The Marginal Man

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்து “என்ன சத்தத்தையே காணும்?” என்று கேட்டு அவரே பதிலும் சொன்னார்.  “வயசாயிடுச்சு?” என்னிடமிருந்து சத்தமே இல்லாததற்கு நண்பர் யூகித்த காரணம் அது.  இதற்கு நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டேன்.  25 இலிருந்து 55 வயது வரை நான் சாப்பிட்ட நிலப்பனைக்கிழங்கும், அஸ்வகந்தாவும்  என்னை 85 வயது ஆனாலும் முதுமையில் தள்ளாது.  இதயம் பலவீனமாகத்தான் இருக்கிறது.  50 சதவிகித அடைப்பு.  உணர்ச்சிவசப்பட்டால் angina வருகிறது.  அதற்கும் முதுமைக்கும் சம்பந்தம் இல்லை. Ron Jeremyக்கும் எனக்கும் ஒரே வயதுதான் ஆகிறது.  இன்றளவும் உலகின் நம்பர் ஒன் porn star அவர் தான்.  ஆண்.  அவர் வயகரா எதுவும் பயன்படுத்துவதில்லை என்று அறிகிறேன்.  அவருக்கும் எனக்கும் போட்டி வைத்தால் நான் வென்று விடுவேன்.  இங்கே நான் என்பதே இல்லை.  போகர் தான் காரணம்.  இந்திய சித்தர்கள் கண்டு பிடித்த நிலப்பனைக்கிழங்குக்கும் அஸ்வகந்தாவுக்கும்தான் பெருமை.  எனக்கு அல்ல.  எனவே இனிமேலும் லூசுத்தனமாக மேற்கண்ட கேள்விகளைக் கேட்காதீர்கள்.

நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ஏதோ ஒரு வேலையில் கடுமையாக ஈடுபட்டிருக்கிறேன் என்று பொருள்.  The Marginal Man தயாராகி விட்டது.  ஒவ்வொரு வார்த்தையாகப் பார்த்திருக்கிறேன்.  இருந்தும் இப்போது சில இடங்களில் தெரியும் பிசிறுகளைப் பார்க்கும் போது மேலும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  உதாரணமாக, எக்ஸைலில் வரும் செஞ்சிர்லாம்னு இருந்தோம் என்ற அத்தியாயத்தில் ஆங்கிலத்தில்”Perundevi, like a saint,  began to pray for their welfare” என்று இருப்பதைப் பார்த்தேன்.  அதிர்ந்தேன்.  என்னுடைய எழுத்தில் ஞானியைப் போல், பொறுக்கியைப் போல், கோழையைப் போல் என்றெல்லாம் அடைமொழிகள் இருக்காது.  மூலத்தில் பார்த்தேன்.  பெருந்தேவி அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள் என்று இருந்தது. இப்படிப்பட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டினால் மொழிபெயர்ப்பாளர்கள் கோவித்துக் கொள்கிறார்கள்.  வேறு வழியில்லை. இப்போது நான் முழுப் புத்தகத்தையும் மீண்டும் கடைசியாக ஒவ்வொரு வார்த்தையாகப் படித்தாக வேண்டும்.

ஜனவரி 19 அன்று The Marginal Man வெளிவரும்.  கூடவே ஸீரோ டிகிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவரும்.  நீண்ட காலமாக அதற்கு மறுபதிப்பு இல்லாமல் இருந்தது.  என்னுடைய துருக்கிப் பயணக் கட்டுரை, To Byzantium – a Turkey Travelogue என்ற தலைப்பில் வரும்.  ஜனவரி 19க்கு மேல் நீங்கள் பின்வரும் முகவரிக்கு எழுதி புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு நண்பர் கேட்டார், புத்தக வெளியீட்டு விழா உண்டா என்று.  நீங்கள் செலவு செய்து நடத்தினால் உண்டு.  எனக்குத் தமிழ்நாட்டில் 2000 வாசகர்கள்.  வெளியீட்டு விழா நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதில் ஆயிரம் பேர் என் புத்தகங்களை வாங்கி விடுவார்கள்.  எனவே மதுரையில் நீங்கள் வெளியீட்டு விழா நடத்தினால் நான் வந்து கலந்து கொள்கிறேன்.  நீங்கள் கேட்பது எப்படி இருக்கிறது என்றால், முதலிரவுக்கு அறைக்குள் நுழையப் போகும் முன், மகன் தந்தையிடம் “அப்பா, கடைக்குப் போய் கொஞ்சம் காண்டம் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்று கேட்பதற்கு ஒப்பாகும்.  ஏன் ஐயா, உயிரை விட்டு எழுதியிருக்கிறேன்.  ராப்பகலாக உழைத்து அதன் உருவாக்கத்தில் பணியாற்றி இருக்கிறேன்.  அதை உங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன்.  வெளியீட்டு விழாவும் நானே நடத்த வேண்டும் என்றால், என்ன அர்த்தம்?  இதையெல்லாம் யார் யாரைப் பார்த்துக் கேட்பது?  நான் உங்களைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

நீங்கள் ஒன்று செய்யலாம்.  துருக்கிப் பயணக் கட்டுரை, மாணவர்கள் யாவரும் வாசிக்க வேண்டியது.  ஆங்கிலத்தில் இருக்கிறது.  கல்லூரிகளில் ஆங்கிலத் துறையில் இந்த நூலுக்கு ஒரு வாசிப்பு நிகழ்ச்சி நடத்தலாம்.  ஊருக்கு ஊர் இதைச் செய்யலாம்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு நூல்களையும் அங்கேயும் எப்படிக் கிடைக்கச் செய்யலாம் என்பது பற்றிச் சொல்கிறேன்.  நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் என்னய்யா செய்கிறார்கள் என்று என் நியூஜெர்ஸி நண்பரைக் கேட்டேன்.  பொங்கலுக்கு எப்படி பால் பொங்கல் செய்வது, என்ன வேட்டி கட்டுவது, என்ன புடவை கட்டுவது, எந்த நடிகரை அழைப்பது என்ற சீரியஸ் டிஸ்கஷனில் இருப்பதாகச் சொன்னார்.

ஜனவரி பத்து தேதிக்கு மேல் கீழ்க்காணும் முகவரியில், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

zerodegreepublishing@gmail.com

98400 65000