ஜல்லிக்கட்டு

டியர் சாரு,
இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்வது என்பது தொடர்ந்து அச்சம் தரக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒரு தனி மனிதனின்  கருத்தைப் பதிவு செய்ய உரிமை இல்லை. இப்படிப்பட்ட  மனப்பிறழ்வு கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்ந்து  தனி ஆளாக போராடி வருகிறீர்கள். எவ்வளவு எதிர்வினைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களது கருத்தை முன்வைத்து  வருகிறீர்கள்.
ஜல்லிக்கட்டை பற்றித்தான் சொல்கிறேன். தன் தாய் மொழியே சரியாகத் தெரியாத ஒரு சமூகம், தாய் மொழியில் பேசுவது கேவலம் என்று நினைக்கும் ஒரு சமூகம்,  தாய் மொழியில் சிந்திக்க, படிக்க, எழுதத் தெரியாத ஒரு சமூகம் ” நான் தமிழன்” ,” தமிழ் எனது அடையாளம்” , ” ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு” என கத்தி போராட்டம் செய்வது வேடிக்கையாக இல்லை?
இதை அறப் போராட்டம், அகிம்சைப் போராட்டம்  என்று வேறு சொல்கிறார்கள். சகிக்க முடியவில்லை. போராட்டத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு பாடை கட்டுகிறார்கள். தமிழக முதல்வரை “*******” என்றெல்லாம் திட்டுகிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள், இன்னும் என்னஎன்னவோ. இது அகிம்சைப் போராட்டமாம். பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் மோடியை திட்டி கோசம் போட்டு செல்வதை நன் பார்த்தேன். அவர்கள் வெறும் 2 அல்லது 3  ம் வகுப்பு மட்டுமே படிப்பவர்கள். தனி மனித காழ்ப்புணர்ச்சி அங்கே தலை விரித்து ஆடுகிறது.
இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முக்கிய காரணம் கீழே விவரிக்கும் சம்பவம்தான். இதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியவில்லை.
// நேற்று எங்கள் ஐ.டி கம்பெனியில் ஒரு பெண் ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முயன்றார். அனால் என்ன நடந்தது தெரியுமா???….. அடுத்த 5  நிமிடத்தில் எனக்கு வாட்சப்பில் எனது நண்பர்கள் குழுவில் மெசேஜ் வருகிறது. ” இந்த பெண் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறாள், இவளை  என்ன செய்யலாம்???” …….. அதற்கு பதில்கள் “கொல்லு டா அவளை”, ” கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்க வேண்டியது தான்”, இன்னும் அவளது தோற்றத்தை வைத்து என்னென்னவோ…. அதில் உச்சம், அவளது  facbook  ஐ டி யை அனுப்பி விடு அதை அனைவர்க்கும் போர்வேர்ட் செய்கிறேன். அனைவரும் கிழித்து தொங்க விடட்டும். இதையெல்லாம் அனுப்பியவர்கள் நன்றாக படித்தவர்கள். //
இதைப் பார்த்து  விட்டு  வேறு எந்த தேசத்துக்காவது  ஓடிப்  போய் விடலாமா என்றே  தோன்றுகிறது. தனி மனித கருத்தைப் பதிவு  செய்ய  உரிமை இல்லையா ??  படித்த  இவர்கள் இப்படி கீழ்த்தரமாக  நடந்து  கொண்டால்  எப்படி?  இவர்கள்  தமிழ்க்  கலாச்சாரம், அறப் போராட்டம், அகிம்சைப் போரட்டம்  என வேறு சொல்கிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் எப்படித்தான் நீங்கள் போராடி வாழ்கிறீர்கள் என புரியவில்லை.
சிம்பு, பாலாஜியின் ஆர்கசம் நிறைந்த பேச்சுக்கள்.(அது historical speech ஆம்). அதை வைத்து  facebook இல்  கோமாளித்தனமான பதிவுகள். பாலாஜி அல்லது லாரன்ஸ் முதல்வர் பதவிக்கு போட்டியிட வேண்டுமாம்.  முடியவில்லை….  நடிகர் ரஜினிகாந்த் இந்தp  பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லையாம் (ஏற்கனவே ஆனந்த விகடன் விழாவில் குரல் கொடுத்து விட்டார்)  இருப்பினும்  அவரை தாக்கி இன்னும் பல பதிவுகள். (தனி மனித காழ்ப்புணர்ச்சி). அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எந்த பிரிச்சினையானாலும் அவரைth தான் போட்டு அடிக்கிறார்கள்.  தன்னுடைய பிரச்சனைக்கு யாரிடம் முறையிட வேண்டும் என்றே தெரியாத முட்டாள் சமூகமாக தான் இன்னும் இருக்கிறது.  தமிழ் சமூகம் தெளிவு பெற பல யுகங்கள் ஆகும் போல.
பின்குறிப்பு: எங்கள் ஏரியாவில் பல மாடுகள் சாக்கடையில் உணவு தேடிக் கொண்டு நிற்கின்றன. அதற்கு இப்படி ஒரு போராட்டம் நடக்கிறது என்பதே தெரியாது…
நீங்கள் பேசாமல் ஐரோப்பாவிற்கே போய் விடுங்கள் சாரு….
நீங்கள் மட்டும் எவ்வளவு நாள் தான் போராடிக் கொண்டு இருப்பீர்கள்….
வசந்த்