரதானமாகிறது. தமிழ் இலக்கியத்தில் இது அரிது. பெண்ணை வழிபாட்டுக்குரிய பிம்பமாக மாற்றி, போற்றிப் பாடும் எழுத்துக் கூட்டத்துக்கு இடையே சதையும் ரத்தமுமாக வந்து போகிறார்கள் இந்த நாவலின் பெண்கள். தற்கொலை செய்து கொள்ளும் ரவி உத்தமத் தமிழ் எழுத்தாளர் கூட்டத்தின் குறியீடோ என்று எனக்குத் தோன்றுகிறது.
***