ராஸ லீலா – பிழை திருத்தம்

ராஸ லீலா பிழை திருத்தம் நாளை முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.  கொஞ்சம் முன்னால்தான் அதன் இரண்டாம் பாகத்தில் உள்ள 41-ஆம் அத்தியாயத்தில் திருத்தம் செய்து முடித்தேன்.  An Erotic Catharsis என்பது அதன் தலைப்பு.  இந்த இரண்டாம் பாகத்தில் சில பெண்கள் பெருமாளுக்கு எழுதும் கடிதங்களெல்லாம் சலிப்பூட்டுபவை என்று சில நண்பர்கள் என்னிடம் கூறியதுண்டு.  அப்படியா என்று வருத்தத்துடன் கேட்டுக் கொள்வேன்.  வேறு என்ன செய்ய?  துண்டித்துத் தூக்கிப் போட முடியுமா என்ன?  (சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.)  இன்று இந்த அத்தியாயத்தைப் படித்தேன்.  ஸ்வப்னா என்ற பெண் எழுதிய கடிதங்கள்.  இந்த ஸ்வப்னா முழுக்க முழுக்க ஒரு கற்பனைப் பாத்திரம்.  இதில் உள்ள கடிதங்கள் அனைத்தும் என் கற்பனையில் உருவானவை.  மிரண்டு போனேன்.  நானே சொல்லிக் கொண்டால் கேவலம்.  ஆனாலும் என்ன செய்ய?  இங்கே ரசிகர்களே இல்லாததால் நானேதான் ரசிக்க வேண்டியிருக்கிறது.  ராஸ லீலாவைப் பலரும் புகழ்வார்கள்.  ஆனால் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயம் பற்றி யாரும் சொன்னதில்லை.  ஸ்வப்னாவின் கடிதங்களில் தெரியும் passion-ஐ இத்தனை தீவிரமாக நான் சமகால இலக்கியத்தில் வாசித்ததில்லை.  அதிலும் கச்சாப் பொருளே இல்லாமல் முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவாக்கியிருக்கிறேன்.  மிரண்டு போனேன்.