சசிகலா x பன்னீர் செல்வம்

சசிகலா முதல்வராவதில் என்ன தப்பு? ஜெ. ஊழல் செய்யாதவரா? கருணாநிதி ஊழல் செய்யவில்லையா? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம், ஆச்சா போச்சா மூச்சா என்று கத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு என் பதில்:

வெளிப்படையாகக் குற்றச் செயல்களில் ஈடுபடலாம்; யார் சொத்தை வேண்டுமானாலும் அதிகாரத்தை வைத்து மிரட்டி அபகரித்துக் கொள்ளலாம்; ஒரு முதலமைச்சரையே மருத்துவமனையில் 75 நாட்கள் சிறை வைத்து அவருடைய புகைப்படமோ விடியோவோ வெளியிலேயே வராமல் இருட்டடிப்பு செய்யலாம்; கடைசியில் அந்த முதலமைச்சரின் பிணத்தின் முகத்தை மட்டும் 8 கோடி மக்களுக்குக் காட்டலாம்; முதல்வர் நாற்காலியில் இருப்பவரை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கலாம் என்று அரசியலையே க்ரைம் த்ரில்லராக மாற்றி வைத்திருப்பவர் சசிகலா. இதை எழுதுவதற்காக என் மீது தாக்குதல் நடந்தால் அதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஊழல் வேறு; நேரடியான க்ரைம் வேறு. புரிகிறதா? கங்கை அமரனின் சொத்து எப்படி பிடுங்கப்பட்டது என்று மறந்து விட்டதா உங்களுக்கு?

பன்னீர் செல்வத்தை இப்போது சிலர் கேலி செய்யலாம். ஆனால் அதிகாரத்தையும் மாஃபியா கும்பலையும் எதிர்ப்பேன் என்ற அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது; தமிழ் அரசியல் வரலாற்றில் சமீப காலத்தில் காணக் கிடைக்காதது. அதிலும் அதிமுக என்ற அடிமைக் கட்சியில் இது ஒரு அதிசயம்.

மேலும், சசிகலா ஏன் முதல்வராகக் கூடாது என்றால், எழுதப் படிக்கவே தெரியாவர்களெல்லாம் முதல்வராவதை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. மேலும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமரக் கூடாது. இதுவரையிலான தமிழக வரலாற்றில் சசிகலா போல் மக்களால் வெறுக்கப்பட்டவர் யாருமே கிடையாது.